Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குண்டு துளைக்காத கூண்டிற்குள் சுதந்திர இந்தியா!!! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | April 03, 2012 | , , , , ,

நமது அண்டை / பண்டைய நாடான இலங்கை நமக்கு நட்புறவுள்ள நாடாக இருந்த போதிலும் அல்லது அண்மையில் ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை உள்நாட்டுப்போர் காலத்தில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இலங்கைக்கு எதிராக வாக்களித்து அதன் மூலம் இரு நாடுகளுக்கான நட்புறவு வலுவிழந்தது போல் காணப்பட்டாலும் நம் இந்தியா, நாட்டின் தீபகற்ப தென்கோடியான தமிழக கடல் எல்லையில் தினசரி ரோந்து செல்லும் வகையில் நவீன ஆயுதங்கள் தாங்கிய ஒரு அதிவேக போர்க்கப்பலை நிரந்தரமாக நிறுத்தி வைக்க கடமைப்பட்டுள்ளது. 

இது நம் நாட்டின் முக்கிய எல்லையான தென்கோடியை அந்நிய நாட்டின் அத்துமீறல்கள் அல்லது அந்நிய சக்திகள் எதிர்பாராமல் எப்பொழுதேனும் நம் நாட்டின் மீது படை எடுத்து வருதல் போன்ற அச்சங்களிலிருந்து நம் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவும், காலங்காலமாக கடல்சார் தொழில் செய்து வரும் மீனவ சமுதாயத்தையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாத்து அவர்களின் தொழில் எவ்வித அச்சமின்றியும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்களின்றியும் அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் தடைபடாமால் தொடரவும், மீன் பிடி தொழில் மேம்படவும் தக்க நடவடிக்கைகளை கட்சிகள் தாண்டி நாட்டின் பாதுகாப்பிற்காக எடுக்க வேண்டியுள்ளது.  

எதோ மும்பைக்கு அருகில் உள்ள கடல் எல்லை மற்றும் கஷ்மீர் எல்லை தான் நம் நாட்டிற்கு முக்கியமான எல்லைகள் என்று அதை மட்டும் கவனித்துக்கொண்டு இருந்து விடாமல் நாட்டின் தென்கோடியில் கச்சத்தீவில் இலங்கை உதவியுடன் தன் ராணுவ தளத்தை அமைத்து இந்தியாவிற்கு ஒரு அச்சமான சூழ்நிலையை நாலாப்புறமும் ஏற்படுத்தி அதற்கு எதிரான மும்முனை தாக்குதலுக்கு திட்டமிட்டு தயாராகி வரும் சீனாவின் அச்சத்திலிருந்து நம் நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அக்கறையும் அரசுக்கு இருந்தாக வேண்டும். 

எல்லை தாண்டி மீன் பிடித்தான் என்பதற்காக மீனவர்கள் மீது மனிதாபிமானமற்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி அராஜகம் புரிவது அவர்களுக்கும் அதை கண்டும் காணாதது போல் இருக்கும் நம் நாட்டின் அரசுக்கும் நல்லதல்ல. பிறகு இந்த நாட்டில் பிறந்தோம் என்பதற்கு எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் போய் விடும். 

பிறந்த மண்ணில் வணிகம் செய்யவோ அல்லது பணி செய்யவோ யாருக்குத்தான் ஆசை இல்லை? அதற்கு அரசும், சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக அமைந்து உதவ வேண்டும். சாதி, மத, இன துவேசங்கள் நமக்கு முன்னே நம் தொழிற்கூடத்திற்குள் ரிப்பன் வெட்டி குடியேறி ஆணவத்துடன் கால் மேல் கால்போட்டுக்கொண்டு இருக்கையில் அமர்ந்து கொள்கின்றன. 

சிறிய, சிறிய நாடுகளெல்லாம் தன் நாட்டுப்பிரஜைகளை உலகில் எங்கேனும் அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பொழுது அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அங்கு ஓடோடிச்சென்று ஆபத்தில் சிக்குண்டவர்களை மீட்க எல்லாவித முயற்சிகளையும், முனைப்புகளையும் காட்டி அதற்காக இருநாட்டு ராஜ்ய உறவுகளே சீர்குலைந்து முறிந்து போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு தயாராகி விடும் சூழ்நிலையில் நாம் மட்டும் நம் மக்களின் உயிரை ஒரு பொருட்டாகவோ அல்லது பொட்டுக்கடலைக்கு சமமாகவோ கூட எண்ணுவதில்லையே ஏன்? (அண்மையில் நம் நாட்டு அப்பாவி மீனவர்களை குருவி போல் சுட்டுக்கொன்று பின் கேரள அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இரு இத்தாலிய கப்பல் சிப்பந்திகளை மீட்க இத்தாலி அரசு செய்து வரும் முயற்சிகளே நமக்கு ஒரு நல்ல உதாரணம்) 

இதில் தன் பிறந்த தேதி பிரச்சினையை கிழப்பிய மத்திய அரசை பழிவாங்க நம் ராணுவ தலைமை தளபதி கே.பி. சிங்கின் அண்மைக்கால செயல்பாடுகளும், அவர் பிரதமருக்கு எழுதிய ரகசிய கடிதம் ஊடகத்தில் வெளியானதும், அதற்கு சப்பைக்கட்டும் முயற்சிகளும் நம் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சத்தையும், கேள்விக்குறியை ஏற்படுத்தி என்றோ சொல்லப்பட்ட "வேலியே பயிரை மேய்வது போல்" என்ற பழமொழி இவர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. 

அப்பாவி கோழிக்குஞ்சுகளை அது ஓடியாடி விளையாடி வரும் வழித்தடத்தில் உள்ள ஆபத்துக்களிலிருந்து மட்டும் தாய் கோழி அவற்றை பாதுகாத்துக்கொள்ளாமல் தலைக்கு மேலே வானில் தொலை தூரத்தில் வட்டமிட்டு நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் பருந்துகளிடமிருந்தும் தன் குஞ்சுகளை காத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளது. நம் நாட்டின் நிலைமையும் கிட்டத்தட்ட இது போல் தான் உள்ளது. உள்நாட்டு தீவிரவாதம், பிரிவினை வாதம், நக்ஸலைட் என்று சொல்லி அதில் அக்கறை செலுத்துவதில் தவறில்லை தான். அதே சமயம் நம்மை தொலை தூரத்திலிருந்து பல வழிகளில் குழிதோண்டி புதைக்க துடித்துக்கொண்டிருக்கும் அந்நிய சக்திகளையும் இனம் கண்டு அதன் சதித்திட்டங்களை தன் வலிமையையும், திறமையையும் கொண்டு பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். 

உலகில் சிறிய நாடுகளெல்லாம் பொருளாதார முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் எங்கோ சென்று கொண்டிருக்கும் பொழுது எல்லா வளங்களையும் பெற்று உலகின் பெரும் ஜனநாயக நாடாக திகழும் நம் நாடு மட்டும் எல்லாவற்றிற்கும் அல்லோலப்பட்டு அவதிப்படுவது ஏன்? (அண்மைச்செய்தி : அமெரிக்கா உதவியுடன் வங்காளதேசம் சொந்தமாக செயற்கை கோள் தயாரித்து வருகிறது.) 

நம் உடல் உழைப்பில் வாங்கும் சொத்து பத்துகளுக்கும், ஆபரண அணிகலன்களுக்கும் அரசு வரி விதிக்கிறதோ? இல்லையோ? கொள்ளையர்கள் அவற்றிற்கு 100% வரி விதித்து வீட்டின் பூட்டை உடைத்து வாசலில் சரக்கு லாரியை நிறுத்தி வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் கொள்ளையடித்து அள்ளிச்செல்லும் காலமாகி விட்டது இது. அதில் வீடும் கழட்டி மாட்டும் வசதியை பெற்றிருந்தால் அதையும் கழட்டிக்கொண்டு கையோடு அள்ளிச்சென்று விடுவர் போலும். பணத்தை வங்கியில் போட்டால் அங்கும் கொள்ளை, நிலம் வாங்கிப்போட்டால் அங்கு நிலஅபகரிப்பு/ஆக்கிரமிப்பு, வீட்டில் வைத்தால் கொலை செய்து கொள்ளை, சட்டைப்பாக்கெட்டில் வைத்திருந்தால் வழிப்பறி கொள்ளை......பிறகு எது தான் திருட முடியாத பாதுகாப்பான இடம் என்று நாளடைவில் கொள்ளையர்களிடம் தான் ஆலோசனை கேட்க வேண்டும் போல் தெரிகிறது. 

விஐபியா நீங்கள்? தினமும் காலையில் வாக்கிங் செல்பவரா நீங்கள்? அப்படியானால் கடத்தப்பட்டு போட்டு தள்ளப்பட வேண்டியவர் தான் நீங்கள் என்றாகி விட்டது நம் நாட்டின் தனி நபர் பாதுகாப்பு. (இப்பொழுதெல்லாம் விஐபி என்றால் நல்ல விசயத்திலா? அல்லது தீய விசயத்திலா? என மக்கள்  தெரியாமல் குழம்பி உள்ளனர்) 

அதனால் தான் சொந்த நாட்டில் செத்து சுண்ணாம்பாய் ஆகி கர்ஜிக்க வலுவில்லாத மெலிந்த சிங்கங்களாக வாழ்வதை விட அயல்தேசங்களில் பொதி சுமக்கும் கழுதையாக கொஞ்ச காலம் சந்தோசமாக வாழ்ந்து விட்டு போய் விடலாம் என துணிந்து விமானம் ஏறி வந்து விடுகிறார்கள் போலும் நம் மக்கள்.

-மு.செ.மு. நெய்னா முஹம்மது

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதுவரை சிந்தையில் உதிக்காத கேள்வி MSM(n), அதானே ! வங்கக் கடலின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூட்டாளியை பக்கத்தில் வைத்திருக்கும் குட்டி நாடு சொல்லாமல் காட்டிடும் அச்சம்... நிறைய சிந்திக்க வைக்கிறது...

விழிக்குமா ? இந்திய கடற்படை !!! சுடுறான் சுடுறான்னு கத்தும் ஒரு கூட்டத்தை கண்கொள்ளாத நிலையில் அவன் சுட்டுப் பார்க்கிறேன் சொரனை இருக்கான்னு என்று கேட்கும் அளவிற்கு இந்திய தென்கோடி கடல் வழி எல்லைக்கு சவால்தான் !

MSM(n) நல்ல பதிவு !

Noor Mohamed said...

நீண்ட நாட்களுக்குப் பின் பாதுகாப்புடன் தலை காட்டுகிறார் தம்பி நெய்னா.

//குண்டு துளைக்காத கூண்டிற்குள் சுதந்திர இந்தியா!!!//

ஆம்! ஆகஸ்ட்15 சுதந்திரதினம், ஜனவரி 26 குடியரசு தினம், இந்த நாட்களில் கொடியை ஏற்றி, பிரதமரும் குடியரசு தலைவரும் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டிற்குள் நின்று கொண்டு, பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு நம் நாடு என கர்ஜித்துக் கொண்டே காலத்தை கடத்து கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இவர்களுக்கே நம் மக்கள் மீது நம்பிக்கை இல்லையே?!

Noor Mohamed said...

//அதனால் தான் சொந்த நாட்டில் செத்து சுண்ணாம்பாய் ஆகி கர்ஜிக்க வலுவில்லாத மெலிந்த சிங்கங்களாக வாழ்வதை விட அயல்தேசங்களில் பொதி சுமக்கும் கழுதையாக கொஞ்ச காலம் சந்தோசமாக வாழ்ந்து விட்டு போய் விடலாம் என துணிந்து விமானம் ஏறி வந்து விடுகிறார்கள் போலும் நம் மக்கள்.//

தம்பி, நெய்னா, வேண்டுமானால், இது அதிரை மக்களுக்கு ஆறுதலாகவும் ஆர்வமாகவும் இருக்கலாம். ஆனால்! பலர் உண்மையான வாழ்க்கை என்ற கப்பலில் கரைகாண முடியாமல் சிக்கித் தட்டுத் தடுமாறித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Unknown said...

நெய்னா உண்மையில் நானும் இதை பற்றி நினைத்ததுண்டு !

சமீபத்தில் கூட நம் தமிழக கடலோர பகுதிகளில் கடற்படை ரோந்து ,கடற்பயிற்சி

அது ,இதுன்னு சொன்னார்களே ஒரு வேளை நீ சொல்கிற வெளிகுத்து ஆக இருக்குமோ ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நாட்டின் தென் பகுதியை எதிர்காலத்தில் காப்பாற்ற நல்லதொரு வேண்டுகோள்.

ஆள்பவர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டிய தகவல்.

பொருளாதாரம்,பாதுகாப்பு என சிறந்த எழுத்தாளர்கள் இங்கு வந்து அசத்துகிறார்கள்.

வளர்க மேலும் உங்கள் ஞானம்!

அலாவுதீன்.S. said...

////ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை உள்நாட்டுப்போர் காலத்தில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இலங்கைக்கு எதிராக வாக்களித்து////


சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மனித உரிமை மீறலைப்பற்றி பேச அமெரிக்காவுக்கும் அருகதையில்லை!

இந்தியாவுக்கும் அருகதையில்லை!

காஷ்மீரில் இந்திய இராணுவம் செய்து கொண்டு இருப்பது என்ன?

உலக நாடுகள் முழுவதும் அமெரிக்கா செய்த அட்டகாசங்களுக்கு பெயர் என்ன?

உரிமைகளை கேட்டுப் போராடும் மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை யாரிடம் போய் சொல்வது?????

10வது பரீட்சை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.ஒட்டு மொத்த கொள்ளைக் கூட்டங்களின் கூடாரமான ஜபிஎல்லின் சூதாட்ட கிரிக்கெட்டை ஏப்ரல் மாத கடைசியில் வைத்துக் கொள்ளுங்கள் (கொள்ளைக்கார பாவிகளா? ) என்று பொது நல வழக்கு போடப்பட்டது. உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் விஷயமல்லவா? இதுவும் உரிமை மீறல்தானே

அரசாங்கம் முதல் சாதாரண குடிமகன் வரை அனைவருக்கும் கிரிக்கெட் அபினாகிவிட்டது. மாணவர்கள் கிரிக்கெட்டை பார்த்து ---- படித்து மார்க் எடுத்து விடுவார்கள்????????????????????

மக்களைப் பற்றி கவலைப்படாத குருட்டுக்கூட்டமான மூளையற்ற அரசியல்வியாதிகள் இருக்கும்வரை குண்டு துளைக்காத கூண்டிற்குள் சுதந்திரம் அடைந்து கிடக்க வேண்டியதுதான்.

அலாவுதீன்.S. said...

ஆரியர்களின் சதிவலையால் மண்ணின் மைந்தர்களான இந்தியர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

தங்களின் ஒவ்வொரு பாராவில் உள்ள விஷயங்களுக்கும் கருத்திட ஆரம்பித்தால் அதுவே ஒரு கட்டுரையாகி விடும். நேரமின்மையால் எழுத முடியவில்லை. ஊதும் சங்கை ஊதி வைப்போம் என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

sabeer.abushahruk said...

பொருப்பான கட்டுரை.

தலைப்பு மிக நேர்த்தியாய் வைக்கப்பட்டிருப்பதும் தலைப்பை ஒட்டியே மளமளவென்ற நடையில் எழுதப்பட்டிருப்பதும் நெய்னா ட்ரேட் மார்க்.

வாழ்த்துகள் நெய்னா.

இப்னு அப்துல் ரஜாக் said...

//கொள்ளையர்கள் அவற்றிற்கு 100% வரி விதித்து வீட்டின் பூட்டை உடைத்து வாசலில் சரக்கு லாரியை நிறுத்தி வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் கொள்ளையடித்து அள்ளிச்செல்லும் காலமாகி விட்டது இது. //
//விஐபியா நீங்கள்? தினமும் காலையில் வாக்கிங் செல்பவரா நீங்கள்? அப்படியானால் கடத்தப்பட்டு போட்டு தள்ளப்பட வேண்டியவர் தான் நீங்கள் என்றாகி விட்டது நம் நாட்டின் தனி நபர் பாதுகாப்பு. (இப்பொழுதெல்லாம் விஐபி என்றால் நல்ல விசயத்திலா? அல்லது தீய விசயத்திலா? என மக்கள் தெரியாமல் குழம்பி உள்ளனர்) //
//அதனால் தான் சொந்த நாட்டில் செத்து சுண்ணாம்பாய் ஆகி கர்ஜிக்க வலுவில்லாத மெலிந்த சிங்கங்களாக வாழ்வதை விட அயல்தேசங்களில் பொதி சுமக்கும் கழுதையாக கொஞ்ச காலம் சந்தோசமாக வாழ்ந்து விட்டு போய் விடலாம் என துணிந்து விமானம் ஏறி வந்து விடுகிறார்கள் போலும் நம் மக்கள்.//

சகோ நெயனாவின் வர்ணனை சிரிக்க வைக்கவும்,சிந்திக்க வைக்கவும் செய்கிறது.உங்கள் எழுத்து ஒரு TALK OF THE TOWN என சொல்லலாம்.MAY ALLAH THE ALMIGHTY BLESS Y(OUR) HEART.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், MSM N,

வழக்கம் போல் கோபத்தால் கர்ஜித்திருக்கிறீர்கள்..

////ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை உள்நாட்டுப்போர் காலத்தில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இலங்கைக்கு எதிராக வாக்களித்து////

ஐ நா, இந்தியா அமெரிக்க போன்ற நாடுகளுக்கு மனித உரிமை பற்றி பேச எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒரு காமெடி நாடகமே...

அப்பாவிகளை கொள்ளும் எவனும் போர் குற்றவாளிகளே... இதில் இந்தியா அமெரிக்க ஏன் அப்பாவிகள் கொன்ற பிறகு தீர்மானம் என்று கண் துடைப்பு காமெடி நாடகம் அரங்கேற்றும் ஐ.நாவும் போர் குற்றவாளிகளே..

அநீதி இழைப்பவன் மேக்கப் போட்டுக்கொண்டுதான் மேடையில் பேசுவான் என்பது நாம் கண்டுவரும் காட்சி.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு காலத்தில் இது போன்ற சமாச்சாரங்களை நன்கு படித்த மாமேதைகளும், வல்லுநர்களும், அரசியல் ஆர்வலர்களும், தொலைக்கு சிந்தனையாளர்களும் தான் எழுதி வந்தனர். அதையும் நாம் பெருமிதத்துடன் படித்து வந்தோம். அது தலைகீழாக மாறி கண்கூடாகத்தெரியும் நாட்டின் அவலங்களையும், அசிங்கங்களையும், அல்லல்களையும் தன் கட்டுரை மூலம், சொற்பொழிவு, பட்டிமன்றங்கள் மற்றும் இன்னும் பிற வசதி வாய்ப்புகள் மூலம் நம்மைப்போன்ற சாதாரன பாமர மக்களும் சிரத்தையின்றி தோலுரித்துக்காட்ட வேண்டிய அவலத்திற்கு நம் நாடும் அதன் கொள்கைகளும் ஆகிப்போய் விட்டன.

இங்கு கருத்திட்ட அனைவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்வதுடன் சகோ. அலாவுதீன் கூற்றுப்படி, மனித நேயம், மனித உரிமை மீறல் பற்றி பேச உலகில் எந்த நாட்டிற்கும் தகுதியோ, திராணியோ கிடையாது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

எண்ணெய் வளம் மிகுந்து பல வருடம் அந்நாட்டு மக்களின் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த அரபு நாட்டுத்தலைவர்களை எல்லாம் நரித்தந்திரத்துடன் அங்கு மக்கள் புரட்சியை ஏற்படுத்தி அவர்களுக்கு முழு ஆதரவும், ஆயுதங்களும் கொடுத்து ஊக்குவித்து அந்த தலைவர்களை எல்லாம் இறுதியில் மண்ணைக்கவ்வச்செய்த‌ அமெரிக்காவும் அதன் நட்புறவு நாடுகளும், சிரியாவில் ஈரானின் துணையுடன் பெரும்பான்மையான சுன்னி முஸ்லிம்கள் மீது அநியாய, அட்டூழியங்கள் செய்து அவர்களை அணுதினமும் கொன்று குவித்து வரும் சிரிய அதிபர் பஸார்‍ அல் அஸத்தை இன்று வரை தட்டிக்கேட்க திரானியின்றி வேடிக்கைப்பார்த்து வரும் அமெரிக்காவின் மனித நேயத்தை என்ன வென்று சொல்வது?

எதற்கு இன்னொரு நாட்டு விசயத்தில் அநாவசியமாக தலையிடுவது? என்ற‌ புதிய ஞானோதயம் இன்று முளைத்து விட்டதோ?

நிச்சயம், தூய நீதியாளனாக அந்த அல்லாஹ்வைத்தவிர வேறு எவனும் இருக்க முடியாது என்பதற்கு இந்த பாழாய்ப்போன உலக அண்மை நிகழ்வுகளே நல்ல சாட்சிகள்.

இப்படி முழுப்பரிச்சை நேரத்துலெ கண்ணைத்திண்ட மாதிரி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வக்கிரானுவொளே, இவனுவொளுக்கு கொஞ்சம் கூட காமன்சென்ஸ் இல்லையா? முழுப்பரிச்சை லீவு நேரத்துலெ வச்சா அவன்கள் வீட்டு அடுப்புலெ எல்லாம் புனையா படுத்து தூங்கப்போவுது? யான்டா இப்புடி அநியாயம் பண்ரியெ? முன்னாடி எல்லாம் நாலு வருசத்துக்கு ஒரு தடவை உலகக்கோப்பை வரும். அதை எல்லோரும் உற்சாகமாக பார்த்தோம். இப்பொ என்னாண்டாக்கா, வருசம் 365 நாட்களும் எங்கையாவது எதாவது கிரிக்கெட் போட்டி வச்சி நாட்டு மக்களுக்கு இருந்த கொஞ்சம், நெஞ்சம் மூளைகளையும் வலித்து துடைத்து ஆம்லெட் போட்டு திண்டுட்டானுவோ........இதெ பத்தி எழுதுரதா இருந்தா குறுந்தொடரல்ல மெகா நெடுந்தொடரே எழுதலாம்.....என்னெத்தெ சொல்ரது....முடியலே.........

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

அப்துல்மாலிக் said...

எங்கேயோ ஆரம்பித்து சொல்லவந்த விசயம் சூப்பர் இப்போ மக்கள் மின்சாரத்தை காரணம் காட்டி வெக்கேஷனை தள்ளியும் வைப்பதை பார்க்கிறோம், போய்ட்டு வந்தவங்க கொசுத்தொல்லை, 3 ல் 2 பங்கு நாள் ஹாஸ்பிடலிலே கழிந்துவிட்டது இப்படி சொன்னவங்களும் இருக்காங்க..

நாட்டின் பாதுகாப்புக்கு மேலும் 500 கோடி பட்ஜெட்டாம், என்னத்தன் கிழிக்கப்போறாய்ங்கனு தெரியலே

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கன்யாகுமரியிளிருந்து ஒரு நண்பர் கேட்கிறார் " என்ன அதிரை நிருபர் ஒரே கூண்டு மயமாக இருக்கிறது?-" உண்மைதான் ஒருபுறம் நான் வறுமைக்கோட்டை வழ்க்குக்கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறேன். மறுபுறம் ஜனாப். நெய்னா அவர்கள் குண்டு துளைக்காத கூண்டுக்குள் இந்தியாவையே நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

பலகாலமாக மீனவர்கள் அடிபட்டுக்கொண்டுதான் இருககிரார்கள். நமக்கு என்று ஒரு அரசு தட்டிக்கேட்பதற்கு இருக்கிறதா இல்லையா என்றே சந்தேகமாக இருக்கிறது. வாராவாரம் இப்படி பிரச்னைகள் நமது காதுக்கு வருகின்றன. ஆனால் வல்லரசு ஆகப்போகும் இந்தியா இதற்காக எடுத்த நடவடிக்கை ஒரு பெரிய ஜீரோ. எப்போதாவது சிவசங்கர் மேனனும், எஸ். எம். கிருஷ்ணாவும் " குருவிகள்" போவதுபோல் இலங்கை போய்விட்டு ஒரு நல்ல தேநீர் குடித்துவிட்டு வந்து விடுகிறார்கள்.

இரு நாட்டினரும் மீன் பிடிப்பதற்காக ஒரு வரைவு ஒப்பந்தம் போடப்பட்டு ஒன்றரை வருடம் ஆகிறது. வரைவு வரைவாகவே இருக்கிறது . மீனவர்கள் அடிபட்டுக்கொண்டே இருககிறார்கள். கேட்க நாதி இல்லை.

செயல்பாடு இல்லாத அரசு- ரோபோ பிரதமர்- இனப்பாகுபாடுபார்த்து செயல்படும் அரசுத்துறைகள்- இவைகளே பிரச்னைகள்.

நெய்னா திறந்துள்ள கோபக் கண்கள் கொடியவர்களை நோக்கியே. விடியலுக்குக் காத்திருப்போம். பாராட்டுக்கள் நெய்னா அவர்களே!.

Yasir said...

தென்பகுதியின் பாதுகாப்பு உறுதிப்பட்டால் மட்டுமே இந்தியாவின் 100% பாதுகாப்புக்கு உத்தரவாதம்..அரசின் மெத்தனதை தன் ஸ்டையிலில் காரமாக சொல்லியிருக்கின்றார் கட்டுரையாளர்...வாழ்த்துக்கள் நண்பரே

Shameed said...

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நாம் மறுக்க முடியாது எல்லை தாண்டினால் தான் மீன் பிடிக்க முடியும் என்பதையும் யாரும் மறுக்க முடியாது இரு அரசுகளும் சேர்ந்து இதற்க்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் இல்லை என்றால் உல்லான் குருவி பிடிக்க கூடாது கொக்கு பிடிக்க கூடாது என்று காட்டு இலாகா போர்ட் வைத்துள்ளதை போல் மீன் துறையும் ஒரு போர்ட் வைத்து விடலாம் மீன் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று!!!!!

KALAM SHAICK ABDUL KADER said...

//பிறந்த மண்ணில் வணிகம் செய்யவோ அல்லது பணி செய்யவோ யாருக்குத்தான் ஆசை இல்லை? அதற்கு அரசும், சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக அமைந்து உதவ வேண்டும். சாதி, மத, இன துவேசங்கள் நமக்கு முன்னே நம் தொழிற்கூடத்திற்குள் ரிப்பன் வெட்டி குடியேறி ஆணவத்துடன் கால் மேல் கால்போட்டுக்கொண்டு இருக்கையில் அமர்ந்து கொள்கின்றன. //


//அயல்தேசங்களில் பொதி சுமக்கும் கழுதையாக கொஞ்ச காலம் சந்தோசமாக வாழ்ந்து விட்டு போய் விடலாம் என துணிந்து விமானம் ஏறி வந்து விடுகிறார்கள் போலும் நம் மக்கள்.//

சகோதரர் மு.செ.மு. நெ. அவர்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் அயல்நாட்டின் அடிமைகளாய் வாழும் அவலத்தைத் தோலுரித்துக் காட்டுவது நம் உள்ளங்களின் அடித்தளங்களில் பதிந்துள்ள ஆதங்கங்கற்றான் ஆக்கங்களாய்ப் பதியப்படுகின்றன!

அதிரை சித்திக் said...

யாரடா சொன்னது எம்மை அந்நியன் என்று யாரடா சொன்னது ..

என்று ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது ..தன தேசத்தின் மீது கொன்றுள்ள பற்று ..எவ்வளவு ஆழமானது ,,,

என்பதை தம்பி நெய்னா மிக அற்புதமாக கர்ஜித்து விட்டார், யார் சொன்னது மெலிந்த சிங்கமென்று ... ,

நன்கு மதியால் கொளுத்தசிங்கம் ...பீடு நடை போடும் அற்புத எழுத்துக்கு சொந்த காரர் நெய்நாவை பாராட்டுகிறேன்.. .

இந்த கட்டுரையை துக்ளக் சோ .இந்து முன்னணி இராமகோபாலன் , எல்லாம் படித்தால் வெககித்து போவர் சீ இப்படி பட்ட

.நாத்தஅரசியலை நடத்த கூடாது என வெககித்து போவர்கள் ஆன்மீக கொள்கையால் மாறு பட்டு இருந்தாலும் தேசத்தால்

மொழியால் ஒன்றுபட்டவர்கள் என்பதை ஏற்றுகொள்வார்கள் .....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு