Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வழக்குக் கூண்டில் - வறுமைக்கோடு... ! - குறுந்தொடர் - 2 23

அதிரைநிருபர் பதிப்பகம் | April 03, 2012 | , , ,

குறுந்தொடர்- 2
வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு

இந்தக் குறுந்தொடரின் முதல் பகுதியை இப்படி முடித்து இருந்தேன்

//இந்த அளவு கலோரி உணவு உண்ட இந்த வறுமைக்கோடு என்ற பாவப்பட்ட ஜீவன்,  இந்த விவாதம் நடக்கும் நமது வழக்கு மன்றத்தில் வாய் பொத்தி நிற்கிறது காரணம் தளர்ச்சி. பேசக்கூட முடியவில்லை. 

இந்த விவாதம் பொருந்துமா? இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம்.// இப்போது பார்க்கலாம்.  

கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் ரூ. 22/= சம்பாதித்து 2400 கலோரி உண்டும் , நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் ரூ. 29/= சம்பாதித்து 2200 கலோரி உண்டும் ஜீவித்து இருக்கலாமென்றும், அதற்குமேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று கருதி அரசு வழங்கும் உதவித்திட்டங்கள் வழங்கப்படத் தேவை இல்லை என்றும் கூறுகிறது மேதாவிகளை உள்ளடக்கிய திட்ட கமிஷன். 

திட்ட கமிஷன் சில அடிப்படியான காரணிகளை தனது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இப்படி ஒரு தான்தோன்றித்தனமான அளவுகோலை வழங்கி இருப்பது இத்தகைய மத்திய அரசின் அமைப்புகள் எந்த அளவுக்கு  நாட்டின் நிலையையும், நாடித்துடிப்பையும் உணர்ந்து இருக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம். ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம். 

வறுமைக்கோட்டிற்கு வரையறை வகுக்கின்ற பொருளியல் மேதைகள் கீழ்க்கண்ட சில காரணிகளை அடிப்படியாக வைத்து அளவிட வேண்டுமென்று பரிந்துரைக்கிறார்கள்.  

1. ஒரு தனி குடும்பத்துக்கு பயிரிடத்தகுதி படைத்த விவசாய நிலம் இருக்கிறதா? 

2. குடி இருக்க வீடு இருக்கிறதா?

3. சுகாதாரமான கழிப்பறை வசதி இருக்கிறதா?

4. தொலைக்காட்சிப்பெட்டி இருக்கிறதா?

5. ஒழுங்கான வருமானம் தரும் வேலைக்குச்செல்பவர்கள் உள்ளனரா?

6. பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறதா?

7. குடும்பத்தின் உறுப்பினர்களில் விதவைகள், விவாகரத்து ஆனவர்கள் உள்ளனரா?

8. பாதுகாக்கப்படவும், பராமரிப்பு தேவையும்பட்ட முதியவர்கள் உள்ளனரா?

9.குடும்பத்தில் ஊனமுற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள் உள்ளனரா?

10. பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகள் உள்ளனரா?

11. அளவிடும் காலகட்டத்தில் அமுலில் உள்ள அரசின் உதவிகள் என்னென்ன? 

ஆகிய காரணிகள் முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். 

இப்படி எதையுமே கருதாமல் ‘மொட்டைத் தத்தன் குட்டையில் விழுந்தான்’ என்று ஒரு அளவுகோலை அறிவிக்கிறது முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனரை – இந்நாள பிரதமரை- தலைவராகக்கொண்ட இந்திய திட்ட கமிஷன். ஒருவேளை இந்த கமிஷனில் பணியாற்றும் மேல்சாதியினர் தரும் அறிக்கைகளை இதன் தலைவரும், துணைத்தலைவரும் படிக்காமலேயே கையெழுத்துப்போட்டு விடுகிறார்களோ என்று பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் எழுப்பியுள்ள சந்தேகம் நமக்கும் வருகிறது. 

ஒரு லிட்டர் பால் என்ன விலை விற்கிறது? ஒரு கட்டுக்கீரையின் விலை என்ன? ஒரு கோழிமுட்டையின் விலை இவர்களுக்குத் தெரியுமா? ஒரு உருளைக்கிழங்கின் விலை இவர்கள் அறிந்தார்களா? இவைகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிட முடியாதவன் ஒரு உழைக்கத் தகுதி பெற்ற உடல் நலத்துடன் வாழ முடியுமா? இதற்கு தகுதியற்ற நோஞ்சான்களால் உழைக்க முடியுமா? உற்பத்தி பெருகுமா? இலவச அரிசி, கோதுமை  இந்தியா முழுதும் வழங்கப்படுகிறதா? இவர்களின் வாதப்படி 2200 கலோரியில் உயிர்தான் வாழமுடியும். உழைக்க முடியுமா? உயிர் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்தால் போதுமா? இப்படிப்பட்டக் கேள்விகள் பெருகும். ஆனாலும் பதிலளிக்க எந்த பொறுப்பான பதவி வகிக்கும் கொம்பனுக்கும் தகுதியிருந்தும் திராணி இல்லை. 

இன்று நாட்டில் நிலைமை ஏழைகள் அரை வயிற்று சாப்பாட்டுடன் அல்லல்படுகிறார்கள். திரு. அர்ஜுன் சிங் குப்தா என்ற பொருளாதார அறிஞர் ஒரு ஆய்வு வெளியிட்டுள்ளார். அதில் சாதாரண மக்களில் – அதாவது ஒழுங்கற்ற வருமானம் வருபவர்களில் என்று வைத்துக்கொள்ளலாம்- 23% மட்டுமே ஓரளவு வாழ்க்கைத்தரத்துடன்   வாழ்வதாகவும் பாக்கி 77%  வறுமையில்தான் வாழ்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். நாம் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு நமது ஊரை அல்லது சுற்றுப்பகுதிகளை இந்தக்கண்ணோட்டத்துடன் பார்த்து வருவதாக வைத்துக்கொண்டால் திரு. அர்ஜுன் சிங் குப்தா குறிப்பிடுவது உண்மை என்று நாமே உணரலாம். அப்படியே கவியன்பன் அதிரை அபுல் கலாம் அவர்களின் இந்த அர்த்தமுள்ள கவிதை வரிகளையும் உண்மை என உணரலாம். 

‘’வலியோ ரெளியோர் மீதினிலே
          வகுத்து வைத்தக் கோடாகும்
பலியாய்ப் போகு மெளியோரும்
         பயமாய்ப் பார்க்கும் கேடாகும்

வேலி தாண்டி வரவியலா
         விரக்தித் தருமே இக்கோடும்
நீலிக் கண்ணீர் வடிக்கின்ற
       நீசர் செய்த பெருங்கேடாம்’’

விலைவாசிகள் அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கின்றன என்றும்- இந்த ஆண்டு தரப்பட்ட மாதச்சம்பளம் விலைவாசி அகவிலைப்படிகளோடு ஒத்துப்போகவில்ல என்றும் காரணம் காட்டி வருடத்துக்கு இருமுறை குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள்  ஆகியோரின் அகவிலைப்படியையும் சம்பளத்தையும்  உயர்த்திக்கொள்ள உபயோகிக்கும் அதே அளவுகோலை ஏழை மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு பயன்படுத்த மறுக்கும் காரணம் என்ன? அந்த அடிப்படையில் பார்த்தால் வருடா வருடம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை கூடத்தானே வேண்டும்? ஏன் குறைகிறது? 

அதுமட்டுமல்லாமல் அவர்களே தந்து இருக்கிற கீழ்க்கண்ட புள்ளி விபரங்களைப்பாருங்கள். 

2004- 2005   ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் 37.2%

2010-2011 ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் 29.8%

மேலேகண்டுள்ள புள்ளிகளின் அடிப்படையில் ஐந்து வருட இடைவெளியில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கையின் சதவீதம் குறைந்து இருக்கிறது. அதன் பொருள், அதிகம் பேர் அதிகம் பொருளீட்டும் நிலைமை உருவாக்கி இருக்கவேண்டும். இதற்கு மாறுபாடாகக் காட்டி இருப்பது புதுமையிலும் புதுமையானதும் புதிரானதுமான அலுவாலியா படித்த பொருளாதாரம். (இவங்க செய்யுற ஒவ்வொரு காரியமும் நெஞ்சைப் பொக்குதே!). வருமானத்தை குறைத்துக்காட்டி வருமானவரி கட்டாமல் ஏமாற்றுவோருக்கு வழங்கப்படும்  தண்டனையை இந்த நீசர்களுக்கும் வழங்க வேண்டும். 

காரணம் இல்லாமல் காரியம் நடக்காதே! இதெற்கெல்லாம் என்ன காரணங்கள்?

காரணங்கள் இருக்கின்றன.. இந்தக்காரணங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களை அடகுவைக்கும் காரணங்கள் . 

அவை என்னென்ன? இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.

-இபுராஹீம் அன்சாரி

23 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் ரூ. 22/= சம்பாதித்து 2400 கலோரி உண்டும் , நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் ரூ. 29/= சம்பாதித்து 2200 கலோரி உண்டும் ஜீவித்து இருக்கலாமென்றும், அதற்குமேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று கருதி அரசு வழங்கும் உதவித்திட்டங்கள் வழங்கப்படத் தேவை இல்லை என்றும் கூறுகிறது மேதாவிகளை உள்ளடக்கிய திட்ட கமிஷன். //

சரியான கேள்வி காக்கா.இது திட்ட கமிஷன் அல்ல.கோமாளிக் கமிஷன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மிகச் சிறந்த பொருளாதார கட்டுரையில், எம்மவர்களின் கவி "quote"ம் எடுத்தாய்ந்து ஆய்வுக்கு பயன்படுத்துவதையும் அதனைக் கொண்டு சிந்திக்க வைக்கவும் வைத்திருப்பது மற்றுமொரு ஹைலைட் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நாட்டின் தன்மை பற்றி நல்ல விளக்கம்!

ஆய்வுகளை அறியும்போது திட்டக்கமிசனின் திட்டமிட்ட சதியாக தெரிகிறது

சேக்கனா M. நிஜாம் said...

வாழ்த்துகள் சகோ. இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு,

இது எளிதில் புரியாத பொருளாதாரப் புதிரே !

இந்தியாவில் 2004-05-ம் ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் 37.2%. இந்த அளவு 2010-11-ம் ஆண்டில் 29.8% ஆகக் குறைந்துள்ளது. அதாவது, வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அப்படியானால் இவர்கள் அதிகம் சம்பாதிக்கும் நிலைமை உருவாகியிருக்க வேண்டுமே ?

ஒரு குடும்பத்தின் வருவாய் கூடியிருக்க வேண்டுமே ?

ஆனால், திட்டக் கமிஷன் வறுமைக்கோட்டுக்கான வருமான அளவை மேலும் குறைக்கின்றது. இது எளிதில் புரியாத பொருளாதாரப் புதிர்.

சேக்கனா M. நிஜாம் said...

// 1. ஒரு தனி குடும்பத்துக்கு பயிரிடத்தகுதி படைத்த விவசாய நிலம் இருக்கிறதா ?
2. குடி இருக்க வீடு இருக்கிறதா ?
3. சுகாதாரமான கழிப்பறை வசதி இருக்கிறதா ?
4. தொலைக்காட்சிப்பெட்டி இருக்கிறதா ?
5. ஒழுங்கான வருமானம் தரும் வேலைக்குச்செல்பவர்கள் உள்ளனரா ?
6. பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறதா ?
7. குடும்பத்தின் உறுப்பினர்களில் விதவைகள், விவாகரத்து ஆனவர்கள் உள்ளனரா ?
8. பாதுகாக்கப்படவும், பராமரிப்பு தேவையும்பட்ட முதியவர்கள் உள்ளனரா ?
9.குடும்பத்தில் ஊனமுற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள் உள்ளனரா ?
10. பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகள் உள்ளனரா ?
11. அளவிடும் காலகட்டத்தில் அமுலில் உள்ள அரசின் உதவிகள் என்னென்ன ?
ஆகிய காரணிகள் முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும்.//

மேற்கண்ட காரணிகளை கண்டிப்பாக பரிசிலித்தால் கூட “இல்லை” என்றே அதிகளவில் கருத்துகள் வரும்.

Ebrahim Ansari said...

ASSALAMU ALAIKKUM WARAHMATHTHULLAHI.
DEAR BROTHER ABU IBRAHIM,

//எம்மவர்களின் கவி "quote"ம்//

ஒரு கருத்தை ஆய்ந்து எழுததொடங்கும்போது சாதக, பாதக கருத்துக்களைப் படித்து குறிப்பெடுத்து தயாராகிறோம். படிப்போரின் சுவையை கூட்டுவதற்காக கவிதைகளை இடைச்சொருகுகிறோம்.

நம்மவர்களும் உலகத்தரமான கவிதைகள் தரும்போது உரிமையுடன் பயன்படுத்துகிறோம் - மிக்க மகிழ்வோடும்- உள் வீட்டில் உணவுண்ட திருப்தியோடும். UTILIZING DOMESTIC ITEMS.

DEAR BROTHER JANAB. SHAIKHANA M. NIZAM.

தங்களின் கருத்துக்கு நன்றி. உங்கள் கருத்து மெத்த சரி. எனது வாதமும் அதுதான் இல்லை என்போர்தான் அதிகம் இருப்பார்கள். அப்படியானால் கோட்டின் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடத்தானே வேண்டும் என்பதுதான்.

MHJ & அர. அல. ஜசக்கல்லாஹ். THANK YOU.

தம்பி அபூ இப்ராகிம் ! யாராவது எதிர்க்கேள்வி கேளுங்களேன்.

Shameed said...

திட்ட கமிசனின் மண்டையில் கலோரி கம்மி என்பதனை உங்கள் கட்டுரை திட்ட கமிசனின் மண்டையை பிளந்து காட்டுகின்றது!

Noor Mohamed said...

1947 ஆகஸ்ட்15 நள்ளிரவில் நாம் சுதந்திரம் பெற்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் பண்டிட் நேரு அவர்கள் நாட்டு மக்களுக்கு வானொலியில் விடுத்த செய்தியில்;
"Independence would have no meaning, unless we can socialize the country and raise the standard of living of poor people" என பேசியதாக பள்ளியில் படிக்கும்போது ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்.

ஆனால்! சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளில் வறுமையான வருமானம் பெரும் வறுமைக்கோடு என்ற கற்பனைக் கோடு நீண்டு கொண்டுதான் போகின்றதேயொழிய நின்றபாடில்லை. அப்படியானால் எப்படி எப்போது சாதாரண வாழ்க்கையை நம் மக்கள் எட்டிப் பிடிப்பர்?

இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் இதனை ஆய்ந்துதான் நமக்கு தொடராக ஊட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். பயனடைவது எப்போது?

Yasir said...

வறுமைக்கோட்டை கோர்ட்டில் நிறுத்தி அதன வரையறைகளை உருவாக்கியவர்களை “நாக்கை” பிடிங்கி கொள்ளும் அளவிற்க்கு கேட்டு இருக்கின்றீர்கள்...முட்டாள்கள் முக்கிய பொறுப்பில் இருப்பதனால் இவ்வாறு நடக்கின்றதா..இல்லை ஏழைகள் எந்த பயனுமின்றி ஏழைகளாவே இருக்க வேண்டும் என்ற திட்டமிடும் கூட்டத்தின் சதியா....இதன் ஆங்கில மொழியாக்க நகல் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்யவேண்டும்

Ebrahim Ansari said...

Dear Brother Noor Mohamed,

//1947 ஆகஸ்ட்15 நள்ளிரவில் நாம் சுதந்திரம் பெற்றோம் //

நேருவின் கருத்தைப் படித்த நீங்கள் வைரமுத்துவின்,

"நள்ளிரவில் பெற்றோம் -அதனால்தானோ
இன்னும் விடியவே இல்லை "

என்ற வரிகளையும் படித்திருப்பீர்களே!.

மருமகனார் யாசிர்.

தொடர் முடியட்டும். நாமே மொழிபெயர்த்து அனுப்பிவைக்கலாம். நமது MP அப்துல் ரகுமானுக்கு அனுப்பலாமா? நெறியாளர் வழிநடத்துக!ஏதாவது செய்தே ஆகவேண்டும். ஆனாலும் செவிடர் காதில் ஊதிய சங்கு ஆகிவிடுமா?

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// வறுமைக்கோட்டிற்கு வரையறை வகுக்கின்ற பொருளியல் மேதைகள் கீழ்க்கண்ட சில காரணிகளை அடிப்படியாக வைத்து அளவிட வேண்டுமென்று பரிந்துரைக்கிறார்கள். ////

நிச்சயம் இந்த 11 அம்ச திட்டத்தின்படி திட்டக்கமிஷன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

ஆனால் மூளையற்ற திட்டக் கமிஷன் உலக தாதாவிற்கு அடிமையாகி விட்டதால் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என்பதே உண்மை.

உலக ரவுடி வங்கி இந்தியாவிற்கு இடும் கட்டளையே நீ எதையும் கையில் வைத்திருக்காதே! தனியாரிடம் கொடுத்து விடு. பண முதலைகளுக்கு அடியாள் வேலை மட்டும் பார்த்தால் போதும். இந்தியாவே நீ இப்படி செய்தால் உனக்கு நிறைய கடன்களைத் நான் தருவேன் என்பது ரவுடி வங்கியின் மிரட்டும் சட்டம்.

எந்த அரசியல்வியாதியும் இனி வரும் காலங்களில் மக்களுக்கு ஒன்றும் செய்யமாட்டான். அரசாங்கத்தில் இருக்கும் பாக்கி துறைகளையும்; தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு அடியாள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

சகோ. இப்ராறிம் அன்சாரி அவர்களுக்கு : தெளிவான விளக்கங்கள். என்று தீரும் எம் இந்திய மக்களின் வறுமை. சுதந்திரம் கிடைத்தது அரசியல் வியாதிகளுக்கு மட்டும். மக்கள் அதே அடிமை நிலையிலேயே இன்று வரை. அடிமை விலங்கு உடைந்து வறுமை ஒழிந்து இந்திய மக்கள் நலமுடன் வாழும் காலம் எப்பொழுது வரும்??????????????

Ebrahim Ansari said...

DEAR BROTHER JANAB. S. ALAUDEEN,
WA ALAIKKUMUSSALAM. WARAHMATHTHULLAHI.

இவற்றை எழுதிய காரணத்துக்காக என்னை இப்படி உலுக்கலாமா?

//சகோ. இப்ராறிம் அன்சாரி அவர்களுக்கு : தெளிவான விளக்கங்கள். என்று தீரும் எம் இந்திய மக்களின் வறுமை. சுதந்திரம் கிடைத்தது அரசியல் வியாதிகளுக்கு மட்டும். மக்கள் அதே அடிமை நிலையிலேயே இன்று வரை. அடிமை விலங்கு உடைந்து வறுமை ஒழிந்து இந்திய மக்கள் நலமுடன் வாழும் காலம் எப்பொழுது வரும்?????????????? //

இந்திய மக்கள் நலமுடன் வாழும் காலம் எப்பொழுது வரும்? உலுக்கும் கேள்வி. ஆனால் விரக்திதான் பதில். நீங்களும் நானும் அல்லது நம்மில் சிலரும் மட்டும் இதை கேள்வியாகக் கேட்டால் போதுமா? மக்கள் உழைக்கத் தயாரில்லை. உண்மையாக உழைத்து ஹலால் ஆக பொருளீட்டத்தயாரில்லை. தவறு இழைப்போரை தட்டிக்கேட்க திராணி இல்லை. கண்டவர் காலில் விழ வரிசை கட்டி நிற்கிறார்கள். காரணம் தூக்கிப்போடும் எலும்புத்துண்டு.

" குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா - இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் முரட்டு உலகமடா
தம்பி திருந்தி நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா '
என்று செங்கப்படுத்தான்காடு ( PKT) கல்யாணசுந்தரம் பாடியதுதான் நினைவுக்கு வருகிறது.

இதயம் திருந்த இஸ்லாம்தான் மருந்து என்ற எண்ணம் வரும்போது ஆகலாம்.

என்றைக்கு அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமோ ? அன்று ஆகலாம்.

என்றைக்கு 'சூழ்ச்சிதனை, வஞ்சகத்தை , பொறாமைதனை தொகை தொகையாய் நிறுத்திவைத்து தூள் தூளாக்கும் காழ்ச்சிந்தை ' நமக்குள் வளர்கிறதோ அன்று ஆகலாம்.

மக்கள் மாறும்வரை அவர்களை ஆள்பவர்கள் மாறமாட்டார்கள். ஆள்பவர்கள் மாறாதவை நமது நிலையும் மாறாது.

விரிவாக எழுதலாம். இன்ஷா அல்லாஹ் எதிர்பாருங்கள்.

அப்துல்மாலிக் said...

வருமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் சாமானியனுக்கு புரியும்படியாக உள்ளது உங்க கட்டுரை, அவுங்களை தட்டியெழுப்ப தொடருங்க காக்கா..

ZAKIR HUSSAIN said...

//மக்கள் மாறும்வரை அவர்களை ஆள்பவர்கள் மாறமாட்டார்கள். ஆள்பவர்கள் மாறாதவை நமது நிலையும் மாறாது.//


நிதர்சனமான வார்த்தைகள் தனி மனிதனாக ஆகட்டும், சமுதாயமாக ஆகட்டும்...மாற்றம் உள்ளிருந்து வரவேண்டும். வெளியிலிருந்துதான் ஏற்பட வேண்டும் என இருந்தால் அதற்கும் ஒரு இஞ்சக்ஷன் கண்டுபிடித்து எல்லோருக்கும் போட்டுவிடலாமே!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தம்பி அபூ இப்ராகிம் ! யாராவது எதிர்க்கேள்வி கேளுங்களேன்.//

இ.அ.காக்கா பெரும்பான்மையோடு இருக்கிற உங்க கட்சியை எதிர்த்து கேள்வி கேட்க (சபாநாயகர்) நேரம் தரமாட்டேங்கிறாய்ங்களே !

இப்படி பெரும்பான்பமை பலம் கொண்ட கட்சி(யாக) இருந்து அதில் நீங்கள் நிதியமைச்சராக இருந்தால்.... :) அமெரிக்கா இந்தியாவுக்கு விசா எடுத்து வர டிமாண்டு அதிகமாகும் ! வெளிநாடுகளில் டாகுமெண்டு ரெடிபன்ன ஆளுங்க கிளம்பியிருப்பாங்க !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தொடர் முடியட்டும். நாமே மொழிபெயர்த்து அனுப்பிவைக்கலாம். நமது MP அப்துல் ரகுமானுக்கு அனுப்பலாமா? நெறியாளர் வழிநடத்துக!ஏதாவது செய்தே ஆகவேண்டும். ஆனாலும் செவிடர் காதில் ஊதிய சங்கு ஆகிவிடுமா?//

காக்கா:

காதுகளில் விழுகிறதோ இல்லையோ ! தனிமனிதனின் கடுதாசி என்றைக்காவது ஒருநாள் உண்மை உரைக்கும் அன்று அவர்களின் செவியும் விழியும் திறக்கும்...

why not ! செய்யலாமே... ஏற்கனவே நாமும் அதனைத்தானே செய்து கொண்டிருக்கிறோம் சந்தர்ப்பங்கள் வசப்படும்போது !

sabeer.abushahruk said...

அஸ்ஸெம்பிளிக்குப்போயி அவிங்க கண்ணுலேயெல்லாம் வெரல விட்டு ஆட்டக்கூடிய ஆணித்தரமான ஆதரங்களோடுகூடிய கேள்விகளாய்க் கேட்கவேண்டிய இ. அன்சாரி காக்காவை அதிரைக்கும் மம்ஸார் பார்க்குக்கும் என்று அலைகழிப்பது எந்தூர் ஞாயமுங்க?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// எந்தூர் ஞாயமுங்க?//

அதானே ! உடனே தேர்தலை வைங்க காக்கா !

Unknown said...

காரணங்கள் இருக்கின்றன.. இந்தக்காரணங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களை அடகுவைக்கும் காரணங்கள் .
அவை என்னென்ன? இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.
----------------------------------------------------
We are Waiting .......

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பாசமிகு இப்றாஹிம் அன்சாரி காக்கா..

தெளிவான அல்சல்..

//இந்த கமிஷனில் பணியாற்றும் மேல்சாதியினர் தரும் அறிக்கைகளை இதன் தலைவரும், துணைத்தலைவரும் படிக்காமலேயே கையெழுத்துப்போட்டு விடுகிறார்களோ என்று பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் எழுப்பியுள்ள சந்தேகம் நமக்கும் வருகிறது.//

திட்ட கமிசன் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் சாதரண வாழ்க்கை வாழும் குடும்பத்திலிருந்து வருபரவால் ஒரு வேலை சரியான திட்டம் தர இயலுமா காக்கா.?

முதலாளித்துவத்துக்கு அடிவருடியாக செயல்பட்டுவரும் உலக தாராள பொருளாதார கொள்கை விரும்பிகளில் கைவசம் ஆட்சிப்பிடி இருக்கும் வரை இதே நிலை தொடரத்தான் செய்யும்... எந்த சோசலிச, கம்யூனிச மற்றும் தாராள பொருளாதார கொள்கையால் வறுமைகோடு நீலுமே தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை... நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை உணரும் ஒரே ஆட்சி இஸ்லாமிய ஆட்சியாக மட்டுமே இருக்கும்.

//காரணம் இல்லாமல் காரியம் நடக்காதே! இதெற்கெல்லாம் என்ன காரணங்கள்?

காரணங்கள் இருக்கின்றன.. இந்தக்காரணங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களை அடகுவைக்கும் காரணங்கள் . //

மிக ஆவலுடன் காத்திருக்கிறோம் காக்கா...

Ebrahim Ansari said...

Wa Alaikkumussalam Rahmaththullahi.
Dear Brother Thajudeen,

//திட்ட கமிசன் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் சாதரண வாழ்க்கை வாழும் குடும்பத்திலிருந்து வருபரவால் ஒரு வேலை சரியான திட்டம் தர இயலுமா காக்கா.? //

இதைப்பற்றி பகுதி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறேன். இவர்கள் போடும் திட்டங்கள் தவறு என்று சொல்ல ஒரு பொருளாதாரம் படித்தவர் வேண்டியதில்லை. பொட்டுக்கடலை விற்பவர் கூட கூறிவிடமுடியும் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். சமூகத்தின் எந்த நிலையில் இருந்து வந்தவராக இருந்தாலும் அந்தப் அரசு அதிகாரப் பொறுப்புக்கு வரும்போது அது அதற்கு உரிய தகுதிகளோடுதான் வர முடியும். ஆனாலும் நீதியின் கரங்களே பலமுறை கட்டப்பட்டு விடுவதைப்பார்க்கிறோம். நீதி விசாரணை கமிஷன்கள் கூட ஒருதலைப்பட்சமாக அறிக்கை சமர்ப்பிக்கின்றன. ஆகவே யார் எங்கிருந்து வந்தாலும்- அதிகாரவர்க்கத்தின் கைப்பாவையாக அவர்கள் கேட்கும் விதத்தில்தான் அறிக்கைகளைத்தருகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இபுறாகிம் அன்சாரி காக்கா எழுதி வெளியிடும் ஒவ்வொரு கட்டுரையும் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் கட்டுக்கீரை போல் மந்தமான அறிவுக்கு நல்ல புரதமிட்டு புத்துணர்ச்சி அளிக்கும் சத்தான டானிக். இப்பொழுது தான் உங்கள் கட்டுரையை முழுமையாக படித்து கருத்திட நேரம் கிட்டியது.

வாழ்த்துக்கள் காக்கா....தொடருங்கள் உங்களின் ஆய்வுக்கட்டுரைகளை...

KALAM SHAICK ABDUL KADER said...

/அஸ்ஸெம்பிளிக்குப்போயி அவிங்க கண்ணுலேயெல்லாம் வெரல விட்டு ஆட்டக்கூடிய ஆணித்தரமான ஆதரங்களோடுகூடிய கேள்விகளாய்க் கேட்கவேண்டிய இ. அன்சாரி காக்காவை அதிரைக்கும் மம்ஸார் பார்க்குக்கும் என்று அலைகழிப்பது எந்தூர் ஞாயமுங்க?//


ஒரு கவிமுகம் மற்றுமொரு கவிமுகத்தைப் பார்க்கும் கண்ணாடி!

என் ஆதங்கமும் அஃதே!!

என் கவிதை வரிகள் இக்கட்டுரையில் மேற்கோட் காட்டப்படும் அளவுக்குத் தரம் வாய்ந்ததா?

கட்டுரையாளர்- சகோதரர் இப்றாஹிம் அன்சாரி காக்கா மற்றும் அ.நி. நிர்வாகி - சகோதரர்- அபூ இப்றாஹிம் ஆகியோர்கட்கு "ஜஸாக்குமுல்லாஹ் கைரன்"

என் பாக்கள் எல்லாம் கவிதைப் பாடம் படிக்கும் ஒரு மாணவனின் வீட்டுப்பாடங்கள் என்றும், முழுமைப் பெறாத ஒரு கற்றுக்குட்டியின் வீட்டுப்பாடங்கள் என்றும் அறிக! இவ்வாறு மேற்கோட் காட்டப்படுதலிலிருந்து, இன்னும் முழுமையாக வனைந்தால் என்னை வழி நடத்தும் ஆசான்கட்கே அப்போற்றுதல் உரித்தாகும் என்றும் உணர்கின்றேன்!

இப்றஹிம் அன்சாரி காக்கா அவர்கள் இக்கட்டுரைத் தொடர்களை மொழிபெயர்த்து நடுவண் அரசுக்கு அனுப்பலாம். நமதூர் அன்சாரி எனும் சகோதரர் அமெரிக்க பொருளாதாரச் சபைக்கு இதுவே போன்றுப் பொருளாதாரக் கட்டுரைகளில் ஆலோசனை வழங்கி உள்ளார் என்பதும் நாம் அறிந்த நற்செய்தி!
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு