லபீத் பின் ரபீஆ என்ற கவிஞரைப் பற்றி இதற்கு முன் பார்த்துள்ளோம். ‘ஜாஹிலிய்யா’ காலத்து உண்மையைத் தேடிய ‘ஹனீஃபு’கள் எனும் நற்சிந்தனையாளர் வரிசையில் இவரையும் வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். இவர் தமது இறுதிக் காலத்தில் இஸ்லாத்தைத் தழுவினார். இஸ்லாத்திற்கு முந்திய இவரது வாழ்க்கையிலும் சில நல்ல கருத்துகள் பொதிந்த கவிதைகளை யாத்தவர். இவரது கவி மேடை அக்காலத்தின் புகழ் பெற்ற ஒன்றாகத் திகழ்ந்தது. அத்தகைய கவியரங்குகளுள் ஒன்றில் உஸ்மான் இப்னு மழ்ஊன் (ரலி) எனும் தொடக்க கால நபித்தோழரும் கலந்துகொண்டார்.
கவிஞர் பாடத் தொடங்கினார்:
ألا كل شيء ما خلا الله باطل
அறிக! அல்லாஹ் அவனன்றி
அனைத்தும் அழியும் தன்மையவே!
உடனே உஸ்மான் கூறினார்:
صدقت (உண்மை சொன்னீர்!)
பின்னர் கவிஞர் தொடர்ந்தார்:
و كل نعيم لا محالة زائل
இன்பம் அனைத்தும் மனிதற்கே
இல்லா தாகும் எப்போதும்!
உடனே கூறினார் உஸ்மான்: كذبت (பொய்யுரைத்தீர்!) அவர் மறுப்புரைத்ததன் காரணம், சொர்க்கத்தின் சுகானுபவங்கள் அழியாதவை என்ற இறைவாக்கின் தாக்கம்தான். அவ்வளவுதான். அருகில் நின்றவர் உஸ்மானின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார்! அவருடைய கண்ணைச் சுற்றிப் பச்சை பூத்தது! அடுத்து நின்ற வலீத் இப்னு முகீரா என்ற குறைஷித் தலைவர் சொன்னார்: “உஸ்மானுக்கு இது போதும், வாழ்க்கை முழுவதிலும் கைசேதப் பட்டுக் கிடக்க!”
தகவல் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றது. தோழரை ஆற்றுப் படுத்திவிட்டுச் சொன்னார்கள்:
أصدق كلمة قالها شاعركلمة لبيد : الا كل شيء ما خلا الله باطل ، وكاد أمية ابن أبي الصلت أن يسلم
கவிஞன் சொன்ன சொற்களிலேயே உண்மையானது, கவிஞர் லபீதின், "அறிந்துகொள்ளுங்கள்!அல்லாஹ்வைத் தவிர அனைத்தும் அழியக்கூடியவையே” என்பதுதான். (இது போன்று உண்மைக் கருத்துகளைக் கவிதைகளாகப் பொழிந்த) உமைய்யத் இப்னு அபிஸ் ஸல்த் முஸ்லிமாகி இருக்க வேண்டுமே.”
- சான்றுகள்: சஹீஹுல் புகாரி (3841), ஸஹீஹ் முஸ்லிம் (2256)
நபியவர்களுக்கு எதிரான காபிர்களின் கல்லடிகளைவிட, கவிஞர்களின் சொல்லடிகள்தாம் அவர்களைப் பெரிதும் பாதித்தன. அதனால், கவிதைகள் மீது ஆழ்ந்த கவனம் வைத்த நபியவர்கள், காழ்ப்புடைய கவிதைகளைக் கடிந்துரைத்தார்கள்; நற்கருத்துடைய கவிதைகளை நயந்துரைத்தார்கள். வசைக் கவிகளின் மீது வெறுப்புக் காட்டினார்கள்; வாழ்த்துக் கவிதைகளை உவந்தார்கள். தமது மக்கத்து வாழ்விலும் மதீனத்து வாழ்விலும் சொல்லாடல்களால் தொல்லை கொடுத்துவந்த கவிஞர் ஒருவர் திருந்தி வந்தபோது, அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்தான்....
அபூ சுஃப்யான் இப்ன் அல்ஹாரித் இப்ன் அப்துல் முத்தலிப்: இவர் பெருமானாரின் பெரியப்பா மகன்! நபியுடன் சம வயதுடையவர். இருவரும் ஒரே செவிலித் தாயிடம் பால் குடித்தவர்கள். பால்ய நண்பர்கள்! கருவிலே திருவுடையவராயிருந்து, கவிஞருமானார், அபூசுஃப்யான். ஆனால், அவரின் கவியம்புகள் ஓரிறைக் கொள்கைக்கு எதிராகவும், பெருமானாரைத் தனித்துத் தாக்குவனவாகவும் இருந்ததால், இஸ்லாமியப் பார்வையில் இவரும் கொல்லப்பட வேண்டியவராகக் கருதப்பட்டார். இவர் முஸ்லிம்களுக்கு எதிரான சில போர்களிலும் கலந்துகொண்டு, தோல்வியையே தழுவினார். இருப்பினும் என்ன? இவரின் வசைக்கவி அம்புகள் நின்றபாடில்லை. இந்த நிலை, ஹிஜ்ரி எட்டுவரை தொடர்ந்தது!
அப்போது, வெற்றி வீரராகப் பெருமானார் (ஸ௦ல்) அவர்கள் மதீனாவை விட்டுக் கிளம்பி, மக்காவுக்கு வந்துகொண்டிருந்தார்கள். அன்னை உம்மு சலமா (ரலி) அவர்களும் அந்தக் குழுவில் இருந்தார்கள். அண்ணலாரின் கூடாரத்தை அண்மி, மூன்று பேர் கவலை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தனர். அப்போது வெளியில் வந்த அன்னையார், அம்மூவரையும் அடையாளம் கண்டுகொண்டார்! ஒருவர், அண்ணலாரின் மாமி ஆத்திகாவின் மகன் அப்துல்லாஹ். இரண்டாமவர், அபூசுஃப்யான் பின் அல்ஹாரித்! ஆம், அந்த வசைக் கவிஞர்தான்! அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு அவருடைய இளமகன்! அன்னையார் அண்ணலாரிடம் அவர்களுக்காகப் பரிந்துரை செய்து, அவர்களை மன்னிக்குமாறு வேண்டி நின்றார்கள்.
“முடியாது!” என்பதே அண்ணலாரின் அப்போதைய மறுமொழியாக இருந்தது.
“அப்படியானால், நான் என் இந்தச் சின்ன மகனைக் கையில் பிடித்துக்கொண்டு, மக்காவிற்கு வெளியில் உள்ள பாலைவனத்தில் நடந்து போய், பசியுடனும் தாகத்துடனும் என் உயிரை மாய்த்துக்கொள்வேன்!” என்று உறுதியாகக் கூறினார் அபூசுஃப்யான்!
இறைத் தூதருக்கு இப்போது புரிந்தது, உண்மையான சீர்திருத்தத்தில்தான் அவர் வந்துள்ளார் என்பது.
“உள்ளே வர விடுங்கள் அவர்களை!” அண்ணலாரின் ஆணை பிறந்தது. அவர்கள் உள்ளே நுழைந்தனர். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தூதருக்கு இன்னின்ன வழிகளில் எல்லாம் துன்பம் இழைத்துவிட்டோமே என்று மனத்துள் அவற்றை அசை போட்டவராக, நாணிக் கோணிக் கூனிக் குறுகி, அபூசுப்யான் அண்ணலாரின் முன் வந்து நின்றார்! அந்தக் குற்ற உணர்வின் வெளிப்பாடாகக் கீழ்க்கண்ட கவிதையடிகள் அவர் வாயிலிருந்து வந்தன, கண்களில் நீர் ததும்ப:
لعمرك اني حين احمل راية ، لتغلب خيل اللات خيل محمد
لكا لمدلج الحيران اظلم ليله ، فهذا أواني حين اهدى فاهتدي
هداني هاد غير نفسي ودلني ، علي الله من طردت كل مطرد
இதன் தமிழ்க் கவியாக்கம்:
உங்கட் காக இன்றி லிருந்து முஹம்மதே!
உயரும் நும்கொடி மாற்றார் கொடியைக் காட்டிலும்.
மங்கிப் போவார் பகையோர் இரவில் அதிர்ச்சியில்!
மாண்புடன் நானும் வழங்கப் பெற்றேன் நேர்வழி
எங்கள் வாழ்வின் வழிகாட் டியவர் ஒருவரே
இறைவ னுக்காய் விரட்டி விட்டேன் அனைத்தையும்!
(சான்றுகள்: ஜாதுல் மஆத் / சீரத்துந் நபி - இப்னு ஹிஷாம்)
மக்கா வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற ‘ஹுனைன்’ போரில் கவிஞர் அபூசுஃப்யான் தன் கவிதை அடிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, இஸ்லாத்தின் கொடியை உயரச் செய்து ‘ஷஹீத்’ ஆனார்! (ரலியல்லாஹு அன்ஹு).
30 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.
// உங்கட் காக இன்றி லிருந்து முஹம்மதே!
உயரும் நும்கொடி மாற்றார் கொடியைக் காட்டிலும்.
மங்கிப் போவார் பகையோர் இரவில் அதிர்ச்சியில்!
மாண்புடன் நானும் வழங்கப் பெற்றேன் நேர்வழி
எங்கள் வாழ்வின் வழிகாட் டியவர் ஒருவரே
இறைவ னுக்காய் விரட்டி விட்டேன் அனைத்தையும்! //
அடி வயிறை கலங்க வைக்கும் அறிவார்ந்த கவிதை. முஸ்லிமாகிய நாமும் அதிகமாக இவ் அர்த்தத்தை ஆழமாக சிந்தித்து பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.
ஆம் இன்று பதவி, பட்டம்,பொருள் ஆசை இவைகளுக்காக நபி ( ஸல் ) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை குழி தோண்டி புதைத்து விட்டு மாற்றார்களின் வழியில் பறந்தக் கொண்டிருக்கிறோம். நஃவுதுபில்லாஹ்.
கண் முன்னால் கொண்டுவரும் காட்சியமைப்புடன் கூடிய ஆய்வு !
உணர்ச்சி பூர்வமானது !
கவிதை கையாளும் விதம் நாளுக்கு நாள்
வேறுபடுகிறது .நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர்கள் ,
களம் கண்டவர்கள் எழுதிய கவிதைகள் ..எந்த மறுப்பும்
சொல்வதற்கில்லை ..ஆனால் காலத்தின் மாற்றம்
கவிதை முகலாசனைக்கு .உரியதாக .அமைந்ததை
காண முடிகிறது ..உதாரணத்திற்கு மன்னராட்சி
காலத்தில் ஒவொரு நாளும் அரசரவை கூடும் போதும்
மன்னரை இல்லாததும் பொல்லாததும் கூறி ..சன்மானம்
பெற்றுசெல்வர் அதன் பின்னர் வந்த கவி புலமையாளர் .
மொழிவளம் பெருக பண்டை காலத்தில்
புராணங்களை கவி மூலம் பறை சாற்றப்பட்டது
கவிதைக்கு பொய் அழகு என சில கவிஞ்சர்கள் இன்றும்
சொல்ல கேட்கிறோம் ..கவிதையில் ஒருவனுடைய ஆற்றலை
மிகை படுத்தி காட்ட கையாளும் முறையை இஸ்லாமிய
நடை முறையாக ஏற்றுக்கொள்ள முடியாது ..சிரியாவில்
ஆளும் அதிபரை இறைவனுக்கு ஒப்பாக கவிபாடும் நிலையை
காண்கிறோம் ..கவிதையே ஒரு மிகை தான் ...
மௌலூது .மிகை படுத்தப்பட்ட கவிதைகள்தான் ஏன்இன்று பாடப்படும்
இஸ்லாமிய கீதங்கள் எல்லாம் கவியை சார்ந்ததுதான்
எவ்வளவு இஸ்லாத்திற்கு முரணான் கருத்துக்கள்
இருக்கிறது தெரியுமா ..ஒரு உதாரணம்
தெரிய படுத்த விரும்புகிறேன் ..முஹையதீன் அப்துல் காதர்
அவர்கள் பிறந்ததை அவதாரம் என குறிப்பிட்டுள்ளனர்
அவதாரம் என்பதே இஸ்லாத்திற்கு முரணான வார்த்தை
அவதாரம் என்றால் கடவுள் உலகத்திற்கு மனித உருவில்
அவதரித்தல் (தானேபிறத்தல் )என பொருள்
கவியை கையாளும் முறை கற்பனை யை
கண்மூடி தனமாக கையாளுதல் கூடாது
என்பதை இதன் மூலம் பதிய விரும்புகிறேன்
//இஸ்லாமியப் பார்வையில் இவரும் கொள்ளப்பட வேண்டியவராகக் கருதப்பட்டார்.//
காக்கா, கொல்லப்பட?
ஹி ஹி . தவறுதான்! Oversight. Printer's Devil!
இன்னொரு தடவை சபீரின் பார்வை விழுமுன், திருத்திவிடுங்கள் தளத்தோரே! ப்ளீஸ்.
நபியவர்கள் நற்கருத்துடைய கவிதைகளை நயந்துரைத்தார்கள் என்ற வாசகம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.
>>>>கவிதைக்கு பொய் அழகு என சில கவிஞர்கள் இன்றும் சொல்ல கேட்கிறோம்<<<<<
அன்பினிய அதிரை சித்திக்,
கவிதைக்குப் பொய்யழகு என்பதில் யாதொரு தவறும் இல்லை. நாம் புரிந்துகொள்வதில்தான் தவறிருக்கிறது.
பொய் என்று சொல்வது இங்கே கற்பனை வளம் ஏற்றுவதை, அழகு ஊட்டுவதை, இசை கூட்டுவதை.
உதாரணம்: ஒரு பெண் குழந்தை என்பது உண்மை. அந்த உண்மைக்கு, பட்டுடுத்தி, பவுடர் இட்டு, கண்ணுக்கு மையிட்டு, சடை பிண்ணி, பூமுடித்து என்ற அத்தனைப் பொய்யையும் செய்து பார்ப்பது தவறல்ல, அழ்கு பெண்ணுக்கு அழகு. அதுபோலத்தான் கவிதைக்கும் அழகு தேவை.
ஒரு கவிதை பொய்யை நடுவில் வைத்து உண்மையைச் சுற்றிக் கட்டி ஏமாற்றுகிறதா அல்லது உண்மையை நடுவில் வைத்து கற்பனை, சொல்லழகு, இசை போன்று பொய்களைச் சுற்றிக்கட்டி நயமாக்குகிறதா என்பதே முக்கியம்.
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
என்ற கவிப்பேரரசின் கவிதையைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
கண்ணுக்கு மை என்ற பொய் எப்படி அழகோ அப்படித்தான், கவிதைக்குக் கற்பனை என்ற பொய் அழகு.
அதிரை அஹ்மத் அவர்களின் இந்த வார ஆய்வு வரிகளும் அருமை.
பொய்யைச் சுற்றிய அலங்காரத்தோடு வந்த கவிஞர் அபூசுஃப்யான் கவிதைகளை நிராகரித்த நபியவர்கள் உண்மையைச் சுற்றி நெய்த அழகு வரிகளை பாராட்டி கவிதைகளைத் தெளிவுபடுத்தி இருப்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்.
அன்புடன் புகாரி
எனதருமை .இணைய தள கருத்தாளர் .
அருமை நண்பர் புஹாரி அவர்களுக்கு ..,
கவிதை என்பது மதியை சுண்டும் ஆற்றல் உடையது
கரும்பை வேம்பென்று சாதிக்கும் திறன்கொண்டது
நீங்கள் சொல்வது போல் நல்ல விசயத்திற்கு
பொய்யை பயன் படுத்தலாம் என்பதை நான்
நியாயமாக கருத வில்லை ..அக்கால கவியில்
மிகை தன்மை இருதது ஆனால் பொய் இல்லை
பொய் அலங்கரிக்க வல்லது இஸ்லாத்தை
மைய மாக வைத்து எழுத கூடாது என்பதே
என் வாதம்,,. ஏன் என்றல் ஒரு எழுத்தாளன்
நாற்பது பக்க கட்டுரையால் விளக்க முடியாதை
நான்கு வரி கவிதையால் கவிஞ்சன் விளக்கிவிடுவான்
மெய்யை மெய்யால் விளக்கிவிடலாமே ..,
பொய் எதற்கு ..,
உவமானம் .உதாரணம் .பரவாயில்லை ...
கவிதை தேனாய் இனித்தது ..என்பது
மிகை படுத்தியது ...அதே ..கவிதை..., நான்
வேத வாக்காய் உணர்ந்தேன் என்பது அப்பட்டமான
பொய்.., ஏன் என்றால் வேதத்தை மீற முடியாது ..,
தேனின் சுவை சில வினாடிகளில் மாறி விடும் ..
சொல் பிரயோகத்தில் கொஞ்சம் ஜாக்கிரதை
உணர்வோடு ..,நாம் நடந்து கொள்ளல் நலம் ..,
நடை முறை வாழ்க்கையில் உள்ள கவிதை
பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை
இஸ்லாத்தில் உள்ள விசயத்தினை கவியால்
கூற முயலும் போதுசுவை சேர்க்க நினைத்துகூட
பொய்யினைகருவியை படுத்தகூடாது .,.பயன் படுத்துவானேன்...,
அஸ்ஸலாமு அலைக்கும்.அதிரை சித்திக் சிந்திக்கும் படி சொல்லியவிதம் தித்திக்கும் எத்திக்கும். இஸ்லாம் என வந்து விட்டால் எப்படியும் எழுதலாம் என்று இருப்பது தவறு எனலாம் அதுதான் சரியும்.இஸ்லாம் இல்லாமலும் எழுதலாம் பொய் இல்லாமல். கவிஞர் புகாரி அவர்களின் விளக்கமும் சரியே! ஒரு பொருளை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதை பொருத்தே அதன் விளைவுகள் தெரிய வருகிறது.
இனிய உறவாளர் அதிரை சித்திக் அவர்களே,
அன்பும் அமைதியும் நிறைக!
உங்கள் எண்ணமும் கருத்தும் தெளிவாகப் புரிகிறது. அது மிகவும் சரியே. நான் அதை மறுப்பவனல்ல.
நான் கூறுவதெல்லாம், கவிதைக்குப் பொய் அழகே தவிர கவிதை என்பது மெய்யால் செய்யப்பட்டால் மாத்திரமே அது கவிதை. கவியெனும் மெய்யில் இழைக்கப்படும் அழகு கற்பனைப் பொய்களே கவிதையைக் காலத்தால் அழியாததாய் ஆக்குகின்றன. உரைநடைக்கும் கவிதைக்குமான வித்தியாசம் அதுதானே?
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே!
பொய் அழகாகத்தானே இருக்கிறது ஓர் அற்புதமான உண்மையை அது அழுத்தமாகச் சொல்வதனால்?
தீதும் நன்றும் காண்போர் ஞானத்திலல்லவா?
வேதவாக்கு என்று எவரேனும் எதையேனும் புகழ்ந்தால், அவர் எந்த வேதத்தைச் சொல்கிறார் எதனோடு ஒப்பிடுகிறார் என்பதே அறியாத நிலையில் நான் ஏதும் சொல்வதற்கில்லை.
நம்மைச் சுற்றி நிறைய உலகங்கள் இருக்கின்றன என்பதை நம்புபவன் நான். என் அறிவின் பரிசத்தில் ஏற்பதை ஏற்றும் எறிவதை எறிந்துமாய்ச் செல்பவன்.
சரி, இஸ்லாமியக் கவிதை ஒன்றுக்குள் நுழைவோம்.
கீழே உள்ள அனைத்துக் கவிதைகளுக்கும் மூலப்பொருள் ஒன்றுதான். எந்தக் கவிதையும் எவருக்கும் தவறாகப் படாவிட்டால் அவர் கவிதைகளை ரசிக்கிறார் என்று பொருள், இல்லாவிட்டால் அவருக்கு இயல்பிலேயே கவிதை என்றால் வேம்பு. அப்படி நிறையபேரை நான் கண்டிருக்கிறேன். கவிதை என்ற சொல் கேட்டாலே காததூரம் ஓடுவார்கள். இது ரசனையின்பாற்பட்டது. தவிர கவிதைகள் சரியாகத்தான் இருக்கின்றன. ரசிப்பவர்களையும் இழைப்பவர்களையும் அன்போடு விட்டுவிடுவதே அவர்களுக்கும் கவிஞர்களுக்கும் இலக்கியத்திற்கும் இந்த உலகுக்கும் நலம்.
*1
உன்
பள்ளிவாசல் தோப்புகளில்
சிலர்
தென்னையைப் போல்
தலை உயர்த்திக் காட்டித்
தங்களைத்
தென்படுத்திக் கொள்வதிலேயே
குறியாக இருக்கிறார்கள்
நானோ
ஒரு
வாழைக் கன்று போல
என்னை
மட்டுப்படுத்தி
மறைத்துக் கொண்டே
உன்னிலே
கட்டுண்டு கிடப்பதிலே
களிப்புண்டுக் கிடக்கின்றேன்
*2
உன் பள்ளிவாசலில் சிலர்
தங்களைக் காட்டிக்கொள்வதிலேயே
குறியாய் இருக்கும்போது
நான் என்னை மறைத்துக்கொண்டு
உன்னிடம் இணைந்திருப்பதையே
நேசிக்கிறேன்
*3
பள்ளிவாசலில்
உன்னைத் தாழ்த்து
இறைவனோடு
இணைவதையே போற்று
*4
உன்னை மற
இறைவனை நினை
*
அன்புடன் புகாரி
சகோதரர்கள் அதிரை சித்திக் மற்றும் புகாரி ஆகியோரின் கருத்தாடல்கள் இக்கட்டுரைக்கு பெருகு. ரசிக்கத்தக்க கருத்தாடல்கள்.
பக்கம்பக்கமாகச் சொல்லவேண்டிய செய்தியை ஊருக்குப் போகும் சபுராளி இப்படிச் சொன்னால் எப்படி இருக்கும்!
அன்பே,
ஊரில் நானிருக்கும்போது
உனக்கே உனக்கெனவே இருக்க
உறுதி சொல்கிறேன்.
உனக்குப் பிடித்ததையே எனக்கு
உடுத்திப் பார்
உனக்கு விருப்பமானதையே
உண்ணக் கொடு
உன் நிழலிலேயே என்னை
உறங்க வை.
திரும்பி வருகையில்
விரும்பி நினைத்திருக்க
மனம் நிறைய
உன்
நினைவுகளால் நிறப்பிவிடு.
ஹிஹி..
"கட்டுரைக்கு மெருகு" என்றிருக்க வேண்டும். Printer's Devil No.2
//ஹிஹி..
"கட்டுரைக்கு மெருகு" என்றிருக்க வேண்டும். Printer's Devil No.2//
கொஞ்சம் பிஸியாயிட்டேன் அதுக்காக இப்புடியா !?
சபுராளி இங்கே - இன்று
சபுராளி அங்கே - நாளை
இதுக்கு இடைப்பட்ட நாட்கள் பயணம் தானே !?
சித்தீக் காக்கா, மற்றும் புஹாரி காக்கா இவர்களின் கருத்தாடல் சுவையோ சுவை ! (எங்கேயிருந்தாங்க இவ்வளவு நாட்களாக !?)
கனடா கவிஞரும் என் அன்பு நண்பருமான “அன்புடன் குழும நிர்வாகி” புகாரி அவர்களின் வரவு நல்வரவாகுக! இத்தொடர் துவங்கும் பொழுது, இக்கட்டுரை ஆய்வாளரும் என் ஆசானுமாகிய அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் எழுதியிருந்தார்கள், “புரிந்துணர்வில் குறைபாடு உடையவர்களால்” என்ற ஒரு வரியில் உணர்த்தியதை உங்களின் நீண்ட விளக்கம் உணர்த்தி விட்டதை உணர்கின்றேன். அன்புச் சகோதரர் அவர்கள் “புரிந்துணர்வில் குறைபாடு உடையவர் அல்லர்” தமிழூற்று என்ற இதழின் ஆசிரியரும் என் வலைத்தளத்தில் தினமும் என் கவிதைகளைப் பாராட்டும் பண்பாளரும் ஆவார்கள். பொதுவாக “கவிதை என்றால் காத தூரம் ஓடும்” அதிகமானோர்கள் அடிக்கடிக் கேட்கும் ஐயங்களையே அன்புச் சகோதரர் அவர்களும் கேட்டிருப்பதும்; அவர்களின் ஐயங்களைத் தெளிவு படுத்திய உங்களின் அனுபவபூர்வமான விளக்கங்களும் அருமை!
நாடோறும் என் வலைத்தளத்தில் வருகைப் பதிவு செய்தும்; வாழ்த்துக்கள் வழங்கியும் வருகின்ற அன்புச் சகோதரர் அதிரை சித்திக் அவர்கள் தான் கவிதையை வெறுப்பவர் என்று கிஞ்சிற்றும் என்னால் நம்ப முடியவில்லை; அவர்கள் கேட்டுள்ள ஐயங்கட்கு ஆய்வாளர் அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் முதலிரண்டுத் தொடர்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள் என்பதை இத்தொடரின் துவக்கம் முதலாய்ச் சென்று, அதிரை சித்திக் அவர்கள் தெளிவான விளக்கங்கள் பெறலாம்.
அன்பினிய அபுஇபுறாகிம்,
என் பெயரை புகாரி என்று எழுதினாலே புஹாரி என்ற உச்சரிப்புதான் வரும். முகம் முஹம் இரண்டையும் உச்சரித்துப் பாருங்கள். தமிழில் எழுத்து வடிவில் இல்லாமல் உச்சரிப்பில் பல எழுத்துக்கள் ஒளிந்திருக்கின்றன.
காக்க - காக்க (ஒற்றுக்குபின் க ஒலியே நிலைக்கும்)
காகம் - காஹம் (இடையில் வரும்போது ஹ ஒலியைப் பெறும்)
எனவே நான் கிரந்தம் தவிர்த்தே என் பெயரை எழுதுகிறேன். கிரந்தம் கட்டாயம் ஆகும்போதுமட்டுமே கிரந்தம் சேர்ப்பேன்.
*
இந்த காக்கா வந்த கதையை எவரேனும் சொல்வீர்களா? இந்தியில் காக்கா என்றால் சித்தப்பா? காக்கா எங்கிருந்து அதிரைக்கு வந்தது? அது எந்த மொழி?
அன்புடன் புகாரி
வாப்பா, உம்மா,இக்கா மூன்றும் மலையாள முஸ்லிம்களிடமிருந்தே அதிரைபட்டினத்திற்குள் இஸ்லாம் நுழையும் பொழுதே வந்திருக்கலாம்
அன்பு நண்பரும் கனடா கவிஞருமான கவிமுகமாய் அறிமுகமாகி “அன்புடன் குழுமத்தின் நிறுவனருமான” புகாரி அவர்களின் வரவு நல்வரவாகுக!
தமிழூற்றின் ஆசிரியர் அதிரை சித்திக் உண்மையில் கவிதை நேயர்; குறிப்பாக என் வலைத்தளத்தில் நாடோறும் வருகைப் பதிவு செய்து வாழ்த்துச் சொல்கின்றார்கள். உங்களிடமிருந்து தெளிவு பெறவே ஐயங்களைக் கேட்கின்றார்கள்; அவர்களின் ஐயங்கட்குப் பலமுறை விடைகள் இந்தக் கட்டுரையாளர் அவர்களின் துவக்கத் தொடரில் சென்று அதிரை சித்திக் அவர்கள் கண்டுத் தெளிவு பெறுக. கனடா கவிஞர் ஒரத்தநாடு புகாரி அவர்களின் உரத்த சிந்தனைகள் பாராட்டப்பட வேண்டியவைகள்; ஆனால் தீர்க்கமானப் புரிந்துணர்வுடன்- கத்தி மேல் நடப்பது போன்றப் பத்திரமானப் பக்குவத்துடன் படித்தால் மட்டும் விளங்கலாம். “கரணம் தப்பினால் மரணம்” என்பது போல் புரிந்துணர்வில் அவசரப்பட்டால் விபரீதமாகவே பொருள் கொள்ளக் கூடும்.
நல்ல கவிதைகளை ஏற்கலாம்; தீய உணர்வுகளைத் தூண்டும் கவிதையானாலும் உரையானாலும் தவிர்க்கலாம் என்பது முன்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட முடிவு.
இனியவர் அதிரை சித்திக் அவர்களை நான் ஒருபோதும் தவறாக நினைக்கவில்லை. அவர் தூண்டுதல் இல்லாமல் நான் கவிபற்றி ஏதும் எழுத வாய்ப்பு ஏது? எனவே அவரை நான் மனதார பாராட்டவே செய்கிறேன்.
நன்றி நண்பர் அபுல்கலாம்!
சத்தரத்தான் :) அன்புடன் புகாரி
வாப்பா உம்மா காக்கா (இக்கா) எல்லாம் மலையாளத்திலும் கொழும்பிலும் ஒன்றுதானோ?
முழு விபரம் அறிந்தவர்களிடமிருந்து இதை அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
அன்புடன் புகாரி
கேரளா முஸ்லிம்களின் குறிப்பிட்ட உணவு பண்டங்ககள் கூட
கொழும்பு முஸ்லிம்களிடம் ஒத்து போகிறது ,,(புட்டு,அப்பம் )
இஸ்லாமிய தொழுகை முறை கூட( ஷாபி )மத்ஹாப்
பின்பற்றும் முறை கூட ஒன்றுதான் ..., கொழும்பு முஸ்லிம்களும்
உடைகளும் அதிரை மக்களுடன் ஒத்து போவதும் என்றோ ../ஒரு நாள்
ஒன்றுபட்ட சமூகத்தாராக இருந்திருக்கலாம் .
எமனிலிருந்து புறப்பட்ட கப்பலில் இருந்த முஸ்லிம்கள், எகிப்து வழியாக, கொழும்பு, கர்நாடகாவில் உள்ள பட்கல், கேரளக் கரையோரம் மற்றும் தமிழகக் கரையோரம் வணிகம் வழியாகவும், திருமண வழியாகவும் பரவிக் கிடந்தனர். அதனாற்றான், எமன், எகிப்து, கொழும்பு, பட்கல், கேரளா மற்றும் தமிழகக் கடலோர முஸ்லிம்கள் “ஷாஃபி”மத்ஹபைப் பின்பற்றுகின்றார்கள். அதிரை சித்திக் அவர்கள் சொன்னது போல் உணவு, உடை பழக்க வழக்கங்கள் கொழும்பு, கேரளா மற்றும் தமிழக் கடலோர மக்களிடம் ஒன்றானது போல் “காக்கா” எனும் மரியாதைக் குறியீடும் அவ்வண்ணம் ஒன்றாகிப் போனது.
காக்கா என்று எழுதுவதைவிட காகா என்று எழுதுவதுதான் சரி என்பதுபோல படித்தேன். ஆனால் இதற்கான மூலம் அறிய ஆவல்.
காகா - அதிரை
நாநா - நாகூர்
அன்புடன் புகாரி
எனக்கு நீண்ட நாளைய சந்தேகம் ...
கதைகள் எழுதுவது இஸ்லாத்தில் அன்மதிக்க பட்டதா ..
கற்பனை கதா பாத்திரங்கள் ஏற்புடையதா .,மார்க்கம் அறிந்தவர்கள்
விளக்கினால் நன்மையாக இருக்கும் ...,
கலாம் காக்காவின் கவிதைகள் அதிரை நிருபரிலும் வலம்வரவேண்டும் ...,
அன்பின் அதிரை சித்திக்,
கதை கவிதை எல்லாம் ஒன்றுதான். அந்தக் காலத்தில் கவிதை மட்டுமே இருந்தது. கதை என்பதெல்லாம் கடந்த சில நூற்றாண்டின் வளர்ச்சி மட்டுமே. ஆகையால்தான் சங்க இலக்கியங்களில் நீங்கள் கவிதை காவியம் என்று மட்டும் பார்ப்பீர்கள். கதை என்ற உரைநடை இலக்கியம் கிடையவே கிடையாது.
ஆகவே கவிதைக்கு எது சொல்லப்பட்டதோ அதுதான் கதைக்கும் பொருந்தும்.
அன்புடன் புகாரி
அன்பு சகோதரர் ஞான மிகு புஹாரி அவர்களுக்கு
.சலாத்தினையும் நன்றியினையும் உரிதாகுகிறேன் இஸ்லாமிய சட்டங்கள் வரையறுக்கப்பட்டு ஆயிரத்து நானூறு
ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் கதை உரைநடை
எழுதும் வழக்கம் சில நூறு ஆண்டுகள் தான் ஆகிறது என்றால்
இஸ்லாத்தின் நிலை பாடு என்ன ? கவிதையில் பாராட்டுக்கள்
அல்லது தூசனிப்புகள்மட்டும் இருந்ததா அல்லது
கவிதை நடையில் கற்பனை கதைகள் இருந்ததா அவைகள்
அனுமதிக்க பட்டவைகளா ..ஏன் இதை இவ்வளவு விளக்கமாக
கேட்கிறேன் என்றால் என் எதிர் கால திட்டத்தில் அமெரிக்க இந்தியா
கலாச்சாரம் கலந்த கதை இங்கு வெளியிட நினைத்துள்ளேன் ..
இஸ்லாம் அனுமதித்தால் மட்டுமே எனது முயற்சி தொடரும்
நல்ல கருத்துக்கள் அடங்கிய கதைகள்தான் என்றாலும்
இஸ்லாம் அனுமதிக்கணும் .., நம் இலக்கிய வட்டத்திற்கு
அப்பால் இஸ்லாமியம் நிலைபாற்றில் நின்று இதற்க்கான விடை இன்னும்
விளக்கமாக எதிர் பார்கிறேன்.. .
அன்பிற்கினிய அதிரை சித்திக் அவர்களுக்கு,
அன்பும் அறிவும் அமைதியும் நிறைக!
>>>>>>இஸ்லாமியச் சட்டங்கள் வரையறுக்கப்பட்டு ஆயிரத்து நானூறு
ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கதை உரைநடை
எழுதும் வழக்கம் சில நூறு ஆண்டுகள் தான் ஆகின்றது என்றால்
இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன ? கவிதையில் பாராட்டுக்கள்
அல்லது தூசனிப்புகள்மட்டும் இருந்ததா அல்லது கவிதை நடையில் கற்பனை கதைகள் இருந்ததா அவைகள் அனுமதிக்க பட்டவைகளா<<<<<<<
இஸ்லாமின் அடிப்படையைப் புரிந்துகொண்டால் இதற்கான பதில் தானே வந்துவிடும். இஸ்லாம் எதை அடிப்படை என்று சொல்கிறதோ அதற்கு மாற்றாக நாம் கவிதை எழுதினாலும் சரி கதை எழுதினாலும் சரி அது நிராகரிப்புக் குரியதாகிவிடும்.
ஆனால் சிலர் எல்லாவற்றையும் மறுத்துக்கொண்டே இருப்பார்கள். அதை நாம் கேட்கத் தேவையில்லை. சிலர் எதுவுமே கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பார்கள் அதையும் நாம் கேட்கத் தேவையில்லை.
நமக்குச் சுதந்திரமும் வேண்டும் கட்டுப்பாடும் வேண்டும். அதை மனதில் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் இறைவன் நம்முடன் இருப்பான்.
”உண்ணுங்கள் உடுத்துங்கள். வரம்பு மீறுபவர்களை இறைவன் மன்னிக்கமாட்டான்”
சரியாக நினைவில்லை, கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு வாசகத்தை நபிகள் நாயகம் கூறியதாக ஓர் இந்து எழுத்தாளர் நீயா நானாவில் கூறினார்.
எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது.
நல்ல கருத்துக்களை எவரும் ஆதரிப்பார்கள், எவரும் பின்பற்றுவார்கள்.
ஒரு சிறுகதை எழுதும்போது, இது ஓர் உண்மை தழுவிய, அதே சமயம் சில கற்பனைகள் கலந்த கதை என்று முன்பே ஒரு குறிப்பினைக் கொடுத்துவிட்டு மனசாட்சிக்கு பயந்து எழுதினால் அது சரியானதாகத்தானே இருக்கும்.
விமரிசகர்கள் அவர்கள் வேலையைச் செய்வார்கள். ஆனால் படைப்பாளி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் பணியைச் செய்யவேண்டும்.
ஒரு விமரிசனுக்கு இருக்கும் உரிமையைவிட அதிக உரிமை ஒரு படைப்பாளிக்கு இருப்பதாக நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.
இதுவரை பூமியில் ஒரு விமரிசகனுக்கும் சிலை வைத்ததில்லை. அனைத்தும் படைப்பாளிக்குத்தான். சிலை வைப்பது சரியா தவறா என்பது வேறு விவாதம். அதனுள் நாம் இப்போது பயணப்படத் தேவையில்லை.
ஆயிரத்தோரு இரவுகள், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்று எண்ணற்ற கற்பனை கதைகள் அராபிய சமூகத்தில் செவி வழியே உண்டு.
சில நூற்றாண்டுகளாகத்தான் சிறுகதை எழுதும் பழக்கம் இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் கதை சொல்வதென்பது மனிதன் தோன்றியபோதே தோன்றிவிட்டது. எல்லாம் செவிவழியாய்ச் சுவாரசியமாய் பயணப்பட்டுக்கொண்டு இருந்தன. அவ்வளவுதான்.
-- நீளும்
>>>>>ஏன் இதை இவ்வளவு விளக்கமாக கேட்கிறேன் என்றால் என் எதிர் கால திட்டத்தில் அமெரிக்க இந்தியா கலாச்சாரம் கலந்த கதை இங்கு வெளியிட நினைத்துள்ளேன் .. இஸ்லாம் அனுமதித்தால் மட்டுமே எனது முயற்சி தொடரும்
நல்ல கருத்துக்கள் அடங்கிய கதைகள்தான் என்றாலும் இஸ்லாம் அனுமதிக்கணும் .., நம் இலக்கிய வட்டத்திற்கு அப்பால் இஸ்லாமியம் நிலைபாற்றில் நின்று இதற்க்கான விடை இன்னும் விளக்கமாக எதிர் பார்கிறேன்..<<<<< .
உங்களின் அருமையான முயற்சிக்கு என் முன்-பாராட்டுக்கள். எழுதுங்கள். நாம் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல. சிலரின் அறிவீணத்திற்குப் பயந்து நம்மை நாமே முடக்கிக்கொள்ளக்கூடாது. இஸ்லாமியன் வளர்ந்தால்தான் இஸ்லாம் உண்மையில் வளரும். இஸ்லாமியர்கள் பெரும் புத்தி ஜீவிகள் என்பதை உலகம் அறியவேண்டும்.
எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை நகைச்சுவையாகக் கேட்டார், மாமிசத்திற்கும் கவிதைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? முக்கால்வாசி கவிஞர்கள் இஸ்லாமியர்களாவே இருக்கிறார்களே ஏன் என்று.
உண்மையில் இஸ்லாம் மதத்தவர்கள் ஆழ்ந்த கலை ஞானமும் இலக்கிய ஞானமும் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். வடக்கில் பாருங்கள் எத்தனை அற்புதக் கவிஞர்கள் கலைஞர்கள்?
எனக்கு கவிக்கோ அப்துல் ரகுமான்தான் கவிப்பேரரசாகப் படுவார் பல நேரங்களில். நான் வைரமுத்துவின் தீவிர ரசிகன் என்பது வேறு கதை. வைரமுத்து திரைத்துறையில் கலக்கியவர். வைரமுத்து கவிதைகளில் கலக்கியவர். அப்துல்ரகுமானின் சில கவிதைகள் என்னை அப்படியே உறைய வைத்திருக்கின்றன.
உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள். அறிஞர்கள் உங்கள் கதைகளை வாசிப்பார்கள். குறை நிறை கூறுவார்கள். எதையும் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் போதும், வெற்றி உங்களுடையது. அதே சமயம் அறிவற்ற விமரிசனங்களால் மனம் உடையாத மனோபலமும் வேண்டும் நமக்கு.
அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வான். நாம் அவன் தந்த ஞானத்தை அவன் நம்மைச் செலுத்தும் வழியில், முறையாகப் பயன்படுத்துவோம். பயன்படுத்தாமல் விடுவது நாம் இறைவனுக்கே செய்யும் மாசு. ஏனெனில் நீங்கள் அவனால் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் படைக்கப்பட்டதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும்? அதைத் துணிந்து செய்யுங்கள், வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி
”வைரமுத்து கவிதைகளில் கலக்கியவர்”
இதை
”அப்துல் ரகுமான்” கவிதைகளில் கலக்கியவர்” என்று வாசிக்கவும்
தவறுக்கு வருந்துகிறேன்!
அன்புடன் புகாரி
Post a Comment