Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அசரவைக்கும் அதிரை விருந்து வைபவங்கள் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2012 | , ,

அதிரையின் “விருந்து” உபசரிப்புகள் !

விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஓன்று. நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றன...............?

1. திருமண வலீமா விருந்து
2. வீடு குடிபுகுதல் விருந்து
3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4. நண்பர்களுக்காக வைக்கப்படும் விருந்து
5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும் வைக்கப்படுகின்ற விருந்து
6. பெருநாள் விருந்து

என விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது.


லுஹர்" தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டின் அருகிலேயே பந்தல் அமைக்கப்பட்டு அல்லது திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இம்மதிய விருந்துகள் உபசரிக்கப்படுகின்றன. ஊரிலே “கலரிச் சாப்பாடு” என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு. 

இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை, பணக்காரான் என்ற பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே “சஹனில்” (கூட்டாக) ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து கறி” என்று விருப்பமாக அழைக்கப்படும் இவ்வுணவை அனைவரும் விரும்பி சாப்பிடுவது கூடுதல் சிறப்பாகும். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச் சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் (! ! !) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே (!?) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவைகள் ஒரு வகையாகவும்......

மற்றொன்று “பிரியாணி” நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிற “பிரியாணி” சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். மேலும் கூடுதலாக துண்டுகளிட்ட பொரிச்ச கோழி, வெங்காயத் தயிர் (சட்டினி) ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவைகள் இவற்றில் இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாகும். 

“தால்ச்சா”...! இதன் ருசியே தனி, “ஐந்து கறி, “பிரியாணி” போன்ற சாப்பாடுகளுக்கு கூடுதல் இணைப்பாக இவை அதில் இடம்பெற்றிருக்கும்.

இனிப்பு வகைகளாக....................

1. சேமியாவில் தாயாரிக்கப்படுகிற “பிர்னி” 
2. “பீட்ரூட்”டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு 
3. கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு 
4. ரவாவில் தாயாரிக்கப்படுகிற “கேசரி”
5. பேரிட்சை பழத்தில் தாயாரிக்கப்படுகிற இனிப்பு 

போன்றவற்றில் ஏதாவது ஓன்று “ஐந்து கறி” மற்றும் “பிரியாணி” உணவில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் இடம் பெற்றிருக்கும். 

“ஐந்து கறி” , “பிரியாணி” போன்ற உணவுகள் திருமண நிகழ்ச்சிகள், வீடு குடி புகுதல், ஹஜ் செல்லும்போது / முடித்துவிட்டு வரும்போது என இதுபோன்ற தினங்களில் மதிய உணவு ஏற்பாடு செய்து ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்த்தப்பட்டு உபசரிக்கப்படுவார்கள்.  

மறு சோறு” போதும்........ போதும்........ என்று சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள். 

வாங்க காக்கா” !

"பேப்பரு தாங்க...."

"மூணு பேரா உட்காருங்க...(!!!)"

"அங்கே ஒரு சஹன் வைங்க" ! 

"எங்கே தால்ச்சா ?" 

"இங்கே சோறு பத்தலே...."

"எங்கே மறுசோறு ?"

"இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க ஹாக்கா !" 

இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் “கலரிச் சாப்பாட்டில்” அங்காங்கே ஒலித்துக் கொண்டே இருக்கும்....

என்ன சகோதர்களே ! உங்களுக்கும் அப்படி ஒலித்தாதா...?

கவனத்தில் கொள்ளவேண்டியவை :

வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்ம்பிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும்.

உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதிலும் விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம் (இன்ஷா அல்லாஹ் ! )

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்.......

16 Responses So Far:

அதிரை சித்திக் said...

அருமை அருமை ..,

ஒரு சிந்தனையாளன் எந்த ஒரு விஷத்தை சொன்னாலும்

தான் கூற வந்த கருத்தை முத்தாய்ப்பாய்வைத்து முடிப்பது தான்

அவனுடைய எழுதின் சிறப்பு சபாஸ் ..

இதில் நகைசுவையாய் சொல்வதென்றால் கூட நகைசுவையாய்

எவ்வளவோ சொல்லலாம் ஆனால் நாகரீகமாக சுவையாக (நமதூர் விருந்து போல )

அழகாக கட்டுரையை முடித்துள்ளார் சகோ நிஜாம்..,வாழ்த்துக்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விருந்தின் வகையும் சுவையும் நல்லாயிருக்கு!

இன்னும் பல வகையை வுட்டுப்புட்டியோ சகோ. சேக்கனா

சின்னத்து விருந்து
காது குத்தி விருந்து
வளைகாப்பு விருந்து
ஒப்பிச்சு பார்க்கிற விருந்து
ஹத்தம் பாத்திஹா விருந்து
தோழஞ் சாப்பாட்டு விருந்து
பயணாளியை கட்டாயப் படுத்தி போட வைக்கும் விருந்து.

அன்புடன் புகாரி said...

வள்ளுவன் சொன்ன விருந்தோபலை தமிழ் நாட்டில் முஸ்லிம் வீடுகளில்தான் நிறைவாகக் காணமுடியும்.

இப்படி ஒரு பிரியாணி தட்டைக் காண்பித்து எங்களைப் பாடாய்ப்படுத்துவது தகுமா? சீக்கிரமா ஒரு விருந்துக்குக் கூப்பிட்டுங்க, இல்லேன்னா மரணத்துக்கே விருந்தாயிடுவோம்மோன்னு அச்சமா இருக்கு சும்மானாச்சுக்கும் :)

சகன் என்பது ஒரு நல்ல திட்டம்தான், ஆனால் சிலரோடு சகனில் உட்கார நேர்ந்து இனி சாப்பாடே வேண்டாம் என்று உண்ணாவிரதம் மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது எனக்கு :-)

புளியாணம் என்ற அருமைத் தமிழ்ப்பெயரை விட்டுவிட்டு ஏன் தான் ரசம் என்கிறார்களோ? அருமையாக எழுதி இருக்கிறீர்கள் புளியாணம் என்று

சாதம், சாம்பார், ப்ரேக்பாஸ்ட் என்பனவற்றையெல்லாம் விட்டுவிட்டு நம் வீடுகளில் எத்தனை அழகாக சோறு. பறுப்பாணம், பசியாறுதல் என்று அழகாகச் சொல்லுவார்கள்?

இப்படி நாவை எச்சிலில் குதிக்க வைத்துக்கொண்டே எழுதிச் சென்றுவிட்டு இறுதியில் எண்ணத்தைப் பண்பில் குதிக்க வைத்தீர்கள் பாருங்கள், அதுதான் அழகு முத்தாய்ப்பு.

சோற்றை வீணடிப்பவன் தன்னையே வீணடிப்பதைவிட மிகவும் தப்பானதோர் செயல் செய்கிறான். அவன் ஒழிந்துபோகக் கடவ!

அன்புடன் புகாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

உண்ணுங்கள்,பருகுங்கள் -வீண் விரயம் செய்யாதீர்கள் என்ற குரான் மொழியை மனதில் கொண்டால்,இன்ஷா அல்லாஹ் வீனாக்கமாட்டோம்.

சகோ நிஜாமுக்கு,இப்படி எல்லா சாப்பாடும் கொலஸ்ட்ரால் உள்ளதா இருக்குதே,மாத்து ஏற்பாடு எதுவும் இருக்கா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அருமையான கட்டுரையை அழகாக இங்கு வடித்துத்தந்த சகோ. சேக்கன்னா நிஜாமுக்கு வாழ்த்துக்கள்.

நம் மார்க்கம் எவ்வளவு அழஹா சொல்லுது பாத்தியளா "நன்கு உண்ணுங்கள், பருகுங்கள். ஆனால் அதில் வீண் விரயம் செய்யாதீர்கள்".

நம்மூரு பாஷையிலெ சொல்றதா இருந்தா 'பசி தீரும் வரை மறு சோறு வாங்கி சாப்பிடலாம். ஆனால் வாங்கிய மறு சோற்றை முழுவதும் உண்டு சுத்தம் செய்யாமல் அப்புடியே அதுமேலெ தண்ணியெ ஊத்தி கையை கழுவிட்டு எழும்பிடாதியெ' அந்த சோற்றை பசியுடன் வீட்டின் வாயிலில் காத்திருக்கும் ஏழைகளுக்கு கொடுத்து அவர்கள் பசி போக்கலாம் அல்லவா?

ஒரு கால‌த்துலெ அதையும் சும்மாவா உட்டாங்க‌....கொர‌வ‌னுக்கு முள்ளு சோத்தை அள்ளி கொடுத்து அதுக்கு ப‌திலா அட்ட‌பில்லை வாங்கிக்கொண்டார்க‌ள்......

அப்துல்மாலிக் said...

6 இன்று 3 ஆகிவிட்டதா ஒரு சகனுக்கு? இது மேலும் சுருங்கினால் அப்புறம் சஹன் (கூட்டு) என்ற ஒன்ரு இல்லாமல் போய்டும்

சகன் சாப்பாட்டோடு கடைசியில் கொடுத்த ட்விஸ்ட் ம் அருமை, வீண் விரயம் என்பது மறுமையில் பதில் சொல்லியே ஆகவேண்டும்

KALAM SHAICK ABDUL KADER said...

சுவையூட்டியே இறுதியில் “சுருக்’ என்று ஊசி போட்டது தான் உச்சகட்ட - மெச்சத் தகுந்த எழுத்தாற்றல்!

ஆணம், ஏனம். புளியாணம்,பருப்பாணம் பசியாறுதல், பள்ளிவாசல், தொழுகை,ஓது, நோன்பு, இப்படி அழகு தமிழில் நம் முன்னோர்கள் நம் நாவிற்கினியதாய்ப் பழக்கி விட்டதற்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்.

இப்படி ஃபோட்டா போட்டால் மட்டும் போதுமா? இன்ஷா அல்லாஹ் விடுப்பில் வந்து ஊரில் விருந்துண்ண ஆசை தான், தம்பி அர.அல சொன்னது மிகவும் கவனத்திற் கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் இல்லாத மாற்று உணவுக்கு மாற்று ஏற்பாடு உண்டென்றால் , ஓ.கே. இல்லை என்றால் பத்தியச் சாப்பாடு ஒன்றே எங்களைப் போன்ற வயதானவர்கட்கு! (இப்பொழுது கொலஸ்ட்ரால், நீரிழிவு போன்றவைகள் இளம் வயதினர்க்கும் உண்டு)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஸ்வீட் இல்லாத கலரி சஹன் நல்ல பரிமாற்றம். வாழ்த்துக்கள் நண்பர் நிஜாம் .

உணவை வீண்விரயம் செய்யும் அரபுகாறவங்களுக்கு நம்மூர் பரவா இல்லை என்று சொன்னாலும்.சஹன் சஹானா வாங்கி தின்பதுதான் விருந்து கொடுப்பவர்களுக்கு சஞ்சலத்தை கொடுக்கின்றன.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மிகவும் சுவையான பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ.சேகன்னா நிஜாம்

நானும் இன்னும் சில நண்பர்களிடம் உணவு வீடுதிக்கு (ஹோட்டல்) சென்றோம் அங்கே பக்கத்துக்கு டேபிளில் வெளி நாட்டை சேர்ந்த ஒரு நபர் இருந்தார், கூட்டம் அதிகம் இல்லாததால் உணவு சீக்கிரமே கொண்டு வரப்பட்டது. எங்களுக்கு வேலைகள் இருந்ததால் விரைவாகச் சாப்பிட்டு முடித்தோம். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உணவு மீந்து/மிஞ்சி போயிருந்தது. நாங்கள் ரெஸ்டாரெண்டை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கையில் எங்களை யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது. எங்களுக்கு அருகே இருந்த வெளிநாட்டு நபர் ஹோட்டல் முதலாளியிடம் புகார் செய்து கொண்டிருந்தனர். நாங்கள் அத்தனை உணவை வீணாக்கியதை அவர்கள் கண்டித்துக் கொண்டிருந்தனர் என்று முதலாளி ஆங்கிலத்தில் சொன்னபோது தெரிந்தது.

எங்களுக்கு அவர்கள் தலையீடு அதிகப் பிரசங்கித்தனமாகப் பட்டது. நாங்கள் பணம் கொடுத்து வாங்கிய உணவை என்ன செய்கிறோம் என்பது எங்கள் விருப்பம். நீங்கள் தலையிட வேண்டாம் என்று என் கூட வந்த நண்பர் சொன்னார். வெளிநாட்டு நபர்க்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவே ஆர்டர் செய்யுங்கள். பணம் உங்களுடையதுதான், சந்தேகமில்லை, ஆனால் இயற்கை வளங்கள் பொதுச் சொத்து. உலகில் நிறைய பேர் அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றனர். உணவை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை.’ எங்கள் முகம் சிவந்துவிட்டது. அவர் சொல்வதன் நியாயம் எங்கள் மனதிற்குப் புரிந்தது. வளர்ந்த, பணக்கார நாட்டவரான அவர்களின் பொறுப்புணர்வுக்கு நாங்கள் வெட்கித் தலை குனிந்தோம்.

நம் நாடு பணக்கார நாடல்ல, ஆயினும் நாம் விழாக்கள், விசேஷங்களில் மற்றவர்களை விருந்துக்கு அழைத்தால் அதிக அளவில் உணவு தயாரிக்கிறோம். இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தது.

ஆங்காங்கே, நாம் சந்திக்கும் ஏழைகள், எளியவர்களுக்கு நமது செலவத்திலிருந்து செலவழிப்பது உண்மையில் செலவு அல்ல; நமது மறுமைக்கான முதலீடு (investment) என்பதனைக் கருத்தில் கொண்டு நமது அணுகுமுறைகளைச் சீராக்கி இந்த இலாபகரமான முதலீட்டை அதிகமாக்க வேண்டும்.

Ebrahim Ansari said...

தம்பி ஷேக்கனா நிஜாம் அவர்கள் இருவகையிலும் சுவைபட பதிவை தந்து இருககிறார்கள்.

பாராட்டுக்கள்.

//ஒருகோடியே அறுபத்தொன்பது லட்சம் டன் உணவுப்பொருள்கள் சரியான சேமிப்பு கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வீணாகிப்போயின.// (பார்க்க: எனது வழக்குக்கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு ) இதில் கலரிளில் வீணாகும் சமைத்த உணவின் அளவீடு கணக்கிடப்படவில்லை.

கணக்கற்ற ஏழைகள் கால வயிறுக் கஞ்சிக்கு கதறியழும் நிலையில் ஆடம்பர விருந்துகளை தவிற்கும் மனப்பக்குவத்தை அல்லாஹ் தருவானாக.

sabeer.abushahruk said...

எச்சூஸ்மீ,
பிரினி ப்ளீஸ்.
ஸ்வீட் இல்லாத விருந்து, சேக்கனா நிஜாம் இல்லத அதிரை நிருபர் போல.

எனவே, ஃபோட்டோவ்லயாவது ஸ்வீட் ப்ளீஸ். மறுசோறு வாங்கி சாப்பிடும் அளவுக்கு ருசியான பதிவு.

KALAM SHAICK ABDUL KADER said...

ஆஸ்தான கவிஞர் வீட்டுத் திருமணத்தை முன்னிட்டு எங்கட்கு வழங்கியுள்ள இவ்விருந்தில் இனிப்புச் சேர்க்கப்படா விட்டாலும், கவிவேந்தரின் இனிப்பானக் கவிதைகள் ‘ப்ரினி”யைக் காட்டிலும் இனிப்பானவைகள் என்பதால் ஏற்றுக் கொள்வோம்!

Canada. Maan. A. Shaikh said...

பிரினி என்கிற சொல்லை அல்லது கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டது கனடாவில் வாழ்தாலும் கட்டுரை படித்துவிட்டு விருந்து சாபிட்டதுபோல் சந்தோசம்.

பிரினியை நினைவூ(ஊ)டியதற்கு நண்பர் நிஜாம் அவர்கள்களுக்கு நன்றி.

மான் எ ஷேக்

ZAKIR HUSSAIN said...

Nizam.....பசிக்குது.....

Yasir said...

ஓ....கலரி முடிஞ்சிரிச்சா ?? ஒகே சகோ.நிஜாமின் மெசஜ்ஜை மனதில் நிறுத்தி & நடைமுறை படுத்தி வாழ வேண்டியது நம் அனைவரின் கடமை....ஆனால் சஹனை காட்டி ஊர் சாப்பாட்டை நினைவூட்டிய அன்பு !!! உங்களைச் சும்மாவிடாது நண்பரே :)

Shameed said...

லேட்ட வந்தாலும் ( ஆறிப்போன )மறு சோறு தருவீங்க தானே !!!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு