பல அலுவல்களுக்கிடையே எனக்கு மட்டுமின்றி பல நண்பர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அன்றாடம் காலண்டரின் ஒவ்வொரு தேதியின் தாளும் கிழிக்கப்படும் பொழுது அதை அப்படியே குப்பையில் போட்டு விடாமல் அதில் பழரசம் போல் அழகாக வடித்துத்தரப்பட்டுள்ள அருமையான இருவரி ஹதீஸ்களையும் அதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உலக பழமொழிகளையும் தமிழில் தட்டச்சு செய்து ஒவ்வொரு நாளும் எல்லோருக்கும் அனுப்பி வைத்து மகிழ்வது என் நண்பனும், உறவினனுமான முஹம்மது அபூபக்கரின் (அமேஜான் வாட்டர் ப்யூரிஃபையர்) பாராட்டப்பட வேண்டிய ஒரு நல்ல பழக்கம். அல்லாஹ் அவர் செய்து வரும் வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக...
அதில் மேலே தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ள பழமொழி என்னைக்கவர்ந்து ஒரு சிறு கட்டுரை எழுத தூண்டியது.
உலக அராஜகங்களும், உள்ளூர் அநியாயங்களும் அன்றாடம் அரங்கேறி வரும் இன்றைய சூழ்நிலையில் இக்கட்டுரையின் தலைப்பை அவைகளுடன் கொஞ்சம் ஒப்பிட்டு பார்க்க நேர்ந்தது.
அன்றாட செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும், இணைய தளங்களிலும், கைபேசிகள் மூலமும் இன்னும் பிற ஊடகங்கள் மூலம் உலகில், நம் நாட்டில், நம் மாநிலத்தில், நம் மாவட்டத்தில், நம் தொகுதியில், நம் ஊரில், நம் தெருவில் இறுதியாக குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களையும், சந்தோசமான, துக்கமான செய்திகளையும், அசம்பாவிதங்களையும், விபத்துக்களையும், சில விபரீதங்களையும், அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், காமத்தின் மேல் மோகம் கொண்டு பெற்ற தாய், தந்தையரை, உற்றார், உறவினர்களை துச்சமென மதித்து ஓடிப்போகும் சம்பவங்கள் இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை பார்க்கிறோம் அல்லது கேள்விப்படுகிறோம். "கடன் வாங்கலாம் வாங்க" என்ற தொடர் கட்டுரை போல் ஓடுகாலி 1, ஓடுகாலி 2, ஓடுகாலி 3 என்று தொடர் கட்டுரை எழுத வைத்து விடுவார்களோ என்ற அச்சம் அண்மைக்கால நம்மூர் நிகழ்வுகள் ஏற்படுத்தி இருக்கிறது. (அல்லாஹ் பாதுகாக்க வேனும்) இதனால் நாம் பல சமயம் வேதனைப்படுகிறோம் இல்லை இதெல்லாம் சகஜம் என்றெண்ணி அலட்சியப்படுத்தி விட்டுவிடுகிறோம்.
இதில் வேதனைப்பட வேண்டிய விசயம் என்னவெனில் எப்பொழுதோ, எங்கோ, எவருக்கோ நடந்த சம்பவங்களும், விபரீதங்களும் நாளடைவில் மெல்ல, மெல்ல நகர்ந்து நம்மை நெருங்கி வருவதுதான் பெரும் அச்சத்தையும், எதுவும், எப்பொழுதும், எங்கேயும், எவருக்கும் நடக்கலாம் என்ற பயத்தை நம் முழு நேர வாழ்க்கையாக மாற்றியுள்ளது அண்மைச்சம்பவங்கள் என்றால் அது மிகையில்லை.
இன்றைய கால சூழ்நிலையில் தக்வா என்னும் இறையச்சம் கடுகளவேனும் உள்ளத்தில் இருந்து அதை கடைசி வரை பாதுகாத்து அது மேலும் தேய்ந்துவிடாமல் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்து வருவது என்பது ஒரு சவாலான விசயம் தான் ஒவ்வொரு மு'மினுக்கும். அல்லாஹ்வே எல்லாவற்றிற்கும் தக்க கூலி கொடுக்க போதுமானவன்.
ஒரு காலத்தில் எங்கோ நடக்கும் சில சம்பவங்கள் அல்லது அசம்பாவிதங்கள் அதை கேட்கும் அல்லது தொலைக்காட்சி மூலமாக பார்க்கும் நமக்கு வேடிக்கையாகவோ அல்லது விநோதமாகவோ தெரியும். அல்லாஹ் பாதுகாக்க வேனும் இது போன்ற பிறருக்கு நடக்கும் மன வேதனை தரும் சம்பவங்களும், உள்ளத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கும் சம்பவங்களும் நமக்கும் நம்மைச்சார்ந்த எவருக்கும், ஊருக்கும் உலகுக்கும் மறுபடியும் நடந்து விட வேண்டாம்.
ஒரு உதாரணத்திற்கு ஒன்றை இங்கு குறிப்பிட நினைக்கிறேன். சென்ற வாரம் சென்னையிலிருந்து பொள்ளாச்சி சென்ற ஆம்னி (கே.பி.என்) பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து அதனால் அதன் டீசல் டேங்க் வெடித்துச்சிதறி அதனுள் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் இருபத்து மூன்று பேர் காலையில் ஊர் செல்ல வேண்டியவர்கள் தப்பிக்க வழியின்றி கொளுந்து விட்டெறியும் நெருப்பில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கரிக்கட்டையாகிப்போனார்கள். நிச்சயம் இதை படித்தவர்கள் வேதனைப்பட்டு கண்கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக. அந்த கரிக்கட்டையானவர்களில் நாமோ அல்லது நம் உறவினர்களோ இருந்திருந்தால் நம் நிலை இன்று என்னவாக இருந்திருக்கும்?
மற்றொரு சம்பவம் அண்மையில் எல்லாத்தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்ட ஒரு ஈவிரக்கமற்ற கொடூர கொலைச்சம்பவம் வேலியே பயிரை மேயவில்லை சுட்டுக்கொன்றது போல் அண்டை நாடான பாக்கிஸ்தானில் ராணுவ வீரனால் (ராணுவ கோழை என்று தான் சொல்ல வேண்டும்) நடத்தப்பட்டது. ஒரு இளைஞன் என்ன தவறு செய்தான் என்று ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. பாக்கிஸ்தான் நாட்டவரிடம் கேட்டதற்கு ஏதோ ஒரு சிறு திருட்டு சம்பவம் என்று சொன்னார்கள். அவனை பிடித்து ஒரு ஆள் ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கிறார். நிராயுதபாணியான அவனை பிடித்த ராணுவ வீரர்கள் அவன் செய்த தவறுகேற்ப நாலு தட்டு தட்டி அல்லது முட்டிக்கு முட்டி தட்டி அனுப்பி இருக்க வேண்டும். இல்லை அங்குள்ள காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். அவர்களிடம் பாய்சாப் என்னை விட்டு விடுங்கள் என்று உயிர்ப்பிச்சை கேட்டு கெஞ்சும் அந்த வாலிபனை அப்படியே அடிவயிற்றில் கதற,கதற சுட்டுக்கொல்கிறான் அந்த ராணுவ வீரன்(கோழை) அவனே சட்டத்தை கையில் எடுத்தவனாய். யாரு பெத்த புள்ளெயோ? அவன் திடீர் பிரிவால் அவன் குடும்பம் எப்படி கஷ்டப்படுமோ? என்று மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரின் உள்ளமும் நிச்சயம் கேட்டிருக்கும் அந்தோ பரிதாபத்தில் துடித்திருக்கும்.
அநியாய ஆட்சியாளர்களாலும், அடக்குமுறையாலும், அத்துமீறல்களாலும், ராஜபோகத்தினரின் சொகுசு வாழ்க்கையாலும், மக்களின் வேலையில்லாத்திண்டாட்டத்தினாலும் வெகுண்டெழுந்த மக்கள் தங்கள் புரட்சியால் இன்று அரபுலகம் பல இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நாம் அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்து வருகிறோம். மண்ணின் மைந்தர்களையே தாய்நாட்டு ராணுவம் சுட்டுக்கொல்வதை ஒரு சாதாரன நிகழ்வாக ஆக்கப்பட்டுள்ளது இன்றைய சூழ்நிலையில். தன்னை எதிர்த்தவனெல்லாம், அநியாய ஆட்சியைக்கண்டு வெகுண்டெழுந்தவனெல்லாம் தீவிரவாதியாக்கப்பட்டு குருவிபோல் கூண்டோடு சுட்டுக்கொல்லப்படுவதை அல்லது குண்டு மாரி பொழிந்து அழித்தொழிக்கப்படுவதை நாம் அன்றாடம் உலகச்செய்தியில் தலைப்புச்செய்தியாக பார்த்துவருகிறோம்.
இதில் எண்ணெய் வள நாடுகளை தன் வயப்படுத்த அமெரிக்க, ஏகாதிபத்திய அரசுகள் செய்துவரும் முயற்சிகளையும், அதன் தலையீடுகளையும், கட்டப்பஞ்சாயத்துக்களையும் நாம் இங்கு பட்டியலிட அவசியமில்லை. அது உலகறிந்த ரகசியமாக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.
அன்றாடம் உலகில் நடந்து வரும் இது போன்ற துக்க, துயர சம்பவங்களை சொல்லிமாளாது எழுதித்தீராது. "எவ்வளவு அடித்தாலும் தாங்குறான்டா" என்ற சூழ்நிலைக்கு நம் ஒவ்வொருவரின் உள்ளமும் தள்ளப்பட்டு வேதனையை உண்டு அதிலேயே உயிர் வாழ்ந்து வருகிறது.
எதுவுமே உலகில் வேடிக்கையாகத்தெரியும் அது தனக்கு நடக்காதவரை என்ற கருத்தின் கருவை மனதில் கொண்டு உலகில் எங்கோ ஒரு மூலையில் எவருக்கோ நடந்த சம்பவம் என்றில்லாமல் ஒவ்வொரு சம்பவங்களிலும் அது அடுத்த வீட்டில் உள்ளவருக்கு நடந்தாலும் சரி இல்லை ஆப்பிரிக்க நாட்டவருக்கு நடந்தாலும் சரி அதன் மூலம் நமக்கு பள்ளிக்கூடம் செல்லா ஒரு பெரும் பாடம் இறைவனால் அன்றாடம் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம் அவனுக்கு அஞ்சி நடப்போம் அழிவின் விளிம்பில் நிற்கும் மனிதநேயம் காப்போம்.
இன்ஷா அல்லாஹ் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
5 Responses So Far:
எல்லாமே வேடிக்கைதான் அதுவே நமக்கும் நடந்தேறாமிலிருந்தால் !
நெருப்பு சுடும் அது சுட்டுச்சுன்னா வேதனையா இருக்கும் என்று சொன்னால் தெரியாது சுட்டால்தான் தெரியும் !
MSM(n) பகிர்ந்திருப்பது உலக நிதர்சனம் !
>தவறுகள் எதுவுமே இனி நடக்காதவாறு உசாராக இருப்போம்,இறைவனை பிராத்திப்போம்.
>காலத்திற்கேற்ற உச்ச கட்ட சிந்தனைசிற்பி என்றுசொல்ல பொருத்தமான நம்ம ஆள் நெய்னா.
உரத்த சிந்தனை- உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் ...
அஸ்ஸலாமு அலைக்கும்.
ரெட் அலர்ட்.எச்சரிக்கை சமிஞ்ஞை!> சரியான நேரத்தில் அலசபட்ட அவசிய கட்டுரை.இதன் விபரீதத்தன்மையை அறிந்து,களைந்து நம் சமுதாயத்துக்கிடையேயான களையை பிடிங்கி எறியவேண்டியது நம் அனைவரின் கடமை. வெல்டன் நைனா
இந்த கட்டுரைத் தலைப்பின் மனநிலையில் பலர் இருப்பது துரதிஷ்டவசமானது. காலச்சுழற்சியில் பிறருக்கும் ஏற்படும் தீங்கு நம்மையும் தாக்க நேரமாகாது. எனவே, பிறருக்கு நடப்பதையே எச்சரிக்கையாகக் கொண்டு தீர்ர்வுகளைத் திட்டமிடுதல் அவசியம்.
Post a Comment