1960 வருட வாக்கில் துபாய் நாட்டுக்கு நம்மவர்கள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்தார்கள். அதுவே லேட்டுதான்.அதற்கு முன்னரே மேலை நாட்டவர்களும் இந்தியாவின் உயர் ஜாதி இந்துக்களும் அங்கே காலூன்றி விட்டார்கள். அவர்களின் எடுபிடிகளாகவும் அல்லது அவர்களின் ஆளுமையின் கீழும் முஸ்லிம்கள் வேலை செய்தார்கள். சில வருடங்களில் அரபு நாடு தமிழ் முஸ்லிம்களின் மற்றொரு சிங்கப்பூர் மலேசியாவாகிவிட்டது. சிங்கப்பூர்வாசிகளைப் பார்த்து ஏக்கப்பார்வை பார்த்தவர்கள் வேட்டியை மாற்றி கால்சராயைப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். 1970 க்குப் பிறகு கொஞ்சம் கூடுதல் மக்கள்போய் துபாயை பிரபலமாக்கி விட்டார்கள். நமக்கு முன்னால் அங்கே போய் பழம் தின்று கொட்டையும் போட்ட மலையாளிகளுக்கு இது பெருங்கடுப்பு. அவர்களோடு போட்டிப் போட்டுத்தான் நம்மவர்கள் படிப்படியாக உயர முடிந்தது.அப்புறம் நடந்த நிகழ்வுகள் முஸ்லிம் சமுதாயத்தில் உச்சகட்ட மாற்றங்களை ஏற்படுத்தியது.
அரபு நாட்டில் என்ன வேலை என்பதை பற்ற யாரும் கவலைப் படவில்லை. என்ன சம்பளம் என்பதுதான் குறி. சம்பளம் குறைவாக இருந்தாலும்கூட அரேபியாவில் தங்கள் மகனும் வேலை பார்க்கிறான் என்பது சமூக அங்கீகாரத்துக்கான அடையாளம் ஆகிப்போனது.
"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை பாஸ்போர்ட்டுடன் கண்ட தாய் "
என்பது தாய்மார்களின் புதுக் குறளாகிப்போனது. ஆறாம் வகுப்போ பத்தாம் வகுப்போ "நீ படிச்சுக் கிழிச்சது வரை போதும், அரேபியாவுக்குப்போ" என்று பிள்ளைகளை அடித்து விரட்டாதக் குறையாக அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார்கள் பெற்றோர்கள். 1975 லிருந்து 1995 வரை கிட்டத்தட்ட இருபது வருட காலம் இந்த நிலை சமூகத்தில் நீடித்தது. இந்த காலகட்டத்தில் மாட்டியவர்களின் படிப்பு அதோகதியானது. ஆனால் குடும்பங்களில் "வறுமை" துரத்தப்பட்டு "செழுமை" தலைகாட்டத் துவங்கியது. கல்யாணப் பேச்சுக்களில் எல்லாவற்றையும் விட "மாப்பிள்ளை அரேபியாவில்" என்ற மந்திர வார்த்தைக்குத்தான் பெண்வீட்டுக் குடும்பம் வசப்பட்டது.
ஒரு மறுக்க முடியாத உண்மையை இங்கே குறிப்பிட வேண்டும்....அது...புதிதாக அரபு நாட்டுப் பணம் வந்த அந்த ஆரம்ப வருடங்களில்தான் வரதட்சணை அதிகமாக கேட்டு வாங்கும் வழக்கம் ஏற்பட்டது. எந்த அளவுக்கென்றால், ஒரு இடத்தில் பெண்பேசி முடிவு செய்தபிறகு மற்றொரு வீட்டில் அதைவிட பல மடங்கு அதிக "வரதட்சணை" தருவதாகக் கூறியதும் நிச்சயம் செய்த பெண்ணை வேண்டாம் என்று சொன்ன சம்பவங்கள் நிறைய உண்டு. ( இடையூறுக்கு மன்னிக்கவும்...இன்ஷா அல்லாஹ்.தொடருவேன்.) கடைகளில் வேலை பார்த்தவர்கள், வேலையில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள் படித்தவர்கள், படிக்காதவர்கள், பணக்காரர்கள் , ஏழைகள் என்று ஒருத்தர் பாக்கியில்லாமல் அனைவரையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது அரேபிய புவிஈர்ப்பு மையம். பெட்ரோலால் வளம் கொழிக்கும் வையம். இதில் பெரிய வேடிக்கை...அரசு வேலை பார்த்தவர்கள்கூட ஐந்து வருடம் லீவு போட்டுவிட்டு அரேபியாவுக்குப் போய் நல்ல முறையில் சம்பாதித்து விட்டு மீண்டும் பணியில் சேர்ந்து இப்போதும் ஓய்வூதியம் வாங்கி வருகிறார்கள். மற்றும் சிலர் கணிசமான "ரியால்"களை இழக்க மனமில்லாமல் அரசு வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு மீண்டும் அரபுநாட்டு வேலைக்கே சென்று விட்டார்கள்.
ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வாப்பா உம்மாவிடம் அடிவாங்கிய பையன்களிடம் "பணம்" புரளத் துவங்கியதும் "குணம்" புரளத் துவங்கியது. விடுமுறையில் ஊருக்கு வந்தவர்கள் அதிகப்படியாகவே "அலம்பல்" போட்டார்கள். சமுதாயத்தின் கலாச்சாரம் மாறத் துவங்கியது. பணம் இல்லாதபோது அடக்கத்தோடு வாழ்ந்தவர்கள் அது வந்தபிறகு அடியோடு மாறிவிட்டார்கள். எல்லோருக்கும் பணத்தின்மீது அதீத காதல் ஏற்பட்டது. அதுவும் அரேபியா பணத்தின்மீது. "அல்லாஹும்ம சல்லி.." என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் "சல்லி...சல்லி..." என்று மட்டும் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். குடிசைகள் "கான்க்ரீட்" வீடுகளாக மாற ஆரம்பித்தன....பாதி அரேபிய பணத்திலும் மீதி டவ்ரி பணத்திலும். அவர்களுக்கு, "இது ஒரு பொன்மாலைப் பொழுது...."
ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் மூன்று பேரையோ நான்கு பேரையோ அனுப்பி காசு பார்த்தார்கள். மூன்றோ நாலோ பெண்பிள்ளைகளை மட்டும் பெற்று ஆண்பிள்ளை பெறாத பெற்றோர்கள் துடித்துப் போய்விட்டார்கள். அவர்கள் அழுத அழுகையின் "நிஜம்" என் நெஞ்சில் இன்றும் "நிழலாடுகிறது." ஒரு பெண்பிள்ளையை கல்யாணம் கட்டிக் கொடுக்க செந்நீரை சிந்தியவர்கள் மூன்று நாலு பெண்களை கட்டிக் கொடுக்க எங்கே போவார்கள்? ஊரில் எல்லோரும் அரேபியா மாப்பிள்ளைகள். அவர்களுக்குக் "கூலி" கூடுதல். மண்டபத்தில் கல்யாணம்,பெண்வீட்டுச் சாப்பாடு, சீர் செனத்தி என்று அப்போதே பல லட்சம் செலவில் கல்யாணக் கலாச்சாரம் "விஸ்வரூபம்" எடுத்தது. இந்த ஏழைகள் படும் பட்டைப் பார்த்து மனம் வெதும்பி நான் எழுதிய கவிதையின் ஓரிரு வரிகளை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.
அன்றைய திருமணங்களில் கலந்து கொண்டோருக்கு /
பெருமானார் வழிகாட்டுதலில் வந்தது /
வலிமா விருந்தெனத் தெரிந்திருந்தது!
இன்றையத் திருமணங்களில் /
உண்டு கலைவோருக்கு /
தாங்கள் உண்டதும் குடித்ததும்/
பெண்ணைப் பெற்ற/
ஏழைத் தகப்பனின் /
சதையும் ரத்தமும் எனத்/
தெரியாமல் போனது...."
பெண்ணைப் பெற்ற காயல்பட்டணம் ஏழை காவேரிப் பட்டணத்திலும் கோட்டைப் பட்டணம் ஏழை கோட்டாறிலும் தங்கள் மகளின் கல்யாணத்துக்காக "பிச்சை" எடுத்துக் கொண்டிருந்தார்கள். இது அரேபியா பணத்தால் அரேபிய மாப்பிள்ளைக்கு மகளை கட்டிக் கொடுக்க வந்த ஆசையால் வந்த மிகப் பெரிய விபரீதம். "ரத்தக் கண்ணீர்" என்பார்களே, அது இந்த ஏழைகள் வடித்தக் கண்ணீர்தான். இவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து கொடுத்தாலும் சில மாப்பிள்ளைகள் "ஷோக்" அனுபவித்துவிட்டு பொறுப்பற்று நடக்க ஆரம்பித்தார்கள். "காணாததைக் கண்டால் தோணாதது தோணும்" என்பதுபோல் இந்த மைனர்கள் சுகம் அனுபவித்துவிட்டு, மனைவியின் நகை, பணம்,வீடு எல்லாவற்றையும் "குளோஸ்" பண்ணிவிட்டு அவர்களை வறுமையில் வாட விடுவதும் வாடிக்கையாக நடைபெறும் சம்பவங்களாகி விட்டன.
வெளிநாட்டு வருமானம் பலரை நன்றாக்கி இருக்கிறது. ஏழைகளாக இருந்த பலர் தங்கள் கடின உழைப்பால் தங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தார்கள். அவர்களுக்கும் அரபு நாட்டில் நல்ல வேலை வாங்கிக் கொடுத்தார்கள். 2000க்குப் பிறகு சமுதாயத்தில் "கல்லாமை" ஒழிந்தது. வாழ்க்கைத்தரம் உயர்ந்தது.ஒருவரைப் பார்த்து மற்றவர் தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளப் போட்டிப் போட்டனர். பெண்களும் "டாக்டர்" "இஞ்சினியர்" படிப்பு படித்து கல்யாணமாகி கணவனோடு வெளிநாட்டில் செட்டிலாகி அடுக்களையில் சமையல் செய்து சந்தோசமாக குடித்தனம் நடத்துகின்றனர்.(நல்லா இருக்கட்டும்.அல்ஹம்துலில்லாஹ்)
அரபு நாட்டில் சம்பாதிக்கும் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்களா?
"இல்லை". நிறைய படித்தவர்களுக்கு "ஓரளவு" வருமானமும் படிப்பே இல்லாத சிலருக்கு "எண்ணி"பார்க்க முடியாத அளவுக்கு வருமானமும் வருவது ஒரு விசித்திரம். மேலும் ஒரேசீரான வருமானம் இல்லாததால் சமுதாயத்தில் மிகப்பெரிய "மேடு பள்ளம்" ஏற்பட்டு விட்டது. ஏற்றத் தாழ்வுகள் தலை தூக்கி விட்டன. ஒரு புறம் செல்வத்தின் உச்சம். மற்றொரு புறம் தேவைக்கே போதிய வருமானம் இல்லாத சோகம். இரண்டுக்கும் இடையே சிக்கி குடும்பங்கள் பல அவதியும் அவமானமும் அடைகின்றன.பத்தோ இருபதோ வருடங்கள் அரேபியாவில் சம்பாதித்தும் முழுமையான வெற்றியை வாழ்வில் பெற முடியாமல் "இன்னும் ஒரு பத்து வருஷம் தாக்குப் பிடித்து கடைசி மகளையும் கட்டிக் கொடுத்து வீட்டையும் கட்டி முடிச்சுடலாம்" என்ற நம்பிக்கையில் பலர் வாழ்கிறார்கள்.இவர்கள் "உடல் சுகத்தை" குர்பானி செய்தவர்கள். மனைவி மக்களுக்காக இளமையை, இன்பத்தை தியாகம் செய்தவர்கள். ஒரு சந்தர்பத்தில் "அதற்காக" ஆசைப்பட்டு, கிடைக்காமல் துவண்டு, பொறுமையோடு வாழ்பவர்கள். (அல்லாஹ் - அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்).
நாம் எடுத்துக் கொண்ட தலைப்பின்படி இவர்களால் இப்போதைக்கு ஊரில் செட்டிலாக முடியாது. இப்போது வெளிநாட்டில் வாழும் 95 சதவீத முஸ்லிம்களால் "சம்பாதித்தது போதும், ஊருக்குப் போகலாம்" என்று மூட்டையை கட்ட முடியாது. கட்டவும் கூடாது. ஏன்?
-அபூஹாஷிமா
14 Responses So Far:
இக்கட்டுரைக்கு "இதுவரை பேசாத மவுனமும், திருவாய் மலரும் நிஜமும்" என்று சொன்னால் அது மிகையில்லை.
பெண்ணைப்பெற்றவன் அவளுடன் தன் இடுப்பில் நெருப்பையும் கட்டிக்கொள்கிறான் என்பது அன்று முதல் இன்று வரை இருந்து வரும் ஒரு கசப்பான உண்மையேயன்றி வேறில்லை.
பெண்ணாக பிறந்து விட்டதால் ஒருபுறம் பாலியல் தொந்தரவுகளும், மறுபுறம் தனக்கு வாழ்க்கைத்துணையாக வர இருப்பவனின் வீட்டிலிருந்து தயவு தாட்ச்சண்யமின்றி கேட்கப்படும் தட்சிணைகளும் சொல்லாமல் சொல்லிக்கொல்லும் துயரங்கள்........
வாய் திறந்து எங்களுக்கு நகை நட்டு வேண்டும், கார் வேண்டும், ஏசி வேண்டும், ப்ரிட்ஜ் வேண்டும், வாசிங் மிஷின் வேண்டும் என்று கேட்டு விட்டால் கூட தேவலாம் போல ஒன்றுமே வேண்டாம் அந்த முழு வீட்டையும் (குறைந்தது ஐம்பது லட்சம் மதிப்புள்ள) பெண்ணுக்கு எழுதி கொடுத்து விடுங்கள் என்று சொல்லி அந்த ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் உயிரோடு கொல்லி வைத்து விடுகிறார்கள் பெயர் தாங்கிய முஸ்லிம்கள்........
"அதிரையில் பிறந்தோம்; விழிபிதிங்கி நிற்கிறோம்" நம் வண்டவாளங்கள் கம்பனை புறம் தள்ளி தண்டவாளத்தில் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.......
என்று தான் ஓயுமோ அதன் ஆட்டமும், ஓட்டமும்????????????????????
நல்லா செப்பையிலெ அறைஞ்ச மாதிரி எழுதிக்கிட்டே இருங்க சகோ. அபுஹாஷிமா.......வாழ்த்துக்கள்....
அல்ஹம்துலில்லாஹ் எங்கள் கோட்டாறு கவியின் வரி
மாறி போல் மனதின் வலிகளை
வழி பிறந்ததை
வழி மாறியதை பொழிந்துள்ளது
வரியேற்றிய விதம் அருமை
சகோ.அபூ அபூஹாஷிமா-வின் எழுத்துக்கள் அதில் உள்ளடங்கிய கருத்துக்கள் ஹிரோசிமா-வில் இடப்பட்ட அணுகுண்டுகளைவிட சக்தி வாய்ந்தவையாக உள்ளன...உங்களின் பணி தொடர எங்கள் துவாக்கள்
//பெண்ணைப் பெற்ற/
ஏழைத் தகப்பனின் /
சதையும் ரத்தமும் எனத்/
தெரியாமல் போனது...."///
காட்டேரிகளுக்கு இரத்தத்தின் சுவை மிகவும் பிடிக்குமாம்....இந்த காட்டேரிகளை கண்கானாமல் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை உங்களை போன்றோரின் எழுதுக்கள் அதற்க்கு உதவி செய்யும்
வரதட்சனை விஷயத்தில் அப்போதைக்கு இப்போது மாறிக்கொண்டுட்கான் வருகிறது என்பதே உண்மை.
அன்று, வரதட்சனை ஒரு கலாச்சார நடப்பு. இன்று அது குற்றம்.
கொடுப்பதில் போட்டி நிலவுவதால் வாங்குபவர் நிறுத்தினாலே விரைவான தீர்வு கிடைக்கும்.
//இவர்கள் "உடல் சுகத்தை" குர்பானி செய்தவர்கள். மனைவி மக்களுக்காக இளமையை, இன்பத்தை தியாகம் செய்தவர்கள். ஒரு சந்தர்பத்தில் "அதற்காக" ஆசைப்பட்டு, கிடைக்காமல் துவண்டு, பொறுமையோடு வாழ்பவர்கள். (அல்லாஹ் - அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்).//
முழுக் கட்டுரைக்கும் சேர்த்து கொடுக்கும் முத்தான கருத்து. இன்ஷா அல்லாஹ்! இவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் பொழியும்.
"நாம் என்றுமே நம் வீட்டின் மேல் வட்டமிடும் காகம், பருந்துகளை (பாசிச/தீய சக்திகள்) பற்றித்தான் கவலை கொண்டு அச்சம் கொள்கிறோம். எதிர்பாராமல் அது எதையேனும் கவ்விச்சென்று விட்டால் திட்டித்தீர்த்து விடுகிறோம். ஆனால் நம் வீட்டிற்குள்ளேயே இருந்து பல நாச வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டு குழிதோன்டி பதுங்கி வாழும் பெருச்சாலிகளைப்பற்றி (பெயர் தாங்கிய முஸ்லிம்கள்) பெரிதாக கவலை கொள்வதில்லை"
// நம் வீட்டிற்குள்ளேயே இருந்து பல நாச வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டு குழிதோன்டி பதுங்கி வாழும் பெருச்சாலிகளைப்பற்றி (பெயர் தாங்கிய முஸ்லிம்கள்) பெரிதாக கவலை கொள்வதில்லை"//
உண்மைதான். முதலில் நம்மை நாம் திருத்திக்கொள்ள முயல்வோமா?
//பெருச்சாலிகளைப்பற்றி// நல்ல பெயர்...அந்த மாதிரி ஆட்களின் சாயல்கள் மற்றும் உருவம் பெருச்சாலிகளை போலதான் உள்ளது....ஆனாலும் பெருச்சாலிகளை இவ்வளவு கேவலப்படுத்தி இருக்ககூடாது....பெருச்சாலிகள் தன் உணவை தானே தேடிக்கொள்கின்றன...இவர்கள் போல் “நாகரீக “ பிச்சையெடுத்து சாப்பிடக்கூடியவை அல்ல......இப்பெருச்சாலிகள் இங்கனே வாழ்வதை விட...கேரளாவிற்க்கு அடிமாடாக போய்விடலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
லேசர் மூலம் படம் பிடிப்பது போல்.குறிப்பிட ஊர்களில் நடக்கும் அயோக்கியத்தனத்தை துல்லியமாக கிளிக் செய்து தந்துள்ளீர்கள்.தெளிவான சிந்தனையை கொண்டு ஜூம் செய்து பார்க்கிறோம்.
// ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வாப்பா உம்மாவிடம் அடிவாங்கிய பையன்களிடம் "பணம்" புரளத் துவங்கியதும் "குணம்" புரளத் துவங்கியது. விடுமுறையில் ஊருக்கு வந்தவர்கள் அதிகப்படியாகவே "அலம்பல்" போட்டார்கள்.//
அரிவாளை சரியான இடத்தில் போட்டு இருக்கிறீர்கள்.இவர்களெல்லாம் விமானம் இல்லாமல் மிதந்து கொண்டிருப்பது போல்.உலா வருகிறார்கள்.ஒரு நாள் கீழே விழுந்து நொறுங்கு போது " அலம்பலுக்கு " பதிலாக " புலம்புவார்கள் " அப்போது தெரியும் வாப்பா உம்மாவிடம் அடிவாங்கிய அருமை.
//உண்டு கலைவோருக்கு /
தாங்கள் உண்டதும் குடித்ததும்/
பெண்ணைப் பெற்ற/
ஏழைத் தகப்பனின் /
சதையும் ரத்தமும் எனத்/
தெரியாமல் போனது...."//
"வலி”மா
தாங்கவில்லை
வாந்தி எடுப்பார்களா?
ஏந்தி நிற்பார்களா?
பணம் படுத்தும் பாடு
-------------------
உழைப்பென்னும் நான்கெழுத்துத் தாயின் சேயே!
****உலகமெலா மொருகுடையில் ஆளும் நீயே
மழைத்துளிபோல் உயிர்நாடி யாகிப் போனாய்
***மழலைகளாய்ச் சில்லறைக ளீன்று போட்டாய்
தழைத்தோங்கும் செல்வத்தின் ஆணி வேராய்த்
****தான்மட்டும் அடையாளச் சின்ன மானாய்
பிழைப்போரும் உன்பின்னா லோட நாட்டம்
****பிச்சையெடுப் போருமுன்றன் மீதே நோட்டம்
பொருளாதா ரப்போட்டி நீண்ட நாளாய்ப்
****போர்களையும் தூண்டிவிடும் தூண்டு கோலாய்
இருளான நிலைமைக்கு மாக்கி விட்டாய்
****இறைபக்தி எண்ணங்கள் போக்கி விட்டாய்
வருமானம் ஈட்டுதலை வெறியா யாக்கி
****வறியோரைக் கொல்லுதலே குறியா யாக்கி
ஒருமான மில்லாத கூட்டம் சேர்த்தாய்
****ஒழுக்கத்தைப் புதைத்திடவே செய்தாய் நீயே
விரும்பிப்போ னாலும்நீ எம்மை விட்டு
****விலகித்தான் போகின்றாய்; விலகிப் போனால்
விரும்பித்தான் வருகின்றாய் உன்றன் மாய
****வித்தைகளை எங்கிருந்து கற்றாய் நீயும்?
நிரம்பத்தான் ஆசையுடை உடுத்திக் கொண்டாய்
****நிம்மதியை உளம்விட்டே எடுத்து விட்டாய்
வரம்பில்லாத் தேவைகளைக் காட்டு கின்றாய்
***வங்கியின்பால் எங்களையும் ஓட்டு கின்றாய்
”கவியன்பன்” கலாம்
ஆய்வுகளின் வரிசையில் அயல் நாட்டுக்கு அடிமையானதின் விளைவுகள் பற்றி அருமையான அலசல்!
அடுத்து, ஏன் என்பதன் தொடர் ஆவலுடன்!
அரபு நாட்டுப்பணம் எங்கள் ஊரில் செய்த கூத்துகளில் சில:
1. பெண்கள் மார்க்கெட்டில் ஒரு நடுத்தர வசதி படைத்த பெண்மனி வாங்கும் மீன் கையில் கிடைக்கும் வரை 'கியாரண்டி" கிடையாது. அது துபாய் பணம் வரும் பெண்கள் எந்த சமயத்திலும் அதிக விலை கொடுத்து டீல் முடிக்க முடியும்.
2. துபாய் ரோட்டில் சோறு போட்டு சாப்பிடலாம் என்று சொன்னதை யாரும் 'ஏண்டா நீ லூசா...ரோட்டில் ஏன் சோத்தை கொட்டி சாப்பிடனும்?' நு யாரும் கேட்கவில்லை. [ இதே டயலாக்கை முன்பு பினாங்கு / சிங்கப்பூர் ஆட்கள் பேசியிருக்கிறார்கள்]
3. 3. ஒழுக்க கேடுகளுக்கு "இம்யூனிட்டி" வாங்கி வந்த மாதிரி நிறைய நாதாரிகள் பேச ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொரு வரிகளையும் படிக்கும்போது ஏதோ ஒன்று/ஒருவர்/தன்னுடன் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டு படித்து இறுதியில் ஒரு வித வெருமை உண்டாவது மறுக்கமுடியாத விடயம். நிறைய இழந்து அனாச்சாரங்களை கற்று இறுதியில் தன்னையே மறைமுகமாக அழித்துக்கொண்டும் இருக்கிறோம், அல்லாஹ் காப்பாத்தனும் நம் சமுதாயத்தை
அருமை தொடருங்க காக்கா
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
//// அன்றைய திருமணங்களில் கலந்து கொண்டோருக்கு /
பெருமானார் வழிகாட்டுதலில் வந்தது /
வலிமா விருந்தெனத் தெரிந்திருந்தது!
இன்றையத் திருமணங்களில் /
உண்டு கலைவோருக்கு /
தாங்கள் உண்டதும் குடித்ததும்/
பெண்ணைப் பெற்ற/
ஏழைத் தகப்பனின் /
சதையும் ரத்தமும் எனத்/
தெரியாமல் போனது...." ///
************************************************
கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக இருக்கிறார்கள்.
நல்ல விழிப்புணர்வு தொடர்!
வாழ்த்துக்கள் சகோதரரே!
Post a Comment