Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நினைக்க, நினைக்க, இனிக்க, இனிக்க... ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | April 17, 2012 | , ,


இறைவன் நாட்டத்தில் மனிதனாய் பிறந்த அனைவரும் தான் உலகில் அடியெடுத்து வைத்த நாள் முதல் இந்த நாள் வரை வாழ்வில் பல நல்ல நிகழ்வுகளும், மறக்க முடியா சம்பவங்களும் சம்பவித்திருக்கும். அவை யாவும் நாம் வேதனையில் வாடும் பொழுதோ அல்லது தனியே இருக்கும் பொழுதோ ஒவ்வொன்றாக அசை போட்டால் அது உள்ளத்திற்கு ஆனந்தமளிக்கும். அப்படிப்பட்ட நினைவுகள் பல அவற்றில் சில இங்கே உங்களுக்காக அசைப்போட ஆசை கொள்கிறேன்.

1. ஆரம்பப்பள்ளிக்கு வாப்பா, உம்மாவிடம் அடம் பிடித்துச்சென்று வந்தது.

2. கரும் சிலேட்டு பலகையில் கல்லுக்குச்சியை நாம் பிடிக்க நம் கையை ஆசிரியை பிடிக்க அ, ஆ, இ, ஈ என்று எழுதப்பழகியது.

3. 1, 2, 3, 4 எழுத ஆரம்பிக்கும் பொழுது 8 போட சிரமப்பட்டு இரு சிறு வட்டங்களை (00) அருகருகில் போட்டு அதை ஒன்றோடொன்று ஒட்ட வைத்து பெருமிதம் அடைந்தது.

4. நம்மை விட மூத்த மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில், பேனா, லப்பர், ஸ்கேல் என ஒரே பெட்டியில் வரும் ஜாமின்ட்ரி பாக்ஸை பயன் படுத்த ஆசை கொள்வது.

5. பள்ளியில் நோட்டு புத்தகம் போல் இருக்கும் எசனல் குர்'ஆன் ஓதிக்கொண்டிருந்த நாம் ரைஹான் பலகை வைத்து ஓதும் முப்பது ஜுஸ்வு குர்'ஆன் ஓத ஆசையுடன் காத்திருந்தது. 

6. பாடப்புத்தகத்தில் மயிலிறகை மறைத்து வைத்து அது குட்டி போடும் என நம்பி அடுத்த நாளுக்காக காத்திருப்பது.

7. வரைகிறோமோ அல்லது கிறுக்குகிறோமோ? ஆனால் வண்ண, வண்ண கலர் பென்சில்களை ஆவலுடன் சேர்த்து வைப்பது.

8. பள்ளிக்கு எடுத்துச்சென்ற மிட்டாயை மறைத்து வைத்து திண்பது.

9. பள்ளி முடிந்து எப்படா வீடு வரும் என காத்திருந்து வீடு வந்ததும் தெரு சிறுவர்களுடன் விளையாட சிட்டாய் பறந்து சென்றது.

10. சரிவர கவனமின்மையால் காலில் உடைந்த கிளாஸ் (வீதல்ரோடு), முட்கள் குத்தி ரத்தம் கசிவதும் அதை பொருட்படுத்தாமல் விளையாடுவதும் பிறகு அதில் மண்புகுந்து சீழ் வைத்து காய்ச்சல் வருவதும் ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட்டு வருவதும். புண் ஆறியதும் மீண்டும் தன் கவனக்குறைவை தொடர்வதும், விளையாடி மகிழ்வதும்.

11. உள்ளூர் ஜனாதிபதிகளை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தலும், அதற்காக தயாராகும் வாக்குச்சீட்டுகளும், அக்கம்பக்கத்து வாக்காளர்களை அழைத்து வந்து வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட கயிறு ரயில் வண்டிகளும்.

12. நீடித்த பகையை உண்டாக்காத அடிக்கடி வரும் சண்டைகளும் (காயா? பழமா?), பிறகு உறவாடி ஒருவருக்கொருவர் மகிழ்வதும்.

13. கட்சிக்கொடிகளை வண்ணப்பட்டங்களாய் செய்து அதை நைலான் கயிறுகள் மூலம் வானில் உயர பறக்கச்செய்து அதற்கு காகித தந்தி மூலம் தன் வாழ்த்துக்களை நூலில் அனுப்பி மகிழ்ந்தது. (பிறகு அந்த கட்சிகளெல்லாம் நமக்கு ஆப்படித்தது வேறு கதை).

14. வீட்டிலிருந்து கள்ளத்தனமாய் வேட்டியில் ஒளித்து எடுத்துச்சென்ற அரிசிக்கு தெரு ஆச்சியிடம் வாங்கித்திண்ட மாங்காய் ஊறுகாயும், மரவள்ளிக்கிழங்கும், நாகப்பழமும், எலந்தைப்பழமும், பனங்கிழங்கும், வெள்ளரிப்பழமும் இன்னும் பிற திண்பண்டங்களுடன் "ஆனந்தம் கொட்டிக்கிடக்குது ஆச்சியின் கூடையிலே" என சொல்ல வைக்கும்.

15. குளங்களில் குளித்து கும்மாளமிடுவதும் ஆழத்திற்கு சென்று தரையில் மண்ணை எடுத்து வந்து செவ்வாய்க்கிரக மண்ணை எடுத்து வந்தது போல் பரவசமடைவதும், இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திச்சென்று வாழ்க்கையில் ஒட்டு மொத்த இடர்களையும் தாண்டி வந்தது போல் பெருமிதம் கொள்வதும்.

16. மழைக்காலங்களில் வெளியில் விளையாட வழியின்றி வீட்டின் வாசலில் ஓடிய சிறு ஓடையில் விடப்பட்ட காகித கத்திக்கப்பல் சிறிது தூரம் ஓடி தண்ணீரில் ஊறி மூழ்கடிக்கப்பட்டதால் ஒவ்வொரு வீட்டின் வாசலும் அந்தந்த வீட்டு சிறுவர்களின் வாழ்வில் டைட்டானிக் கப்பல்கள் மூழ்கிய இடங்களே.

17. விரும்பிய வண்ணத்தில், டிசைனில் துணி எடுத்து தைத்து போட்ட சட்டைகளும், பெல்ஸ், பேரலல் பேக்கி பேண்ட்களும் வருடங்கள் பல உருண்டோடி விட்டாலும் அது நினைவலைகளில் இன்னும் புத்தம்புதிதாகவே மினுமினுத்து காற்றில் அசைந்தாடிக்கொண்டிருக்கிறது.

18. நண்பர்களின் உதவியில் தட்டுத்தடுமாறி ஓட்டிய சைக்கிள்களும் பின்னொரு நாள் அந்த சைக்கிளுக்கே உரிமையாளர் ஆனதும் மிதிவண்டியை மிதித்து காற்றில் தன் சட்டையும், பனியனும் சந்தோசத்தில் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள வேகமாய் பறந்ததும்.

19. அதுவும் ஒரு நாள் நம் வாழ்வில் நடந்தேறும் என்றறியாமல் உறவினர்களின் சுன்னத், கலியாண வைபவங்களில் குதூகலமாய் கலந்து கொண்டு பந்தலுக்கு கொடி கட்டி பரவசமடைந்ததும், வண்ணக்காகிதத்தில் பூவந்தி உருண்டை உருட்டி மகிழ்ந்ததும்.

20. புனித ரமழான் நோன்பு காலங்களில் ஒரு புறம் செய்து முடித்த சேட்டைகளும், மறுபுறம் தொழுது வணங்கிய வணக்க வழிபாடுகளும் ஒவ்வொன்றாக சொல்லிமாளாது இங்கு எழுதி தீராது.

21. அன்று தரையில் அமர்ந்து கண்டுகளித்த கட்டணக்கால்பந்தாட்ட போட்டிகள் இன்று உள்ளத்தின் அரியணையில் அமர்ந்து எமக்கு நினைவலைகளில் உலகக்கோப்பை போல் உற்சாகமூட்டிக்கொண்டிருக்கின்றன. 

22. தெருவில் ஓடிய அம்பாசிடர் கார்களில் ஆபத்தறியாமல் பின்புறம் தொங்கிக்கொண்டு சிறிது தூரம் சென்று விட்டு வந்ததை பெரும் சாகசமாய் நண்பர்களுடன் சொல்லி மகிழ்ந்ததும்.

23. அட்டபில்லில் அடிபட்டக்குருவிகளின் வருத்தம் உணராமல் அன்று ஆனந்தமடைந்தது இன்று வேதனையடையச்செய்கிறது.

24. தென்கிழக்கில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டால் அதனால் வர இருக்கும் பள்ளி விடுமுறையை எண்ணி சந்தோசமடைந்ததும்.

25. நீண்ட நாட்களுக்குப்பின் அரபுநாட்டிலிருந்து வந்திறங்கிய சொந்தபந்தங்கள் அன்பளிப்பாய் தந்த அலிலப்பரும், ஹீரோ பேனாவும், வாயில் மெல்ல தந்த சிவிங்கமும் இன்றும் எம்மை மெல்ல, மெல்ல அசை போட வைத்து விட்டன.

26. கம்பனில் குதூகலமாய் சென்னை சென்று வந்ததும் வரும் வழியில் தூக்க கலக்கத்தில் திருவாரூரில் எழுப்பப்பட்டு நடு இரவில் எதற்கென்றே தெரியாமல் பால் வாங்கி தந்ததும்.

27. இறைவன் நாட்டத்தில் நாமும் மெல்ல, மெல்ல பெரியவனாகி பாஸ்போட்டுக்கும் விண்ணப்பித்து அதுவும் முறையே கையில் கிடைத்து வீட்டுப்பெரியவர்களின் (அப்பா, பெரியம்மா,.....) வாழ்த்துக்களுடனும் து'ஆவுடனும் எப்பொழுது திரும்புவோம் என அறியாமல் விமானம் ஏறி அரபு நாடு வந்திறங்கியதும் சில வருடங்கள் இங்கு செலவு செய்து ஊர் திரும்பியதும் நம்மை வாழ்த்தி து'ஆச்செய்து வழியனுப்பிய அந்த பெரியவர்களை காணாது கண் கலங்கியதும் என் உள்ளக்கிடங்கில் நங்கூரமிட்டு பல சுனாமிகள் வந்து சென்றும் நகராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது.

28. கட்டுக்கம்பி போல் இருந்த தலை முடியை கட்டுக்குள் கொண்டு வர சுருள் வடிவ சீப்பு கொண்டு சீவி தலையை செம்மைப்படுத்தியதும் (அதில் டிஸ்க்கோ, பங்க், நடுவாங்கு, ஹிப்பி, கிராப்பு, மாப்ளை கட்டிங்க் என பீத்திக்கொண்டதும்)

29. உள்ளாடை தெரிய அணிந்த மெல்லிய காட்டன் (மார்ட்டின்) சட்டைகளும் அந்த நேரம் பயன்படுத்தாமல் தவித்து வந்த பாக்கெட்டின் பத்து ரூபாய் சலவை நோட்டும், கரகர வென சப்தம் செய்து செக்கிழுத்த செம்மலாய் எம்மை நினைக்க வைக்கும் சோலப்புரி செருப்பும்.

30. மூத்த தெரு சகோதரிகள் சிறுவனாய் இருந்த எம்மை சினுங்காமல் இருக்க அவர்கள் உப்புக்கு சப்பானியாய் எம்மை சேர்த்துக்கொண்டு விளையாடிய விளையாட்டுக்களும் (கொலை, கொலையா மந்திரிக்கா, தொட்டு விளையாட்டு, கண்டு விளையாட்டு.... அந்த விளையாட்டுக்களெல்லாம் இன்று ஒய் திஸ் கொலவெறி? என பரிணாமம் பெற்று விட்டது)

31. கால்பந்தை ஒன்பது இடத்தில் தையல் போட்டு அதன் டீயூபில் இரும்புக்குண்டை (பால்ரஸ்) அடைத்து மாதக்கணக்கில் அதை உதைத்து விளையாடி மகிழ்ந்த நினைவுகளும்....

32. அன்று ஒவ்வொருவரின் தலையில் கவிழ்க்கப்பட்ட வெல்வெட் துணியிலான கருப்பு/ஊதா தொப்பி நினைவலைகளில் அது இன்றும் நேராகத்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இன்னும் எத்தனை, எத்தனை, நினைக்க, நினைக்க, இனிக்க, இனிக்க, உள்ளம் பறக்க, பறக்க.........

இன்ஷா அல்லாஹ் விடுபட்ட இன்னும் நல்ல பல நினைவுகளை உங்கள் அனுபவத்திலிருந்து பின்னூட்டத்தின் மூலம் பிண்ணி எடுக்க அ.நி. சார்பாக அன்புடன் அழைக்கிறேன்.

-மு.செ.மு. நெய்னா முஹம்மது

22 Responses So Far:

Shameed said...

33. பகல் வெய்ளையும் பொருட்படுத்தாது பட்டம் விட்டு மகிழ்ந்ததும் பட்டத்தின் நூலில் பேப்பரை ஒட்டி தந்தி விடுகின்றேன் என்று புருடா விடுவதும் மறக்க முடியுமா?

Noor Mohamed said...

உள்ளத்து உறங்கும் உணர்வுகளை கொட்டி ஆனந்தமாய் அசைபோட வைத்துவிட்டார் தம்பி மு.செ.மு. நெய்னா முஹம்மது.

//ஆரம்பப்பள்ளிக்கு வாப்பா, உம்மாவிடம் அடம் பிடித்துச்சென்று வந்தது//

அது அப்போது. இப்போது LKG UKG படிக்கும்போது உம்மாவிடம் அடம் பிடித்துச்சென்று வருவது, பெரும்பாலான வாப்பாக்கள் வெளிநாட்டில் சம்பாதிப்பதால், பிள்ளைகள் அடம் பிடிப்பதையும் அதை எப்படி சமாதானப் படுத்துவது என்பதையும் அறியாதவர்களாகி விட்டனர்.

//வீட்டிலிருந்து கள்ளத்தனமாய் வேட்டியில் ஒளித்து எடுத்துச்சென்ற அரிசிக்கு தெரு ஆச்சியிடம் வாங்கித்திண்ட மாங்காய் ஊறுகாயும், மரவள்ளிக்கிழங்கும், நாகப்பழமும், எலந்தைப்பழமும், பனங்கிழங்கும், வெள்ளரிப்பழமும் இன்னும் பிற திண்பண்டங்களுடன் "ஆனந்தம் கொட்டிக்கிடக்குது ஆச்சியின் கூடையிலே" என சொல்ல வைக்கும்//

வீட்டில அரிசி திருடி விலக்காரிட்ட வாங்கி திண்ட காலம் போயி, இப்போது பிள்ளைகள் தின்பதெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட்.

தம்பி நெய்னா, கீழ்க்காணும் விளையாட்டுகளை விளக்கவும்.

= கிளித் தட்டு
= கிட்டி பில்
= கோலி(பளிங்கு)

KALAM SHAICK ABDUL KADER said...

விமானத்தில் ஏறாமல்
வீடுவரைச் சென்றேன்!

பள்ளிப் பருவம்
அள்ளித் தரும்
அழியா நினைவலைகள்
விழியோரக் கரையினிலே!

தெருவில் அரும்பிய
அருமை நட்புகள்
உருவாக்கிய உதவி
உட்கார்ந்திருக்கும் பதவி!

நூலகத்தில் உலகைக் கண்டேன்
உலகத்தில் நூலகத்தைக் கண்டேன்!

”கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”
கற்றுக் கொடுத்தவர்கட்குச் செய்ய வேண்டும் சிறப்பு!

கற்றவர் சபையில் எனக்கோர் இடமுண்டு
கா.மு.உ. பள்ளிக்கு அதில் முழு பங்குண்டு!

ஏழு ம்ணிக்குள்
இறைவேதம் ஓதிட
எழுந்து ஓடியதால்
“ஈமான்” எனும் விசுவாசம்
இருதயத்தின் சுவாசம்!

உம்மாவின் கைவண்ணம்
சும்மா சொல்ல முடியுமா எண்ணம்?
அடுப்படியில் ஊட்டிவிட்ட
அன்புகலந்த அமுதன்றோ?

உச்சி முகர்ந்து ஓதி ஊதி
மெச்சிப் புகழ்ந்து வழியனுப்பி
உச்சிப் பகலில் திரும்பி வரும்வரை
பச்சிளம் பாலகனாம் எனக்காக
காத்திருந்துக் காத்திட்ட உம்மாவின்
பூத்துக் குலுங்கும் புன்னகை!

கண்ணாடி முன்னாடி நின்று
கனவுகளைக் கண்டேன் அன்று
அரும்பி வரும் மீசைபோல்
அரும்பி வரும் ஆசையும்தான்!

தங்கைகளைக் கரையேற்ற
எங்களையேக் கரைதாண்டி
அரபுநாடு வந்தோம்
தமிழ்நாடு எல்லைத் தாண்டி!

முகவரிடம் ஏமாற
மும்பையில் முடங்கி விட்டேன்
பகற்கனவாய்ப் போனது
பயணமும் புளித்தது!

படித்தப் படிப்பும்
துடிப்பானப் பிடிப்பும்
தோல்வியை வெற்றியாக்கின
கால்வைத்து அயல்நாட்டில்
கால்நூற்றாண்டும் ஆனது!

ஆனாலும்,

மீண்டும் ஊருக்கே அழைத்து வந்தீர் அதிரை நிருபர் விமானத்தில் அன்புச் சகோதரர் மு.செ.மு எனும் விமான ஓட்டுநர்!

sabeer.abushahruk said...

ஆஹா ஆஹா...
நெய்னாவின் நினைவலைகள் நினைக்க நினைக்க  இனிக்க இனிக்க ஜாகிருக்கு எழுதிய பழைய கடிதமொன்றை அசைபோட வைக்கிறதே!!!

அசை!


நினைவிருக்கா நண்பா?

முருகய்யா தியேட்டர்...
முடிச்சு முடிச்சாய் முருக்கு...
மதிய நேரக் காட்சி-
மகளிர் பக்கக் கதவு
மறுபடி திறக்க…
வெள்ளித் திறையில் விழுந்த
வெளிச்ச வெட்டு…?

தெருவில் ஓதித் திறிந்த
அர்ரஹ்மானும்...ஆமீனல்லாவும்...
தராவீஹும்…ஹிசுபும்
கொடிமர மைதான
கிளித்தட்டும்...
கஞ்சியில் பிய்த்துப் போட்ட
இறால் வாடாவும்...?!
 
உம்மா வைத்து விட்ட-
சுர்மா,
பெருநாள் கைலியில்
லேபில் கிழிக்கும் சந்தோக்ஷ்ம்,
கைலியில் தங்கிய
லேபிலின் எச்சம்…?
 
தான்தோன்றிக் குளத்தில்
அம்மணக் குளியல்,
உடையைத் திரும்பப் பெற…
பெருசுகள் முன்னால் போட்ட
தோப்புக் கரணங்கள்…?

அடாத மழையும் 
விடாத விளையாட்டும்,
சாயந்தர விளையாட்டுக்குப் பிறகு
கடை ஆணத்தில்
ஊறிய பரோட்டா?!

குரங்கு பெடலில் சைக்கிள்,
செடியன் குளத்தில்
பச்சை-
பச்சைத் தண்ணீர் குளியல்,
லக்க்ஷ் சோப்பில்
பினாங்கு வாசம்?

சவுரி
மீரா மெடிக்கலில் தரும்
லட்ட்ர் சுகம்?
கடுதாசியின்
முனை கிழித்து-
பணம் தரும் நம்மூர் உண்டியல்?
 
ரயிலடிக் காற்றில்
பரீட்சை பயத்தில் படிப்பு? 
கூடு பார்த்த
அடுத்தநாள் தூக்கம்? 
ஈ மொய்த்த  பதனி?
கலரி வேலை-
கலைப்புக்குப் பிறகு…
எறச்சானம்/புளியானம்?
 
 
வீடு திரும்பும் நள்ளிரவில்  
எங்கிருந்தோ…
கிழங்கு சுடும் வாசம்?
பாம்பு முட்டையிடுதாம்!
பாதி நிலவொளியில்…
பின்னால் பேய்?
ஏழு கட்டையில்…
"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
ஓடு ராஜா..."?
 
கேள் நண்பா-
இப்பவும் நம்மூர்
நல்லாத்தான் இருக்கு...!

 
மணல் போர்த்திய
தார் சாலையும்...
களை சூழ்ந்த
நீரோடையும்
என...!
 
கைம் பெண்ணாய்
ரயில் நிலையமும்...
கற்பழிக்கப் பட்டவளாய்
பேருந்து நிலையமும்...
சவளைப் பிள்ளையாய்
தபால் நிலையமும்...
காசும் கட்டப் பஞ்சாயத்துமாய்
காவல் நிலையமும்
எனவும்...!
 
ஊரில் எல்லோரும்
திருந்திட்டாங்களாம்...
உன்னையும் என்னையும் தவிர-
அதை நம்பும்
கேனத்தனத்துக்காக!
              -சபீர்
 

அதிரை சித்திக் said...

நோன்பு காலங்களில் தராவிஹ் தொழுகை தொழும் போது ஒருவன் மற்றவன் தொப்பியை தட்டி விடுவது .எந்த காரணமும் இல்லாமல் பக்கத்தில் உள்ளவனை சிரிப்புகாட்டி பெரியவர்களிடம் அடிவாங்க வைப்பது என ஏராளம் .தராவிஹ் முடிந்து ஹிஜ்பு ஓதி நார்சாவுக்கு காத்திருக்கும் போது தூக்கம் வரும் நமது சிரமம் தெரியாது எதாவது ஒரு கிழவர் மெட்டுபோட்டு ஓதி கொண்டிருப்பார் ..அதுவரை குட்டி தூக்கம் போடுவதும் எல்லாம் முடிந்து விட்டது என்பதற்கு அடையாளமாய் லா இ லாஹா இல்லல்லா ....என எல்லோரும் ஓத ..அப்பாடா நாற்சா ரெடி .என விழிப்பதும் நினைவுக்கு வருகிறது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நினைக்க இனிக்கும் மெமரி பவரு, சூப்பரு நெய்னா!

இப்னு அப்துல் ரஜாக் said...

//இறைவன் நாட்டத்தில் நாமும் மெல்ல, மெல்ல பெரியவனாகி பாஸ்போட்டுக்கும் விண்ணப்பித்து அதுவும் முறையே கையில் கிடைத்து வீட்டுப்பெரியவர்களின் (அப்பா, பெரியம்மா,.....) வாழ்த்துக்களுடனும் து'ஆவுடனும் எப்பொழுது திரும்புவோம் என அறியாமல் விமானம் ஏறி அரபு நாடு வந்திறங்கியதும் சில வருடங்கள் இங்கு செலவு செய்து ஊர் திரும்பியதும் நம்மை வாழ்த்தி து'ஆச்செய்து வழியனுப்பிய அந்த பெரியவர்களை காணாது கண் கலங்கியதும் என் உள்ளக்கிடங்கில் நங்கூரமிட்டு பல சுனாமிகள் வந்து சென்றும் நகராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது.//

நெஞ்சை தைக்கிறது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

/.31. கால்பந்தை ஒன்பது இடத்தில் தையல் போட்டு அதன் டீயூபில் இரும்புக்குண்டை (பால்ரஸ்) அடைத்து மாதக்கணக்கில் அதை உதைத்து விளையாடி மகிழ்ந்த நினைவுகளும்..../

இது இன்னும் நினைவில் உள்ளது நெய்னா. 


ஊரிலிருந்து 

தாஜுதீன்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

33. முகத்தில் வர மறுத்த கரும் மீசையும், பென்சிலில் வரைந்து எடுத்த கருப்பு மீசையும் யாரை சந்தோசப்படுத்தியதோ? இல்லையோ? ஆனால் பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரியை சமாதானப்படுத்தி பாஸ்போர்ட்டும் எமக்கு வழங்க வைத்தது. அது இன்றும் பாடாய் படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. (என்ன செய்ய?)

34. அளவு இன்றி நுழைய முடியா ஜாவியாவின் உள்ளூர் எமிக்ரேசன், எம் உயரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்காட்ட செய்து முடித்த செப்படி வித்தைகளும் மறக்க முடியவில்லை.

35. அரிசி மாவு ரொட்டியும், ஆட்டுத்தலை ஆணமும், ப்ராச்சப்பமும் அதன் துணைவியார் கடல்பாசியும், முட்டை ரொட்டியும், முர்தபாவும், சூடான புரொட்டாவும், கறியாணமும் அன்று தந்த நாக்கு ருசி இன்று என்னெத்தெ திண்டாலும் வர மறுக்கிறது.

இப்ப‌டி ப‌ட்டிய‌ல் நீளும், நீங்க‌ள் ப‌டிக்க‌த்த‌யாரா??????

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நெய்னாவின் மெமரி பவருக்கு.நோக்கியாவின் செல் போன் மெமரி கார்டின் பவர் தோற்று விடும் போல் இருக்கு.

நோன்பு காலங்களில் இரவு நேரத்தில் கிளி தட்டு விளையாடி கொண்டிருக்கும் போது. தன் வயிற்று பிழைப்புக்காக பால் கோவா என்று கூறி வருபவரை.நீ மன்னா போவா என்று நாமல்லாம் சொன்ன வார்த்தையை நினைத்து மனம் வேதனை படுகிறது.

பெருநாள் இரவு பரிதா சைக்கிள் கடையில் இரவு வாடகைக்கு சைக்கிள் எடுத்து.ஊரில் உள்ள சந்து பொந்தை எல்லாம் அளந்து விட்டு.காலையில் வட்டிலப்பத்தோடு சாப்பாட்டை இறுக்கி கட்டி தொழுகையில் குடிகாரவன் போல் நின்றதை நினைத்து மனம் வேதனை படுகிறது.

விலைக்காரியின் பெட்டியில் இருந்து கணக்கு இல்லாமல் திண்று விட்டு கொஞ்ச காசை கொடுத்து மகிழ்ந்ததை நினைத்து மனம் வேதனை படுகிறது.

இன்னும் பல தவற்களை அறியாமல் செய்ததை நினைக்க நினைக்க கசப்பதை இனிமையாக்கா அல்லாஹ்வே போதுமானவன்.

இதுபோல் ஈன காரியங்களிருந்து நம் குழந்தைகளை விழிப்படையசெய்வோம்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இத்துனை சிறப்பான நினைவுகளை நினைவு காட்டிய MSM காக்காவிற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்...போய்கொண்டே இருக்கிறது உங்க பட்டியல் மற்றுமொரு ஆக்கமாக பதியலாமே

நீங்களிட்ட ஒவ்வொரு பட்டியலும் பலரும் அனுபவித்தும் / வெறுத்தும் (முன்பில்லா வாழ்க்கை திரும்ப வராதா?) உள்ளார்கள் என்பது உண்மை

\\24. தென்கிழக்கில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டால் அதனால் வர இருக்கும் பள்ளி விடுமுறையை எண்ணி சந்தோசமடைந்ததும்.// ....

இமாம் ஷாபி பள்ளியில், வகுப்பு நேரத்தில் இவ்வறிப்பு வராதா என்று கேர் டேகரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதும், அந்த வழியாக போனவுடன் இன்றைக்கு லீவ் தான் என்று அருகில் இருக்கும் சக மாணவனிடம் சொல்லி மகிழ்ந்ததும்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

36. பள்ளி விடுமுறையில் வீட்டு வாசலில் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் சிறு முதலில் ஆரம்பிக்கப்பட்ட தேன் மிட்டாய், கடலை மிட்டாய், கல்கோனா, ஜம்ஜா விதை போட்ட சர்பத் வியாபாரம் அன்று போட்டிக்கு வந்தால் டாட்டா, பிர்லா, அம்பானியைக்கூட தோற்கடித்து வீட்டிற்கு அனுப்பி விடும்.

37. தென்னந்தோகை ஓலையில் குச்சி எடுத்து அதை இரண்டு, இரண்டாக நூலில் ஒன்றிணைத்து கடைத்தெரு ஸ்கூல் ஸ்டோரில் கலர் பேப்பரும், சிங்க ஆலிம்சா கடையிலிருந்து நைலான் நூலும் வாங்கி வந்து விரும்பிய வண்ணத்தில் பட்டம் செய்து அதை சிலருக்கு விற்றும் லாபம் ஈட்டி இருக்கிறோம்.

38. மண்ணில் செய்யப்பட்ட உண்டியலில் சில்லரைக்காசுகளை சிட்டுக்குருவி போல் சுறுசுறுப்பாய் சேர்த்து வந்தும் அது நிறை மாத கர்ப்பிணியானதும் அதனுளிருந்து சில்,சில் சப்தம் செய்யும் காசுகளை உடைத்தெடுத்து விரும்பியதை வாங்கி உண்டதும், திண்டதும், உடுத்தியதும் என்றோ வ‌ர‌ இருக்கும் வ‌ர‌லாறு புத்த‌க‌த்தில் இட‌ம் பெற‌ வேண்டிய‌வைக‌ள்.

39. வெளிநாடு செல்வதற்கு முன் வெளியூர்களில் வேலை செய்து வந்த வாப்பா, காக்காமார்களிடமிருந்து வரும் மணியார்டருக்காக காத்திருப்பதும் அது வந்ததும் தபால்காரனுக்கு சந்தோசத்தில் கட்டாயம் கொடுத்த பணமும் இன்று லட்சங்கள் வந்து போனாலும் வர மறுக்கும் பரிபூரண சந்தோசம்.

40. ஒரு நாள் நாமும் ம‌ர‌ணித்து ம‌ய்யித்தாக‌ போகிறோம் என்ற‌றியாம‌ல் ம‌வுத்தான‌ வீடுக‌ளின் ப‌க்க‌ம் கொஞ்ச‌ நாள் நெருங்காம‌ல் இருந்த‌தும். (ஹ‌த்த‌ம், ஃபாத்தியாவிற்கு ம‌ட்டும் உள்ளத்தில் இருந்த‌ அச்சம் எப்படியோ ப‌ற‌ந்தோடி விடும்).

ZAKIR HUSSAIN said...

சகோதரர் நெய்னா அவர்களின் நினைவலைகளை எப்போதும் படிப்பவர்களில் நானும் ஒருவன்.

நம் ஊரின் இந்த கோடைகாலத்து காற்றில் கலந்து வரும் வேப்பம்பூவின் வாசம் முதல் ஏரியில் குளித்து விட்டு எதிர்காற்றில் சைக்கிள் ஒட்டி வரும் விசயம் வரை இன்னும் என் நினைவகளும் இளமையாகவே இருக்கிறது.

இதனால்தான் ஊர் வரும்போதெல்லாம் நான் , சபீர் , சாகுல் போன்றவர்கள் பழைய விசயங்களை எங்கள் காமெரா கண் கொண்டு பார்க்கிறோம். தவிர்க்க முடியாத நவீன மயமும், தொலைத்தொடர்பு முன்னேற்றம், பொழுதுபோக்கிகளின் வளர்ச்சி மனிதர்களுக்கு இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்படுத்திய விரிசலை சரி செய்யவே மனம் ஒவ்வொருநாளும் ஆசைப்பட்டு ஆசைப்பட்டு மனதை சுமக்கும் உடம்புக்கு வயதை அதிகரிக்கிறது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஊரில் இன்னும் சில வயதானவர்களிடம் வீடுகளுக்கு தனித்தனி பெயர் வைத்து அழைப்பது தொடர்கிறது இப்படி "சமீபத்தில் மரணித்தவர்கள் வீட்டிற்கு மவுத்தானகார ஊடு, திருமண காரியங்கள் நடக்க இருக்கும்/நடந்தேறிய வீடுகளுக்கு கலியாணகார ஊடு, சுன்னத்துக்கார ஊடு, சவுதிக்காரஒ ஊடு, துபாய்க்காரஒ ஊடு, மள்ளியக்கடைக்காரஒ ஊடு, பால்கார ஊடு, தட்டா ஊடு, ஆசாரி ஊடு, நாசுஒ ஊடு, புரோக்கர்காரஒ ஊடு, மருந்துக்கடைகாரஒ ஊடு, சட்டிப்பானைகாரஒ ஊடு, வலையாக்காரஒ ஊடு என்று இப்படி பல ஊடுகள் உள்ளன நம்மூரில். நம்ம ஊடுகள் எல்லாம் அவர்கள் பார்வையில் "அரபிக்கடலோரம் இன்னும் அசந்து தூங்கிக்கிட்டு இருக்கிறஒ ஊடாக இருக்குமோ?"

அப்புடித்தான் ஈக்கிம் போல தெரியுது...................

அப்துல்மாலிக் said...

நெய்னா உனக்கு உண்மையிலேயே நிறைய நேரம் கிடைக்குதா இதையெல்லாம் அசைப்போடுவதற்கு, இல்லே உன் நெனப்பு பவரை நினைத்து மெச்சுவதா தெரியலே,

கயிறு கட்டி பஸ் ஓட்டி தேர்தல் வாக்குச்சாவடி அமைத்து நிஜ தேர்தல் களம் போலவே விளையாடியது இன்னும் நினைவில்............

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எல்லாப்புகழும் இறைவனுக்கே....அல்ஹம்துலில்லாஹ்...

யான்டா மாலிக்கு, இதை எல்லாம் எழுதுவதற்கு ஒரு மாசம் லீவா எடுக்க முடியும்? கம்பெனி வேலைப்பளுவுடன் இடையில் கிடைக்கும் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேர கேப்ல எழுதி முடிச்சிர்றேன்...

கொஞ்சம் உட்டா பழைய காலத்துக்கே எரோப்ளேன்லெ போயிட்டு வர்ரியாண்டு கேப்பியாக்கும்?......

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நல்லதொரு மறக்க முடியா மலரும் நினைவுகள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நெனப்புலதானே MSM(n) இருக்கு எல்லாமே....

என்னா லேகியம் சாப்புடுறீய... எல்லாத்தையும் இப்புடி ஸ்டோர் செய்து வச்சு... உலுப்பி விட ! :)

KALAM SHAICK ABDUL KADER said...

//கைம் பெண்ணாய்
ரயில் நிலையமும்...
கற்பழிக்கப் பட்டவளாய்
பேருந்து நிலையமும்...
சவளைப் பிள்ளையாய்
தபால் நிலையமும்...
காசும் கட்டப் பஞ்சாயத்துமாய்
காவல் நிலையமும்
எனவும்...!//

நிதரிசனங்களை
நியாயம் வேண்டும்
விமர்சனங்களை
ஏக்கத்துடன் வடித்துத்
தாக்கத்துடன் முடித்து
கலங்க வைத்தாய்
கவிவேந்தே!

Yasir said...

சகோ.நெய்னா ..சின்னபிள்ளையிலிருந்து செய்தை ஒவ்வொன்றையும் எழுதியா !!! வைத்து இருக்கின்றீர்கள்.......இவ்வளவு கரெக்கட்ட்டா சுவராஸ்யமாக எழுதுகிறீர்கள்.........நம் சொந்த மெமரியில் இருந்து இவ்வளவு விசயங்களை ரீடிட் செய்து எழுதுவதற்க்கு 150000rpm ஸ்பீடு உள்ள ஹார்டு டிரைவ் கூட தோத்துடும்....வாழ்துக்கள நண்பரே

அப்துல்மாலிக் said...

//கொஞ்சம் உட்டா பழைய காலத்துக்கே எரோப்ளேன்லெ போயிட்டு வர்ரியாண்டு கேப்பியாக்கும்?...... //

ரகசியமா “டைம் மெஷின்” ஏதும் வெச்சிக்கிறியா? டவுட்டு

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு