நம் இளைஞன் சம்பாதிப்பு என்ற பெயரில் பா(சத்திற்கே)திப்பு விளைவிக்கின்றனர், அயல் நாட்டிற்குச் சென்று தன் வாழ்க்கையைத் தின/வருடந்தோறும் கரைத்து கொண்டிருக்கும் இளைய சமூகத்தைப் பற்றிய என் ஆதங்கமே இந்த பதிவு…
அவர்: “என்னடா மச்சான் ரொம்ப நாள் (எதோ இவருக்கு அவர் மேலுள்ள அக்கறை என்று நினைத்து விட வேண்டாம்)இருக்குற மாதிரி இருக்கிறதே எங்கேயும் ட்ரை பண்றியாடா.... ?”
இவர்: “ஆமாடா மச்சான் ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன் எல்லா பக்கமும் "லாக்" ஆகி போச்சே நமக்கெல்லாம் "லக்" வேணும்டா “
அவர்: “அடப்பாவி நீ போன வருடம் தானே அமெரிக்காவிலிருந்து வந்தே அதற்குள்ள ஏன்டா பெரிய நாடுக்கு ட்ரை பண்றே சின்ன நாட்டிற்கு ட்ரை பண்ண வேண்டியது தானேடா”
இவர்: இல்லடா மச்சான் போனா பெரிய நாடு இல்லே... ஊருலேயே இருக்கனும் (என்ன ஒரு குடும்ப கவலை/அக்கறை)
இன்றைய சமுதாயம்....
பணத்தைத் தேடி
குடும்பத்தை மறந்த
தலைவன்..
ஒரு காலத்தில் வெளிநாட்டுக்குப் போய் வந்தவர்களைக் கண்களை மலர்த்தி நாம் பார்ப்பதுண்டு. வெளிநாடு சென்று வருவது என்பது ஏதோ அதிர்ஷடம் என நாம் நினைப்போம். ஒரு முறையேனும் கடல் கடந்து சென்று வெளிநாடுகளைக் கண்டுவந்து விடவேண்டும் என்ற தணியாத ஆவல் நமக்கிருந்தது என்பது உண்மை. ஆனால் இக்காலத்தில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அயல்நாடுகளுக்குப் பயணம் என்பது நம் கிராமங்களிலுள்ள படித்த/படிப்பறிவில்லதவர்கள் கூடதற்போது சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது.
வேலை தேடி அயல் நாடு
சென்று எல்லாம் தொலைத்து
வெறும் கையில் நாடு
திரும்பும் இளைஞர்கள்...
பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய கம்பெனியோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போய் விடுகிறான் நம் இளைஞன். எதற்கெல்லாமோ, எதன் பின்னாலோ ஓடி நாட்களை வீணாக கழிப்பவர்கள், வேலை மட்டும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்று ஆசைப்படுவது என்ன நியாயமோ தெரியவில்லை.
அதுவும் ஒருசிலர் படிக்கும் போதே வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையை, ஆர்வத்தை வளர்த்து கொள்கிறார்கள்... இங்கே தகுந்த வேலையோ சம்பளமோ கிடைக்காது என்கிற விதமாக இருக்கும் அவர்களின் பேச்சுக்கள் எல்லாம்...!?
ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை.
* மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை ?!
* முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !!
* பணத்தின் ருசி கண்டவர்கள் ஒரு சிலரின் மூணு/இரண்டு வருட அக்ரீமென்ட் முடிந்த பிறகும் மீண்டும் போக சொல்லி வற்புறுத்துவது வேதனை !
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் வசதியானவர்களைப் பற்றி இங்கே சொல்லவில்லை...இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவித்தனத்தையும், அடுத்தவரிடம் கடன் வாங்கியாவது விமானத்தைப் பிடிக்கும் இளைஞனைச் சொல்கிறேன்...
கடன் வாங்கி வெளிநாட்டைத் தேடிச் செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?!
பிழைக்க வழி வகை தெரியவில்லையா ?? துணிச்சல் இல்லையா ?? முன்ன பின்ன தெரியாத ஊரில் வாழ தைரியத்துடன் செல்லும் இளைஞனுக்கு, அந்த துணிச்சலை மூலதனமாக வைத்து சொந்த நாட்டில் உழைத்து சம்பாதிக்க தெரியவில்லை என்னும் போது வருத்தம் ஏற்படுகிறது.
நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ?
அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே...?!
அரசாங்கம், ஊழல், லஞ்சம் என்று எந்த வித சமாளிப்பும் தேவையில்லை. உழைக்க கூடிய திறன் , மனோதிடம், உத்வேகம், தன்னம்பிக்கை, சுய மரியாதை இருந்தால் எங்கேயும் வாழ முடியும். கை நிறைய சம்பாதிக்க முடியும்.
- டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்......
- பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்......
- இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்...
- கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது...தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...
- நான் இங்கே நல்லா இருக்கேன் என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்...
- வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன் வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)
- கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள், நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்...
- எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்...
- வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்...
- திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்...
உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு வேலை என்றெல்லாம் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது!
"ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கின்றோம்...இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது...
நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...
யாருக்காக...? எதற்காக...? ஏன்...?
தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம்... தோரணம்போல் கண் முன்னே..."
"மனைவியின் கண்சிமிட்டல்/சினுங்கள், அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி
எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?"
என்ன செய்வது, எங்க தலைஎழுத்து இப்படி வெளிநாட்டில் லோல் படணும் என்று இருக்கிறது என்று சலித்து கொள்ளாதீர்கள், உங்களுக்கு நீங்கள் தான் முதலாளி உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமையும் உங்களது தானே ?! அப்புறம் என்ன ?! வேறு யாருக்கோ உங்களின் உழைப்பும், சக்தியும் வீணாகிறது, அதை உங்கள் சொந்த முன்னேற்றத்துக்கு பயன் படுத்தினால் அபரீதமான வளர்ச்சியை காணவும் முடியும், இறுதி வரை நிம்மதியான ஒரு வாழ்க்கையும் வாழலாம்...!?
இதிலும் ஒரு சந்தோசம் நம்மூரில் ஒரு சிலர் வெளிநாட்டு மோகத்தை முற்றிலும் அகற்றெரிந்து சொந்தக் கடைகளை அவர்களின் முன்னேற்றங்களினால் சிறு தொழிலில் ஈடுபாடு காட்டியுள்ளனர்/காண முடிகிறது ஊதாரனத்திற்கு நம்மூர் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் ஒரு பஜார் போல் காட்சியளிக்கின்றன அல்ஹம்துல்லிலாஹ்..
இப்படி ஒவ்வொரு இளைஞரும் உத்வேகத்துடன் உழைக்க தயாராகிவிட்டால் வெளிநாடு செல்வது என்பது பழங்கதையாகி விடுமல்லவா ?
-அதிரை தென்றல் (Irfan Cmp)
32 Responses So Far:
தென்றலின் “ சமுகக் கவலை ”புயலாக உருமாறி......பக்குவமாக நம் மனதில் அடித்து ஒரு சீற்றத்தை உண்டு பண்ணி இருக்கின்றது....ஆழமான,அவசியம் சிந்திக்கவேண்டிய சிந்தனை......வாழ்த்துக்கள் சகோ.இர்ஃபான்
//ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீ// மனதை நெருட வைத்த வரிகள்
என்னத்த சொல்வது ?
இளமை ஊஞ்சலாடுறது என்றா ?
இளமை ஊசலாடுகிறது என்றா ?
கரைந்த இளமை(கள்) மனத்தினை கல்லாக்கிக் கொண்டே !
//மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் //
இது என்னவோ உண்மை, ஊரில்/தெருவில் நடக்கும் பொது விசயத்தில் மூக்கை நுழைத்து கண்டிக்க முடியாத சூழல், நீ 1 மாதம்தான் லீவுலே வந்திருக்கே பொண்டாட்டி புள்ளையோடும் குடும்பத்தோடும் சந்தோஷமா இருந்தியா ரெஸ்ட் எடுத்தியா திரும்ப போய்க்கிட்டே இரு என்றுதான் சொல்லுறாங்க, மேலும் இவன் NRI நிரந்திரமானவன் இல்லே என்று பிறந்த ஊருலேயே அந்நியமாக்கிடுது இந்த வெளிநாட்டு வாழ்க்கை..!
//அந்த துணிச்சலை மூலதனமாக வைத்து சொந்த நாட்டில் உழைத்து சம்பாதிக்க தெரியவில்லை என்னும் போது வருத்தம் ஏற்படுகிறது.//
வெளிநாட்டுலேயும் நம்மாட்கள் சொந்த தொழில் புரிந்துக்கொண்டிருக்கிறாங்க, அவங்களுக்கு வேலை செய்யுறவங்க கொஞ்சமேனும் தொழில் முறையில் உதவிபுரியுறாங்க என்று நினைக்கும்போது கொஞ்சம் ஆறுதலா இருக்கு
இதற்கு முழு முதற்கொண்டு காரணம் நம் முன்னோர்கள் தான், அவர்கள் என்ன வேலை செய்திருந்தாலும் ஊருலே பண்ற அளப்பரைக்கு அளவேயில்லாமல் இருக்கும், சாதாரண குடும்பத்துலே பிறந்த நமக்கும் அந்த ஆசை வராமல் இருப்பதில் ஆச்சரியமில்லை, இவங்க மாதிரி நானும் வெளிநாடு போய் சம்பாதிக்கனும் என்ற ஆசை பள்ளியில் பயிலும்போதே தலையில்லே வந்து உக்காந்துடுது.
ரெண்டாவது காரணம், நம் குடும்பத்தார்கள், உள்நாட்டில் எவ்வளவு சம்பாதித்தாலும் வெளிநாட்டு பணம் கால்வாசி வந்தால்தான் பெருமூச்சு விடுறாங்க, இதுவே உள்நாட்டில் வேலை செய்யவும், பதிவு அலுவலகத்துலே பதிஞ்சு வேலைக்கு காத்திருக்கவும் முடிவதில்லை...
நம்மில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்திருக்கோம்?????????????????????????
என்னையும் சேர்த்தே....
///வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்திருக்கோம்// ஹி ஹி ஹி ஹி அப்படினா என்னா ??
"வெளிநாட்டுக்கு வந்து தான் இப்படி விலாவாரியா நம்மால் எழுத முடிகிறது. உள்ளூர்வாசிகளுக்கு நம்மூருக்கான வலைப்பூக்கள், இணையதளங்கள் இருப்பதே தெரிவதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதையெல்லாம் பார்ப்பதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை அவ்வளவு பிஸி...."
"எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான்டா. ரொம்ப நல்லவனாத்தெரியுது" என்பது போல் ஆகி விட்டது நம் அயல் தேசத்து வாழ்க்கை. இங்கு நம் வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொண்டதால் எங்கேனும் விசாலத்தைக்கண்டால் வெறுப்பாக ஆகி விடுகிறது".
அயல்தேசத்து வாழ்க்கை என்பது உள்ளூரில் குடும்பத்துடன் இருந்து கொண்டு தன்னால் ஆன ஏதேனும் தொழில் அல்லது பணி செய்து கொண்டு பல இன்னல்களுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும், இன்னும் பிற தொல்லைகளுக்கும் ஆளாகாமல் அதிலிருந்து விடுபட்டு எஸ்க்கேப் ஆகி எங்கேனும் வந்து விடுவதே அயல்தேசத்து வாழ்க்கை எனலாம்.
இங்குள்ள சுறுசுறுப்பு, உதாரணத்திற்கு காலை 6 மணிக்கு அலுவலகம் செல்வதற்காக அதிகாலை 4.15 மணிக்கே எழுந்து தொழுது விட்டு, சிறிது உடற்பயிற்சி செய்து விட்டு குளித்து தயாராகி விடுகிறேன். இதே சுறுசுறுப்பு ஊரில் இருந்தால் வருவதில்லை. ஊரில் கடை, அலுவலகங்கள் எல்லாம் காலை 8 அல்லது 9 மணிக்கு தான் திறக்கப்படுகிறது.
அயல்நாடுகளில் நாம் காண்பிக்கும் அதே சுறுசுறுப்பை, உடல் வலி, சுகக்குறைவை கூட பொருட்படுத்தாமல் நாம் பணிக்கு செல்ல காட்டும் ஆர்வத்தையும், சிரத்தையுடன் கூடிய முயற்சியையும் ஊரில் நம் சொந்த தொழிலிலோ அல்லது பணி இடத்திலோ தொடர்ந்து காட்டி வந்தால் இன்ஷா அல்லாஹ் இறைவன் அருளிய நாட்களெல்லாம் பொன் நாட்களாகத்தான் இருக்கும். (வட்லப்பத்தின் மஸ்த்துக்கும், களரி சாப்பாட்டின் கிரக்கத்திற்கும் மல்லாக்க படுக்காதவர் எவரோ?)
நல்ல தரமான வார்த்தைகளால் பிண்ணப்பட்ட கட்டுரையை இங்கு வடித்துத்தந்த சகோ. இர்பானுக்கு வாழ்த்துக்கள்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
கப்பலுக்கு போன மச்சான் என 1977 ல் பாடிய பாட்டு, 35 ஆண்டுகள் கழிந்தும் நம் தாகம் தீரவில்லையே என்பதை சகோ. அதிரை தென்றல் (Irfan Cmp) அவர்கள் தன் வேட்கையை வெளிப்படுத்துகிறார்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம், பெண்ணுக்கு சீதன வீடு கொடுக்க வேண்டும் என்ற நமதூரின் அர்த்தமற்ற கலாச்சாரமான பழக்க வழக்கம். அதனால்தான் சீதன பத்திர பதிவில், எங்களூர் பழக்கப் படியும், எங்கள் குடும்ப வழக்கப் படியும் என் மகளுக்கு எனது வீட்டை சீதனமாக கொடுக்கின்றேன் என எழுதுகின்றனர். பக்கத்திலுள்ள பட்டுக்கோட்டையில் இந்த வாசகத்தை பயன்படுத்த முடியாது.
இப்போது அரபு நாடு மோகம் தணிந்து, அமேரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மோகத்தில் பணத்திற்காக பறந்து சென்று, கணக்கிடமுடியாத காலத்தை கழித்து விடுகின்றனர்.
பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி மக்கள், உற்றார் உறவினர் அனைவரையும் பிரிந்து வாழ்வதெல்லாம் நமதூரின் பழக்க வழக்கமே காரணம்.
///வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்திருக்கோம்// ஹி ஹி ஹி ஹி அப்படினா என்னா ?? //
பள்ளிப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்ற தம்பிக்கே இது தெரிய வில்லை. வாய்கிழிய சிரிக்கிறார் என்றால் வேறு யாருக்கும் தெரிய வைத்து என்ன பயன்(ம்).
முதலீடோ இளமை!? - மூழ்கியதோ வாழ்க்கை !
இதுதான் புலி வாலை பிடித்த வாழ்க்கை என்பது.
எல்லாவற்றையும் இழந்த தியாகச் செம்மல் என்று நம்மை கூறிக் கொள்ளலாமா!
இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா? என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கிச் சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!
முழுதாய்ப் புரிவதற்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்துச் சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்துச் சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாவாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!
வறண்டு போன கண்களும்
இருண்டு போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசை பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குத்தானே என்று!!
கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
துக்கம் தொண்டையை அடைக்க;
உருண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய்த் துடைத்துவிட்டு;
உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் – இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!
- யாசர் அராஃபத்
வானம் தெளிவாக தெரியும்
நீரோடையில் முகம் பார்க்க
அதனூடே கண்ணாடி யை
நிறுவ எத்தனிக்கும் ...இந்த எத்தன் யார்?
பளிங்கு மாளிகையில்
பளிச்சிடும் மின் விளக்குகளின்
மத்தியில் அற்பமாக எரியும்
மெழுகுவர்த்தி ....இந்த மெழுகன் யார் ?
புல்வெளி போர்வை போர்த்திருக்கும்
கோல்ப் மைதானத்தில் கால்பந்து
விளையாட ஆசைபடும் .....இந்த பேராசைக்காரன் யார் ?
திராட்சையைப் பறிக்க
கொடியன எண்ணி
வேப்பமரத்தில் ஏறி
ஏமாறும் ..............இந்த ஏமாளி யார் ?
சிப்பிக்குள் முத்தெடுக்க
கடலென நம்பி
மாடியிலுள்ள
தண்ணீர் தொட்டியில் தேடித்தேடி
களைத்த........இந்த அசந்தவன் யார் ?
தோட்டத்தை செழிக்க
வைக்க கடல் நீரை
பாய்ச்சிய.......இந்த உறைந்துபோனவன் யார் ?
மழை நீரை ப் பார்க்க
குடையை தலைகீழ ப்
பிடித்து குடைக்குள் மழை
விட்ட .................இந்த தொடர்பில்லாதவன் யார் ?
சுற்றத்தையும்
நட்பையும்
அளவாவிட
பணம் கொடுக்கும் .... இந்த பாக்கியமற்றவன் யார் ?
தாமரை இலை தண்ணீராக
தடுமாறும் .....இந்த ஒட்டாதவன் யார் ?
மின்னிடும் நட்சத்திரங்கள் சூழாத ,
மேகங்கள் தழுவாத ,
அன்னியமாக உலா
வரும் வெற்று நிலா .....இந்த அந்நி(லா)யன் யார் ?
யார்தான் இவன் ?......................
----அப்துல் ரஹ்மான் ---
harmys
சின்ன சின்ன இலைகள் கொண்ட
ஒரு மரம் ஒரு மலையின்
உச்சியில் ஊஞ்சலாடியது .......
அதோ எதிர்படும் திசையில்
வசந்த காலக்காற்று மரத்தை
நெருங்கிகொண்டிருந்ததது..
சில கணங்களில் மரத்தை வருடியது
வருடியதில் உதிர்ந்தன இலைகள்
உதிர்ந்த இலைகள் எல்லாம் குயில்களாக மாறி
முன்படும் திசையெல்லாம் வசந்தம் வரும்
நற்செய்தியை குதூகோலத்துடன் கூவி கூவி
பறந்தது ........
அதே மரம் ,அதே மலை
ஆனால் இப்பொழுது எதிர் திசையில்
கோடைகாலக் காற்று நெருங்கியது ...
உதிர்ந்த இலைகள் எல்லாம் அன்னப் பறவைகளாக
மாறி நீரில் கொற்றப்பொய்கை ஆடியது
நீரில் உள்ள மீன்களிடம் கோடை வருகிறது
இடம்பெயருங்கள் என நன்மாராயம் ஓதியது......
அதே மரம்,அதே மலை
மேல் திசையில் கரு மேகம் சூல்கொண்டு
மழைக்கு முன் வரும் அழகிய தென்றல்
மரத்தை தீண்டியது ...
உதிர்ந்த இலைகள் காளான் குடையின்
விதைகளாய் மாறி மண் நோக்கி விறைந்தது
மழையிலிருந்து பொன்வண்டுகளை காப்பதற்காக .....
அதே மரம் ,அதே மலை
எதிர் திசையில் குளிர்காலக்காற்று
மரத்தை நெருங்கியது, இலைகள் உதிர்ந்தன ..
உதிர்ந்த இலைகள் எல்லாம் வண்ணத்துப் பூச்சிகளாக மாறியது
வாழ்வின் சுகமான நினைவுகளை தன் இறக்கையில்
ஓவியமாக சுமந்து
கடும் குளிரை வெல்லப்பறந்தன வண்ணத்துப் பூச்சிகள்
நம்மை போல........
-------------
---அப்துல் ரஹ்மான்
----harmys-----------
//இதிலும் ஒரு சந்தோசம் நம்மூரில் ஒரு சிலர் வெளிநாட்டு மோகத்தை முற்றிலும் அகற்றெரிந்து சொந்தக் கடைகளை அவர்களின் முன்னேற்றங்களினால் சிறு தொழிலில் ஈடுபாடு காட்டியுள்ளனர்/காண முடிகிறது ஊதாரனத்திற்கு நம்மூர் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் ஒரு பஜார் போல் காட்சியளிக்கின்றன அல்ஹம்துல்லிலாஹ்//
இதை படித்ததும் எனக்கு ஓர் எண்ணம் எழுகிறது. ECR ரோடு தஞ்சாவூர் மாவட்டத்திலேயே நமதூர் வழியாக மட்டுமே ஊருக்குள் வழியாக செல்கிறது. இந்த வாகன ரோடு வசதியை பயன்படுத்தி, வெளியூரிலிருந்து சில வியாபார பொருள்களை லோட் கணக்கில் இறக்குமதி செய்து, நமதூரில் warehouse உண்டாக்கி அதில் சேர்த்து வைத்து, அந்த பொருட்களை தஞ்சை மாவட்டம் முழுதும் wholesale supply செய்யலாம் அல்லவா?
குறிப்பு: பெரியதாக warehouse கட்டிடம் கட்டி, வியாபாரிகளுக்கு பகுதிகளாக வாடகைக்கும் கொடுக்கலாம்.
நூர் முஹம்மது
பாலைவனத் தொழிலாளியின் வேலை கூறும் பாடம்
1)
சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி
அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு
துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம்
வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?
2)
இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே
கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார்
விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி
தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?
3)
பாலையாம் வாழ்க்கையை பைஞ்சோலை யாயாக்க
பாலையாம் நாட்டிற்குள் பாதங்கள் வைத்தநாளாய்
காலைத்தூக் கத்தையே காசாக்கி வீட்டிற்கு
ஓலையாய் மாற்றத்தான் ஓயாமல் வேலையாம்
4)
இளமைக் கருக்க இரத்தம் சுருங்க
வளமைப் பெருக்க வடிக்கு முழைப்பை
களவாய்ச் செலவு; கடும்விலை ஏற்றம்
உளமே வெடிக்க உறிஞ்சிக் குடிக்கும்
ஓலை = காசோலை (cheque)
களவாய்ச் செலவு = களவாகுதற்போல் வீண் செலவு
--
இளமையை மூலதனமாக்கி இஷ்டப்பட்டு நஷ்டப்படும் நாம் இதிலிருந்து மீளும் காலம் பொற்காலம் ஆகும்.
என் நண்பன் இக்பாலின் கவிதையொன்று நினைவிற்கு வருகிறது:
தேடல்:
என்னை விற்று
எதையோ பெற்று
பின்
அடைந்ததை அனுபவிக்க
என்னைப்போய்
எங்கேத் தேடுவேன்?
காக்கா எனக்கு தெரியும் வேலை வாய்ப்பு அலுவலகம் :)....நான் பதிவு செய்தும் வைத்து இருக்கின்றேன்....99 வயதிலாவது ஒரு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனாக.........நம்மூர் ஆட்கள் அவ்வாறு கேட்பார்கள் என்று எழுதினேன்...கொஞ்சம் வார்த்தைக்களை விட்டுவிட்டேன்
//காக்கா எனக்கு தெரியும் வேலை வாய்ப்பு அலுவலகம் :)....நான் பதிவு செய்தும் வைத்து இருக்கின்றேன்....99 வயதிலாவது ஒரு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனாக.........நம்மூர் ஆட்கள் அவ்வாறு கேட்பார்கள் என்று எழுதினேன்...கொஞ்சம் வார்த்தைக்களை விட்டுவிட்டேன்//
மற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவதை அலட்சியப்படுத்தி விடக்கூடாது என்பதை வலியுறுத்தவே தயக்கமின்றி தகுதியுடைய தம்பியை முன்னிறுத்தி இவ்வாறு வினா எழுப்பினேன். தம்பி...தவறாக எண்ணி விடவேண்டாம்.
அதிரை தென்றல்,
இன்று புயலாக மாறி,
என்னக கருத்தை
அள்ளி வீசுகிறது!
எங்கள் இதயம்-
குளிரும் புயல் இது,
கருத்துப் (ப )புயல்.
நன்றி சகோ
//என்னக கருத்தை//
எண்ணக் கருத்தை என இருக்க வேண்டும்.
தம்பி அர.அல.சொன்னது
//அதிரை தென்றல்,
இன்று புயலாக மாறி,//
தென்றல் புயலாகி மாறிய தினம்தான் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
தம்பி இர்பான்! உங்களுக்கு துபாய் மேலே ஏதோ கோபமா? முன் பதிவில் துபாயை ஒரு பிடி பிடித்தீர்கள். இப்போது வளைகுடா வாழ்வு உங்கள் கையில் சிக்கி இருக்கிறது. எல்லோரும் கூறுவதுபோல் தென்றல் புயலாகத்தான் வீசி இருக்கிறது. பாராட்டுக்கள். அடுத்தது என்ன?
அன்பானவர்களே!
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவது பற்றி சிறு விவாதம் நடந்தது.
இதோ இந்த இணைபைப்பாருங்கள். சென்னை மெட்ரோ திட்டத்தில் பணியாற்ற ஆள் எடுக்கிறார்கள். நம்மில் எத்தனைபேர் இதற்கு விண்ணப்பிக்கப்போகிறார்கள் என்று பார்ப்போமா?
http://www.jobs.freshersvoice.com/
அஸ்ஸலாமு அழைக்கும்...,
கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி...
எடிட்டராக்கா அவர்களுக்கு :
தங்கள் படு பிசியாக இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் நான் உங்களுக்கு திரும்பவும் மின்னஞ்சல் மூலம் என்னுடைய பதிவை இட தொந்தரவு அளித்துள்ளேன்..மன்னிக்கவும்
மிக அழகாக படமிட்டு அதற்கேற்றது போல் தலைப்பிட்டு பதிவிட்டமைக்கு நன்றி எடிட்டராக்கா
Yasir சொன்னது…
\\தென்றலின் “ சமுகக் கவலை ”புயலாக உருமாறி//
இப்படியெல்லாம் கொளுத்தி போடக்கூடாது யாசிராக்கா, ஒவ்வொரு இளைங்கனுக்கும் ஒவ்வொரு விதமான கவலை இருக்கும் எனக்கு இந்த கவலையை எழுத்து ரீதியாக இனைய வழியில் தெரிவிக்க வாய்ப்பளித்த அ நி க்கு தான் நன்றிகள் சொல்லனும்
m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…
\\இளமை ஊஞ்சலாடுறது என்றா ?
இளமை ஊசலாடுகிறது என்றா ?//
ஆம் நம்மோட இளமை ஊஞ்சலாடுகிறது ஒரு முனையில் பின்னாலில் தள்ளுவது நம் குடும்ப கஷ்டங்கள் மறுமுனையில் பணியிடத்தில் நிகழும் கொடுமை எங்கே செல்வது குழப்பத்தில் அமருகிறான் நடுவே! "ஊசலாடுவது" அவனுடைய உயிரும் மற்றும் ஆசா,பாசாங்களும்.
அப்துல்மாலிக் சொன்னது…
\\NRI நிரந்திரமானவன் இல்லே என்று பிறந்த ஊருலேயே அந்நியமாக்கிடுது இந்த வெளிநாட்டு வாழ்க்கை..!//
நூற்றுக்குநூறு உண்மை இங்கே (அயல் நாடு) நிரந்தரமல்ல என்பதை நம் இளைஞன்/பெற்றோர் உணர மறுக்கிறா(ர்கள்)ன். அதை தெளிவு பெற்றிந்தால் வாழ்க்கை சிறப்பாகவும் இனிமையானதாகவும் அமையும்..இன்ஷா அல்லாஹ்
\\வெளிநாட்டுலேயும் நம்மாட்கள் சொந்த தொழில் புரிந்துக்கொண்டிருக்கிறாங்க, அவங்களுக்கு வேலை செய்யுறவங்க கொஞ்சமேனும் தொழில் முறையில் உதவிபுரியுறாங்க என்று நினைக்கும்போது கொஞ்சம் ஆறுதலா இருக்கு//
ஆம் கொஞ்சம் ஆறுதலே நூற்றில் ௨ விழுக்காடுதான் இருக்கிறார்களே தவிர மற்றவர்கள் தொழில் செய்ய பயப்படுகிறார்கள் முதலீடு செய்தால் அனைத்தையும் (முதலீடை) இழந்து விடுவோமோ? என்று தொழில் தொடங்கிய உடனே அதற்க்கூரிய லாபத்தை எதிர்பார்ப்பது மடமைத்தனமேயோழிய வேறேதுமில்லை
மலையாளியை எடுத்துக்கொள்வோம் தொழில் தொடர்வதற்க்கு அவனுக்கு முதல் குறிக்கோள் கஸ்டமரை பலப்படுத்துவது பின்பு தான் லாபத்தை பற்றி எண்ணுவான் அதேபோல் நம்மத்தியில் இருபதில்லையே ஏன்?
தொழில் தொடர்வதர்க்கு முன் பொறுமையை கையாள வேண்டும் அல்லாஹ்வை நம்பி தொடங்கினால்
நஷ்ட்டமடைய வாய்ப்பில்லை
\\நம்மில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்திருக்கோம்?//
சொல்லப்போனால் சிலருக்கு அலுவலகம் எங்கே இருப்பதென்பதே தெரியாது (என்னையும் சேர்த்துதான்)
மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
\\"எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான்டா. ரொம்ப நல்லவனாத்தெரியுது" என்பது போல் ஆகி விட்டது நம் அயல் தேசத்து வாழ்க்கை. இங்கு நம் வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொண்டதால் எங்கேனும் விசாலத்தைக்கண்டால் வெறுப்பாக ஆகி விடுகிறது".//
வட்டத்தில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருகிறது என்பது உண்மை அதைவிட்டு வெளிருவது தான் புத்திசாலி இளைஞனின் நற்செயல்
என்னுடைய நண்பன் அமெரிக்காவில் இருந்து தொலைப்பேசியில் உரையாடிய நிகழ்வு இதோ
நான் : என்ன டா நல்லா இருக்கியா? வேலையெல்லாம் எப்புடி போவுது?
நண்பன் : எதோ நல்லா இருக்கிறேன்டா, பொழப்ப பத்தி கேக்காதே நாத்த பொழப்புடா அமெரிக்கா வுலே ஒரு வட்டதுலே தான் வாழ்க்கை ஓடிட்டு இருக்கு நிம்மதியா பொண்டாட்டிடேயோ, உம்மாட்டேயோ பேச முடியலே, எப்போடா ஊருக்கு வரலாம்ன்னு இருக்கிறேன்டா
அமெரிக்காவிற்கு அடித்து பிடித்து ஓடும் நம்மூர் இளைஞன் தன் வாழ்க்கையை இப்படிதான் கழித்துக்கொண்டிருக்கிறான் என்பது அமெரிக்கா வாழ் அதிரைக்காரர்களுக்கு புரியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
\\இங்குள்ள சுறுசுறுப்பு, உதாரணத்திற்கு காலை 6 மணிக்கு அலுவலகம் செல்வதற்காக அதிகாலை 4.15 மணிக்கே எழுந்து தொழுது விட்டு, சிறிது உடற்பயிற்சி செய்து விட்டு குளித்து தயாராகி விடுகிறேன். //
நீங்கள் சொல்வது எற்றுக்கொள்ளக்குடியது இருந்தாலும், அனால் ஊரில் உள்ள இளைஞர்கள் (வெட்டியாக இருக்கிறோமே என்பதினாலையோ என்னவோ) ஸுபுஹ் தொழுது பின்பு நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர் நல்ல விஷயம் பின்பு என்ன செய்கிறார்கள் என்ன செய்ய போகிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது என்பது மன வேதனையை தருகிறது
தனக்கென்று ஒரு தொழில் இருந்தால் நீங்கள் கூறுவது போல் சுறுசுறுப்பு அவர்களிடத்தில் காண முடியும் என்பது என் கருத்து
Noor Mohamed சொன்னது…
\\பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி மக்கள், உற்றார் உறவினர் அனைவரையும் பிரிந்து வாழ்வதெல்லாம் நமதூரின் பழக்க வழக்கமே காரணம்.//
வெக்கப்பட வேண்டிய விஷயம், அவை முற்றிலும் மாறு பட்டிருந்தால் நம்மூரை மேம்படுத்த முடியும் அதற்க்கு பெற்றோர்கள்தான் நன்கு உணர்ந்து அவர்களுக்கு (இளைஞர்களுக்கு) ஊக்கமளிக்க வேண்டும்
கருத்திட்ட harmys காக்கா அவர்களுக்கு நன்றி
Ebrahim Ansari சொன்னது…
"கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!"
மிக அருமையாகவும் அனுபவம் வாய்ந்ததாகவும் வர்ணித்து எழுதி உள்ளார் யாசர் அரபாத்
sabeer.abushahruk சொன்னது…
தேடல்:
விடைத் தாள்களே வினாவாக
விழியோர வெள்ளமே விதியாக
விடியலை நோக்கிய பார்வையே திரையாக
விழுந்த என் வாழ்கையை
எங்கேத் தேடுவேன்!
சபீர் காக்காவிற்கு கவிதையாகத்தான் பதில் எழுத வேண்டும் என்பது அ நி யின் Term & Conditions ...ஹா ஹா
அர அல சொன்னது…
புயல் என்றெல்லாம் என்னை சொல்லி பயங்கட்ட வேண்டாம் காக்கா, புயல் என்றாலே எனக்கும் பயம் புயலினால் அல்ல அதனை வர்ணித்து தெருவிலே மைக்கின் அலறலினால்.
Ebrahim Ansari காக்கா சொன்னது…
\\தம்பி இர்பான்! உங்களுக்கு துபாய் மேலே ஏதோ கோபமா? முன் பதிவில் துபாயை ஒரு பிடி பிடித்தீர்கள். இப்போது வளைகுடா வாழ்வு உங்கள் கையில் சிக்கி இருக்கிறது. எல்லோரும் கூறுவதுபோல் தென்றல் புயலாகத்தான் வீசி இருக்கிறது. பாராட்டுக்கள். அடுத்தது என்ன?//
எனக்கு துபாய் மேலே கோபமில்லை இங்குள்ள கலாச்சார முறைகேடின் மேல் தான் கோபம் அரேபிய நாடு இப்படி சிரலின்ஞ்சி போய்க்கொண்டிருகிறது அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்
உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி காக்கா.
தென்றலின் இந்த புயல் வீச்சி தொடரும் அல்லாஹ் நாடினால்....
அதிரையில் தென்றாலாய் வீசும் இர்பான் வளைகுடாவில் புயலாய் வீசுவதில் ஒரு சமுக அக்கறை தென்படுகின்றது
வளைகுடா வந்து வயசாச்சு அதான் பின்னுட்டம் இட தாமதமாச்சு!
\\நம்மவர்களின் வாழ்க்கையின் காலா காலமாக அனுபவித்து வரும் இன்ப துன்பங்கள்தான் என்றாலும் சமீப காலங்களில் நம்மவர்கள் எடுக்கும் முயற்சி கட்டுரையாளர் கூறுவது போன்று வாழ்க்கையே மூழ்கும் நிலைதான் ஒவ்வொரு கால கட்டத்திலும் தான் கடந்து வந்த பாதையை சிறார்களிடம் கூறி கவனமாக இருக்கச்சொல்வதும் அதனை செவிசாய்த்து அதன்படி நடந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதும் உண்டு .வெளிநாடுகளுக்கு சென்று தன் உழைப்பால் கிடைத்த பணத்தை சரியான முறையில் மிதிலீடு செய்யாமல் ஊர் வந்து மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சிப்பது ஒன்று ,நம்மவர்களின் குடும்ப பின்னணியில் யாதொரு தொழிலோ வியாபாரமோ இல்லாததும் ஒரு காரணம் இந்த விழிப்புணர்வு கட்டுரை வலைதளங்களை பார்க்க முடியாத சாமான்யர்கலை சென்றடையும் விதமாக வருடம் ஒரு முறை அதிரை வலைத்தளங்கள் சார்பாக மாநாடு நடத்தி சிறப்பித்தால் மிகவும் நன்மையாஇருக்கும் ,நன்றி அதிரைசித்தீக்//
வலைதள வல்லுனர்கள் கவனத்திற்கு சகோ அதிரை சித்திக் சொல்வது ஏற்றதக்கது இதுமாதிரி நடத்தினால் ஒரு நல்ல விழிப்புணர்வை நம்மூர் மக்களுக்கு கொண்டு செல்லலாம்.... இன்ஷா அல்லாஹ்
அதிரையில் சிறு வயதிலேயே தினசரி என்ற நாளேட்டிற்கு முகவராக இருந்தவன் பின்பு ஒரு கடை என சிறு முன்னேற்றம் அதன் பின்னர் நமதூர் சென்னை வணிகர்கள் கூட என்னை பாராட்டி ஊக்கம்தந்தத்துடன் நல்ல ஆலோசனையும் தந்தார்கள் எனது சிறுவயது வேகம்நின்று போனது . கால சூழலில் நமதூர் வாழ்க்கை தரத்திற்கு ஏற்ற வருமானம் தேவை என்பதாலும் குடுன்பத்தில் வெளிநாடு சென்றுவறுவதில் உள்ள உற்சாகம் நம்மால் ஏன் குலையவேண்டும் என்று நானே உள்ளூர் வியாபாரத்தை முடித்து கொண்டு வெளி நாடு சென்றேன் . செல்கிறேன் .செல்வேன்,,முடிவுறா கணம் ,,,.என் வழக்கை ...நம்மவரின் வழைகுடா வாழ க்கையினை பற்றி ஒரு புத்தகமே எழுதி னேன் ..நிதி பற்றா குறையினால் அந்த முயற்சி தடை பட்டு போனது அது புத்தகமல்ல பாடம் ...இனி அது காலம் கடந்த முயற்சி ஏன்என்றால் நம் இளைஞ்சர்கள் நல்ல புத்திசாலிகள் படிப்பு சிறு தொழில் ஏன புகுந்து விளையாடு கிறார்கள் மாசால்லாஹ்......
//அதிரையில் சிறு வயதிலேயே தினசரி என்ற நாளேட்டிற்கு முகவராக இருந்தவன் பின்பு ஒரு கடை என சிறு முன்னேற்றம் அதன் பின்னர் நமதூர் சென்னை வணிகர்கள் கூட என்னை பாராட்டி ஊக்கம்தந்தத்துடன் நல்ல ஆலோசனையும் தந்தார்கள்//
சித்தீக் காக்கா நலமா !? (ஸ்கேல் வச்சு அச்சு பிசகாமல் நேர் கோடுபோட்ட விசாலமான அந்த (நடு)தெருவின் ஞாபகம் வருகிறது)
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக பெற ஆரம்பித்துள்ளது.
இதில் ஒரு முறை பதிவு செய்து வைத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகளை அணுக முடியும்.
இதைப்பற்றிய விரிவான விவரங்களுக்கு
http://tnpsc.gov.in/
http://tnpscexams.net/howtoapply.php
இந்த தளங்களை பார்க்கலாம்...
மேலும்
Help Desks No : 1860 345 0112 (Option 5 for TNPSC) for BSNL & MTNL till - 20:00 HRS.
இதில் தொடர்பு கொள்ளலாம்.
என்றோ எழுதியது.......
அரபுதேசப் பிரவேசம்
----------------------
பசி வந்தால்
பத்தும் பறந்துபோகும்
அப்படி ஒரு பசி
அவனுக்கும்
வந்தது
அஃறிணைத் தோட்டத்தில்
ஆகாரம் கிடைப்பதாய்ச்
செய்தி
மனக்குரல் பாதங்களில்
கிழிந்து கூக்குரலிட
அவமதித்தி
அவசரமாய் நடந்தான்
எதிரே நரிவர
நரியானான்
நாய்வர குரைத்தான்
ஆந்தைவர
இமைகளைத் தொலைத்தான்
இன்று அவனிடம்
பசியும் இல்லை
அவனும் இல்லை
Post a Comment