Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கள் ஊர் புளியமரம் ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | June 17, 2011 | ,

நான் பிறந்து வளர்ந்த கடற்கரையோர அதிரைப்பட்டினத்தில் கடற்கரைத் தெரு பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு புளிய மரமும் அதனை ஒட்டியும் சுற்றியும் அமைந்த சிமென்ட் மேடையும் எங்கள் பாட்டன் பூட்டன் சொத்தென நிழல் பரப்பி நிற்கும்.

படிப்பு நாடி இடமும், பிழைப்பு தேடி புலமும் பெயர்ந்தாலும் எத்தனை மன அழுத்தத்திலும் அந்த புளிய மரம் சார்ந்த நினைவுகள் நெஞ்சில் பசுமையாக இன்றும் இருக்கிறது!

சிறு பிராயத்து நினைவுகள் சுகமானவை. 'அது ஒரு காலம்' என்று பெருமூச்சு விடுகயில் மனசு லேசாகும்.

காலம் றெக்கை கட்டி பறக்க நாங்களோ கச்சல் கட்டி பறந்தோம்!
(கச்சல் : கைலியை மடித்துக் கட்டுதல்)

மரத்தடி கட்டெரும்புகளை பெயர்வைத்துக் கூப்பிடுமளவுக்கு பரிச்சயம் எமக்கு.

பொழுதுபோக்கு தேவைகளுக்கு காசு தராததால் வீட்டில் கோபித்துக்கொண்டு சாப்பிட மறுத்து

ஒளிய மரமானது
இந்த
புளிய மரம்.

வேறு எங்கு ஒளிந்தாலும் உம்மா அனுப்பும் வெளிநாட்டு தூதுவர் (பெரும்பாலும் என் நியூ யார்க் மச்சான் ஜலாலாத்தான் இருக்கும்) கன்டு பிடித்துவிடுவார்.

கால ஓட்டத்தில்
போதை பார்ட்டிகளின்
புனித மரமானத - இந்த
புளிய மரம்.

இந்த புளிய மரம்...

புகைப்பவர்களின் போதிமரம்!
பொது ஏழைகளின் புகழிடம்!
பிச்சைக்காரர்களின் புக்ககம்!
புது வரவுகளுக்கு நிழலகம்!

இதனடியில் நிற்பதுவும்
இதன் மடியில் நித்திரையும்
வென்றெடுத்த கனவுகளும்
அன்றாட அத்தியாவசம்!

இந்த புளியமர மேடையில் உட்கார்ந்து, கணேஷ் பீடியை இழுத்துக்கொண்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சிலேடை பேச்சுக்களில் சளைத்தவரல்லர் என்பதை காட்டும் பெரிசுகளை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

மருதானி வைத்து பொன்னிறமாயிருக்கும் தலைமுடி பார்த்து இவர்,

"என்ன மாப்ளே, தலை நெருப்பெரிஞ்ச வீடு மாதிரி இருக்கு"

என்று ஆரம்பிக்க அவர், முன்னவரின் உச்சந்த்லையையும் அதைச்சுற்றி சிதறியது போன்ற முடிக்கு

"அங்கே மட்டும் என்ன வாழுதாம். மண்டை வெடிவிட்ட இடம் மாதிரில்ல இருக்கு" என்பார்.

அப்பதான் வந்து அரட்டையில் சேர்ந்தவருக்க் முடி வெள்ளையும் கருப்பும் கலந்திருக்கக் கண்டு,

"என்ன மச்சான் தலை சாம்பலில் விழுந்த இடியாப்பம் மாதிரி இருக்கு" என துவங்க ஆட்டம் கலைகட்டும்.

மரக் கிளைகளில்
தொட்டு விளயாடியதும்
மர இலைகளுக்குள்
கண்டு விளையாடியதும்!

சென்ற சில வருடங்களுக்கு முன்பு இந்த மேடை தகர்க்கப் பட்டு, மரம் வெட்டப்பட்டுவிட்டது.

தாவியக் கிளைகளெல்லாம்
தேய்ந்து தேய்ந்து
வழுக்குப் பாறையென
வழவழத்து வழுக்க
விட்டுவந்த ரேகையெல்லாம்
வெட்டிப்போட்ட தென்ன நியாயம்?

புளியங்கொழுந்துண்டு
புடுங்கிக்கிட்டு தவித்ததுவும்
பளியாத்தோப்பெல்லாம்
பிச்சிக்கிட்டு போனதுவும்!

புளியம் பிஞ்சு பறித்து எக்கலில் செறுகி, பெருசுகள் பிடிக்கவர சிட்டென பறந்ததுவும...
(எக்கல்: கைலியின் இடுப்பு மடிப்பு)

வெட்டிவிட்டால்...
நிழல் மறையலாம்
நினைவுகள் மறையுமா?

- சபீர்

15 Responses So Far:

Shameed said...

நினைவுகள் மறையாது ஆனால் சாம்பலில் விழுந்த இடியப்பம் தற்போது சாம்பலில் விழாத இடியப்பம் போல் ஆகிவிட்டது

Unknown said...

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி வள்ளல் என்பார்கள். இப்புளிய மரம் பள்ளிக்குத் தன் பாதியைத் தந்து புண்ணியம் பெற்றுக்கொண்டதை அண்மையில் நான் கண்டேன். எங்கே அந்தப் புளிய மரம் என்று தேடியபோதுதான் இந்தத் தகவல் கிடைத்தது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

*சுவையான(புளிப்பான)புளிய மர நினைவுகள் மூலம் உங்களில் ஆழத்தை அறியத்தந்தீர்கள்.அருமை,அந்த காற்று அதிகம் உங்களில் கலந்தது தான் இன்றும் கவி கொட்டுதோ என்னவோ. கொட்டட்டும் கொட்டட்டும்!

*இதன் கருவை நெய்னாவுக்கும் கொஞ்சம் எத்திவையுங்கள்.உங்களையும் ஒரு சமயம் மிஞ்சிவிடுவார்.

*வாழ்க புளிய மர நினைவு(மட்டும் வேறெதுவும் இல்லாமல்)!
*வளர்க அந்த இடத்தில் இன்றைய தொழுகையாளிகளின் ஸ(F)ப்.!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இப்புளிய மரம் பள்ளிக்குத் தன் பாதியைத் தந்து புண்ணியம் பெற்றுக்கொண்டதை அண்மையில் நான் கண்டேன். எங்கே அந்தப் புளிய மரம் என்று தேடியபோதுதான் இந்தத் தகவல் கிடைத்தது. //

புதிய தகவல் !

வெட்டிய மரத்தை (அங்கே) அருகில் நடுவதற்கு அங்கிருந்த ஆட்களை காலி செய்ய வேண்டியிருந்தது, நல்ல வேலை அங்கே யாரும் எந்த எதிர்ப் பேச்சும் பேசலை நான் மட்டும் தனியாக செய்துட்டேன் ! :)

அதிரை என்.ஷஃபாத் said...

"கச்சல், எக்கல்" ..ஆஹா..ஆஹா.. நம்ம ஊரு சொற்கள்.. இது மாதிரியான சொற்கள் எக்கச்சக்கம்.

"சிலேடை" பேசுவதில் (அதாங்க 'சேடை' வுடுறது) திறம் பெற்றோர் பல பேர் நம்மூரில் இருக்கின்றார்கள். அடுத்தவர் மனதை காயப் படுத்தாதவரை நகைச்சுவையை ரசிக்கலாம், சிலேடைகள் "நச்"சென்று இருக்கலாம், "நச்சாக" இருக்கக் கூடாது என்பது என் எண்ணம்..!!

sabeer.abushahruk said...

//நினைவுகள் மறையாது ஆனால் சாம்பலில் விழுந்த இடியப்பம் தற்போது சாம்பலில் விழாத இடியப்பம் போல் ஆகிவிட்டது
//
ஹமீது,
இது உங்களுக்காக விரித்த வலையல்ல.
டைய்யா?
சொல்லவேயில்லே?

sabeer.abushahruk said...

//பள்ளிக்குத் தன் பாதியைத் தந்து // தான் நிழல் தந்து அனுமதித்த தீங்குகளைவிட்டும் மீண்டுவிட்டதாகக் கொள்வோம் காக்கா!

எஞ்சியது பாதி மரம் மட்டுமல்ல...தான் நிழல் தந்துதவிய நல்ல நிகழ்வுகளின் நினைவுகள் மட்டுமே என்றும் கொள்வோம்.

காக்கா, அதிரை வரலாற்றில் எங்களின் இந்த பழம்பெரும் மரம் இடம் பெற்றுள்ளதா ஒரு நினைவாக?

sabeer.abushahruk said...

//உங்களையும் ஒரு சமயம் மிஞ்சிவிடுவார்// அவரைத் தொட ஓடிக்கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் என்பதுதான் சரி. மறந்துபோனதா நான் சொன்னது?

"நாம்
அறிந்த அதிரையைவிட
நெய்னா
அறிவித்த அதிரையே அழகு"
என நான் அபிப்பிராயப்பட்டதை மறக்கலாமா?

எம் ஹெச் ஜேயின் பின்னூட்டத்தை முடிக்கும் கோஷத்தில் கொஞ்சம் கவிதை நிறைய அக்கறை ( சஃப் )

crown said...

கால ஓட்டத்தில்
போதை பார்ட்டிகளின்
புனித மரமானத - இந்த
புளிய மரம்.
-----------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அதனால்தான் அது காற்றில் ஆடும் போதெல்லாம் ,பாட்டில் ஊற்றிய ஊட்டத்தில் ஆடுவதாக தோன்றுவது இடமாற்ற தோற்றபிழையா? இல்லை இயல்பே அதுதான? அதனால்தானோ குடிப்பவர்களிடம் எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் அப்படியே மரமாட்டம் காதில் போடாமல் காற்றில் விட்டுவிடுகிறார்கள்????

crown said...

வெட்டிவிட்டால்...
நிழல் மறையலாம்
நினைவுகள் மறையுமா?
---------------------------------------
எப்படி மறையும் ?அதான் நினைவில் வந்து ஆட்டுதுல!

ZAKIR HUSSAIN said...

To Sabeer

வாழ்க்கையில் சில விசயங்கள் மறையாது அதில் இந்த புளியமரமும். சமயங்களில் நினைத்து நினைத்து சந்தோசப்படும் நிகழ்வுகளை அது தந்ததால்தானோ.

Yasir said...

சிறிய / பெரிய புளியமரத்தின் தித்திப்பு கலந்த புளிப்பான நினைவுகள் நம்மைவிட்டு அகலாது...சூப்பர் காக்கா

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வேலைப்பளுவால் சட்டுண்டு கருத்து சொல்ல முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.


நாம் அறிந்த புளியமரங்களின் காய்களோ புளிப்பாய் இருக்கும்
சபீர்காக்காவின் புளியமர வருணனையில் புளியங்காய் கூட புலியாய் மாறிப்போகும்.

பழைய நினைவுகளை கிளறுவதில் இங்கு ஒரு அறிவிக்கப்படாத மராத்தான் ஓட்டப்போட்டியே நடந்து வருகிறது.

தலைமுடி சாம்பலில் விழுந்த இடியப்பமானாலும், நெருப்பெரிந்த வீடு போல் ஆனாலும் பழைய நினைவுகளுக்கு என்றும் தேவையில்லை கலர்ச்சாயம் என்பதை இங்கு நிரூபித்துள்ளார்கள் எம் கவிக்காக்கா.

வாழ்த்துக்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

அப்துல்மாலிக் said...

சிலவை நம் கூடவே இருப்பது போல் ஒரு உணர்வு அதை நினைக்கயில், பார்கயில். அந்த வகையில் இந்த் புளியமரமும் ஒன்று, நானும் சிலசமயம் உக்காந்திருந்திருக்கேன். சிலது காரணமேயில்லாமல் அழிக்கப்படும்போது வருத்தம் இருக்கும் கோபமும் வரும், நல்ல நினைவு கூறல்

Shameed said...

//ஹமீது,
இது உங்களுக்காக விரித்த வலையல்ல.
டைய்யா?
சொல்லவேயில்லே?//


சொல்லி தெரிவதில்லை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்.

ஊருக்கு எப்போது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு