Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும் ! 6

அதிரைநிருபர் | June 15, 2011 | , , , ,



இரண்டு மாத விடுமுறையை மாணவர்கள் நன்றாகவே அனுபவித்தார்கள். அதன் பலனையும் பெற்றோர் நன்கு அனுபவித்துவிட்டனர். தேர்வுகள் நடக்கும்போது விடுமுறை வராதா என்று மாணவர்கள் எண்ணுவதும், விடுமுறை வந்தபின் பள்ளி திறக்கமாட்டர்களா என்று பெற்றோர் ஏங்குவதும் ஒரு வேடிக்கையான வாடிக்கை!

பெற்றோரின் ஏக்கத்தில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது சமச்சீர் கல்விப் பிரச்சினை. வந்தது அறிவிப்பு: பள்ளி திறப்பு, தள்ளி வைப்பு! இந்த இரண்டு மாத விடுமுறைக் காலத்திற்குள் எத்தனை நிகழ்வுகள் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தின!

தேர்தல் வந்தது. பெற்றோர் பிள்ளைகள் மீது வைத்திருந்த கவனம் சிதறியது. பிள்ளைகளின் அன்றாடச் செயல், ஒழுங்கு இவற்றின்மீதுள்ள கவனம் மாறியது. இதே விடுமுறைக் காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டும் 51 நாட்கள் நடந்தது. மாணவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டு, அவர்களின் செயல்களையும் பள்ளிச் சிந்தனைகளையும் முடக்கி வைத்தது. இதில் பழகிவிட்ட மாணவர்கள் மேலும் விளையாட்டுகளையே தேடி அலைகின்றனர். விளையாடுவதற்காக அவர்கள் வீட்டை விட்டு அவுட்டாகிவிட்டால் பின் அவர்கள் கேட்சு ஆவது மிகவும் சிரமம்.

பள்ளிகள் திறந்தாயிற்று. என்ன பாடத்திட்டம் என்று அறியாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் குழம்பிக் கொண்டிருக்கும் நிலை. மூன்று வாரங்களுக்குப் பின்தான் பாடத்திட்டம் பற்றிய உண்மை நிலை புரியும்.

மற்ற ஆண்டுகளைவிட பெற்றோர் இந்த ஆண்டு பிரச்சினைகளை எதிர் நோக்கி இருக்கிறார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு சமச்சீர் புத்தகங்கள் நடை முறைக்கு வந்தால் எதிர்பார்ப்பு இருப்பதால் பாதிப்பு இருக்காது. பழைய பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் புத்தகங்கள் இனி அச்சாகி மாணவர் கைக்குக் கிடைக்க தாமதமாகும. குறிப்பாகப் பாதிக்கப்படுபவர்கள் புதிய பாடப் புத்தகங்களை முன்கூட்டிடே படித்துக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான். எனவே மாணவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர் பொறுப்பாகிவிட்டது.

கல்வி தொடர்பாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர், செய்திகள், செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். பாடங்கள் நடக்காத இந்த மூன்று வாரங்களில் வகுப்பு எப்படி நடக்கிறது என்பதை மாணவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மாணாக்கரை வீணாக்கும் சாதனங்களில் முக்கியமானது தொலைக்காட்சி. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும. செல்போனை அவர்களிடமிருந்து பிடுங்கிவிடவேண்டும். பெற்றோர் மாணவர்களை மாலையில் மட்டும் விளையாட அனுமதிக்கவேண்டும்.

பெண் மக்களின் கல்வியைப் பற்றி பெற்றோர் கவலைப்படும் சூழ்நிலை இல்லை. தனக்கு உதவியாக இல்லாமல் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கிறாளே என்பதுதான் தாயின் கவலை. அதற்கு மாறாக மகனைப் பார்த்து, “நீ வெளி வேலைக்கெல்லாம் போகவேண்டாம்; வீட்டிலிருந்து படி” என்று பெற்றோர் சொல்லும் நிலை!

இனி எந்தப் பாடத் திட்டம் வந்தாலும் அதை நன்கு படித்து வெற்றி பெற எல்லா உதவிகளையும் பெற்றோர் செய்யவேண்டும். வீட்டின் உயர்வில் மட்டுமல்ல, நாட்டின் உயர்விலும் மாணவர்களின் பங்கு அதிகம். அவர்களை நெறிமுறைப் படுத்துவது பெற்றோர் என்ற முறையிலும், குடிமக்கள் என்ற முறையிலும் மக்களுக்குக் கடமை. கடமை உணர்ந்து மக்கள் செயலாற்றுவார்களாக!

உமர்தம்பி அண்ணன்

நன்றி: உமர் தென்றல்

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது ஒரு ஆசிரியரின் சாசனம் !

ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையில் பொறிக்கப் படவேண்டிய அவசியமான அறிவுரை !

இங்கே நான் ரசித்தது :-

//விளையாடுவதற்காக அவர்கள் வீட்டை விட்டு அவுட்டாகிவிட்டால் பின் அவர்கள் கேட்சு ஆவது மிகவும் சிரமம்.//

//பெண் மக்களின் கல்வியைப் பற்றி பெற்றோர் கவலைப்படும் சூழ்நிலை இல்லை. தனக்கு உதவியாக இல்லாமல் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கிறாளே என்பதுதான் தாயின் கவலை. அதற்கு மாறாக மகனைப் பார்த்து, “நீ வெளி வேலைக்கெல்லாம் போகவேண்டாம்; வீட்டிலிருந்து படி” என்று பெற்றோர் சொல்லும் நிலை! //

Yasir said...

மனதில் பதிந்து மறக்காமல் செயல்படுத்த வேண்டிய வைர வெட்டுக்கள் மின்னுகின்றன ஒவ்வொரு வரிகளும்....பிரச்சனைகளை பற்றியே பேசிக்கொண்டு இருப்பதைவிட அதற்க்கான தீர்வு என்பதை அழகாக எடுத்து வைத்து இருக்கிறார் ஆசிரியர் அவர்கள்

அபு ஆதில் said...

வீட்டின் உயர்வில் மட்டுமல்ல நாட்டின் உயர்விலும் தன் பிள்ளையின் பங்கு மிக முக்கியம் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் உணர வேண்டும். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் சேர்த்து நல்லதொரு வழி காட்டல்.
அபுஇபுறாஹீம் சொல்லியது போல்
இது ஒரு ஆசிரியரின் சாசனம் !

ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையில் பொறிக்கப் படவேண்டிய அவசியமான அறிவுரை !

நட்புடன் ஜமால் said...

பெற்றோர்களுக்கென ஒரு பள்ளிக்கூடம் திறக்கலாம் போலிருக்கே ...

கற்பித்தல் என்பதும் கற்றல் தானே, கற்பிப்பதற்கும் கற்றல் வேண்டும்

படிப்பில் குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் வாழும் ஊர்களில் பெண்களின் படிப்பை அலட்சியம் செய்கின்றனர், கல்வி என்பது வேலைக்கு மட்டும் தானா ...

நல்ல அறிவுரை சொன்னீங்க காக்கா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கல்வியோடு அரசு விளயாடுவதன் விளைவு:
இன்றைக்கு 7-வது வகுப்புக்கு நடத்திய பாடம்
க.ங. ச. மற்றும் 10 பறவைகளின் பெயரை எழுதச்சொன்னார்களாம் ஆசிரியர்கள்.
ஏற்கனவே 15 நாளை தள்ளியாச்சு,இன்னும் எத்தனை நாளில் இந்த விளையாட்டு முடியுமென்பது எல்லையில்லாமலிருக்கிறது.

sabeer.abushahruk said...

பொருப்பான புத்திமதிகள். சாருக்கு நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு