Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நம்மவூரு அப்பாவும் அமெரிக்கா பேராண்டியும்.. ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2011 | , ,

அன்றொரு நாள்...

இருட்டு தன் போர்வையைச் சுருட்டி இடுப்பில் கட்டிக்கொண்டு கதிரவனை வரவேற்கும் ஒரு அழகான அதிகாலைப்பொழுது, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது காலை மடக்கிக்கொண்டு ஓடுதளத்தை முத்தமிட்டு தட தட என்று தரையிறங்கியது. எட்டு வருடம் கழித்து நியூயார்க்கிலிருந்து துபாய் வழியே தன் தாய் மண்ணில் காலெடியெடுத்து வைத்தார் மண்ணின் மைந்தன்(!), தன் மனைவியுடனும் 6 வயதுடைய மகனுடனும். இமிகிரேஷன் முடிந்து வெளியே வந்த அந்தச் சிறுவனுக்கு சற்றே குழப்பம் எதைப் பார்த்தாலும் தன் கண்கள்தான் மங்கிவிட்டதோ என்று கண்களைக் கசக்கிக் கொண்டான், 3 கார்களுடன் அவனுடைய குடும்பம் வெளியே காத்திருந்தது நீண்ட வருடங்கள் கழித்து மகனையும் அவரது குடும்பத்தையும் காணும் ஆவல் அவர்களின் கண்களில்...

அப்படியே அவர்களை அள்ளிப் போட்டுக்கொண்டு சென்றது சீறிப் பாய்ந்த கார்கள் அவர்களது ஊரை நோக்கி. பிறந்த மண்ணில் கார் டயர் தேய்ந்து அயர்ந்து நின்றதும் வீட்டைச் சுற்றியிருந்த மக்கள் அனைவரும் ஒருசேர வாழ்த்தி வரவேற்கின்றனர். அந்தப் பேரனின் பார்வையில் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. எவ்வளவு மக்கள், ஒரே கூட்டம் மற்றும் அவர்களின் வாழ்த்தும் வரவேற்பும் சேர்ந்துக்கொண்டால்... அவர்களைத் தொடர்ந்து வந்த கார்களும் ஊருக்குள் புழுதியடைந்த அசாதாரண சாலையின் வழியே நுழைகின்றன.. தெருக்களிலெல்லாம் மேல் சட்டையை கழட்டி வைத்துவிட்டும், பாவாடை தாவனியிலும், கைலிகளை மடித்துக் கட்டிக் கொண்டு இளைய பட்டாளமும் ஒரே வயசுக்கேற்ற கும்பலாக குழுவாக சிறுவர் / சிறுமியர் ஏதேதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.. இதையெல்லாம் கண்டுகொண்டே செல்லும் அந்த சிறுவனுக்கு ஃபிளைட்லே தான் வந்தோமா இல்லே ராக்கெட்லே கொண்டு போய் வேறு ஒரு உலகத்துலே இறக்கிவிட்டார்களோ என்ற ஆச்சரியம் (நாசாவோட எஃப்பெக்ட்).

அடுத்தநாள் காலை தன் அப்பாவை வந்து கட்டிக்கொண்டான், அவர் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.

“என்னாடா பேராண்டி?” 

“அப்பா எங்கே போறீங்க‌?” 

“வாக்கிங் போறேன்பா” 

“நானும் வ‌ருவேன்”

த‌ன் அப்பாவோட க‌ர‌ங்க‌ளை பிடித்துக் கொண்டு வீதிகள் வ‌ழியே நோட்டமிட்டுக் கொண்டு செல்கிறான் அதே ஆச்ச‌ரிய‌ப் பார்வையோடு.. நேற்று கண்ட அதே சிறுவ‌ர்க‌ள் இன்று வேறு வேறு டிர‌ஸ்க‌ளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்க‌ள், அப்போது அப்பாவிட‌ம் இது பற்றி வினவ, இதெல்லாம் ந‌ம்ம‌ ஊருலே நான், உன் வாப்பா, உம்மா ம‌ற்றும் எல்லோரும் சிறுவயதில் கால‌ங்கால‌மா விளையாடிய‌ விளையாட்டு. அந்த‌ சிறுவ‌னுக்கோ அதைத் தானும் விளையாட‌ வேண்டும் என்றும் அதைத் கற்றுக் கொண்டு “அமெரிக்காவுலே இதை பிர‌ப‌ல‌ப்ப‌டுத்துவேன்” என்றும் அப்பாவிட‌ம் சொல்கிறான், அவ‌ருக்கு ஒரே ஆச்ச‌ரிய‌ம் க‌ல‌ந்த‌ ச‌ந்தோஷ‌ம், ந‌ம்ம‌ பார‌ம்ப‌ரிய‌ விளையாட்டை வேறு நாட்டுலே அறிமுக‌ப்ப‌டுத்தினா எவ்வ‌ள‌வு ச‌ந்தோஷ‌ம் என்று அவ‌ரோட‌‌ முக‌த்துலே அப்ப‌ட்ட‌மா தெரிந்த‌து. 

உட‌னே அவ‌ர் ஒவ்வொன்றாக‌ இது சில்லுப்ப‌ந்து என்ப‌தையும் அது எப்ப‌டி உருவாக்க‌ப்ப‌ட்ட‌து, எவ்வ‌ள‌வு உடைந்த‌ ம‌ண்ச‌ட்டி பானையிலிருந்து எப்ப‌டி அடுக்கிவைக்க‌ப்ப‌டுகிற‌து எவ்வ‌ள‌வு தூர‌த்திலிருந்து அதை ரப்பர் பந்தால் அடித்தால் எத்த‌னை சில்லுக‌ள் ப‌றக்கும் என்ப‌தை செய‌ல்முறையாக‌ விள‌க்குகிறார். காயா ப‌ழ‌மா விளையாடும் வ‌ட்ட‌க்கோடும், கோலி குண்டுகளை வைத்து விளையாடும் பேந்தாவையும், சபீட்டையும் தொட்டுவிட்டு ஒளிந்துகொண்டு க‌ண்டுப்பிடிக்கும் தொட்டுவிளையாட்டையும், வ‌ட்ட‌த்திற்குள் சுற்ற‌விட்டு தெரிக்க‌வைக்கும் ப‌ம்ப‌ர‌த்தையும், எப்ப‌டி எத்தி(கிந்தி) விட்டு அதை எப்ப‌டி ஒரு ப‌க்க‌ம் அடித்தால் எழும்பி மேலே வ‌ரும்போது க‌ம்பு கொண்டு எந்த‌ள‌விற்கு வேக‌மாக‌ அடித்தால் தூர‌ விழும் (கிட்டிபில்லையும்) கில்லியையும் இன்னும் என்ன‌வெல்லாமோ மீத‌முள்ள‌ அனைத்து விளையாட்டுக்க‌ளும் அந்த‌ சிறுவ‌னுக்கு செய‌ல்முறையாக்க‌ப்டுகிற‌து.

ஒவ்வொரு நாளாக‌ ஒவ்வொன்றாக‌ க‌ற்றுக்கொள்கிறான் அந்த‌ விளையாட்டு விளையாட உத‌வும் பொருள் எவ்வாறு உருவாக்குவ‌து என்ப‌தையும் சேர்த்து. கில்லி எப்ப‌டி செதுக்க‌ப்பட‌ வேண்டும், எந்த‌ அள‌விற்கு எத்திவிட‌வேண்டும், அத‌னோட‌ பேட் எப்ப‌டி இருக்க‌வேண்டும் என்ப‌தை ஒவ்வொன்றாக‌ நுணுக்க‌மாக‌ க‌ற்ற‌து ம‌ட்டுமின்றி தூங்கும் நேர‌ம்போக‌ அவ‌னும் அந்த‌ கிராம சிறுவர்களாகவே மாறிவிட்டிருந்தான்.

பண்ணிரெண்டு நாட்கள் ஓடியிருக்கும்.. ரோமிங் பிளாக்பெர்ரியில் (Black Berry) அவசர மெயில், 'சர்வர் டவுன், எல்லாவேலைகளும் ஸ்தம்பித்தது, உடனே கான்டாக்ட் செய்யவும்'. 

அலறியடித்து வீட்டுக்குள்ளே சென்ற அந்தச் சிறுவனின் வாப்பா தனது லேப்டாப்பில் தன்னை புகுத்திக்கொண்டு நியூயார்க்கிலுள்ள தன் கம்பெனி சர்வருடன் லாகின் பண்ணுகிறார். ம்ஹூம் ஃபெயிலியர். பிங்க்(PING) ஆகவில்லை, பாக்கெட்ஸ் டிராப் ((Packet drop) ஆகிறது, Destination host unreachable வருகிறது. செர்வரோட கிளஸ்டரில் (Cluster) வைரஸ் தாக்கிருக்கிறது. வேறு வழியேயில்லை நேரில் போய்தான் சரிபண்ண வேண்டும், 

அவசரமாக ஆன்லைனிலேயே டிக்கெட் பார்க்கிறார், மூன்று நாடுகள் மாறிப்போக வேண்டும். பரவாயில்லை உடனே டிக்கெட் புக்செய்து அடுத்த 6:30 மணிநேரத்தில் சென்னையிலிருந்து பிரயாணம். ஊருக்கு திரும்பும் வழியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை அழைத்துக் கொண்டுபோய் குளிக்க வைத்து டிரஸ் மாற்றப்படுகிறது, எல்லாமே அவசரக்கால நடவடிக்கை, உட்கார நேரமில்லை இன்னும் நான்கு மணிநேரத்தில் ஃபிளைட்டை பிடித்தாக வேண்டும். அனைவரும் ஸ்தம்பித்துபோய் நிற்கிறார்கள். பேரனிடம் தான் திரும்ப நியூயார்க் போகப்போகிறோம் என்பது தெரியப்படுத்தப்படுகிறது. அழுகிறான், அடம்பிடிக்கிறான், வீட்டினுள் தரையில் அழுது புரளுகிறான் "நான் வரமாட்டேன் இங்கேயே இருப்பேன் இனிமே இதுதான் என் உலகம் என்று கதறுகிறான்". அப்படியே அவனை அள்ளி காருக்குள் திணிக்கப்படுகிறது, நான் “ஏன் உங்களுக்கு மகனாக பிறந்தேன்” என்று வெளிப்படையாகவே கேட்கிறான் அதனோடு அவனுடைய சத்தமும் அந்த காரின் நாலு கண்ணாடிக்குள் அடங்கிப்போகிறது. கார் விரைகிறது திருச்சி விமான நிலையத்திற்கு.

ஓரிரு ஆண்டுகள் கழிகிறது.... 

தான் எட்டுவருடம் கழித்து வந்து சரியாக பெற்றோர்களோடு ஒன்றாக இருக்க முடியவில்லையே, என்ற ஆதங்கத்தில் அவர்களை இங்கு வந்து ஒரு சில காலம் கூடவே இருக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தெரிவித்து அதற்கான சம்மதமும் வாப்பா / உம்மாவிடமிருந்து கிடைக்கவே விசா ஏற்பாடுகள் செய்து இருவரும் நியூயார்க் நகரம் வந்து இறங்குகிறார்கள். 

எங்கும் பளிச்சென பலிங்குமாதிரி மின்னும் ஏர்ப்போர்ட்டையும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று அலையும் ஆட்களையும், ஆண்/பெண் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் மனிதர்களையும் பிரமிப்போடு பார்த்துக் கொண்டே  வெளிவருகிறார், தன் பேரனை கட்டியணைத்தவாறு தன்னை காருக்குள் அடக்கிகொண்டு பரபரப்பாக இயந்திரதனமாக இயங்கிக்கொண்டிருக்கும் மக்களையும், லேசர் ஒளிலேயும், நியூரான் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உயர்ந்த கட்டிடங்களையும், வழுக்கிக்கொண்டு ஓடும் வாகனங்களையும் விழி மூடாமல் பார்த்தவாறு பயணக்கிறார். 

வீட்டுக்கு வந்தவுடன் பேரன் அப்பாவிடம்,
“நான் ஊரிலே கற்றுக்கொண்ட விளையாட்டை இங்கே பிரபலப்படுத்திவிட்டேன், இப்போ உங்களுக்கு பெருமைதானே” என்றான். 

அப்பாவுக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் திளைத்தார், 

“நானும் அதை கண்டுகளிக்கனும் எனக்கு காட்டு” என்கிறார். 

உடனே அவரை அவசரமாக கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஒரு ரூமுக்குள் ஓடுகிறான். அது அவனுடைய பெர்சனல் ரூம், “என்னடா பேராண்டி விளையாட்டைக் காட்டுறேனு ரூமுக்குள்ளே கூட்டியாந்துட்டே இங்கே என்னா இருக்கு வா வெளியே போய் காட்டு” என்கிறார்.

அதற்கு பேரன், “இருங்க அப்பா” என்று சொல்லியவாறு 40mm ஸ்கிரீன் பிளே புராஜக்டரை ரிமோட் கண்ரோல் மூலம் ஆன் செய்கிறான், அப்பாவும் இவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டே யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது பேரன் தன் லேப்டாப்பை ஆன் செய்து ஸ்கிரீன்லே "Please wait Loading... Gilly" என்று வருகிறது, சில வினாடிகள் கழித்து பெரிய டெடிக்கேட்டட் ஸ்டேடியம் 50,000 ஆடியன்ஸ் சத்தம்போட.. கில்லியை என்டர் கீயை தட்டி எத்திவிடுகிறான், அது சரியாக 109 மீட்டர் தாண்டி போய் விழுகிறது.. திரும்ப AERO கீயை தட்டி ALT கீயை இர‌ண்டு முறை த‌ட்டி ENTERகீயை த‌ட்டிய‌வுட‌ன் ஒரு முனையில் அடித்து விர‌ட்ட‌ப்ப‌டுகிற‌து அதை எல்லையில் வைத்து ஒருவ‌ன் பிடிக்க‌... கேட்ச்... அவுட்! அவுட்! என்று அப்பாவின் பின்ன‌ந்த‌லையில் யாரோ அடித்தாமாதிரியான‌ ச‌வுண்ட்.. அப்ப‌டியே வாய்ப்பொத்தி நிற்கிறார்.

டிஸ்கி1: உம்மா ஆக்கிப்போட்ட சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு, உச்சிவெயில் ம‌ண்டைய‌ பிள‌க்க‌, வ‌ழிந்தோடும் வேர்வையை எந்த வகையிலும் பொருட்டே ப‌டுத்தாம‌ல் விளையாடிய‌து.. இன்று பிஸ்ஸாவிற்கும், கெண்ட‌கிக்கும், க‌ம்யூட்ட‌ர் கேமுக்கும் அடியில் கிட‌ந்து த‌விக்கிற‌து..

டிஸ்கி2: கால‌த்தின் நிலைமைக்கேற்ப‌ த‌ன்னையும் த‌ன் ச‌ந்த‌தின‌ரையும் த‌யார்ப‌டுத்துவ‌தில் த‌வ‌றேதுமில்லையே !

- அப்துல் மாலிக்

15 Responses So Far:

sabeer.abushahruk said...

கதையின் எந்த இடத்திலும் விறுவிறுப்புக் குறையாமல் கொண்டு செல்லும் உக்தி என்னை மிகக் கவர்ந்தது. எத்தனை அருமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் நம்மூரில் என்று எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ், மாலிக். வாழ்த்துகள்.

எனக்கு பழய வரிகள் நினைவுக்கு வருகிறது:

விடியோ விளையாட்டில்
வியர்க்காது இளைஞனே
வெட்டவெளிக்கு வா
விட்டதெல்லாம் விளையாடு

(அ.நி. : மேட்ச் ஆரம்பிக்கும் முன்பு பதிந்தமைக்கு நன்றி :))

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதனை மட்டுமல்ல எந்தப் பதிவையும் இங்கே கதை(யாக) என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது ! வாழ்வியலில் எங்கோ ஏதோ சூழலில் நடந்ததைதான் சொல்ல எத்தனிக்கிறோம் ! அந்த வகையில் நம்மிலோ அலல்து நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நிகழ்ந்த நிகழ்வுதான் இதுவும்...

வாழ்த்துக்கள் தம்பி அப்துல் மாலிக் !

நிஸார் அஹமது said...

காலச்சூழலில் - விஞ்ஞான முன்னேற்றத்தில் நாம் இழந்ததாக சொல்லிக்கொண்டிருக்கின்ற சந்தோஷங்களை நம் குழந்தைகளிடம் திணிக்க முடியாது. அவர்களுக்கும் அதைப்பற்றி தெரியாது..தட்டச்சு கற்பதற்காக நாம் பத்தாவது படித்திருந்தால்தான் லோயர் ஹையர் போன்ற தட்டச்சு தேர்வுகளில் கலந்து கொள்ள முடியும்...ஆனால் இன்றைய குழந்தைகள் பிறக்கும்போதே கீ போர்ட் பற்றி தெரிகிறது..அவரவர் காலத்தில் அவரவர் பழக்கமே அவர்களுக்கு மகிழ்வளிக்கும். நமதூர் தெருக்களில் மணலாக இருந்தபோது கிளித்தட்டு, பளிங்கி போன்ற விளையாட்டுக்களை விளையாடினோம்..அதே நாம்தான் இன்று தார் ரோடு போட்டு கேட்டும் போராடுகிறோம்..

பழைய நினைவுகளை கிளறிவிடும் கதை சிறப்பாக இருந்தது..

Yasir said...

டச்சிங்கான ஒரு குறும்படம் பார்த்த உணர்வு ...வாழ்த்துக்கள் நண்பரே...

Yasir said...

சகோ.நிஜாமின் கருத்து ஏற்றுக்கொள்ள வேண்டியதே...ஆரோக்கியத்தை கொஞ்சம் இழக்கிறோமே தவிர....மற்றபடி மகிழ்ச்சிதான்

Yasir said...

எழுத்துப்பிழை ஆதான் நீக்கிவிட்டேன்

Shameed said...

சகோதரர் அப்துல் மாலிக்கின் எழுத்து நடை விறு விருப்பாகவும் அதே வேலை சுறுசுறுப்பாகவும் கம்பையும் (கிட்டிப்பில்) கம்பூட்டரையும் கம்பேர் செய்த விதம் அருமை உங்களைப்போல் எழுத்தாளர்கள் அடிக்கடி வந்து கிளித்தட்டும் சில்லுபந்தும் விளையாடிவிட்டு போனால் உங்கள் எழுத்தின் தாக்கம் எங்களிடமும் பிரதி பலிக்க தொடங்கிவிடும் .

Adirai khalid said...

Hi-Fi காலத்தில் science - fiction கதை அப்பாவிற்கு பதில் தாத்தா என்று இருந்தால் கதை ஆஸ்காரிலும் பேசப்படும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Hi-Fi காலத்தில் science - fiction கதை அப்பாவிற்கு பதில் தாத்தா என்று இருந்தால் கதை ஆஸ்காரிலும் பேசப்படும் ///

அப்படியாகத்தான் முதலில் பதிவுக்குள் பளிச்சிட நினைத்திருந்தபோது, வட்டார உறவு முறை சேர்த்த இப்படியான ஹை-ஃபீ நிகழ்வுகள் வாசித்த நினைவுகள் இல்லாததால் இப்படியாக அப்பா(வாக)

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நம்மவூரு அப்பாவும் - அமெரிக்கா பேராண்டியும்!
நிகழ்வை பக்கத்தில் பார்த்தது போல் அல்லது நடந்த நிகழ்வை கேட்டு எழுதியது போல் உள்ளது. திறமை மிக்க சகோதரரை (எழுத்தாளரை) வரவேற்கிறேன்!.

வாழ்த்துக்கள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மிக இனிமையான வார்த்தைக்கோர்வை. விளம்பர இடைவெளிகூட இல்லாமல்!

அன்று உடல்நோக விளையாட்டு ஒத்த வயதினனுடன்! (சுதந்திரப்பறவையாய்)
இன்று உடல்நோகா விளையாட்டு ஒத்தருமில்லாமல்!(நவீன சிறையில் சோம்பேறியாய்)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
எப்படி ஆரம்பிப்பது?ஹும்......பாத்திரம் பேசுவது போல அமைப்பதா?இல்லை, கதா ஆசிரியன் பாத்திரத்தை விளக்கி அதன் வழி கதை சொல்வதா? இப்படி பல யோசனைகள் வந்து தொலைக்கும் கதை எழுத. அதுவும் பாத்திரம் அமைக்க பாதிரத்திற்கு வசனம் எழுத இப்படி பல சிக்கல் கதை எழுதுவதில் இருப்பதால் கதை எழுதுவதை தவிர்க்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த கதை எழுதிய சகோதரர் மிகத்தெளிவாக நடை பழகிய குழந்தையை கையில் பிடித்தபடி மிக கவனமாக நடப்பது போல் கதை சொல்லியுள்ளார். அதில் நாமும் ஒரு பாத்திரமாக மாறியதுபோல் கற்பனை செய்ய வேண்டியுள்ளது(ரொம்ப சமத்து போங்க!).கதை ஆரம்பித்து முடியும் வரை நாமும் ஒரு பாத்திரமாக மாறி இருக்க கூடிய மன நிலையில் தான் நான் இருந்தேன். இது வெகு சிலரின் எழுதில் மட்டுமே சாத்தியம்.சகோதரர் கையாண்ட களம், கரு நவீன நவ யுகம் மேலும் சக காலத்தில் நடக்க கூடிய சாத்தியமே நல்ல திருப்பத்துடன் அமைத்தது மிகவும் அருமை. அதிரை உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறது.(அல்ஹம்துலிலாஹ்).

அப்துல்மாலிக் said...

பதிவிட்ட அதிரை நிருபருக்கும், முழுதும் படித்து கருத்திட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனதார்த்தமான நன்றிகள். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே...

Starjan (ஸ்டார்ஜன்) said...

மிக அருமையாக எழுதியிருக்கீங்க அப்துல்மாலிக்.. இப்போது சிறுவர்களின் உலகமே மாறிப்போயிருப்பது வருத்தமான விசயம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு