Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை – 14 8

அதிரைநிருபர் பதிப்பகம் | April 11, 2012 | , ,


கவிதைகளில் தேர்ந்து எடுத்தாளப்பெறும் சொற்கள் எத்துணை வலிமையானவை, அவை விளைவிக்கும் பயன்கள் எவ்வளவு உயர்ந்தவை என்பதைக் கவிதைகளை ஈடுபாட்டுடன் ஊன்றிப் படிப்பவர்களே உணர முடியும்.  அக்கவிதைகள் வாழ்த்துகளாக இருந்தாலும், வசைகளாக இருந்தாலும், அவற்றின் எதிர்வினைகள் உள்ளங்களை ஊடுருவி, உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துபவை என்பதை இதுகாறும் பார்த்துவந்தோம்.

அதனால்தான், உண்மையை ஏற்றுக்கொள்ளாத – வசைக்கவி பாடிய வன்மனத்தோரை,

الشعراء يتبعهم الغاوون

“கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்” (26:224) என்று அருள்மறை குர்ஆன் இடித்துரைக்கின்றது.  இவ்வாறான இடித்துரைப்பிற்குப் பின்னணியில் இருந்த கவிஞர்களின் முந்திய எதிர்ப்பு வாழ்க்கையின்போதும், அவர்களின் திருந்திய வாழ்க்கையின்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அவர்களுடன் நடந்துகொண்டார்கள் என்பதைப் பின்வரும் இரு வரலாற்று நிகழ்வுகள் மூலம் காண்போம்:

கஅப் இப்னு ஜுஹைர் இப்னு அபீ சல்மா அல்முஜைனி என்பவர் நபியவர்களின் நன்மார்க்கத்தை ஏற்காமல், மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் இருந்த ‘ங்கத்ஃபான்’ கோத்திரத்து வந்நெஞ்சுடையோருடன் வாழ்ந்துவந்தார். இக்கவிஞருக்கு அவர்களின் பாதுகாப்பானது, நபியவர்கள் மீது வசைக்கவி பாடுவதற்கு வாகாய் அமைந்தது. இவரின் சகோதரர் புஜய்ர் என்பார் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார். தம் சகோதரரையும் இஸ்லாமிய வாழ்வை ஏற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைத்தார். ஆனால் கஅபோ, வள்ளல் நபியின் மீது வசைக்கவி பாடுவதையே தம் தொழிலாகக் கொண்டிருந்தார்!  அவ்வப்போது இத்தகவல் நபியவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தது.  கஅப் புனைந்த வசைக்கவிகளின் தாக்கம் கருணை நபியவர்களைக் கவலை கொள்ளச் செய்தது. தம்மைத் தாக்கிப் பாடிய பாடல்கள் பன்னூற்றுக் கணக்கானோரின் நேர்வழிக்குத் தடைகல்லாக நிற்கின்றதே என்ற கவலையால், “கண்ட இடத்தில் அவனைக் கொல்லுங்கள்!” என்று கட்டளை பிறப்பித்தார்கள் கருணை நபி (ஸல்) அவர்கள்.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் மக்கா வெற்றிகொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதரவினாலும் ஆர்வத்தினாலும் அரபுக் கோத்திரங்கள் பல அணியணியாக வந்து இஸ்லாத்தில் இணைந்தன. இதனையறிந்த கஅபின் சகோதரர் புஜய்ர், தன் உடன்பிறப்பை நேர்வழிக்கு வருமாறு ஊக்குவித்தார்.  “தம்மிடம் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி வருவோரை இந்த நபி மன்னிக்கிறாராம்” என்றார். “எத்தகைய குற்றம் செய்திருந்தாலுமா?” என்று ஆர்வத்துடன் கேட்டார் கஅபு. “ஆமாம்” என்று அழுத்திக் கூறினார் புஜய்ர். 

சோதரர்கள் இருவரும் கிளம்பினர் மதீனாவை நோக்கி. தயங்கித் தயங்கித் தொடர்ந்த கஅபு, மதீனாவின் எல்லையில் இருந்த ‘அப்ரகுல் உராஃப்’ எனும் இடத்தை அடைந்ததும் சற்று நின்றார். மதீனாவிற்குள் நுழைய அச்சம் அவருக்கு! அதே நேரம், புறநகர்ப் பகுதி மக்களுக்குப் போதனை செய்வதற்காக நபியவர்களும் அங்கு வந்திருந்தார்கள். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆகிவிட்டது கஅபுக்கு. மக்காவில் இருந்துகொண்டு நபியவர்களை வசைக்கவிகளால் வதை செய்துகொண்டிருந்த இப்னு ஜிபாரா, ஹுபைரா பின் அபீ வஹப் ஆகிய கவிஞர்கள் மக்காவை விட்டு வெறியோட்டம் பிடித்த செய்தி, மனக்கண் முன் நிழலாடிற்று.

இருப்பினும், நபியை நேருக்கு நேர் சந்தித்துப் பேச அச்சம் அவருக்கு.  நபியவர்களும் கஅபைப் பற்றியும் அவர் பாடிய வசைக்கவிகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தார்களே தவிர, அக்கவிஞரைப் பார்த்ததில்லை. எங்கே தன்னை நபியவர்கள் அடையாளம் கண்டுகொள்வார்களோ என்று அஞ்சிய கஅப், அன்றைய இரவை அங்கேயே கழித்துவிட்டு, ‘ஜுஹைனா’ குலத்துத் தோழர் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, ‘மஸ்ஜிதுந் நபவி’யில் அதிகாலைத் தொழுகையின் பின் அண்ணல் நபியவர்களைச் சந்தித்தார்.

தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே!  கஅபு இப்னு ஜுஹைர் தன் தவற்றை உணர்ந்து, திருந்தி, முஸ்லிமாகி உங்களிடத்தில் வந்தால், அவரைத் தாங்கள் மன்னிப்பீர்களா?” என்று கேட்டார். “ஆம், நாம் மன்னிப்போம்” என்றார்கள் மாநபியவர்கள்! “நான்தான் அந்தக் கஅபு, அல்லாஹ்வின் தூதரே!”  நெகிழ்ச்சியுடன் தனது கையை நீட்டினார் கஅபு. அத்தகைய நெகிழ்ச்சியின் பயனாய், அவர் வாயிலிருந்து பாய்ந்து வந்தது, ‘பானத் சுஆது’ எனத் தொடங்கும் கவிதை மழை!

அக்கவிமழையில் நபியவர்கள் நனைந்தார்கள்! மகிழ்ச்சியின் அடையாளம் அன்னாரின் முகமலரில் பிரதிபலித்தது! கஅபு தன் கவிதையினூடே, முஹாஜிர்களையும் அன்சார்களையும் புகழ்ந்து பாராட்டினார்! அதனால், அங்கிருந்தோர் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தினர்! அடுத்து, மாநபியவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில், தமது மேலாடையை எடுத்துக் கவிஞர் கஅப் இப்னு ஜுஹைர் (ரலி) அவர்கள் மீது போட்டு, அவரையும் மகிழ்வித்தார்கள்! கண்ணியப் படுத்தினார்கள்! (சான்றுகள்: நைலுல் அவ்தார் (ஷவ்கானி), ஜாதுல் மஆத் (இப்னு கய்யிம்), தலாயிலுன் நுபுவ்வத் (இமாம் பைஹகீ), இன்னும் பல.


(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கவிதைகளில் தேர்ந்து எடுத்தாளப்பெறும் சொற்கள் எத்துணை வலிமையானவை, அவை விளைவிக்கும் பயன்கள் எவ்வளவு உயர்ந்தவை என்பதைக் கவிதைகளை ஈடுபாட்டுடன் ஊன்றிப் படிப்பவர்களே உணர முடியும்.//

மறுக்க முடியாத மெய்யே !

இதைத்தானே உணர்வுகளால் உந்தப்பட்டு வார்த்தை விளையாட்டுகளிலும் கவிஞர்(கள்)மேல் கொண்ட நட்பால், எழுத்து ஆர்வத்தால் கவிதையோடு ஈடுபடவும் செய்கிறோம்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அக்கவிமழையில் நபியவர்கள் நனைந்தார்கள்! மகிழ்ச்சியின் அடையாளம் அன்னாரின் முகமலரில் பிரதிபலித்தது! கஅபு தன் கவிதையினூடே, முஹாஜிர்களையும் அன்சார்களையும் புகழ்ந்து பாராட்டினார்! அதனால், அங்கிருந்தோர் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தினர்! அடுத்து, மாநபியவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில், தமது மேலாடையை எடுத்துக் கவிஞர் கஅப் இப்னு ஜுஹைர் (ரலி) அவர்கள் மீது போட்டு, அவரையும் மகிழ்வித்தார்கள்! கண்ணியப் படுத்தினார்கள்! (சான்றுகள்: நைலுல் அவ்தார் (ஷவ்கானி), ஜாதுல் மஆத் (இப்னு கய்யிம்), தலாயிலுன் நுபுவ்வத் (இமாம் பைஹகீ),//

சான்றுகள் !

sabeer.abushahruk said...

எத்துணைச் சிறப்பான சான்று.

ஆய்வு தொடர துஆ!

Unknown said...

தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! கஅபு இப்னு ஜுஹைர் தன் தவற்றை உணர்ந்து, திருந்தி, முஸ்லிமாகி உங்களிடத்தில் வந்தால், அவரைத் தாங்கள் மன்னிப்பீர்களா?” என்று கேட்டார். “ஆம், நாம் மன்னிப்போம்” என்றார்கள் மாநபியவர்கள்! “நான்தான் அந்தக் கஅபு, அல்லாஹ்வின் தூதரே!” நெகிழ்ச்சியுடன் தனது கையை நீட்டினார் கஅபு. அத்தகைய நெகிழ்ச்சியின் பயனாய், அவர் வாயிலிருந்து பாய்ந்து வந்தது, ‘பானத் சுஆது’ எனத் தொடங்கும் கவிதை மழை!
-------------------------------------------------------
மெய்சிலிர்த்தது மேலே உள்ள வரிகளை படித்தபோது >>>

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவிதை அங்கீகாரத்துக்கு இடி மின்னல் என இடையூறுகள் விலகி சான்று மழை தொடர்கிறது.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

புதையலைத் தோண்டத் தோண்ட போக்கிஷங்கள். மாஷா அல்லாஹ்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சில தொடர்களிலிருந்து மாஷா அல்லாஹ்,நம் ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் அமுத மொழியை மேற்கோள் காட்டி,மார்க்க வரம்பில் கவிதை புனையவும்,அதில் மூழ்கி இருப்பதுதான் “ஒருவனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட, சீழ், சலத்தால் நிரம்பியிருப்பது மேல்” என்ற நபிகள் நாயகம் ஸல் அவர்களின் எச்சரிக்கையும் பார்க்கும்போது,அஹமது சாச்சாவின் இந்த ஆய்வு பயனுள்ளதாக அமைகிறது.இது மூலம் மார்க்க முரண் இல்லா கவிதைகள் கூடும் என்பதோடு,அதிகமானால் எது எப்படி கேடு எனவும் விளங்க முடிகிறது.எனவே கவிதை-கவிதை என மூழ்கி கிடப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்வதோடு,அஹமது சாச்சாவின் ஆய்வுக்கு ஒரு வாழ்த்தும்,துவாவும்,மாஷா அல்லாஹ்.

அன்புடன் புகாரி said...

>>>>>கவிதைகளில் தேர்ந்து எடுத்தாளப்பெறும் சொற்கள் எத்துணை வலிமையானவை, அவை விளைவிக்கும் பயன்கள் எவ்வளவு உயர்ந்தவை என்பதைக் கவிதைகளை ஈடுபாட்டுடன் ஊன்றிப் படிப்பவர்களே உணர முடியும்<<<<<<

அருமையான வரிகள்.

இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா

இது ஒரு திரைப்படத்தில் வரும் எளிமையான வரிகள். கவிதையின் வலிமையான சொற்களுக்குக் காரணாய் அமைவது கவிஞனின் மெய்யான உணர்வுப் பெருக்காக இருக்கலாம்.

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு