Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரியல் எஸ்டேட் - சிந்திப்போம் ! [தொடர் - 1] 16

அதிரைநிருபர் பதிப்பகம் | June 06, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

என்னுரை:

இங்கே என்னைப் பற்றிய சில தகவல்களைப் பதிந்துவிட்டுத் தொடர்வோம் இன்ஷா அல்லாஹ் ! இதற்கு முன்னால் நான் இத் தளத்தில் சிந்திப்போம் என்ற வரிசையில் "தான தர்மம்", "புகைப் பிடித்தல்", "ஏற்றத் தாழ்வு" போன்ற மார்க்கத்தோடு சம்மந்தப்பட்ட கட்டுரைகளைப் அல்லாஹ்வின் உதவியால் பதிந்திருக்கிறேன். இது போன்ற மார்க்க சம்மந்தமான கட்டுரைகளைப் பதியும் நான் ஒன்றும் ஆலிமோ அல்லது அதிகம் படித்தவனோ கிடையாது. அல்லாஹ் எனக்குத் தந்திருக்கிற மார்க்க அறிவையும் உலக நிகழ்வுகளைம் ஒப்பிட்டுப்பார்த்து அதன் அடிப்படையில் அல்லாஹ் என்னக்கு ஏற்படுத்துகிற எண்ணத்தை பிறருக்கும் பயன்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இங்கே பதிகின்றேன்.

நிறைவான மார்க்க அறிவு படைத்தவர்கள், கற்றறிந்தவர்கள் கால நிகழ்வுகளுக்கேற்ப மார்க்கத்தின் நிலைபாட்டை சொல்ல முன்வர வேண்டும். தீமை தீமையென சுற்றிக் காட்டப்படாமையே இக்காலத்தில் முஸ்லிம்களிடத்திலே இருக்கின்ற தீமைகளுக்கு முக்கிய காரனம் என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட ஆசைப்படுகிறேண். அறிந்தவர்களின் மௌனம் சமூகத்திற்கு எப்பொழுதும் நன்மையைத் தேடித்தராது. மாறாக சுட்டிக் காட்டப் படாத தீமை நாளடைவில் சமூக அங்கீகரம் பெற்றுவிடுகிறது. இதற்கு உதாரனமாக தர்கா வழிபாட்டைச் சொல்லலாம். எந்த அறிஞரும் தர்கா வழிபாட்டை ஊக்கப்படுத்தாவிட்டாலும் தர்கா வழிபாடு கூடாது என்பதையும் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டவில்லை என்பதே எம் போன்றோரின் ஆதங்கம்.

**************************************************************************

முகவுரை:

மனிதன் தன் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்கான வாழ்வாதாரங்களை தேடி அலைகிறான். அதற்காக அவன் பல்வேறு வழி முறைகளை தெரிவு செய்கிறான். மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வழி காட்டும் இஸ்லாம் மனிதன் தன்னுடைய வாழ்வாதாரங்களை எவ் வழியில் தேடிக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறையையும் சொல்லித் தறுகின்றது.

பொதுவாகச் சொன்னால் இஸ்லாம் எதையெல்லாம் ஹராம் (பாவம்/விலக்கப்பட்டது) என்று சொல்கிறதோ அது போன்ற காரியங்களிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருள் ஈட்டுவதை இஸ்லாம் தடை செய்து ஏனைய வழிகளில் பொருள் ஈட்டுவதை அனுமதித்துள்ளது. சிலர் கேளியாகவோ அல்லது தர்க்க ரீதியாகவோ "நாய் விற்ற காசு குறைக்குமா?" என்று கேட்பதுண்டு. நிச்சமாக நாய் விற்ற காசு நாளை மறுமையில் குறைக்கும்(தீவினையைப் பெற்றுத் தறும்) என்பதில் எந்த இறை நம்பிக்கையாளருக்கும் சந்தேகம் இருக்க முடியாது, அவ்வாறு சந்தேகம் கொள்பவர் இறை நம்பிக்கையாளராகவும் இருக்க முடியாது.

மேலும் சில நேரங்களில் சில காரியங்களை இது அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா? என்று தீர்மானம் செய்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. அது சமயம் செய்வதறியாது சிலர் திக்கு முக்காடிப் போவதுமுண்டு. இது போன்ற சூழ்நிலைக்கும் இஸ்லாம் மிகவும் எளிமையான முறையில் வழிகாட்டுகிறது. அதாவது "ஹராமும் தெளிவு, ஹலாலும் தெளிவு இதற்கிடையில் சந்தேகமானதை தவிர்த்துவிடுங்கள்". மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்.. அவர்கள் இதற்கு ஒரு அழகிய உதாரனத்தையும் சொன்னார்கள். அதாவது "உங்களுடைய கால்நடைகளை வரப்பிலே மேய்க்காதீர்கள்!" ஏனெனில் அது வரப்பிற்கு உள்ளே மேய்ந்ததா அல்லது வரப்பிற்கு வெளியே மேய்ந்ததா? என்று இனம் காண முடியாது என்பதற்காக. அதே போலத்தான் நாம் சந்தேகமான காரியங்களில் ஈடுபடும் போது நாம் அனுமதிக்கப்பட்டதை செய்தோமா அல்லது விலக்கப்பட்டதை செய்தோமா? என்று தெரியாது. ஒரு வேலை நாம் ஈடுபட்டது விலக்கப்பட்ட காரியமெனில் அது நாளை மறுமையில் அல்லாஹ்விடத்திலே தண்டனையைப் பெற்றுத்தந்துவிடும்! அல்லாஹ் பாதுகாப்பானாக!

**************************************************************************

ரியல் எஸ்டேட்:


கால ஓட்டங்களுக்கேற்ப மனிதர்கள் பொருளீட்டுவதற்கான புதுப் புது வழிமுறைகளை கையாள்வதுண்டு. சில காலகட்டங்களில் சில வகையான தொழில்கள் கோலோச்சியிருக்கும். அந்த வரிசையில் சமீபகாலத்தில் உச்சத்தில் இருந்த தொழில்களில் ஒன்றுதான் ரியல் எஸ்டேட் தொழில்.

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தது இந்த ரியல் எச்டேட் தொழில் என்பது யாவரும் அறிந்ததே. உலகப் பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு உலகின் பல பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் தொழில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக நமதூரில் என்றும் ஏறு முகம்தான். எனவே தான் நம்தூரில் மட்டும் தோராயமாக வீட்டிற்கு ஒரு தரகர் இருப்பாரோ என்று எண்ணும் அளவிற்கு ஏராளமான ரியல் எஸ்டேட் தரகர்கள் இருக்கிறார்கள்.

விவசாய நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாறிக்கொன்டிருக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய காரனம் நமதூரில் இருக்கும் வழக்கம். அதுதாங்க பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடு கட்டிக் கொடுப்பது. [இப்பழக்கம் பெரும்பாலோரால் விமர்சிக்கப்பட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இதன் நிலை என்ன என்பதை அல்லாஹ் நாடினால் வேறொரு பதிவில் பார்க்கலாம்]. இதனால் ஏறிக்கொன்டே இருக்கும் வீட்டுமனைகளின் விலையும் கூடிக்கொன்டே இருக்கும் தரகர்களின் எண்ணிக்கையும் ஏழைகளை பெரு முச்சு விட வைத்திருக்கிறது. நாமெல்லாம் ஒரு இடம் வாங்கி வீடு கட்ட முடியுமா என்று நடுத்தர வர்க்கத்தினரையும் ஏங்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இத் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இத் தொழில் அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்று எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள்?

மார்க்க அனுமதி:

இந்த ரியல் எஸ்டேட் தொழிலின் மார்க்க அனுமதி பற்றி பார்ப்பதற்கு முன்னால் ஒரு விசயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்வோம். மனித சமுதாயத்தின் சுபிட்சமான வாழ்க்கைக்குத் தேவையான தீர்க்கமான சட்டங்களையும், தெளிவான வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ளது. இருப்பினும் மனித சமுதாயத்தின் பெரும்பகுதி இஸ்லாமின் வழிகாட்டுதலை பின்பற்றாமையே இன்று மனித சமுதாயம் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும் காரனம்.

பதுக்கல்:

அத்தியாவசியப் பொருட்களை தேக்கி வைத்து சந்தையில் அதற்கான தட்டுப்பாடு ஏற்படும் போது விற்பனை செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் அனுமதிக்க வில்லை. மாறாக இதை பெருங்குற்றமென இஸ்லாம் பரை சாற்றுகிறது. பதுக்கல் இந்திய சட்டத்தின் படியும் குற்றமாகும். இங்கே பதுக்கலைப் பற்றி ஏன் விவாதிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஐய்யம் ஏற்படலாம். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இம்மூன்றும் இவ்வுலகில் ஒரு மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளாகும். உணவுப் பொருட்களைப் பதுக்குவது கூடாது என்று விளங்கி வைத்திருக்கிற நாம் உறைவிடங்களைப் பதுக்குவதைப் பற்றி சிந்திக்கவில்லை.

ஒரு காரியத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் புரிந்து கொன்டோம் என்றால் பின் அது அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்பதை விளங்குவது எளிமையாகிவிடும். பொதுவாக வர்த்தகத்தில் ஒரு பொருள் எத்தனை கை மாறுகிறதோ அந்த அளவிற்கு அதன் விலை உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கே ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நாம் என்ன செய்கிறோம் எதிர்காலத்தில் விலை ஏறும் போது விற்கலாம் என்று வீட்டு மனைகளை வாங்கி பதுக்கி வைக்கிறோம்! நம்மிடத்தில் வருகிற தரகர் அப்படியான ஒரு திட்டத்தோடுதான் நம்மை அனுகுவார். இன்ன இடத்திலே இன்னார் மனை போட்டிருக்கிறர், நல்...ல இடம், இன்னும் ஒரிரு ஆண்டுகளில் இது சென்டராகிவிடும், இப்பொழுது ஒரு இலட்சம் கொடுத்து வாங்கினால் ஒரிரு ஆண்டுகளில் 5, 6 இலட்சம் விலை போகும், அதற்கு முன்னால் இருக்கிற மனை இப்போ 3 இலட்சத்திற்கு கேட்கப்படுகிறது என்று நமக்கு பொடி வைப்பார். மேலும், 40 மனை போட்டார்கள் எல்லாம் போச்சு, அவர்களுக்காக முகப்பில் 4 மனை வைத்துக் கொன்டார்கள், இப்பொழுது ஒரு 7, 8 மனை தான் மீதி இருக்கிறது, நாம் தாமதித்தால் அதுவும் போய்விடும் என்று நம்மை அவசரப்படுத்துவார்.

இப்பொழுது நாம் அந்த மனைய வாங்கப்போகிறோம்! இங்கே நம்மைத் தூண்டியது பண ஆசை! சில ஆண்டுகள் இதைப் பதுக்கி வைத்து பின் விற்றால் நல்ல இலாபம் கிடைக்கும் என்ற பண ஆசை! பணம் சும்மா வங்கியில் தானே கிடக்கிறது அதை இதில் போட்டு முடக்குவோம் என்கிற முடிவுக்கும் நாம் வந்துவிடுகிறோம். நம்முடைய சக்திக்கேற்ப 1, 2, 3, 4 என்று வாங்கி பதுக்கிக் கொள்கிறோம். சில ஆண்டுகளில் நமக்கு பணத் தேவை ஏற்படும் போது வாங்கிய நிலத்தை விற்போம்! அப்பொழுது தரகர் மற்றொருவரிடத்திலே போய் ஒரு வருசம் தான் ஆகிறது ஒரு இலட்சத்திற்கு நான் தான் வாங்கிக் கொடுத்தேன், இப்பொ 4 இலட்சத்திற்கு அந்த ஏரியாவிலேயே மனை கிடையாது, அவங்களுக்கு விற்க மனசு இல்லை, இருந்தாலும் அவசரத் தேவைக்காக கொடுக்கிறார்கள், நான் உங்களுக்கு 3 மனையையும் சேர்த்து 10 இலட்சத்திற்கு முடிச்சுத் தருகிறேன் இன்னும் 2 வருசம் போனா ஒரு மனை 10 இலட்சம் போகும் என்று பழைய சோப்பை மறுபடியும் அப்படியே போட்டு அந்த நிலத்தை வாங்க வைப்பார். இப்படியாக கை மாற்றி, கை மாற்றி அந்த நிலத்தின் விலையை அப்படியே ஏற்றி விடுவார்.

ஒன்றை நாம் உற்று கவனிக்க வேன்டும். அதாவது இங்கே நிலம் ஒரு வியாபாரச் சரக்காக பயன்படுத்தப் படுகிறது! அப்படி என்றால் நீங்கள் விற்பனக்காக வைத்திருக்கிற ஒரு பொருளை விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைத்திருந்தால் அதற்குப் பெயர் பதுக்கல் அல்லாமல் வேறென்ன?

அடுத்தாக, இப்படி பணம் இருப்பவர்கள் மாறி, மாறி நிலத்தைக் கைமாற்றி விலையை ஏற்றினால் அத்தியாவசியமுல்ல ஏழைகளுக்கு எவ்வாறு வீட்டுமனை கிடைக்கும்? சாமானியர்கள் / ஏழ்மையிலிருப்பவர்கள் எவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்க சக்தி பெறுவார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

**************************************************************************

சிந்தனைக்காக:

அப்படியே சற்று இதையும் சிந்தித்துப் பாருங்களேன்!

மனை போடப்படுகிறது! வாங்கிப் பதுக்கி வைப்பது கூடாது என்று அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக எவரும் வாங்கவில்லை! மனையின் விலையில் பெரிய ஏற்றம் ஒன்றும் இருக்காது! தேவையுடையவர்கள் தனக்குத் தேவையான அளவை தேவையான சமயத்தில் வாங்கிக் கொள்ளலாம்! காலத்திற் கேற்ப, இருப்பிற்கேற்ப விலையில் சிறிய ஏற்ற இறக்கம் மட்டுமே காணப்படும்! ஆனால் ஒவ்வொரு கையாக மாறுவதால் ஒவ்வொருவருக்கும் இலாபம், முத்திரைத் தாள் செலவு, பதிவருக்குக் கொடுத்த இலஞ்சம், தரகருக்குக் கொடுத்த தரவு(கமிஷன்), என்றும் எல்லாம் சேர்ந்து மனையின் விலையை அல்லவா உயர்த்திவிடுகிறது!?

மேலும், அவரவர் பணம் இருக்கிறது என்று 4, 5 வாங்கி பதுக்கி வைக்காததால் எல்லா மனைகளும் விற்றுத் தீர்ந்துவிடாது. அதனால் அதை அடுத்துள்ள தோப்பும், வயலும் மனைகளாக மாறிவிடாது! பேராசையால் இயற்கை அழிக்கப்படாது! விவிசாய நிலங்கள் வெறுமையாக்கப்படாது! விவசாய நிலங்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்! அதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகமாகும்! அத்தியாவசியப் பொருள்களின் விலை உயராது! முத்திரைத் தாளுக்காக செலவளிக்கும் பணமும், பதிவருக்குக் கொடுக்கும் இலஞ்சமும், தரகருக்குக் கொடுக்கும் தரவும் மிச்சமாகும்! ஆனால் பேராசையின் காரனமாக மனிதன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்!? இதுதான் எதார்த்தம்.

இப்பொழுது நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்! அதாவது எது இஸ்லாம் அங்கீகரிக்கும் முறையாக இருக்கும்? எது மனித சமூகத்திற்கு நன்மை பயப்பதாக இருக்கும்? எதை நாம் நடைமுறைப்படுத்த வேன்டும்? என்ற முடிவுக்கு இன்ஷா அல்லாஹ் இப்போது நாம் வர முடியும் என்று நம்புகிறேன்.

நிறைவுரை:

இங்கே ரியல் எஸ்டேட் தொழில் சம்மந்தமாக நடைமுறையில் இருக்கின்றவற்றையும் அதனால் ஏற்படுகிற விளைவுகளையும் நான் அறிந்தமாத்திரத்திலே உங்கள் முன் உங்கள் சிந்தனைக்காக விட்டு விடுகிறேன். இவ்விசயத்தில் என்னுடைய நிலைபாடு அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவதும், விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைப்பதும் கூடாது, இஸ்லாத்தின் பார்வையில் அது தடுக்கப்பட்டது என்பதே!

மேலும் இங்கே மானுடன் சொத்துக்களை வாங்குவதும், தன்னை வளப்படுத்திக் கொள்ளவதும் கூடாதா? என்ற கேள்வி எழும் அதற்கான பதிலை அடுத்த பதிவில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

இது என்னுடைய சிந்தனையில் உதித்தது! மனிதன் என்ற அடிப்படையில் நானும் தவறிழைக்கக்கூடியவனே. மேலும் என்னுடைய கருத்தாடலே தவிர முடிவனதல்ல. அல்லாஹ்வின் வார்த்தையும் அவனுடைய தூதரின் வழிகாட்டுதலுமே இறுதியானது. இஸ்லாத்தின் ஒளியில் மாற்றுக் கருத்து சொல்லப்பட்டால் அதை ஏற்காமல் மன முரன்டாக இருப்பதைவிட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம'அஸ்ஸலாம்

அன்புடன்
அபு ஈசா

16 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிந்தனை தொடரட்டும்.... எடுத்துச் சொல்லும்போதே இடையிடையே நிந்தனைகளும் தொடரத்தான் செய்யும் இருப்பினும் சிந்தனைத் தெளிவு எதிலெல்லாம் இருக்கிறதோ அவைகள் யாவுமே வெற்றிதான் !

தம்பி அபு ஈசா தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்...

அபூ சுஹைமா said...

அன்புச் சகோ. அபூ ஈஸா,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்ல கட்டுரை. இது குறித்து அதிரைஎக்ஸ்பிரஸில் ரியல் எஸ்டேட் - வரமா? சாபாமா என்றொரு கட்டுரை நான் எழுதியுள்ளேன். http://adiraixpress.blogspot.com/2011/01/blog-post_26.html

அந்தக் கட்டுரையின் பின்னூட்டத்தில் நான் சொன்னாது:

//வீட்டுமணை விலை உயர்வுக்கு நமக்குநாமே வகுத்துக்கொண்ட சம்பிரதாய சமூக மனத்தடைகளே பிரதான காரணம் என்பது அடியேனின் தழ்மையான கருத்து.//

இதில் ஓரளவு உண்மை உண்டு என்றாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய அதிரை மனைகளின் விலையேற்றங்களை சற்றே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறேன். அப்போதெல்லாம் வீடு கட்ட வேண்டும் என்ற தேவை உடையவர்கள் மட்டுமே மனைகளை வாங்கினர். வளைகுடா வருமானத்தில் அவர்களால் அதற்கு மட்டுமே முடிந்தது. வளைகுடாவையும் தாண்டி நம்மவர்கள் சென்ற பின்னரே முதலீட்டு நோக்கில் மனைகளை வாங்கிப் போட்டனர். இதனால் மாயமான ஒரு தேவை ஏற்பட்டு விலையேற்றம் கண்டது.

10 ஆண்டுகளுக்கு முந்தைய மனைகளின் விலையேற்ற விகிதத்தையும் தற்போதைய விலையேற்ற விகிதத்தையும் சற்றே ஒப்பிட்டுப் பாருங்கள். என் கூற்றின் உண்மையை அறிவீர்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

> இஸ்லாத்தின் பார்வையில் சகோ. அபூ ஈசா அவர்களின் சிந்தனையில் உதித்தவை பாராட்டக்கூடியதே!
> இருந்தாலும் பதுக்கலில் உணவுப்பொருள் மட்டுமா அல்லது மனையுமா என்பதில் ஐயம் இருக்கிறது.
> இத்தொழிலும் ஒரு சீசன் தான் நாளடைவில் இதுவும் படிப்படியாக குறைந்துவிடும்.
> பயிரில் பூச்சிக்கொள்ளி மருந்தின் தாக்கம்,ஈ-கோலி கிருமிகளின் பாதிப்புகள் இன்னும் என்னன்னமோஇன்னும் 30- 40 வருடத்தில் ஒட்டு மொத்த மக்கள் தொகையே குறையப்போகுதாம்.அப்பரம் எங்கே இந்த மனயெல்லாம் மீண்டும் தென்னம்புள்ளை போடத்தான்.
---------------------------------------------------------------

>( இது அன்றைய அதிரை எக்ஸ்ப்ரஸ் கட்டுரையில் நான் பின்னூட்டமிட்டவை:- என்ன தான் சமூக நிர்பந்தம் இருந்தாலும் மனைக்கு எல்லாக்காலமும் மொவ்சு இருக்கும் என்றெல்லாம் சொல்லமுடியாது.நிச்சயம் ஒரு நாள் விலை ஏறாச்சூழ்நிலை வரலாம்,அல்லது விலை ஏறும் விகிதம் மிகக் குறைவாக இருக்கலாம்.இருக்கிற வீட்டை விட்டு விட்டு எல்லாரும் புதுமனையில் வீடு கட்ட மாட்டார்கள்.பழைய வீட்டையும் இடித்து புதுப்பிக்கலாமல்லவா! முந்தைய 2,3 தலைமுறையை காட்டிலும் இப்போது பிறப்பு விகிதமும் குறைந்து இருக்கிறது.எனவே இப்போது போடப்பட்ட மனையெல்லாமே வீடாகும் என்றெல்லாம் சொல்ல இயலாது .புதிய வீடுகள் புதிய மனையில் கட்டிய விகிதம் முன்பை விட இப்ப குறைவு.எனவே பிஸ்னஸ் போல மனயில் லாப-நட்டமெல்லாமுண்டு.JANUARY 27, 2011 3:37 AM.)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோடதரர் அபு ஈஸா,

சிந்தனை தூண்டும் மிக அருமையான பதிவு.

இந்த ரியல் எஸ்டேட் வியபாரமே நம்மூர் போன்ற ஊர்வாசிகளை அதிக பொருளாதார தேடலை ஊக்குவித்து, வெளிநாட்டு வாழ்க்கையே நிரந்தரமாக்கியுள்ளது என்பது என்னவோ உண்மை.

இது மாறவேண்டும். மார்க்க ரீதீயான தெளிவே இதற்கு தீர்வு.

அல்லாஹ் போதுமானவன்

sabeer.abushahruk said...

சிந்திக்கத் தூண்டும் தெளிவான கட்டுரை. வெல்டன் அபுஈசா

chinnakaka said...

குறுகியா காலத்தில் தான் நினைப்பதைவிட அதிகமாக வருமாணத்தை ஈட்டி விட்டு, அதனை முதலீடு செய்து உடல் உழைப்பின் மூலம் அதனை பெருக்க வழி தெறியாமல் உட்கார்ந்து கொண்டே வருவாயை பெருக்க சிலர் செய்யும் (பதுக்கள்) முதலீடுகள், ஆசை வார்த்தைகள் கூறும் தரகர்கள், இவை அனைத்தும் பாவச்செயலே. நம் மக்கள் சிந்திப்பார்களா அல்லது இந்த கட்டுரையை படித்து விட்டு இதுவும் ஒரு நல்ல தொழில் தான் என்று பின் தொடர்வார்களா பொறுத்து இருந்து பார்ப்போம்!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் . நல்ல தொரு ஆய்வுக்கு தகுதிவாய்ந்த கட்டுரை. இதில் அலசப்பட்டுள்ள காரணங்கள் யாவும் 80%வீதம் சரியே!சில காரணங்கள் வேறுபடலாம்.சிந்திக்க வேண்டியதும்,பொது நலன் கருதி செயல்படுத்த வேண்டியததும் அவசியம்.இதனால் ஒருபக்கம் பொருளாதரம் சாய்ந்து மறுபக்கம் மேலும் அதிக அளவில் சம்பாதிக்க தள்ளப்படும் சூழல் ஏற்பதுவது உண்மையே. இதற்கு மிகக் காரணமாய் அமைவது தேவையற்ற சம்பிராதயம் மற்றும் ஆடம்பரம்.பகட்டு வாழ்வுக்கு ஆசைபடுதலும் ஆகும்.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குறுகிய காலத்தில் உழைப்பே இல்லாமல் பெரிய அளவில் இலாபம் கிட்டுவதே இதில் பெரும்பாலோரும் முதலீடு செய்வதற்கு உந்துதலாக இருக்கின்றது!

மக்கள் நிலங்களை வாங்கி பதுக்கி வைப்பதைத் தவிர்த்து விவசாயம் மற்றும் வானிபத்தில் முதலீடு செய்தால் சமூகத்திற்கும் அது பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் உற்பத்தி/வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் நம்முடைய சந்ததிகளுக்கும் எதிர் காலத்தில் கை கொடுக்கும்.

விற்பனை செய்வோரும் பணத்தைப் பிரதானமாகக் கொள்ளாமல் தேவையுடைவருக்கு விற்பனை செய்தால் இன்ஷா அல்லாஹ் அவர்களுடை செல்வத்திலும், ஆரோக்கியத்திலும் அல்லாஹ் அபிவிருத்தி செய்வான்!

ம'அஸ்ஸலாம்
அபு ஈசா

அப்துல்மாலிக் said...

நல்ல சிந்தனை, உறைக்குமா நம்மவர்களுக்கு, நம்மூரின் மனை/வீட்டு விற்பனை சிட்டியைவிட அதிகம், வருந்ததக்க செய்தி, இதன்மூலம் ஊரைவிட்டு வெளியேறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். முதலில் புரோக்கர்களை ஒழிக்க வேண்டும். நாளை மறுமையில் பதில் சொல்லவேண்டும், அதற்கு அஞ்சியாவது நடந்தால் சரி, ஆனாலும் அதுக்கெல்லாம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவு தொடர்பாக சிலரிடம் இன்று அதிரையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அதிரையில் நிறைய பேருக்கு ஓர் நிரந்தர தொழிலாகவே உள்ளது.

பெட்ரோல் வியாபாரமும் ரியல் எஸ்டேட் வியாபாரமும் ஒன்னுதானாம். இது எந்த வகை பொருளாதார தத்துவமோ தெரியவில்லை.

ஒன்னுமட்டும் தெரியுது நம்ம மக்கள் நல்ல விபரமானவங்க. இவ்விசயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக கடினமே என்றாலும். தொடர் விழிப்புணர்வு செய்தே ஆகவேண்டும் என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாது.

Yasir said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அபு ஈசா இன்றும்தான் இந்த அருமையான பதிவை படிக்க நேரம் கிடைத்தது...தங்களின் ரி(ல்)யல் எஸ்டேட் தொழிலைபற்றிய அலசல் அற்புதம்....இதுவும் பதுக்கலை போன்றதுதான் என்ற உங்கள் கருத்துடம் நான் ஒத்துபோகிறேன்...மூளையை கசக்கும் சிந்தனை தொடர்...தொடரட்டும் உங்கள் பணி

Yasir said...

பிச்சைகாரனையெல்லாம் புரோக்கர் ஆக்கி இருக்கிறது இத்தொழில்....ஒரு மனை என்பது எவ்வளவு ஸ்கோயர்ஃபீட் என்றெல்லாம் தெரியதவர்கூட கடந்த வருடம் ஊரில் இருந்தபோது என்னை அப்ரோச் பண்ணியது அதிசியமாக இருந்தது....நம்மூரில் மட்டுமல்ல நீங்கள் உங்கள் மற்ற ஊர் நண்பர்களிடம் உரையாடினால் இந்த அவலநிலை எங்குமே உள்ளது என்று தெரியவரும்...அதவும் நம் ஆட்கள்தான் அதிகம்..அல்லாஹ் அவனுக்கு பொருந்தாத விசயங்களை விட்டு நம்மை காப்பானக...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பிச்சைகாரனையெல்லாம் புரோக்கர் ஆக்கி இருக்கிறது இத்தொழில்....

ஒரு மனை என்பது எவ்வளவு ஸ்கோயர்ஃபீட் என்றெல்லாம் தெரியதவர்கூட //

தம்பி யாஸிரே:

தங்களின் கருத்தில் பிச்சைக்காரனையெல்லாம் புரோக்கர் ஆக்கியிருக்கிறது என்பதில் உடண்பாடில்லை, காரணம் அட்லீஸ்ட் பிச்சை எடுக்காமலும் அல்லது சும்மா இருக்காமலும் வியாபரம் அல்லது முகவராக இருந்து ஹலாலான முறையில் சம்பாதிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

கட்டுரையின் நோக்கம் வியாபரம் செய்பவர்களை அல்ல (என்று நினைக்கிறேன்) பதுக்கலில் ஈடுபடுபவர்களையும் அதற்கு உடந்தையாக இருப்பர்வகளையும் சுட்டிக் காட்டுகிறதே (என்றே !)

இரண்டாவதாக ஸ்கொயர் ஃபீட்டின் விலை நிலவரம் தெரியாதவர்கள் என்று குறிப்பிட்டது முற்றிலும் சரியே அதனை எப்படி கணக்கெடுப்பது என்று கூட தெரியாத்வர்கள் என்றும் சொல்லலாம்...

இது என் பங்கிற்கான கருத்தே N(தம்பி)யாஸிரே ! :)

Yasir said...

நீங்கள் சொல்வது சரிதான் காக்கா, நான் அனைவரையும் அப்படி குறிப்பிடவில்லை......ஊரில் இருக்கும்போது ஒருவர் அனுகினார்... அவர் தோற்றமே எனக்கு ஏமாற்றமாகதான் இருந்தது..தெரிந்தவர்தான் (எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார் )…மனைகள் உண்டு என்று என்னை கூட்டிகொண்டு ஒரு இடத்துக்கு சென்றார்..நான்கு மனைகளை யாருக்கோ விற்று விட்டாராம்...சில வருடங்களுக்குமுன் அந்த இடம் 80 ஆயிரம்தான்தானாம் ஆனால் இப்போது 15 லட்சமாம் என்றதும் அவர் லட்சணம் பாதி தெரிந்தது....வீட்டிற்க்குவந்து வாப்பாவிடம் கேட்டதும்...யாண்டா மெயிண்ட்ரோட்டில டீ வாங்கிகேட்டு தலையை சொரிந்து கொண்டு நிற்பவனிடம் யெல்லாம் நிலத்தை பற்றி பேசிட்டு வர்ரா என்றதும் உண்மை புரிந்தது...அவர் லக்கை என்னை கொண்டு சோதனை செய்ய முயன்று இருக்கிறார் என்று :) ( நம்மட்டையவா ?? எந்தந்த நாடுகளுக்கெல்லாம் நாம பொருளை விற்கிறோம்) உடனே, நமக்குதான் பயம் அவ்வளவு சீக்கிரத்தில் வரதே அவரிடமே இதை நேரிடையாக கேட்டுவிட்டேன் அதற்க்கு அவர் சொன்ன பதில் - அந்த நிலங்களின் முதலாளி நில மதிப்பை அதிகரிப்பதற்க்காக இதை போல சில அன்றாடங்காட்சிகளை தேர்தெடுத்து சிறிது அமொண்ட் கொடுத்து விலைகளை தாறுமாறக சொல்ல சொல்வாராம்…(இதுலாம் ஒரு பொழப்பு)

….so exceptions is not an examples…மற்றபடி உண்மையாக அட்லீஸ்ட் கொஞ்சம் நேர்மையோடு வியாபாரம் செய்யும் அனைவரையும் நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//….so exceptions is not an examples…மற்றபடி உண்மையாக அட்லீஸ்ட் கொஞ்சம் நேர்மையோடு வியாபாரம் செய்யும் அனைவரையும் நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ///

சரியாக சொல்லியிருக்கீர் (தம்பி)யாஸிரே !

adiraithunder said...

ரொம்ப நாட்களாய் என் மனதில் உதித்து கொண்டிருந்த கேள்வி தான் இந்த ரியல் எஸ்டேட் பிசினஸ் ஹரம்மாஅல்லது ஹலாலா?,இப்போது என்னக்கு புரிந்துவிட்டது . அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக .

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு