Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாங்க மலையேறலாம் - தொடர் - 3 25

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2011 | , , ,



சிறிது தூரம் சென்றதும் மலைக்குள் மலைத்து நிற்கும்படியாக உயர்ந்த அதே நேரத்தில் உறுதியான ஒரு சுவர் பார்த்ததும் வண்டியை நிறுத்தச்சொல்லி மிரட்டியது அதுதான் வால் பாறை டேம் (போட்டோ டேம்)அண்ணார்ந்து பார்த்தால் கழுத்து வலி வந்து விடும் அப்படி ஒரு உயரம். மழை பெய்து பெய்து அந்த கம்பீரமான சுவர் பாசிபிடித்து வழுவழு என்று இருந்தது. அங்கிருந்து கொட்டும் நீர் ஓடுவதற்காக ஒரு குட்டி பாலம் (போட்டோ பாலம்) சென்னை மெரீனா நேப்பியர் பாலத்தை நான்காக பிரித்து அதில் ஒரு பார்ட் இங்கு வைக்கப்பட்டதுபோல் இருந்தது ஆனால் அந்த நேப்பியர் பாலத்தின் துர்நாற்றம் இங்கு இல்லை. மக்கள் நடமாட்டம் இல்லாததால் அந்த இடம் முழுக்க படு சுத்தமாக இருந்தது மேலும் அது சுத்தமாக இருக்க இன்னுமொரு காரணம் தினமும் பத்து அல்லது பதினைந்து முறை மழையில் குளித்துவிடுவதுதான்.



ஈரமான மலை ரோட்டில் டயர் வழுக்கிக்கொண்டு வால்பாறை டவுன் வந்துசேரவும் ஜும்மா தொழுகை நேரம் நெருங்கியது அங்கு வந்து, "பள்ளிவாசல் எங்கு உள்ளது” என்று கேட்டு விசாரித்து வந்தால் பள்ளிவாசலுக்கு அருகிலே மார்க்கெட்டும் இருந்தது (நம்ம ஆளுங்க ஒரு செட்டப்பத்தான் தங்கி இருப்பாங்களோ? மார்க்கெட் பக்கத்திலேயே) ஒழுச் செய்வதற்கு அகலில் கைவைத்த உடன் ஐஸை தொட்டதுபோல் ஒரு குளுமை. தொழுகை ஆரம்பிக்கும் முன்பே மீண்டும் மழை தொடங்கியது,பள்ளிவாசலும் பள்ளிக்கு தொழ வந்தவர்களும் மிக எளிமையாகவே இருந்தனர் ஆனால் அங்கு தொழுகை நேரங்களைக் காட்டக் கூடிய போர்டு டிஜிட்டலில் மிக கம்பீரமாகத் தொழுகை நேரத்தை காட்டிக்கொண்டு இருந்தது.

தொழுகை முடிந்தும் மழை கொட்டிக்கொண்டே இருந்தது பள்ளி வாசலுக்கு வெளியே ஒரு கபுரும் அதன் மேல் போர்த்தப்பட்ட பச்சை துனியும் மல்லிகைப்பூ வாசமுமாக இருந்தது அந்த கபுர்.  ஜூம்மா முடிந்து வரும் ஒருசிலர் அந்த மழையையும் பொருட்படுத்தாது பத்தியும் மல்லிகை பூவும் வாங்கி வந்து சாத்திவிட்டு போகின்றார்கள். ஒரு சிலரோ அதைக் (கபுரை) கண்டுகொள்ளவே இல்லை அந்த லிஸ்டில் நாமும்… 


இதற்கிடையே நல்ல சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று நம்ம ஆளுங்க கடை எங்கு உள்ளது போன்ற விவரங்களை ஸ்மெல் செய்து கையுடன் ஒரு ஆளையும் அழைத்து கொண்டு வந்தார் நண்பர். 


ஹோட்டல் இடத்தை காட்டுவதற்கு வந்த அவர் ஒரு ஹோட்டலை காண்பித்து “இதுதான் இங்கு உள்ளதிலே நல்ல ஹோட்டல்” என்று சொல்லி ஒரு ஹோட்டலை காண்பித்தார் அங்கு உள்ளே சென்றதும்.


“இருக்கி இருக்கி" என்று மலையாளத்தில் இருக்கையில் அமரச் சொன்னார்.  


சாப்பிட அமர்ந்ததும் உணவு பரிமாறப்பட்டது. சாப்பிடும் இடம் தமிழ் நாடாக இருந்தாலும் சாப்பாட்டில் மலையாள வாடைதான் இருந்தது. பாம்பு திங்கும் ஊருக்கு வந்தால் நடுத் துண்டு நமக்குத்தான் என்பது போல் ஆளாளுக்கு ஆத்துக் கெண்டையை அடித்து பிடித்து சாப்பிட்டு முடித்து விட்டு அங்கு சில சீன்களை பார்த்து விட்டு (தேயிலை தோட்ட போட்டோ) ஆலப்புழை நோக்கி பயணப்பட்டோம்.


தமிழ்நாடு பார்டர் காட்டு இலாகா சோதனைச் சாவடி அங்கு கெடுபிடி ஜாஸ்தியாக இருந்தது. 


"இந்த வழியாக ஆலப்புழை போகவேண்டாம். நீங்கள் ஆழியார் அணை போய் அங்கிருந்து போய்விடுங்கள். அதுதான் பாதுகாப்பானது" என்று தடுத்துவிட்டனர். 


நண்பர்களுக்கு வந்த நோக்கமே கெட்டுப்போய் விட்டதே என்று ஒரே டென்சன் அனைவரையும் அமைதிப் படுத்திவிட்டு நாகர் கோவிலில் உள்ள (காட்டு இலாகாவில் ஹை போஸ்ட்டில் உள்ளார்) ஒரு நண்பரை போனில் அழைத்து விவரம் சொன்னேன். அவர் சோதனைச் சாவடி விவரம் அனைத்தையும் கேட்டு விட்டு “பத்து நிமிடத்தில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வண்டிக்குள் போய் உட்கார்ந்து இருங்கள். குளிரும் மழையுமாக இருக்கும்”  என்று சொன்னார் அதன் படி வண்டியில் வந்து அமர்ந்து இருந்தோம் 

அடுத்த சில நிமிசத்தில் சோதனைச் சாவடியில் இருந்து ஒரு ஆள் வந்து அழைத்தார். அங்கு போய் அதிகாரியை பார்த்ததும் அந்த அதிகாரி சொன்னார்.


"நாகர் கோயில் டிப்பார்ட் மெண்ட்டில் இருந்து உங்களை இந்த வழியாக போக அனுமதிக்கும்படி தகவல் வந்துள்ளது" என்று சொல்லி அனுமதி கொடுத்தார்.


நண்பருக்கு குதுகலம் தாங்க முடியவில்லை. காட்டு இலாகா அதிகாரிகள் வண்டியை ஒரு சோதனை செய்தனர் அதனூடே..


“வண்டி கண்டிசனா” என்று கேட்டார். 


நாம் “ஆம் வண்டி கண்டிசன் தான்” என்று சொல்லி முடிப்பதற்குள்...


“டீசல் நிறைய உள்ளதா?” என்று கேட்டு விட்டு “இனி கேரளாவில்தான் டிசல் கிடைக்கும்” என்றார். 


நாம் முன் கூட்டியே டேங்ஃபுல் செய்துகொண்டு வந்தது நல்லதாக போய்விட்டது மேலும் அந்த அதிகாரி கூறினார் 


"ரோடு சுமாராகத்தான் இருக்கும் போக்குவரத்து எதுவும் இருக்காது மெதுவா போங்க ஆனா சீக்கிரமா கேரளா பாரஸ்ட் ‘செக் பாய்ன்ட்டை தாண்டிவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது எங்களுக்கும் நல்லது” என்று அனுமதி கொடுத்து வழியனுப்பி வைத்தார்  

புறப்பட்ட அரை மணி நேரத்தில் கேரளா பார்டர் வந்தது. அங்கிருந்த செக் போஸ்ட்டில்...


"எத்தனை ஆள்காரு" என்று கேட்டார் 


"ஐந்துபேர் (ஒருகாரு)"  என்று சொன்னதும் 


அடுத்த கேள்வி “வண்டிண்ட அகத்து எத்தர பிளாஸ்டிக் பாட்டில் உண்டு”  


நாம், “எட்டு அன்னம் உண்டு” 


"ஈ எட்டு பாட்டிலும் லாஸ்ட் செக் போஸ்டில் கானிக்கனும் பாட்டில்களை பொரத்தூ கலையாம் பாடில்ல" என்று சொல்லி ஒருகடிதம் கொடுத்து பாட்டில் எட்டு உள்ளது என்று எழுதி கொடுத்தார்.

சிறு சிறு பிளாஸ்டிக் பைகளை எல்லாம் வாங்கி அங்கு உள்ள ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டார்கள் இதல்லாம் எதற்கு என்றால் அங்கு  வருவோரும் போவோரும் பொறுப்பு இல்லாமல் பிளாஸ்டிக் குப்பைகளை வீசிவிட்டு போவதை மிருகங்கள் தின்று விட்டு "மரித்து" விடுகின்றனவாம் அதனால் தான் இத்தனை கெடுபிடி அங்கு போகும் வழி நெடுக கரடு முரடு ரோடுதான் ஆங்காங்கே மேகம் வந்து சூழ்ந்து வண்டிக்கும் நமக்கும் அடிக்கடி ரெஸ்ட் கிடைத்தது குளிரில் பயணம் செய்வதால் நண்பர்களுக்கு பசி தலை தூக்கியது யதார்த்தமாக நூர் லாஜ் அல்வாவும் நானாகத்தான் கேக்கும் நான் எடுத்து வந்தது அங்கு பதார்த்தமா பங்கு போட்டு நடு காட்டில் திங்கப்பட்டது.

ஒரு வழியாக காட்டு வழி பயணத்தை முடித்து விட்டு நாட்டுக்குள் போகும்போது அந்த கடைசி செக் போஸ்டில் பிளாஸ்டிக் பாட்டில்களை காட்டிய பின் நாட்டுக்குள் (கேரளா) போக அனுமதி கொடுத்தார்கள் அங்கு இருந்து ஆலப்புழா சென்றடைய இரவு பதினோருமணி ஆகிவிட்டது .இந்த  ஆலப்புழா அழகிய பெயர் இதை ஆங்கிலத்தில் ஆழப்பி என்று அசிங்கமா விளிகின்றார்கள்!


அடுத்தநாள் காலை ஒரு ஹோட்டலில் புகுந்து குலா புட்டை புட்டு புட்டு தின்று விட்டு பேக் வாட்டர் போட்டிங் போய் சுற்றி பார்த்து விட்டு அதன் உள்ளேயே (போட்டோஸ்) உள்ளே ஒரு ஹோட்டலில் அநியாய விலை கொடுத்து சாப்பிட்டோம் இங்கு கிராமத்து வீடுகளைப்போல் படகுகள் கட்டி நாள் வாடகைக்கு கொடுகின்றார்கள் படகுகளில் ஏசி ரூம் மற்றும் சாதா ரூம்  உண்டு அதற்கு ஏற்ப வாடகை அங்கு பிடிக்கும் மீன்களை உடனே பொரித்தும் சுட்டும் சுவையாக பரிமாறுகின்றார்கள் மீனின் விலை யானை விலையாக உள்ளது இங்கு பல நாட்டு டூரிஸ்ட் வந்து குவிவதால் பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் நன்றாக பிழைப்பு நடத்துகின்றன.




எனக்கு தெரிந்து முத்துபேட்டை அருகே உள்ள லகூன்னை கொஞ்சம் சீர் செய்து படகு இல்லங்கள் அமைத்தால் பல வெளிநாட்டு டூரிஸ்ட் வந்து போக ஆரம்பிப்பார்கள் சுற்றி உள்ள ஊர்களுக்கு(நம் ஊருக்கும்தான்) நல்ல ஒரு தொழிலாக அமையும் இங்கு உள்ள மீன்களின் சுவையோ தனிதான் உதாரணமாக இந்த ஊர் கொடுவா மீன் இதை சொன்னாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும் இந்த மீன்களை வெளிநாட்டினர் சுவை அறிந்தால் முத்துப்பேட்டை லகூனுக்கு வந்து குவிந்து விடுவார்கள் லகுனை சுற்றி பார்த்ததில் கிட்டத்தட்ட ஆலப்புழை போலவே உள்ளது ஆனால் இது யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே உள்ளது இந்த ரகசியத்தை வெளியிட்டு ஊரையும் அத்தனை சுற்றி உள்ள ஊரையும் நல்ல ஒரு டுரிஸ்ட் நகரமாக ஆக்கலாம். 

மாலை நான்கு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி நோக்கி பயணம் ஆனோம் புறப்பட்ட சற்று நேரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது... 

தொடரும்...
- Sஹமீத்

வெற்றியும் அதனைத் தொடரும் புகழுரைகளும் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2011 | , ,

சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் ஒரு சாராரை ஆனந்தத்திலும் மற்றொரு சாராரை சோகத்திலும் ஆழ்த்தியிருப்பது எல்லோரும் அறிந்ததே.

வெற்றி கண்டவர்கள் இனிவரும் நாட்களில் அந்த வெற்றியை மேலும் தக்கவைத்துக் கொள்ளவும், எந்த நோக்கத்தினை மனதில் வைத்துக் கொண்டு அல்லது மக்கள் மன்றத்தின் முன் முன்னிருத்தி அவர்கள் களம் கண்டார்களோ அந்த நோக்கம் நிறைவேறிட எவ்வகையிலெல்லாம் முயற்சிக்கப் போகிறார்கள் என்று வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் தோல்வியைத் தழுவிய தோழர்களும் காத்திருப்பார்கள். காரியங்கள் துவங்குமா ? அல்லது காரணங்கள் சொல்லப்படுமா ? என்று எண்ணிக்கையற்ற வினாக்கள் விக்கித் தவிக்கும் பெரும்பாலோனோர் மனதிலும்.

அதிரை பேரூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான மக்களின் கோரிக்கைகளில் ஒன்றாக எழுந்த ஒருமித்த குரல் சுகாதாரம் என்பதே, அதனையே வெற்றி பெற்ற பேரூராட்சித் தலைவரும் வெற்றிக்கு முன்னரும், அதன் பின்னரும் தொடர்ந்து பதவி ஏற்பு மேடையிலும் எடுத்துரைத்தார்கள். ஊரின் சுகாதாரம் உங்களின் (மக்களின்) சுகாதாரம், மக்களின் சுகாதாரம் உங்களின்(மக்களின் செழிக்கும்)வாழ்வாதாரம். நோய்கள் அற்ற சமுதாயமாகவும் மருத்துவச் செலவுகளை குறைத்த மக்களாகவும் இருந்திடலாம் என்ற ஆறுதல் வார்த்தைகள் அதிரை மக்களை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது.

தேர்ந்தெடுத்த மக்களும் அறிந்திடுவர், அரசியல் கண்கானிப்பாளர்களும் நன்கறிவர் மத்தியில் ஒரு கட்சியின் கூட்டணி, மாநிலத்தில் வேறு கட்சி, பேரூராட்சியில் ஒரு கட்சி ஆட்சி செய்வதில் ஒத்துழைப்பும் / இடையூறுகளும் சங்கிலித் தொடர் போல்தான் இருக்கும். இதுதான் சவாலான காலமும் பொறுப்பான பணியும் இதுவாகத்தான் இருந்திடும். இதிலும் வென்றெடுக்க வேண்டியதை வென்றெடுத்து சாதிக்க மன உறுதியும் ஆளும் ஆட்சியாளர்களுடன் ஒத்துழைப்பும், அருகில் சுற்றியிருப்பவர்களின் பக்கபலமான ஆதரவும் இருப்பதே சாலச் சிறந்தது.

வெற்றிக்குப் பின்னர் தொடரும் புகழாரங்களும், அரவணைப்புகளும் எங்கேயிருந்தார்கள் இம்மக்கள் என்று பார்வையாளர்களையும் வியக்க வைக்கும் வைபவங்கள் தொடர்ந்தாலும், அவைகளுக்கு ஓர் எல்லை வகுத்து ஏற்றிருக்கும் அதிரை மக்களுக்கான தொண்டு இடறாமல் தொடரவேண்டும்.

சான்றோர்களும் சட்ட வல்லுநர்களும் நலன் நாடும் பெரியவர்களும் எடுத்துரைத்ததைப் போல் பேரூராட்சி மன்றத்தின் திட்டங்களையும் விதிமுறைகளையும் நன்கறிந்து, அதிரை பேரூராட்சிக்கு ஏற்ற தலைவர் என்று பரைசாற்ற வேண்டும் அதன் பின்னர் தேடிவரும் வெற்றியை பகிர்ந்திட மக்கள் மன்றம் முன்னால் நின்று மனம் விட்டு பேச வேண்டும் அங்கே அவர்களின் குரலைக் காது கொடுத்து கேட்டிட வேண்டும்.

என்றும், எதிர்பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் !

- அதிரைநிருபர்-குழு

ஹஜ் செய்வீர் ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2011 | , , ,

உறுதி யான தொரு
எண்ணமே கொள்ளனும்
இறுதி யாத்திரைக்கு
முன்னமேச் செல்லனும்

புனித ஹஜ்ஜுக்குப்
போய் வரவேனும்
மனிதப் புனிதத் தூதர்
ஜனித்த மக்கா நகர்

எளிமையான ஓர் ஆயத்தம்
இதயமெல்லாம் ஒரே நிய்யத்தும்
கடனே இல்லா வாய்மையோடும்
கடமை கழித்த தூய்மையோடும்

இலக்கை அடைந்தபின் குளிப்பும்
இன்றியமையாத ஒலூவும்
இஃக்ராம் எனும் ஈருடையும்
இஃக்லாஸ் எனும்  இறையச்சத்தோடும் 
இரண்டு ரக்காத்துகள் தொழனும்

உரக்க உறைக்கனும் நோக்கத்தை
தழ்பியா எனும் முழக்கத்தை:
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லாஷரீக்க லக்க லப்பைக்
இன்னல் ஹம்த
வன்னிஃமத்த
லக்க வல்முல்க்க
லா ஷரீக்க லக்
வழியெல்லாம் முழங்கனும்
வளியெல்லாம் ஒலிக்கனும்

மக்கா அடைந்ததும்
ஹரத்தைக் கண்டதும்
ஊனோடு உயிரும்
உருகுதல் போலொரு
உணர்வு வியாபிக்க
உண்மை உறைக்கனும்
உலகை வெறுக்கனும்

எல்லாப் பயணங்களும்
இலக்கில் முடியும்
ஹஜ் மட்டுமே
இலக்கில் துவங்கும்

கஃபாவைச் சுற்றியும்
தொங்கோட்டம் ஓடியும்
ஹஜ்ஜின் கிரியைகளை 
கவனமாய்ச் செய்யனும்

மினாவில் தங்கனும்
வீண்பேச்சுத் தவிர்க்கனும் 
சகிப்புத் தன்மையோடு
சகலமும் பகிரனும்

அரஃபாத்தை அடையனும்
அல்லாஹ்வை அஞ்சனும்
அ முதல் அ ஃ வரை
அத்தனை துஆக்களும்
அங்கேயே கேட்கனும்
அழுது தொழுது
ஆண்டவனை இரைஞ்சனும்

அரஃபாத் பெருவெளியில்
அனைவரும் மனவலியில்
மறைத்து செய்த பாவமெல்லாம்
நினைத்து நினைத்து அழுதிடுவர்

கிடைக்குமோ கிடைக்காதோவென
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்போர்
மன்னிப்போரில் மிகப்பெரியோன்
மன்னித்தாலே மீள்வர்

அந்திசாயக் கிளம்பினால்
அடுத்துள்ளது முஸ்தலிஃபா
அருமையான மலைகளிடை
அன்றிரவைக் கழிக்கனும்

கூழாங்கற்கள் பொருக்கி
ஷைத்தான் மீதான
கோபம் சற்று அடக்கி
மினாவுக்குச் செல்லனும்

ஷைத்தானை அடிக்கயில்
ஹாஜிகள் காயமின்றி
கவனமாய் எரியனும்
சுவனமே விரும்பனும்

தலைமுடி மழிக்கனும்
ஈருடை அவிழ்கனும்
இவ்வுலக உடைதரித்து
தவாபும் செய்யனும்

எஞ்சிய கிரியைகள்
எல்லாம் நிறைவேற்றி
கடமை முடிந்ததும்
மதினாவும் செல்லனும்

நபவியில் தொழவேண்டும்
நபிவழி வாழ்ந்த
நல்லோர்கள் அடங்கிய
மையவாடி காணவேண்டும்

நபியும் நற் தோழர்களும்
தொழுத பள்ளிகளில்
ஜியாரத் செய்தபடி
தொழும் பாக்கியம் வேண்டும்

எல்லாம் நிறைவேற்றி
இல்லம் திரும்பியபின்
இன்ஷா அல்லாஹ்
ஹாஜியாய் வாழ்ந்திடனும்

ரப்பனா ஆத்தினா
ஃபித்துன்யா ஹஸ்னா
வ ஃபில் ஆக்ஹிரத்து ஹஸ்னா
வகினா
அதாபன்னார்!

- சபீர்


புகைப்படம்: S ஹமீது

ஹஜ் கடமை - பகுதி 2 4

அதிரைநிருபர் | October 28, 2011 | , , ,

சென்ற வருட ஹஜ் புகைப்படங்கள் முந்தைய பதிவில் பதியப்பட்டது, இதன் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்த ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள் இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்காக மீள் பதிவு செய்கிறோம்.

1953 வருடம், ஜூலை மாதம் NATIONAL GEOGRAPHIC MAGAZINE என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள். ஸுப்ஹானல்லாஹ் வசதி வாய்ப்புகள் இல்லாத அன்றைய காலத்தில் மக்கள் எவ்வளவு சிரமப்பட்டு தங்களின் இறுதி கடமையை நிறைவேற்றியிருப்பார்கள் என்று நம்மால் இந்த புகைப்படங்களைப் பார்த்து உணரமுடிகிறது.



நன்றி: அப்துல்மாலிக்

-- அதிரைநிருபர் குழு

அணு அணுவாய் அச்சம்!! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2011 | , , , ,

உலகிற் சிறியது
அணு,
உலையில் கொடியது
அணு,
உடைக்கும் பொழுதினில்
பிழை நடப்பின்
உலகில் ஏது மனு?

அறிவியல் வளர்ச்சியில்
அணுவினைக் கண்டது
'ஆக்குதல்' வழியில்
நலம்.
'அழித்தலின்' வழியில்
இரத்தக் களம்.
பின்னதை எண்ணி
பீதியில் வாழுது
கூட்டமாய் ஒரு குலம்.
அது எம்
கூடங்குளம்.

அஞ்சுவது அஞ்சாமை
பேதமை.
நெஞ்சம் இதில்
அஞ்சுவது மேதமை.
கொஞ்சமது என்றாலும்
தீங்கு
கொடிதென்னும் நிலை,காரணம்
அது அணு உலை.

அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகுத்தி
குறுகத் தரித்தது
வள்ளுவம்.

அணுவைப் பிளந்து
மனுவை இழந்து
மின்வளத்தை பெருக்குதலில் என்ன
புண்ணியம்?

அறிவியல் வளர்ச்சியில்
அணுவில் மின்
ஆக்குதல் ஒரு கலை.
அச்சம் போக்கிடும்
அறண்வழி சொல்லாமல்
ஆலையைத் துவக்குதல் பிழை!

அரசியல் பானையில்
அணுவினைச் சமைத்து
ஆதாயச் சட்டியில்
வடித்திடும் உலை,
வாக்குகளிட்ட மக்களின்
வாழ்க்கைக்கு ஆபத்து நிலை.

பட்டபின் உணரும்
பாங்கு இதிலே
பலிக்காது, காரணம்
பட்டபின் பாடம் கற்க
பசும்புல் கூட உயிருடன்
இருக்காது.

வீட்டினை எரித்து
விளக்குகள் செய்யும்
விசித்திர நிலை
நீக்க வேண்டும்.
சட்டென இதற்கு
தீர்வு காணும்
சாத்தியக் கூறுகள்
ஆக்க வேண்டும்.

எதிர்ப்புடன் இருக்கும்
மக்களின் பயம்
எம்மை ஆளுவோர்
போக்க வேண்டும்.
கதிர் வீச்சில் காயப்படா
தலைமுறை இனி
பூக்க வேண்டும்.

- அதிரை என்.ஷஃபாத்

எளிதில் வேலை கிடைக்க 8 வழிகள்! 21

அதிரைநிருபர் | October 26, 2011 | , ,

படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளை திட்டமிட்டு மேற்கொள்ளாத காரணத்தால் வேலை கிடைக்காமல், அல்லது விரும்பிய துறையில் வேலை கிடைக்காமல் போகிறது. கீழ்க்காணும் 8 வழிகளை நீங்கள் கடைபிடித்தால் நிச்சயம் நீங்கள் விரும்பிய துறையில் எளிதில் வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற நம்பிக்கையில் கல்வி களஞ்சியம் (kalvikalanjiam.com) இந்த முயற்சியை எடுத்துள்ளது.

1. நீங்கள் படித்த துறையில் மட்டும் வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் கொண்டு உங்களது எதிகாலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகளை உதறி விடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யும்.

2. கிராமப்புறங்களில் அல்லது வேலை வாய்ப்பு குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ள நகர் பகுதிகளுக்கு வருவது சிறந்தது. நண்பர்களுடன் சேர்ந்து இடம் மற்றும் உணவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

3. வேலை சம்பந்தமான Naukrimonstertimesjobs போன்ற பல இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் வேலை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவல் நிறுவனங்களுக்கு தெரிய வரும். Linked In என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்களுடைய துறையில் வேலை வாய்ப்பிற்கு உதவும் நண்பர்கள் மற்றும் பல நிறுவனங்களின் HR ஆகியோரை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். Linked In இணையதளம் வேலை வாய்ப்பிற்கு உதவும் ஒரு சிறந்த இணையதளமாக உள்ளது. கல்வி வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவல்களை கொடுக்கும் கல்வி களஞ்சியம் இணையதளத்தையும்  மறந்து விடாதீர்கள்  .

4. வேலை வாய்ப்பை பெற்று தரும் அல்லது வேலை வாய்ப்பிற்கு உதவும் பல்வேறு Consultancy என்று சொல்லப்படும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலை பெற முயற்சி செய்யுங்கள்.இன்றைய சூழ்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இது போன்ற Consultancy மூலமாகவே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலை கிடைப்பதற்கு முன்னே பணம் செலுத்துவதை தவிர்த்திடுங்கள். வேலை கிடைத்ததும் பணம் தருவதாக கூறுங்கள். ஏமாற்றும் நிறுவனங்களிடம் உஷாராக இருங்கள் (ஏமாற்றும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இணையதளத்தில் அந்த நிறுவனத்தை பற்றிய விசயங்களை ஆராயுங்கள். consumercomplaints.in போன்ற இணையதளங்களில் பலரது கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்).

5. நாளிதழ்களில் வெளியாகும் வேலை வாய்ப்பு சம்பந்தமான விவரங்களை தவற விடாதீர்கள். The Hindu போன்ற நாளிதழ்களில் வேலை வாய்ப்பு செய்திகளுக்கென்றே  தனியாக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

6. உங்கள் துறையில் பணி புரியும் உங்கள் கல்லூரிகளில் பயின்ற சீனியர் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் உதவி கேட்கலாம். நேரம் கிடைத்தால் அவர்களை நேரில் சந்தித்து உங்களுடைய Resume ஐ கொடுத்து விடுங்கள்.

7. உங்களுடைய துறையில் அதிக பயிற்சி பெற அல்லது நீங்கள் பின்தங்கியுள்ள  கம்ப்யூட்டர் பயிற்சி (Software Courses), பேச்சு திறன் பயிற்சி (Communication Training) போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தயங்காதீர்கள். சிறந்த வேலை வாய்ப்பிற்கு வழி செய்யும் பயிற்சி நிறுவனங்களை பலரிடம் விசாரித்து தேர்ந்தெடுங்கள். கல்விக்காக நீங்கள் செய்யும் செலவு ஒரு போதும் வீணாகாது. (கல்வி களஞ்சியம் வழிகாட்டி குழுவை தொடர்பு கொள்ளலாம்)

8. இறுதியாகநேரத்தை வீணாக்காதீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கு செல்வது, வணிக வளாகங்களில் பொழுதைக் கழிப்பது, காதல் மற்றும்  இன்னும் பிற தீய செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் உங்கள் நேரம் அதிகமாக வீணடிக்க படுவதோடு  உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் நீங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று உங்கள் எதிகாலம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். மேலும் உங்களுடைய ஆலோசனைகளையும் கமெண்ட் இல் தெரிவித்து வேலை தேடும் பலருக்கு உதவுங்கள்.

Thanks to : கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)

கல்வி பணியில் என்றும் உங்களுடன்,
- V.A. Syed Abdul Hameed

வென்றவருக்கு ஓரு விண்ணப்பம் ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2011 | , , , , ,

அதிரை பேரூராட்சியின் தலைவரே !
அஸ்லம் அவர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும்

அழகான வெற்றிக்கு
அமைதியின் ஆளுமையான
அதிரை நிருபரின் 
அன்பான வாழ்த்துக்கள் !

அறிக்கைகளில் மனமகிழ்ந்து
அறிவிப்புகளில் சொக்கிப்போய்
அதிரை மக்களின் சார்பாக
அளிக்கிறேன் விண்ணப்பம்:                       

சுகாதரச்சீர்கேட்டைச் சுட்டினீர்கள்
சீரமைப்புத் திட்டங்களில்
சேர்த்துக் கொள்வீர்களா?
சின்னச் சின்னக் கோரிக்கைகளை:

கருவேலங் காடழித்து
காட்டு ரோஜா வளர்க்கனும்
கள்ளிச் செடி களைந்து
கற்றாலை முளைக்கனும்

வாய்க்காலிலும் கால்வாயிலும்
நீர்வரத்தும் வடிகாலும்
நிச்சயம் வேண்டுமையா
நெற்கதிர்கள் செழிப்பதற்கு

வெட்டிக்குளத்தைச் சற்று
வெட்டெடுத்துத் தரவேனும்
மீன்கள் வளரவிட்டு
நாங்கள் வாழவேண்டும்

செடியன் முதல் செக்கடி வரை
தூர்வாரித் தந்துவிட்டால்
ஊர்க்கார ரெல்லோர்க்கும்
ஊருணியில் நீரிருக்கும்

மழைநீரைச் சேமிக்க
மார்க்கம் ஒன்று காட்ட வேண்டும்
மற்றெல்லா மாவட்டம்போல்
மண் செழிக்க வாழ வேண்டும்

புலரும் வெஞ் சுடர்கூட
உலர்த்த முடியா ஈரத்தால்
காலி மனையி லெல்லாம்
கடும் கொசுக்கள் குடியிருக்கு

சகதியாய்ப் போன மனையில்
சல்லிக்காசு வாடகை யின்றி
சாரைப்பாம்பு வசிக்கு ததனால்
நல்லதும் புழங்குதைய்யா

மனைக்குச் சொந்தக்காரரோ
சொந்தக்காரரின் மனைவியோ
தன் னிலம் உலர வைத்து
தடுப்பு வேலி அடைக்க வேனும்

கூலிக்கு ஆள் வைத்து
குப்பைக் கூலம் கொளுத்த வேனும்
பாலிதீன் பைகளுக்கும்
பைபை சொல்ல வேனும்

வீட்டு வாசலிலும் ரோட்டு ஓரத்திலும்
ஆட்டு ரத்தம் ஓடுதய்யா
நாட்டு நடப்பு அறியாதோரின்
காட்டு தர்பார் நிறுத்துங்கய்யா

சாக்கடைச் சண்டையினால்
சாக்காடு நிகழு முன்னர்
நேக்குப் போக்குப் பார்த்து
நிலத்தில்மூடி மறைக்க வேனும்

ஏனா கானா ஈனா என்னய்யா
என்றுமே நீர் நம்மாளு தானய்யா
தொடங்குங்கள் நீங்களய்யா
தோள்கொடுப்போம் நாங்களய்யா !

- சபீர்
- sabeer.abushahruk


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு