Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தண்ணீர் ! தாகம் தீர்ப்பதற்கா? தாரை வார்ப்பதற்கா? 25

அதிரைநிருபர் பதிப்பகம் | April 12, 2012 | , , , ,


உலக நாகரிகங்கள் நதிக்கரைகளில் தோன்றியதாக வரலாற்று ஏடுகளில் படித்துள்ளோம். நைல் நதி நாகரீகம், சிந்து நதி நாகரீகம், டைகரடீஸ், யூப்ரடீஸ் நாகரீகம் என்பவை வரலாற்றின் பாலபாடம். மனித இனம் வாழவும், வளரவும் நதிகளின் பங்கு நாடறிந்தது. மனிதன் வாழ்வதற்கு  தண்ணீர் தேசங்களை தேடிப்போனான் ஆனால் அவன் காலடியிலேயே தண்ணீர் இருக்கிறது என்பதை உணர்ந்து ஏழாயிரம் ஆண்டே ஆகிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 

தண்ணீர் என்பது தயாளம் மற்றும் தாராளத்தின் அடையாளம். ‘தண்ணி மாதிரி செலவழிக்கிறான்’ என்றும் , ‘ தம்பிக்கு இது தண்ணிப்பட்ட பாடு ‘ என்றும்’ ‘ தவிச்ச வாய்க்கு தண்ணீர் கூட தரமாட்டான்’ என்றும், தண்ணீரின் எளிமையை உணர்த்தும் சொற்றொடர்கள் வழக்கில் உள்ளன. மிக எளிமையாக கைவசப்படும் சொத்துக்களுக்கு LIQUID ASSET என்பது பொருளியல் வழக்கு. தர்மம் செய்ய நினைக்கிறவர்கள் கோடைக்காலங்களில்- சாலை ஓரங்களில்  தண்ணீர்ப்பந்தல் அமைப்பார்கள். கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் தண்ணீரின் பெருமையைச் சொல்லவேண்டுமானால் உயிரை உருக்கும் வரிகளில் இப்படிச் சொல்லலாம். 

முதல் உயிர் பிறந்தது
நீரில் என்பதால் ஒவ்வோர்
உடம்பிலும் இன்னும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது 
அந்த உறவுத் திரவம்.
கர்ப்பத்தில் வளரும் சிசு
தண்ணீர்க் குடத்தில்
சுவாசிக்கிறது.

- வைரமுத்து. 


ஒரு நாட்டின் மண்ணை நேசிப்பது போலவே அந்நாட்டின் நீர்க்குடும்பத்தின் அங்கங்களான ஆறுகளையும், ஓடைகளையும், சிற்றோடைகளையும், ஏரிகளையும், குளங்களையும் நேசிக்கும் இதயங்கள் எண்ணற்றவை. (இன்றும் கூட சி.எம்.பி. வாய்க்காலையும் , செடியன் குளத்தையும் நேசிக்கும் இனியவர்கள் நம்மிடையே உண்டு.) பல சிறப்புக்களுக்கு தகுதிபடைத்த தண்ணீர் இன்று தனிச்சொத்தாக மாற்றப்பட்டு - ஒரு வணிகப்பொருளாக ஆக்கப்பட்டு – உலகமயமாக்கல் என்ற வித்தைக்காரியின் கரங்களில் அகப்பட்டுக்கொள்ள அஸ்திவாரம் தோண்டப்படும் அவலத்தைப் பற்றித்தான் இங்கு அலச இருக்கிறோம்.

மத்திய அரசில் நீர்வள அமைச்சகம் (MINISTRY OF WATER RESOURCES) என்று  (மாநிலங்களுக்கிடையே நடைபெறும் நதிநீர் பங்கீடு சண்டைகளை வேடிக்கை பார்ப்பதற்காக) ஒரு அமைச்சகம் இருக்கிறது. கடந்த 31.1.2012  அன்று இந்த அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டிய இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிக்கை இந்த அமைச்சகத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான கொள்கை வரைவை உள்ளடக்கிய அறிக்கையாகும். (Draft - National Water Policy  2012) . அதாவது எப்படி இரயில்வே அமைச்சகம் தனது நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறதோ, நிதி அமைச்சகம் எப்படி வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறதோ அதேபோல்தான் இதுவும்.  

நியாயமாக இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிடும்போது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் வெளியிட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் விவசாயப் பிரதிநிதிகள் உட்பட எல்லாத்தரப்பு மக்களிடமும் இந்த அறிக்கையின் சாராம்சங்கள் பற்றியும் கூட்டம் கூட்டி விவாதித்து இருக்க வேண்டியதும் அரசு தரப்பு கடப்பாடாகும். பேய் அரசாள வந்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள் என்பதுதான் இன்றைய நிலை. ஆகவே இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இவ்வளவு பீடிகை போட்டு ஆரம்பிக்கிறாயே என்று நீங்கள் நெற்றி சுருக்குவது தெரிகிறது. 

இரண்டே வரிகளில் சொல்லப் போனால் பொது நன்மைக்குரிய வளமாக இருக்கும் தண்ணீரை (COMMON GOODS) சந்தைப் பொருளாக – பொருளாதார போகப் பொருளாக (ECONOMIC GOODS) மாற்றி வரையறுத்து, தண்ணீரை முற்றிலும் தனியார் மயமாக்குவதே மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை கொள்கை வரைவின் அடிப்படை நோக்கமாகும். சாலைகளைப் பயன்படுத்தும்போது சுங்கம் கட்டுவதுபோல் இனி தண்ணீரை அடிப்படை தேவைக்கும், விவசாய பாசனத்துக்கும் பயன்படுத்தவும் சுங்கம் கட்டும் நிலைமைக்கு அடிகோலப்பட்டு இருக்கிறது. 

நான் குறிப்பிடும் இந்தக் கொடிய தேசிய நீர்க் கொள்கை வரை வின் பத்தி 3.3 கீழ் வருமாறு கூறுகிறது.

“மனித இனம் உயிர் வாழ்வதற்கும், சுற்றுச் சூழல் அமைப்புகள் உயிர்ப்புடன் இருப்பதற்கும் தேவையான குறைந்த அளவு தண்ணீரைத் தவிர மற்ற தண்ணீரெல்லாம் பொருளியல் வளமாகப் பேணப்பட வேண்டும்”. (TO BE CONSIDERED AS RESOURCES OF ECONOMY).

தேவையான குறைந்தபட்ச தண்ணீரின் அளவு என்ன என இக்கொள்கை வரையறுக்கவில்லை. இவ்வாறான நிலையில் ஆற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரும் முற்றிலும் தனியார் பெருங் குழுமங்களுக்கு வழங்கப்பட இக் கொள்கை வழிவகுக்கிறது.

மேலும் இந்த அறிவிக்கையின் பத்தியான 13.4 –யில் குறிப்பிடப்பட்டுள்ளது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. 

"தண்ணீர் தொடர்பான பணிகளில் அரசின் பங்கும் பொறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களுக்குத் தண்ணீர் வழங்கும் பணியைத் தமது அடிப்படைக் கடமையாக அரசு மேற்கொள்ளக் கூடாது. தண்ணீர் தொடர்பான அனைத்துப்பணிகளும் சமூகத்திற்கு அல்லது தனியார் துறைக்கு மாற்றப்பட வேண்டும். இதனை ஒழுங்கு படுத்துவது, கட்டுப் படுத்துவது ஆகிய பணிகள் மட்டுமே அரசின் கடமையாக இருக்க வேண்டும்" எனக் கூறுகிறது.

மனிதர்களுக்கும், சுற்றுச் சூழல் தூய்மைக்கும் தேவை யான குறைந்தபட்ச நீர் வழங்கல் கூட தனியாரின் வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என இக் கொள்கை வரைவு குறிப்பிடுவதிலிருந்தே நாட்டின் நீர் வளம் முழுவதும் வணிகச் சரக்காக மாற்றப்பட இருக்கிறது என்பது உறுதியாகிறது. 

இந்த கொள்கைகள் ஏற்கப்பட்டு அமுல்படுத்தப்படுமானால், இனிமேல் தண்ணீர் என்பது அரசின் சேவை என்ற தலைப்பில் வராது குடிநீர் வழங்கு துறை இனி குடிநீர் வழங்கல் கண்காணிப்புத் துறையாக மாறிவிடும் . 

இப்படி தனியாரை புகவிட்டால் சோழியன் குடுமி சும்மா ஆடுமா? ஆதாயமில்லாமல் அவர்கள் ஆத்தைக்கட்டி இறைப்பார்களா?

அதைத்தான் அறிக்கையின் பிரிவு 7 பேசுகிறது. 

ஒரு சொட்டு தண்ணீர் கூட காசில்லாமல் யாருக்கும் வழங்கப்படக் கூடாது என இப்பிரிவு வலியுறுத்துகிறது. இதற்காக உபயோகப் படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை இன்னும் விசித்திரம். விலைக்குத்தான் விற்க வேண்டும் என்று நேரடியாக சொல்லாமல் தண்ணீருக்கு ஆகும் செலவை திரும்பப் பெறுவது என்று கூறுகிறது. (RECOVERY OF TOTAL COST). முழுச்செலவையும் பயனாளிகளிடமிருந்து திரும்பப் பெற வேண்டுமாம். இனி கையில் பணம் படைத்த செல்வந்தரே குளிக்க முடியும் – குடிக்க முடியும். யார் வீட்டு திண்ணையிலும் போய் உட்கார்ந்து அம்மா குடிக்க கொஞ்சம் தண்ணி தா! தாயே! என்று கேட்க இயலாது.

மானியமாகவோ, இலவசமாகவோ தண்ணீரை வழங்கும் அரசின் கொள்கை நிலைப்பாடுகளை மாற்றியமைக்க வேண்டுமென்றும் அப்படி மானியமாகவும் இலவசமாகவும் கொடுப்பதால் அதன் உண்மை மதிப்பை உணராமல் வீணடிப்பதை தடுக்க முடியும் என்று இக்கொள்கை வரைவில் பத்தி 7.5  குறிப்பிடுகிறது. 

இந்த அறிவிக்கையின் பத்தி 9.5 இந்திய நாட்டின் அடிப்படை வாழ்வாதாரத் தன்மைக்கு எதிமறையானது. "இனி வரும் தண்ணீர் திட்டங்கள் விவசாயத்தையும், குடிநீர் வழங்கலையும் மட்டும் முக்கிய நோக்கங்களாக கொள்ளக்கூடாது. அதற்கு மாறாக பலநோக்கு திட்டங்களாக வரையறை செய்ய வேண்டும்” என்று கூறுகிறது. 

பலநோக்கு திட்டங்கள் என்றால் என்ன? ஒரு விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ள விவசாய நாட்டில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்றும்- ஏழைகள் நிறைந்த பூமியில் இலவச குடிநீர் இல்லை என்றும் கூறிவிட்டு பலநோக்கு திட்டங்களுக்கு தண்ணீரை விற்க வேண்டும் என்றால் அந்த பலநோக்கத்தில் அடங்குவது பன்னாட்டுக் கொள்ளைக் கூட்டத்தின் கேளிக்கை விடுதிகள் , பெரும் முதலீட்டில் உருவாகும் தொழிற்சாலைகள், தண்ணீரில் வாசனையையும், கழிவறை கழுவப்பயன்படும் இரசாயனங்களையும் ஹராமான சாராயத்துளிகளையும் கலந்து விற்று காசாக்கும் தந்திரங்களும் என்றுதானே அர்த்தம்?

இந்த 2012-க்கான கொள்கை வரைவின் 6.3, 6.4 ஆகிய பத்திகளைப் படிக்கும் போது 2002–க்கான அறிக்கையும் ஒப்பிட்டு படிக்க வேண்டியது அவசியமாகிறது. தண்ணீரை மாசுபடுத்துபவர்கள் அப்படி மாசுபடுத்தியற்கான குற்றத்துக்கு பொறுப்பாளர்களாக்கப்பட்டு, தூய்மைப்படுத்துவதற்காக ஆகும் செலவையும் ஏற்கவேண்டுமென்பது 2002-ன் அறிக்கையில் சொல்லப்பட்டது (POLLUTER TO PAY) . ஆனால் இப்போது அது மாற்றப்பட்டு நீர் நிலைகளை சாக்கடையாக்கும் முதலாளி வர்க்கத்தை காப்பாற்றும் விதத்தில் அரசே ஊக்குவிப்பு வழங்கி, நீர் சுழற்சி முறையை (RECYCLING) செய்யவேண்டுமென்று 2012-ன் அறிவிக்கை கூறுகிறது.

இதில் கூறப்பட்டுள்ள ஒரு காரசாரமான அம்சம் என்னவென்றால் இதுவரை  மாநில அரசின் அதிகாரப்பட்டியலில் இருந்துவரும் தண்ணீரை மத்திய- மாநில அரசுகளின் கூட்டு அதிகாரப் பட்டியலுக்கோ அல்லது முழுக்க மத்திய அரசின் பட்டியலுக்கோ எடுத்துச் சென்று விடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருப்பதுதான். இதனால் நதிகள் தேசியமாக்கப்பட்டு விடும். ‘கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்ற கதையாகிவிடும். 

நதிகள் தேசியமாகப்பட்டு விட்டால் நதிகளின் மேல் மாநிலங்களின் பிடிப்பு தளர்ந்து நாடு முழுதும் சீரான நதிநீர் பங்கீடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று இதற்கு ஆதரவான வாதம் வைக்கப்படுகிறது. வாய்ப்புதான் உள்ளது என்று சொல்லலாமே தவிர வாய்க்குமா என்று சொல்ல முடியாது. மத்திய அரசு நடுநிலையோடு நடந்து கொள்ளும் என்று நம்புவது கனவு மாளிகைக்கு கால் கோள்விழா நடத்துவதற்கும், காதர்சா குதிரையின் மேல் பணம் கட்டுவதற்கும் ஒப்பானது. அரசியல் காரணங்களால் – அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மத, இன, மொழியினரின் செல்வாக்கால் மாநில உரிமைகள் மத்திய அரசு காலில் போட்டு மிதிக்க வாய்ப்புக்கள் உள்ளன. 

இதற்கு உதாரணம்- தமிழ்நாடே. 

ஏற்கெனவே ஆற்று நீர் பங்கீட்டின் இறுதி அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும் போதே தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதைக் கண்டு வருகிறோம். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய  சிக்கல்களில் நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல் படுத்த வேண்டிய தனது சட்டக் கடமையைக் கைகழுவி விட்டு தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை அழிக்க எண்ணுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசியல் காரணங்களால்  இந்திய அரசு தயங்கி நிற்பதை பார்க்கிறோம். வானளாவிய அதிகாரம் கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் செல்லுபடியாகவில்லை. 

மாநில அரசுகளில் கைகளில் நதிநீர் அதிகாரம் இருந்தால் மாநில நலன் கருதி அந்தந்த மாநிலங்கள் தங்களின் தேவைகளுக்காக போராட முடியும். அந்த அதிகாரமும் பறிக்கப்பட்டு விட்டால் முதலாளித்துவத்தின் கைப்பாவையாக மாறிவரும் மத்திய அரசு "உனக்கும் பேப்பே, உங்க அப்பனுக்கும் பேப்பே" என்று காட்ட வாய்ப்புக்கள் உள்ளன. அதுமட்டு மல்லாமல் நமது அனுபவம், எந்த ஒரு இயற்கை வளமும் மக்களின் பொது உரிமை என்ற நிலையிலிருந்து அரசுடமை என்று மாற்றப்படும்போது அது தனியாருக்கு விற்கப்படுவதற்கு வழிதிறந்து விடுவதாக அமைந்துவிடுகிறது. சுரங்க முறைகேடுகளால் சுரண்டப்பட்ட நாட்டின் செல்வம் கருப்புப் பணமாய் அவதாரம் எடுத்தது எப்படி?

மிகச்சுருக்கமாக இந்த அறிக்கையைப் பற்றி கருத்துக்கூற வேண்டுமானால் தண்ணீரையும் பெருவணிக தனியாரிடம் தாரைவார்த்துவிட முயலும் அரசின் அவசரத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றே கூறவேண்டும். 

ஏற்கனவே “அந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்“ என்ற ஒரு கட்டுரையை இந்த தளத்தில் பதிந்து இருக்கிறேன். அதில் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கிறேன். 

"இந்திய பொருளாதார கொள்கைகளை வகுப்பவர்கள் யார் ? நாம் நம்பிக் கொண்டிருப்பது போல் நமது நிதி அமைச்சகம் அல்ல. அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஜி-8 அமைப்பில் உள்ள நாடுகளும், அந்த நாடுகளின் பன்னாட்டு நிருவனங்களின் நிர்வாகிகளுமே. உலக வங்கியில் என்றைக்கு கடன் வாங்க நாடு கை நீட்டியதோ அன்றே அவர்கள் சொல்லும் இடத்தில் கையெழுத்து போடவும் , கூறும் கொள்கைகளை அமுல்படுத்தவும் நாம் தயாராகி விட்டோம். உதாரணத்துக்கு உலகவங்கியின் வற்புறுத்தலால் மின் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தபட்டதாக வெட்கமில்லாமல் சட்ட மன்றத்தில் அறிவிக்கின்றனர் அனைத்து மாநில ஆட்சியாளர்கள். இதனால் நமது நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மண்ணின் மாண்பு , மக்களின் இயல்பு – பொருளாதார வழக்கில் கூறப்போனால் நுகர்வோர் கலாச்சாரம் (CONSUMER CULTURE) ஆகியவற்றின்மேல் தாக்குதல் தொடுக்கும் தாக்கங்கள் அதிகரித்துவிட்டன."

என்று குறிப்பிட்டதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு நாம் விவாதிக்கும் இக் கொள்கை வரைவு தண்ணீர் வள ஆதிக்கத்தை விரும்பும் பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் நிழல் ஆட்களால் உருவாக்கப் பட்ட கொள்கை வரைவு ஆகும்.

இந்த விஷயத்தை கொஞ்சம் கவனமாகப் படியுங்கள். – அதாவது 

  • உலக வங்கியின் கீழ் நீர் ஆதாரக்குழு 2030 (2030 WATER RESOURCES GROUP) என்கிற அமைப்பு ஒன்று இயங்குகிறது. 
  • இந்த அமைப்பு "தேசிய நீர் ஆதாரத்திட்ட வரைவு ஆய்வு- சீர்திருத்ததுக்கான திசைகாட்டி “(NATIONAL WATER RESOURCES FRAME WORK- STUDY & ROAD MAPS FOR REFORMS) என்று ஒரு அறிக்கையை தயார் செய்து இந்திய அரசின் திட்டக்குழுவுக்கு வழங்கியது. 
  • அறிக்கையை தயார் செய்த நீர் ஆதாரக்குழு 2030- என்கிற அமைப்புக்கு மூணுவேளை சோறு போட்டு- மசால்வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தது – அதாவது இந்த அமைப்புக்கு நிதிவழங்குவது பெப்சி, கோக், கார்கில், யூனிளிவர், மெக்கன்ஸி ஆகிய பன்னாட்டு பெருங்குழுமங்கள் ஆகும்.  
  • கடந்த 2011 அக்டோபர் 11 அன்று இந்தியத் திட்டக் குழுவிற்கு மேற்சொன்ன நீர் ஆதாரக்குழு அளித்த "திசை வழி அறிக்கை" தான் சொல் மாறாமல் அப்படியே “தேசிய நீர்க் கொள்கை 2012“ என்ற தலைப்பில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சூட்சுமம் இப்போது புரிகிறதா? வேறென்ன வேண்டும். ?

கோக், பெப்சி, கார்கில் போன்ற பன்னாட்டுக் குழுமங்கள் தண்ணீர் வணிகத்திலும் வேளாண்மை மற்றும் உணவுப் பொருள் வணிகத்திலும் கோலோச்சி வருபவை. அவர்களது நிதி ஆதரவு பெற்ற ஆய்வுக் குழு அறிக்கை அப்படியே இந்திய அரசின் கொள்கை வரைவாக வெளி வந்திருப்பதிலிருந்தே இக்குழுமங்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் இடையில் உள்ள பாசப்பிணைப்பும் அதன் வலைப் பின்னலும் தெளிவாகும். அன்னியர் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுவிட்டது என்று இனியும் யாரும் சொல்ல முடியுமா? அரசியல் விடுதலை பெற்று இருக்கலாம்- பொருளாதார விடுதலையும் உண்மையில் பெற்றுவிட்டோமா? 

"நள்ளிரவில் பெற்றோம் –ஆனால் இன்னும் விடியவே இல்லை" என்று ஒரு கவிஞர் கூறியது உண்மையே. இன்னும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வக்கற்ற அரசுகள் நாட்டின் மூலவளங்களை முதலாளிகளுக்கு தாரை வார்க்க கச்சை கட்டி நிற்கின்றன.   

இந்த தேசிய நீர்கொள்(ல்)கையின் வரைவு அறிக்கை சொல்லுக்குச் சொல் கண்டனத்துக்கும், எதிப்புக்கும் ஆளாக்கப்பட வேண்டியதாகும். இதை வரைவு நிலையிலேயே முறியடிக்க வேண்டும். பொதுநல அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் இணைந்து  இதற்கான எதிப்புக் குரல்களை எதிரொலிக்க வேண்டும். 


கொஞ்சம் இருங்கள்! சுல்தான் காக்கா என்னமோ கேட்கிறார்கள். 

"என்ன சுல்தான் காக்கா?"

"இவ்வளவு நீங்கள் எழுதுகிறீர்களே- இது பற்றி நமது மத்திய மாநில அமைச்சர்கள்,  M. P, &  M.L.A க்களுக்கு தெரியுமா என்று கேட்கிறீர்களா? அவர்கள் தினமும் போய்வரும் அகல நீள இரயில் பாதையே இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையே! இப்படி இணைய தளத்திலா தோண்டித் துருவி படிக்கப்போகிறார்கள்? விடுங்கள் காக்கா. நாம் ஊதுகிற சங்கை ஊதுவோம். விடியும்போது விடியட்டும்." 

குறிப்பு : இந்த அறிக்கை சமபந்தமாக ஆங்கிலத்தில் எதிப்பு தெரிவிக்க விரும்பும் சமூக நல விரும்பிகள் இந்த இணையதளத்துக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிப் பதியலாம் nwp2012-mowr@nic.in

-இபுராஹீம் அன்சாரி

25 Responses So Far:

Abdul Razik said...

Thanks kaka, please persist to issue this type of articles. Now the time has come to attain this significant information to government. I think you have lot of memo about people’s basic desires from the government. This is the most constructive note to the public. Allah will grace u to carry on your valuable scripts.

Abdul Razik
Dubai

Ebrahim Ansari said...

DEAR BROTHER ABDUL RAZIK,

YOU ARE MOST WELCOME AND I TOO THANK YOU FOR YOUR ENCOURAGING NOTES ON OUR EFFORTS.

INSHA ALLAH.

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மூத்த சகோதரர் அவர்களுக்கு,

மாஷா அல்லாஹ் !

உங்களின் எழுத்து சேவை மேலும் சிறக்க வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.

அரசின் குறைகளையே குடைந்து எடுக்க கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தேடும் இந்தக் கால பத்திரிக்கை உலகம் சற்றும் உற்று நோக்காத திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கும் கொடுமையால் மக்கள் நலன் எவ்வாறு பாதிக்கிறது என்ற ஆதாதரத்தோடு வெளிச்சம் போட்டு வைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்லியிருப்பது போன்றே //இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையே! இப்படி இணைய தளத்திலா தோண்டித் துருவி படிக்கப்போகிறார்கள்? விடுங்கள் காக்கா. நாம் ஊதுகிற சங்கை ஊதுவோம். விடியும்போது விடியட்டும்." //

நமது கடமையை செய்வோம்,

Noor Mohamed said...

இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் இந்த கட்டுரை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை படித்து புண்பட்ட நெஞ்சை பண்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீர், நெருப்பு, காற்று, இவற்றில் ஏற்கனவே எரிவாய்வு தனியார் கையில் கொடுத்து விட்டார்கள். அடுத்து நீரின் விலை எவ்வளவு என்பதுதான் காக்காவின் கட்டுரை.

இப்போது கறி விலை கிலோ 400 ரூபாய். ஆனால் அதை சமைக்கத் தேவையான மசாலா விலையை விட, சமைப்பதற்கு தேவையான தண்ணீரின் விலை கிலோ 50 ரூபாய் வந்து விடும்.

அரசின் அவல நிலையை கூறுவதற்கு அளவே இல்லை என்பதே காக்காவின் இந்த ஆக்கம்.

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ்ஸலாம்.

அன்புநிறை சகோதரி அவர்களுக்கு, தங்களின் அன்பான கருத்திடலுக்கும், து ஆ வுக்கும் மிக்க நன்றிகள். ஜசக்கல்லாஹ் ஹைர்.

தாங்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல நமது கடமையை செய்வோம்.

மீண்டும் நன்றி. வஸ்ஸலாம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மாஷா அல்லாஹ்! இந்த ஆக்கம் அனைத்து இணைய தளத்திலும் பதியப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அனுப்பட வேண்டும்.

மனித நேய குழு அமைப்புகளுக்கும் இந்த ஆக்கம் போய்ச் சேர வேண்டும்.

இந்திய அளவில் எதிர்ப்பு கிளம்ப வேண்டும்.

மற்ற மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்படவேண்டும்.நோட்டீஸாகவும் வெளிவரவேண்டும்.

கள்ளப்பயல்கள்: அரசியல்வியாதிகள் கை நீட்டி காசை பிச்சையாக பெற்றதற்கு விசுவாசமாக இருப்பதற்கு மண்ணின் தண்ணீரை தாரை வார்ப்பது கண்டிக்கப்பட வேண்டியது அவசியத்திலும் அவசியம்.

கற்பனை கதைகளை காசாக்கும் பத்திரிக்கைகள் உண்மையில் மக்களுக்குச் சேவை செய்ய ஆசைப்பட்டால் மத்திய அரசின் அடிமைத்தனத்தை தண்ணீரை கொள்ளையடிக்கப்போகும் திட்டத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சுனாமி வந்து பூமி குலுங்கியதாம் : என் ரூம் நண்பர்கள் பேசிக் கொண்டது. இந்த அரசியல் வியாதிகள் ஒட்டு மொத்தமாக பாராளுமன்றத்திலும்,நாடாளுமன்றத்திலும் குழுமி பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அப்படியே அந்த கட்டிடம் மட்டும் பூமியில் புதைந்து போய் மறுநாள் இந்தியாவின் அநியாயக்கார ஆட்சியாளர்கள் அனைவரும் பூமியில் புதைந்து விட்டார்கள். இறைவனால் அவர்களுக்கு சரியான தண்டனை தரப்பட்டது என்று பத்திரிக்கைகளில் செய்தி வரவேண்டும் என்று நேற்றுதான் பேசிக் கொண்டார்கள்.

வல்ல அல்லாஹ் இந்த அநியாயக்கார ஆட்சியாளர்களிடம் இருந்து ஆட்சிகளை பறித்து. வல்ல அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

அநியாக்கார ஆட்சியாளர்களுக்கு முன்னால் நீதியை எடுத்துச் சொல்வதற்கும் நன்மை உண்டு.

தங்களின் அக்கரைக்கு : ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

Noor Mohamed said...

"வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்"

என்று பாடினான் பாரதி.

கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற உத்தரவை மதித்து இன்றுவரை தண்ணீர் தரவில்லை.

தமிழகத்திடம் இருந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் கேரளா, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் முல்லை பெரியாரு அணையின் கொள்ளலவை உயர்த்த சம்மதிக்க வில்லை.

ஆந்திரா நாங்கள் தண்ணீரை கடலில் கலக்க வேண்டுமானாலும் அனுமதிப்போம், தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என்று பாலாற்றின் குறுக்கே அணைகட்டுகிறார்கள்.

இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஆட்சியாளர்கள் திட்டங்கள் தீட்டு கிறார்கள். சட்டங்கள் இயற்றுகிறார்கள். ஆனால் எந்த தீர்வும் எட்டப் போவதில்லை, எட்டவில்லை என்பதுதான் வேதனைக்குரிய செய்தியாகும். மாறாக தண்ணீரை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டால், தமிழக மக்களின் நிலை என்ன என்ற கேள்விதான்(?) காக்காவின் கட்டுரை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இபுறாகிம் அன்சாரி காக்கா, தண்ணீரைப்பத்தி பத்தி,பத்தியா அரசுக்கு புத்தி சொல்லும் உங்களின் இவ்வாக்கம் நாட்டு மக்களின் நலனைக்கருத்தில் கொள்ளும் நடுநிலையாளர்களின் ஒருமித்த குரலாகவே கருதுகிறேன்.

நீங்க‌ள் சொல்வ‌தைப்பார்த்தால் வ‌ரும் கால‌ங்க‌ளில், அந்த‌ நேர‌த்தில் நாட்டில் வாழும் பெரிய‌வ‌ர்க‌ள் த‌ன் ச‌ந்த‌திக‌ளுக்காக தான் மரணிக்கும் முன் உயிலோ/ப‌த்திர‌மோ எழுதி வைக்க‌ நாடும் பொழுது இப்ப‌டி எழுதி வைக்கலாம் "நான் வ‌சித்து வ‌ரும் என் வீட்டின் பின்புற‌ம் உள்ள‌ கொல்லையின் வடக்கு மூலையில் செடி,கொடிக‌ள் சூழ்ந்த‌ முட்புத‌ரின் ந‌டுவே இதுவ‌ரை யாரும் அறியா வ‌ண்ண‌ம் பிற்கால‌த்தில் என் ஒரே ம‌கனுக்காக‌ அவ‌ன் வாழ்வாதார‌த்திற்கு எவ்வித‌ சிர‌மும் ஏற்பாடாம‌ல் இருக்கும் வண்ணம் ஒரு ஆழ்குழாய்க்கிண‌றை தோண்டி த‌யார் செய்து வைத்திருக்கிறேன். என் க‌ண்ணுக்குப்பின் அதனை முழு உரிமையுட‌ன் அவன் உப‌யோகித்துக்கொள்ள என் புத்தி சுவாதீன‌த்துட‌னும், முழு ச‌ம்ம‌த‌த்துட‌னும் எவ்வித‌ நிர்ப்ப‌ந்த‌மும் இன்றி எழுதி வைக்கின்றேன்". என்று எழுதி வைக்க வேண்டி வ‌ரும் போல் தெரிகிற‌து.

பிற‌கு இப்ப‌டியும் ந‌ட‌க்க‌லாம் "ப‌ட்ட‌ப்ப‌க‌லில் ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் மிகுந்த‌ ந‌க‌ரின் மைய‌ப்ப‌குதியில் வீடு புகுந்து வீட்டின‌ரை க‌ட்டி வைத்து விட்டு நான்கு குட‌ம் த‌ண்ணீருட‌ன் துணிக‌ர‌ கொள்ளை" கொள்ளைய‌ர்க‌ள் ப‌ற்றிய‌ துப்பறிய‌ அவ‌ர்க‌ள் துப்பிச்சென்ற‌ எச்சிலை ப‌ரிசோத‌னைக்கூட‌ம் அனுப்பி வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

நெஞ்சுக்குள் ம‌ட்டும் பெய்திடும் மா ம‌ழை
நிச‌த்தில் அவை எல்லாம் காசு ம‌ழையாகி விடுமோ?

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Shameed said...

இப்படியோ போனால் எந்தே ஊரில் மழை பெய்தாலும் மத்திய அரசு அதிகாரிகள் மழை அளவை அளந்து அந்த ஊருக்கு பில் போட்டு இந்த வெளிநாட்டு கம்பெனிக்கு இந்த ஊர் இத்தனை ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அவர்களைப் பொறுத்த மட்டில் தெளிக்க இருந்தால் போதும் ! அதனால்தான் அனைத்தையும் காசாக்கி கப்பம் கட்டுகிறார்கள், கரிசனம் காட்டுகிறார்கள்...

இந்த கட்டுரை இன்னும் பரப்பப்பட வேண்டும், இன்னும் பிற தளங்களுக்கும், அச்சு ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கபப்ட வேண்டும்.

செய்வோம் இன்ஷா அல்லாஹ் !

ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari,

நீங்கள் எழுதியிருக்கும் விசயம் ஆச்சர்யத்தை தந்தாலும்..[ ச்சே...அந்த அளவுக்கா தண்ணீர் பஞ்சம் வந்துடப்போவுது என்று சொன்னாலும், சில உண்மைகளை பார்ப்போம்]

[1.] 25 - 30 வருடத்துக்கு முன் மினரல் வாட்டர் இல்லை...இப்போது மட்டும் வரும் அவசியம்...குடிக்கும் தண்ணீரில் பல நோய்கள் பரவும் அபாயம்.

[2.] மலேசியா போன்ற மழை அதிகம் பெய்யும் நாடுகளிலும் மினரல் வாட்டர் 500 மிலி, இந்தியரூபாய் 20.00....பாலை விட தண்ணீர் விலை அதிகம்.

[3.] என்னதான் 'திராவிடம்" "வேற்றுமையில் ஒற்றுமை' "இந்தியா...என் தாய் நாடு...இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர்...' என்று பழைய கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி கத்திக்கொண்டிருந்தாலும் கர்நாடகா / ஆந்திரா / கேரளா விடமிருந்து இன்னும் தண்ணீருக்கு கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்.

4.] டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி போன்றவர்களின் முயற்சியில் உலக வங்கியின் உதவியுடன் நதி நீர் திட்டம் தீட்டப்பட்டது...வழக்கம் போல் அரசியல்வாதிகளுக்கு பெட்டி கை மாறாததால்..அது கிடப்பில் போடப்பட்டது.

Ebrahim Ansari said...

JANAB. M.S.M. NAINA

//என் வீட்டின் பின்புற‌ம் உள்ள‌ கொல்லையின் வடக்கு மூலையில் செடி,கொடிக‌ள் சூழ்ந்த‌ முட்புத‌ரின் ந‌டுவே இதுவ‌ரை யாரும் அறியா வ‌ண்ண‌ம் பிற்கால‌த்தில் என் ஒரே ம‌கனுக்காக‌ அவ‌ன் வாழ்வாதார‌த்திற்கு எவ்வித‌ சிர‌மும் ஏற்பாடாம‌ல் இருக்கும் வண்ணம் ஒரு ஆழ்குழாய்க்கிண‌றை தோண்டி த‌யார் செய்து வைத்திருக்கிறேன். என் க‌ண்ணுக்குப்பின் அதனை முழு உரிமையுட‌ன் அவன் உப‌யோகித்துக்கொள்ள என் புத்தி சுவாதீன‌த்துட‌னும், முழு ச‌ம்ம‌த‌த்துட‌னும் எவ்வித‌ நிர்ப்ப‌ந்த‌மும் இன்றி எழுதி வைக்கின்றேன்//

INTERSTING. SUPERB. EXCELLENT.

உங்களின் கருத்திடலுக்கு நன்றி.

ஆனாலும் நேற்று முன் தினம் புது டில்லியில் நடைபெற்ற ஒரு நீர் வளம் தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் பேசியதன் சாராம்சம்-

=தண்ணீர் பயன்படுத்தலை ஒழுங்கு படுத்துவதற்காக மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற இருக்கிறது .
= அந்த சட்டத்தின்படி இனி நிலங்கள் தனி மனிதருக்கு சொந்தமாக இருக்கலாம். ஆனால் அந்த நிலத்தின் அடியில் இருக்கும் நீர் வளம் அரசுக்கு சொந்தம்.
= குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீங்கள் போர் போட்டு நீர் எடுத்தால் மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்துவதுபோல் உங்கள் வீட்டு நிலத்தில் எடுக்கும் நீருக்கும் கட்டணம் செலுத்தவேண்டும்.

இதில் எங்கிருந்து நீங்கள் பத்திரம் எழுதி வைப்பீர்கள்?

Noor Mohamed said...

காக்கா, நம் சிறுவயதில் குடிநீர் தேக்கி வைக்கப் பட்ட மண்ணப்பன் குளத்திலிருந்து மண் குடத்தில் நீரை எடுத்து வந்து, மண் பானையில் ஊற்றி வைத்து குடித்தோமே, அந்த குடிநீருக்கு இணையாக உலகில் எந்த மினரல் வாட்டரும் நிகராகாது.

உடல் ஆரோக்கிய வல்லுனர்களின் கூற்றுப்படி, குடிநீருள்ள நோய்கிருமியை அழிப்பதற்காக நீரை காய்ச்சி ஆறவைத்து குடித்தால், 2% நோய்க்கிருமியும், 98% தாதுப் பொருள்களும் அழிந்த நீரை ஆறவைத்து குடிக்கிறோம் என்கின்றனர். இதனால் உடலுக்கு எந்த ஆரோக்கியமும் இல்லை. மாறாக அந்த நீரை ஒரு மண்பானையில் ஊற்றி 2 மணி நேரம் கழித்து குடித்தால், நோய்க்கிருமியானது மண்பானையின் ஈர்ப்பால் வலுவிழந்து, உடலுக்கு தேவையான தாதுப் பொருளுடன் ஒரிஜினல் மினரல் வாட்டரை நாம் குடிக்கலாம். இது உடல் ஆரோக்கியம் கூறும் வல்லுனர்களின் கூற்று.

பார்க்க: http://www.youtube.com/v/PAStKpp2l2A&rel=0

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்சாரி காக்கா,
இந்த கட்டுரையை படித்த பிறகாவது தண்ணீரை வீண்
விரயம் செய்வோர் திருந்தி கொள்ளட்டும் ...
பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரை விலை மதிப்பில்லா
பொக்கிசங்களாக மதித்து அதன் மீது முதலீடு செய்து
இப்பவே copyright செய்ய முயற்சிப்பது , நாம் நம்
நீர் வளத்தை எவ்வளவு சமூக அக்கறையுடன்
பயன்படுத்த வேண்டும் ,நீர் வளத்தை பாதுகாக்கவேண்டும்
என சிந்திக்க தோன்றுகிறது ...
உங்கள் கட்டுரைகள் அனைத்தும் எங்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை தருகிறது .நன்றி .

Unknown said...

சித்தீக் பள்ளிவாசலில் நடப்பது என்ன? கள ஆய்வு!
http://adiraipost.blogspot.in/2012/04/blog-post.html

Yasir said...

இப்பொழுதுதான் படித்து,வியக்க நேரம் கிடைத்தது,மாஷா அல்லாஹ் மிக நேர்த்தியாக,விளங்கி கொள்வதற்க்கு எளிதாக எழுதப்பட்டிருக்கின்றது...........படித்துமுடித்ததும் ஒரு விதமான கவலையும்,தண்ணீரைப்பற்றிய பய உணர்வையும் இவ்வாக்கம் கொடுத்தது என்றால் மிகையல்ல....

KALAM SHAICK ABDUL KADER said...

ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள்
ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள்
ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள்
ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள்

ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும் நன்மைகள்
ஈரமுள்ள வுணர்வுகளி லிரக்கத்தின் தன்மைகள்
ஈரமுள்ள இதயந்தா னிரத்தத்தி னோட்டமாகும்
ஈரமுள்ள ஈகையினா லேழ்மையுமே யோட்டமிடும்

ஈரப்பசையு மில்லையெனி லினியுறவும் தூரமாகும்
ஈரமின்றி வாழ்ந்தாலே யில்லறமும் பாரமாகும்
ஈரச்சு ருதியினின்னி சைதானி லையுமாச்சு
ஈரக்காற் றில்லையெனி லென்னாகும் நம்மூச்சு

sabeer.abushahruk said...

தம்பி யாசிரின் நிலைமைதான் எனக்கும். இப்பதான் வாசிக்க முடிந்தது.

நீங்கள் சொன்னபிறகுதான் இத்துணை விஷயங்களும் அறிய முடிந்தது. தொடருட்டும் தங்களின் தொண்டு.

(நிறைய எழுத ஆசை. நெறியாளர் அறிவார். செம பிஸி காக்கா)

அன்புடன் புகாரி said...

ஓர் அக்கறைமிக்க கட்டுரை வாசிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி

ஒரு நாட்டின் சுகாதார நலத்திற்கு தண்ணீர்க் குழாய்களின் எண்ணிக்கை, மருத்துவப் படுக்கைகளின் எண்ணிக்கையைவிட பெரிதும் உயர்வானது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் கூறியிருக்கிறார்.

தனிமனிதனுக்கு தேவையான குடிநிர் குளிநீர் சமையல் நீர் புழக்க நீர் என்று அனைத்தும் போதுமான அளவு கட்டாயம் வேண்டும்.

அந்த நீர் மாசற்றதாக இருத்தல் வேண்டும்

வருடம் முழுவதும் தடையற்றுக் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும்.

விரயப்படுத்தப்படாமல் விநியோகிக்கப்படவும் பயம்படுத்தப்படவும் வேண்டும்.

வளரும் மக்கள் தொகையைச் சமாளிக்கும் வகையில் பல நாடுகளில் நீர் வளம் இல்லை.

நீரை விரயம் இன்றி பயன்படுத்தும் திட்டமும் அக்கறையும் இல்லாவிட்டால், மக்கள் நீர் இன்றி செத்துப்போவார்கள்.

தண்ணீர் தண்ணீர் படத்தில் பல அற்புதக் காட்சிகள் நீர் பற்றி இருக்கும். விக்கலெடுத்தவனை செத்துப்போ என்று சொல்லத்தான் ஆள் இருக்குமேயன்றி இரக்கப்பட்டும் நீர் தர வழியற்ற நிலையே அந்த நிலத்தில் இருக்கும்.

அலட்சியப்போக்குடையோரால் நீர் விரயமாக்கப்படுவதை அவசியம் தடுத்தே தீரவேண்டும்.

ஒரு சொட்டி நீர் சிந்தினாலும் உறக்கம் வராத விழிகள் ஒவ்வொருவருக்கும் இருத்தல் வேண்டும்.

தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே என்பது நம் முன்னோர் பழமொழி. தண்ணீரை மாசுபடுத்துவோர் முழுவதுமாக மாறவேண்டும்.

அரபு நாடுகளில் நிலத்திலிருந்து நீர் கிடைப்பதைப்போல எண்ணை கிடைக்கிறது. அதை அவர்கள் ஒழுங்குபடுத்தாவிட்டால் அந்த நாடுகள் இப்படி வளர்ந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.

நீர் வளம் என்பது எண்ணை வளத்தைவிட உயர்வானதாக ஆகிக்கொண்டிருக்கிறது. எண்ணைவளம் இல்லாவிட்டால், சொகுசு வாழ்க்கைதான் அழியும். அதற்கும் மாற்று ஏற்பாடுகள் வந்துவிடும். ஆனால் நீர்வளம் இல்லாவிட்டால் அத்தனை உயிர்களும் அழியும்.

எந்த வழியில் இதையெல்லாம் சாத்தியப்படச் செய்யமுடியும்?

எவரேனும் சரியான பதிலைச் சொல்லுவார்களா இங்கே?

உலக நாடுகளில் 90 விழுக்காடு அரசாங்கத்தின் வழியாகவே நீரைப் பெறுகிறது. நம் நாட்டில் அரசாங்கத்தின் வழியாக நீரைப்பெறுவதில் உள்ள குறைபாடுகள் என்ன? நம் நாட்டிற்கும் அரசியல்வாதிகளின் செயல்களுக்கும் தனியார் சிறப்பானதா அல்லது அரசு வழி விநியோகம் சிறப்பானதா? ஏன்?

நான் சில வருடங்களுக்கு முன் எழுதிய தண்ணீர் கவிதையை இங்கே இணைக்கிறேன்:



தாகத்தைக் கொண்டுவிட்டுத்
தண்ணீரைக் கண்டோமா
தண்ணீரைக் கண்டுவிட்டுத்
தாகத்தைக் கொண்டோமா

கடலோடும் நதியோடும்
மழையோடும் அருவியோடும்
சலிப்பின்றி விழிபேச
அலுப்பேனோ வருவதில்லையே

சுற்றுகின்ற உலகமிதில்
சூழ்ந்ததெலாம் தண்ணீரே
சூரியனும் விழுங்கிடாமல்
காப்பதுவும் தண்ணீரே

சமைப்பதுவும் உண்பதுவும்
உண்டதனைச் செரிப்பதுவும்
செரித்ததெலாம் ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே

கண்ணீரும் தண்ணீர்தான்
கருணைகூடத் தண்ணீரே
ஈரமில்லா உள்ளத்தை
இதயமென்று யாருரைப்பார்

மொழிபேசும் நாவுகளோ
சுழல்வதுவும் நீரில்தான்
கண்ணின்கரு மணிகூட
ஆடுவதும் நீரில்தான்

பிறந்தபோது உடைந்துவந்த
பனிக்குடமும் தண்ணீர்தான்
தாய்முதலில் ஊட்டியதும்
பாலென்னும் தண்ணீர்தான்

தேகத்துள் ஓடிநின்று
மோகத்தில் ஊறிவந்து
கருவாகி உருவாகி
உயிர்ப்பதுவும் தண்ணீர்தான்

தண்ணீரால் ஆனதினால்
தண்ணீரைக் கேட்டோமா
தாய்த்தண்ணீர் வேண்டித்தான்
சேய்த்தண்ணீர் தவிக்கிறதா

தண்ணீரின் கூறுகளாய்
உலகெங்கும் உயிரினங்கள்
தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள்

அன்புடன் புகாரி
கனடா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த தண்ணீரில் நீந்தியதில்...

//(நிறைய எழுத ஆசை. நெறியாளர் அறிவார். செம பிஸி காக்கா)//

என்ன ? ஏதோ நெறுக்கிற மாதிரி தெரியுது ! நெறியாளரும் பாவங்க ! கண்ணாடி போட்டா பக்கதில இருக்கிறது தெரிய மாட்டேங்குதாம், போடலைன்னா தூரத்தில இருக்கிறது தெரிய மாட்டேங்குதாம்...

சரி சரி, விஷயத்துக்கு வருவோம்...

MSM(n) எழுதிய உயில்... அருமை வாய் விட்டு சிரிக்க வைத்த சிந்தனை !

மடை திறந்த வெள்ளம் போல் இங்கே கவிதைகளும் கிளை ஆறுகளாக ஓடுகிறதே... யார் கண்ணிலும் படவில்லையா ?

கலாம் காக்காவின் "e" கவிதை அருமை !

உண்மையச் சொல்லனும்னா...

//ஈரப்பசையு மில்லையெனி லினியுறவும் தூரமாகும்
ஈரமின்றி வாழ்ந்தாலே யில்லறமும் பாரமாகும்
ஈரச்சு ருதியினின்னி சைதானி லையுமாச்சு
ஈரக்காற் றில்லையெனி லென்னாகும் நம்மூச்சு//

மர(ப்)பு இங்கே இருந்தாலும் மல்லுக்கட்டாமல் மனதுக்குள் கசிகிறது ஈரம் !

தண்ணீர் என்றாலே தன் நிலைப்பாட்டை அடிக்கடி சொல்லும் அப்துர்ரஹ்மானின் கவிதை அவ்வப்போது வடிக்கும் ஈரத்தை !

அட.. ! இன்னொன்னு "அன்புடன் புஹாரி" அவர்களின்...

//மொழிபேசும் நாவுகளோ
சுழல்வதுவும் நீரில்தான்
கண்ணின்கரு மணிகூட
ஆடுவதும் நீரில்தான்//

அருமை !

Sஹமீத் காக்கா எழுதியதை கரைத்து குடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துட்டு வந்துடுறேன்... :)

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள அன்சாரி காக்கா, நமது இந்திய அரசு கொண்டுவருகிற திட்டம்
மலிந்து கிடக்கும் ஊடகக் கண்களுக்கு தெரியாமல் தங்களின் பார்வைக்கு கிடைத்து நம்மவர்கள் அறிய தந்தீர்கள் நன்றியும்,வாழ்த்துக்களும். மேற்படி திட்டம் ஒரு நல்லதிட்டமேன்றுதான்
நினைக்கிறேன்.காரணம் ஒரு கண்டத்தையே ஆளும் அமெரிக்கா தன் நாட்டில் நிலத்தடி நீரை உபயோகிப்பதே இல்லை.அருவி மற்றும் மழை நீரை
மட்டுமே உபயோகிக்கின்றனர்.ஆகவே நிலத்தடி நீர் அபரிதமாக இருப்பதால்
பசுமை குறைவில்லாமல் இருந்து வருவதுடன் காலநிலைகளும் கூடியமட்டும் கணிக்கக் கூடியதாக இருக்கிறது.தண்ணீர் பஞ்சம் என்பது இல்லை.எல்லா தொலைக்காட்சியும் வானிலை அறிவிப்புக்கென்று பிரத்தியேகமாக வானிலை அறிந்தவரையே[meteorogist ]வைத்து சிறு குழந்தையும் அறியும் வண்ணம் அறிவிக்கிறது.ஏறத்தாழ அதுபோலவே
வானிலை அமைகிறது.இதெல்லாம் ஏன் சரியாக அமைகிறது என்றால்,
அரசாங்கமும்,மக்களும் சட்டதிட்டங்களை மிக்கவும் பேணுவதால்தான்.
டை அடிச்சு டவல் போட்டு சலூனில் இருந்துகொண்டு சொல்லுகிற நம்மூர்
தொலைகாட்சி அறிவித்ததுபோல நிகழ்தது இல்லை என்றே நினைக்கிறேன்.
நிற்க, நம் நாட்டிற்கு நம்மவர்கள் கொண்டு வரப்போகும் திட்டம் தேவையேயில்லை.நிலத்தடி நீரை உறிஞ்சாமளிருந்தால்........மேலும்,
நாட்டையும்,சட்டத்தையும் மதிக்கும் அரசாங்கம் அமைந்தால்.
நல்ல திட்டம்தான்.நம்ம அரசாங்கம் நல்ல மனகமழும் பிரியாணி செய்ய
சொன்னால் அத்தர் மணத்துடன் செய்வார்களே.......சாப்பிடவா முடியும்...?

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

உணர்ச்சிவசப்படவைத்த கவிதைகளை பின்னூட்டமாக தந்த அனைத்து கவிஞர் களுக்கும் நான் கூற வேண்டிய நன்றியை நெறியாளர் அவர்களே கூறிவிட்டார்கள்.

அதிரையில் நீர்வளம் இருக்கிறதோ இல்லையோ கவிவளம் இப்படி இருக்குமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. மாஷா அல்லாஹ்.

நண்பர் கவியன்பன் அவர்களே உங்களைப்பாராட்ட என்னிடம் வார்த்தை இல்லை. அதேபோல் அப்துல் ரகுமான் பெயர் ராசியா? அத்துடன் புஹாரி அவர்கள் - இப்படி கவிகள் முற்றுகையால் அதிரை நிருபர் திணறுகிறது ஆனந்தத்தில். ஏற்கனவே சபீர் அவர்களின் சாம்ராஜ்யம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. நீங்களும் அரசாள வந்தால் உங்கள் அனைவரின் கவி சாம்ரஜ்யத்திற்கும் கூட அடிமைகளாக நாங்கள் தயார். வஸ்ஸலாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இனி இப்படியும் சம்பவிக்கலாம் "நடுரோட்டில் தண்ணீர் குடத்துடன் சென்ற பெண்மணியிடம் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தண்ணீர் குடத்தை பிடுங்கி கை வரிசை"

"இடுப்பில் த‌ண்ணீர் பாக்கெட்க‌ளை சுற்றி க‌ட‌த்த‌ முய‌ன்ற‌ வாலிப‌ர் சென்னை விமான‌ நிலைய‌த்தில் சுங்க‌ அதிகாரிக‌ளின் ப‌ரிசோத‌னையில் பிடிப‌ட்டார்"

"க‌ட‌லில் (உப்பு) த‌ண்ணீர் எடுக்க‌ச்சென்ற‌ இளைஞ‌ன் காவ‌ல்துறையால் பிடிப‌ட்டான்"

"ஒரு நாள் கூலியாக‌ ஐந்து குட‌ம் த‌ண்ணீர் த‌ர‌ ஒப்புக்கொண்ட‌ நிறுவ‌ன‌ம் தொழிலாள‌ர்க‌ளுக்கு ஒரு குட‌ம் த‌ண்ணீர் கூட‌ கொடுக்காம‌ல் மோச‌டி" தொழிலாள‌ர்க‌ள் ஏமாற்ற‌ம்".

மனிதன் தண்ணீரில் வியாபாரம் செய்து லாபமீட்ட நினைக்கின்றான். ஆனால் அல்லாஹ்வோ "வானிலிருந்து இறக்கும் ஒவ்வொரு மழைத்துளிக்கும் மீட்டர் வைத்து நம்மிடமிருந்து பணமோ அல்லது அதற்கு ஈடான வேறு எதுவும் நம்மிடமிருந்து பிடுங்குவதில்லையே?"

"நன்கு உண்ணுங்க‌ள், ப‌ருகுங்க‌ள், வீண் விர‌ய‌ம் செய்யாதீர்க‌ள்" என்ற‌ எவ்வ‌ள‌வு அழ‌காக‌ ந‌ம் மார்க்க‌ம் என்றோ சொல்லி விட்ட‌து. இன்னும் உற‌ங்கிக்கொண்டிருக்கிற‌து இந்த‌ மானிட‌ம். யார் பொறுப்பு?"

Ebrahim Ansari said...

ஆயிரம் சொல்லுங்கள் நெய்னா 'நெய்'நா தான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு