Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன் - நினைவு கூர்வோம் ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 02, 2011 | , ,


மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன்
செயலாளர், தாளாளர்; M.K.N. மதரசா
மறைவு: 02-10-1986

சுருக்கமாகப் பேசுகின்ற எஸ்.எம்.எஸ்.,
சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!
உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;
உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!

சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;
நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;
வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;
மசியாத மனிதரை மசிய வைப்பார்!

திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்
குட்டினால் அனுபவம்! இவைகளின்
சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்
சொந்தக்காலில் நின்ற செயலாளர்!

மடிக் கணினி வருமுன்னரே
மடியில் வைத்துத் தட்டச்சில்,
பல பணி ஆணை அச்சிட்டு,
படித்தோர்க்குப் பணி தந்தார்.

ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்
ஆளுமையில் அடங்கும் துறைகள்;
கோட்டுகளும் சூட்டுகளும் இவரிடம்
மாட்டிக் கொண்டு குட்டுப்படும்!

வாசகத்தை இவர் எழுதிடின்,
திருத்துவோர் யாருளர்? பிறர்
வாசகத்தை இவர் திருத்திடின்,
மறுத்துரைப்போர் யாருமிலர்!

அலுவலகத்துக்கு ஓர் உடை,
விழாவுக்கு என்று ஓர் உடை,
பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை
என்ற வழக்கம் உடையாரல்லர்.

யாவும் உடையார்க்கு உயருடையா?
பயமே அறியார்க்குப் படை பலமா?
தளரா நடையே போதும் அவருக்கு,
அடையா இலக்கை அடைவதற்கு!

நீட்டோலை வாசியா நின்றவரை,
ஏட்டோடு பள்ளிக்கு வரச்செய்தார்!
படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,
பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.

பட்டறிவில்லா எம் போன்றோரை,
பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!
அறிவுரைகளால் அதட்டி என்னை
முதுகலையை அடைய வைத்தார்!

ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;
ஆசீர்வதித்தார்; தலைமையாசிரியர்
பதவி நெருங்கும் வரை அவர்
அன்பில் எம்முயர்வு இருந்தது!

பரவட்டும் தாளாளர் புகழொளி
பாரெல்லாம்! வல்ல இறைவன்,
புவனப் பதவி பல தந்தவருக்கு
சுவனப் பதவியை வழங்கட்டும்!


A.M. அப்துல் காதிர், M.A., BEd. (வாவன்னா)

முன்னாள் மாணவர், ஆசிரியர்,

காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளி



பொக்கிஷமான நினைவுகள்















11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பரவட்டும் தாளாளர் புகழொளி
பாரெல்லாம்! வல்ல இறைவன்,
புவனப் பதவி பல தந்தவருக்கு
சுவனப் பதவியை வழங்கட்டும்!//

இதுவே நம் யாவரின் துஆ !

படங்கள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள் !

மறக்கமுடியாத முகங்களை மீட்டெடுக்க உதவியது !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தென் தஞ்சையின் அணையா விளக்கு
காலங்கள் பல ஆனாலும்
அன்னாரின் மாபணி
அதிரைக்கு அரிய
பொக்கிஷம்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

கொடுக்கல், வாங்கலில் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு கூட‌ அடித்துக்கொள்ளும்(கொல்லும்) அண்ணன், தம்பிகள் உள்ள இன்றைய உலகில் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள தன் நிலபுலன்களை ஊர் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் மத, இன, குல பேதமின்றி கல்வி பயின்று மேன்மையடைய‌ வேண்டும் என்ற ஒரே தர்ம சிந்தனையில் எவ்வித உலக பிரதிபலனும் பாராமல் மனித நேயத்துடன் வாரி வழங்கி அதன் மூலம் இன்றும் இஸ்லாமிய, இந்து, கிருஸ்தவ மதங்களை சார்ந்த எண்ணற்ற பல‌ குடும்பங்களின் வாழ்வாதாரம் சிறக்க வழி ஏற்படுத்தி கொடுத்த அந்த வள்ளலே என் வாழ்வில் நம்மூரில் நான் கண்ட மனித‌ வரலாற்றின் சரித்திரக்குறியீடு.

இப்பொழுது நாம் காணும் கல்வித்தந்தை, கொடை வள்ளல் என்று சொல்லிக்கொள்வோர் இவர் முன் கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமே....

இவை எல்லாம் நம் ஊர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மதக்கலவரங்கள் மூலம் வரும் பேரிழப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் சில உலக ஆதாயங்களை அடைய துடிக்கும் அந்த ஒவ்வொருவரும் தன் இருண்ட பூட்டப்பட்ட இதங்களை திறந்து சிந்தித்து சீர்தூக்கி பார்க்க கடமைப்பட்டுள்ளனர்.

நம் எல்லோரையும் படைத்து பரிபாலிக்கும் வல்ல இறைவன் அவர்களின் ஆஹிர வாழ்க்கையில் உயர் பதவிகளை தந்து உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் வாழ்வும் சிறக்க‌ அவனே போதுமானவன்....ஆமீன்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Shameed said...

அதிரையும் அதன் சுற்று வட்டாரமும் கல்விக்கண் திறந்து விட்டதற்கு மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன்,அவர்களுக்கு நன்றி பாராட்டவேண்டும்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.அன்னாருடன் சிறுவனாக இருக்கும் போது சந்தித்து சில முறை சந்தித்து பேசியுள்ளேன் . எத்தனையோ பெரிய மனிதர்கள் அவர்களுக்காக கைகட்டி காத்திருக்கும் போது, என்னப்பா என எனை அழைத்து அன்புடன் பேசுவார்கள். அப்பாவின் பட்ட பெயரை சொல்லித்தான் என்னை அழைப்பார்கள்.என்னா போலிஸுன்னும் செல்லமா அழைப்பார்கள். காரணம் நான் வாத்தியார்களைப்பற்றி குறை சொல்லி போய் இருப்பேன். இந்த வாத்தியார் சரியா கிளாஸ் வர்ர தில்லை, இவர் கிளாஸில் எல்லாரிடமும் சிகரெட் வாங்கி வரச்சொல்கிறார் இப்படி....(ஹாஹாஹா)வாத்தியார்களுக்கு சில சிபாரிசுக்காகவும் சென்றிருக்கிறேன் இரண்டொரு வாத்தியாரின் துணைவிக்கு பெண்கள் பள்ளிகூடத்திலும்,இவர்களின் சிபாரிசில் இமாம் ஷாபியிலும் நான் கேட்டுச்சென்று வேலை வாங்கி தந்துள்ளார்கள்.இப்படி அவரிகளிடம் மிக அன்பை பெற்று மிக நெருக்கமாக இருந்தகாலம் இப்ப நினைத்தாலும் பசுமை.எல்லாரும் எம்.ஜி.ஆர் பற்றி சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நான் பார்த்த எம்.ஜி.ஆர் இவர்கள்.நல்ல அழகு நல்ல நிறம்.ஆனாலும் கண்டிப்புடன் கூடிய அன்பும் ,கம்பீரமும் பார்த்து இன்றும் நினைத்து பரவசப்படுகிறேன்.அல்லாஹ் அவர்களின் ஆகிரத்து வாழ்வை செம்மையாக்கிவைப்பானாக. அருமையான நினைவூட்டல்.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கிறார்!

- வாவன்னா

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------

நான் S.M.S. அவர்களின் உதவியால் புகழ் பெற்ற காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் இலவசக் கல்வி படித்தேன்.

நான் S.M.S. அவர்களின் கீழ், எழுத்தர், ஆய்வுக்கூட உதவியாளர், நூலகர், துணைக் கணக்காளர், ஓவிய ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் ஆகிய பதவிகளில் பணி புரிந்திருக்கிறேன்! நல்ல வேளை, நான் பணி புரிந்த நாட்களில் “கட்ட புள்ளையார்” (இப்படித்தான் S.M.S. குறிப்பிடுவார்!) பேரன் என்னிடம் படிக்கவில்லை!

ஈராண்டுகள் விடுப்பு பெற்று துபாய் சென்றேன். S.M.S. சொல்லை மீறிச் சென்றதால் நான் அல்லலுற்றேன். என்னுடைய எல்லாச் சான்றிதழ்களும் விமான நிலையத்தில் தொலைந்து விட்டன! ஓவியக்கலை எனக்குக் கை கொடுத்தது!

ஆறு மாதங்களுக்குள் S.M.S. அவர்கள், ‘ஊர் வந்து தலைமை ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொள்ளும்படி’ எனக்கு, செய்தி சொல்லி அனுப்பினார்கள்! அப்போது தலைமை ஆசிரியர் சம்பளம் 1,000 ரூபாய்க்குக் குறைவுதான்!

என்னைப் போல இன்னும் இரண்டு ஆசிரியர்கள் துபை வந்துவிட்டாதால் கண்ணியத்திற்குரிய தாளாளர் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. ஓராண்டிற்குப் பிறகு, தானாகவே பதவி விலகும்படி கேட்டுக்கொண்டார்கள். மேலும் “நீ எப்போது ஊர் வருகிறாயோ, அப்போது உனக்கு வேலை நிச்சயம்!” என்று செய்தி அனுப்பினார்கள். அவர்கள் எனக்கு இட்ட கட்டளையை ஏற்று நானாகவே முன் வந்து பணி துறந்தேன்!

பணிக்கால வயதெல்லாம் தாண்டி, ஊர் வந்தபோது, வேலையைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருந்தேன். அல்ஹம்துலில்லாஹ்! பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.

ஊரில் என்னைப் பார்ப்பவர்கள்தான், “அவருக்கு இவ்வளவு கிடைக்கிறதே, இவருக்கு இவ்வளவு கிடைக்கிறதே! உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா?” என்று எனக்கு மன அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்! மற்றப்படி எந்தக் குறையுமில்லை.

அல்ஹம்துலில்லாஹ்!

தாளாலரின் மக்கள் என்மீது அன்பைப் பொழிகிறார்கள். நிலையற்ற இந்த உலகில் அதுவே எனக்கு அதிகம்!

-வாவன்னா

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

இதுவரை வாழ்ந்தவர்களிலே இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் கன்னியமான மனிதர் கல்வித் தந்தை ஐயா அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

இந்தியாவில் இருக்கும் அனைத்து பதவிகளுக்கும் தகுதியானவர்கள் இவர்கள்.

K. சுவாமிநாதன்
பட்டுக்கோட்டை

அப்துல்மாலிக் said...

பொக்கிஷம் நிறைந்த ஃபோட்டோக்கள், இவையனைத்து மர்ஹூம் அவர்களின் நிழற்படங்களை மாணவர்களுக்கு அறியத்தரும் வகையில் பிரேம் செய்யப்பட்டு கல்லூரி அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும்...

crown said...

நல்ல வேளை, நான் பணி புரிந்த நாட்களில் “கட்ட புள்ளையார்” (இப்படித்தான் S.M.S. குறிப்பிடுவார்!) பேரன் என்னிடம் படிக்கவில்லை!
அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கிறார்!
---------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சார் அவர்களுக்கு. மேற்கண்ட வாசகத்திற்கு என் பணிவான பதில் ஒன்றுதான்.
நீங்க எனக்கு வகுப்பு எடுக்க கொடுத்து வைக்கல.(ஹஹஹ்ஹஹஹஹ்ஹஹ்ஹ,அதாவது நான் கொடுத்து வைக்கல.அப்படி எழுதியிருக்கனும் சும்மா தாமசுக்கு மாத்தி யெழுதினேன்.)

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------

பெரியவரின் புகைப் படங்களுக்கு முன்னால் என் கவிதை, சூரியனின் முன்னால் வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி ஆனது!

-வாவன்னா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு