Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை–13 4

அதிரைநிருபர் பதிப்பகம் | April 02, 2012 | , ,

இஸ்லாமிய வரலாற்றில், முஸ்லிம்களுக்கும் மாற்றாருக்கும் இடையில் அவ்வப்போது சில உடன்படிக்கைகள் நிகழ்ந்துள்ளன என்பதை வரலாற்றை வாசிப்போர் அறிய முடியும்.  அவ்வாறான உடன்படிக்கைகளுள் ஒன்றுதான் ‘ஹுதைபிய்யா’ உடன்படிக்கை.  இது முஸ்லிம்களின் மக்கா வெற்றிக்கு முன், ஹிஜ்ரி ஆறாம் ஆண்டில் நிகழ்ந்ததாகும்.

இவ்வுடன்படிக்கையில் முஸ்லிம்களுக்குப் பாதகமான பல  நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தாலும்கூட, தூதர் நபியாரின் தொலை நோக்கில், இஸ்லாத்தின் எதிர்கால வெற்றிக்கு அது அடிகோலும் என்பதால், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் பல சாதகமற்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள்.  அவற்றுள் ஆறாவது நிபந்தனை, ‘முஹம்மதுடன் சமாதானம் செய்துகொள்ள விழைவோர், அவ்வாறு செய்துகொள்ளலாம்’ என்பதாகும்.  அதன்படி, மக்காவின் புறநகர்ப் பகுதியில் வசித்த ‘குழாஆ’ப் பெருங்குலத்தார் முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து வாழத் தொடங்கினர்.  மக்கத்துக் குறைஷியர் எதிர்பார்க்காத ஒன்றாகும் இது.  ஆதலால், எப்படியேனும் இதனை முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, காய்களை நகர்த்தி வந்தனர்.

தமது சார்பில் இருந்த ‘பனூ பக்ர்’ இனத்தாரைத் தூண்டிவிட்டனர்!  ‘குழாஆ’வுக்குச் சொந்தமான ‘அல்வத்தீர்’ நீர்நிலை முற்றுகையிடப்பட்டு, அது ஒரு கொலைக் களமாக மாறி, இருபது பேர் அநீதியாகக் கொலை செய்யப்பட்டனர்!  அத்துடன் நில்லாமல், ‘பக்ர்’ இனத்தார் நபியவர்களை நாத்தழும்பேறத் திட்டித் தீர்த்தனர்!

அநீதி இழைக்கப்பட்ட ‘குழாஆ’ இனத்தவர் தமக்கு நீதியை  வேண்டி, அம்ர் இப்னு சாலிம் அல்-குழாஈ என்ற கவிஞரைத் தூதுவராகத் தேர்ந்தெடுத்து, நபியவர்களிடம் மதீனாவுக்கு அனுப்பிவைத்தனர்.

அண்ணலின் அவையில் அவர் எடுத்துரைத்த கவிதை முறையீடு இதுதான்:

يا رب إني ناشد محمدا ، حلف أبينا و أبيه الاتلدا
قد كنتم ولدا و كنا والدا ، ثمت أسلمنا فلم ننزع يدا
فانصر هداك الله نصرا اعتدا ، وأدعوا عباد الله ياتوا مددا
فيهم رسول الله قد تجردا ، إن سيم خسفا وجهه تربدا
في فيلق كالبحر يجري مزبدا ، إن قريشا اخلفوك الموعدا
و نقضوا ميثآقك الموكدا ، و جعلولي في كدائ رصدا
و زعموا أن لست أدعوا أحدا ، وهم أذل و أقل عددا
هم بيتونا بالوتير هجدا ، و قتلونا ركعا و سجدا

        
        (சான்றுகள்: இஸ்தீஆப், இப்னு இஸ்ஹாக், இப்னு ஹிஷாம்)

இதன் தமிழ்க் கவியாக்கம்:


“படைத்தோனே! முஹம்மதெனும் பண்பாளர் முன்னிலையில்
எடுத்துரைக்கும் முறையீட்டைக் கேட்பாரென் றெதிர்பார்க்கின்றேன்!
நல்லோராய் எம்மோடு நட்புடனே உடன்பட்டோர்
பொல்லாங்கோ டெதிரிகளாய்ப் போய்விட்டார்! என்செய்வேன்?
தந்தையராம் எங்களுக்குத் தனையர்களாய் நீருள்ளீர்!
முந்திவந்த உம்வழியில் முஸ்லிம்களாய் உயர்வுற்றோம்!
இறையுதவி உமக்குண்டே! எமக்குதவி வேண்டுகின்றோம்!
இறையடியீர்! வருவீரெம் ஏக்கத்தைப் போக்கிவைப்பீர்!
வேங்கைபோல் இறைத்தூதர் விளங்குகின்றார் உம்முன்னே
ஈங்குள்ள தோழர்களோ எளிமையுடன் குனிந்துள்ளீர்!
கடல்போலும் படையணிகள் காண்கின்றேன் உங்களிடம்
உடன்தருவீர் உதவிகளை உன்மத்தர் மாறிவிட்டார்!
உங்களுடன் செய்துகொண்ட உடன்பாட்டை உடைத்துவிட்டார்!
எங்களுடன் மோதிடவே எதிர்த்துவந்து தாக்குகின்றார்!
ஒருவருமே எமக்குதவ உடன்வரவே மாட்டாரென்(று)
ஒருபடையால் இருபதுபேர் உயிரழித்துத் தாக்கிவிட்டார்!
எங்களுடை நீர்நிலையாம் இன்’வத்தீர்’ கவர்ந்துவிட்டார்!
பங்கமுற எம்மவரைப் பணியவைத்துக் கொன்றுவிட்டார்!”

அந்தத் தூதுவரின் வாதத்தையும்، அதை அவர் கவிதை நடையில் எடுத்துரைத்ததையும் இறுதிவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், உணர்வு பொங்கத் தம் தோழர்களையும் தூதுவரையும் நோக்கி, “கண்டிப்பாக உதவியுண்டு, அம்ர் இப்னு சாலிமே!  இந்த என் தோழர் கூட்டம் ‘பனீ கஅப்’ குடும்பத்தினருக்கு உதவி செய்யத் திரண்டு வருவார்கள்!  கவலைப் படாதீர்!” என்று வாக்குறுதியளித்தார்கள்.       (சான்றுகள்: இப்னு கதீர் (பிதாயா), பஸ்ஸார், இப்னு ஹஜர் (ஃபத்ஹுல் பாரீ), கஷ்ஃபுல் அஸ்தார், இப்னு இஸ்ஹாக்).

நபியவர்களின் வாக்குறுதியைக் கேட்டவுடன், ஆங்கிருந்த தோழர்கள் “அல்லாஹு அக்பர்!” என்று ஒருமித்த குரலில் கூவினர்.  அதைக் கேட்டு அண்ணல் நபியவர்கள், “பனீ கஅபுக்கு உதவி புரிவோம் என்பதற்கான என் தோழர்களின் உணர்ச்சிக் குரல் இது” என்று உறுதி பகர்ந்தார்கள்.  (சான்று: முசன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்).


(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது

4 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நபியவர்களின் அவையில் கவி வடிவில் வேண்டுகோளும் அதற்கு அவர்களின் நல் பதிலும் இஸ்லாத்தில் கவி இடம் பெற்றமைக்கு நற்சான்று!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிதை என்றுமே வீச்சுதான் !

சுல்லென்றும் குத்தும்...
சில்லென்றும் சிலிர்க்கும்...

உணர்ச்சிப் பெருக்கெடுத்த கவிதையை வாசிக்கும்போது சிலிக்கிறது !

கவிதையை அவர் எழுதினார் இவர் எழுதினார் வாசித்தோம் நேசித்தோம் என்றிருந்த நமக்கு, நபி அவர்கள் அங்கிகரித்த வரிகளின் வீச்சும் உள்ளார்ந்த பொருளும் அதன் அழுத்தமும் தரும் தன்னம்பிக்கை என்பதில் மிகையில்லை !

ஆய்வு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இந்த தொடரில் நாங்கள் கற்று வருகிறோம்...

ஜஸாக்கல்லாஹ் மாமா இன்னும் தொடரனும் ஆய்வு மென்மேலும் !

sabeer.abushahruk said...

//ஆய்வு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இந்த தொடரில் நாங்கள் கற்று வருகிறோம்//

...exactly.

அன்புடன் புகாரி said...

போர்ப்பரணி பாடும் இஸ்லாமிய புறநாநூறு கவிதைகள் அழகோ அழகு

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு