அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கடந்த ஒரு மாதமாக அதிரையிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் திருமண சீசன் என்பது எல்லோரும் அறிந்ததே. அதிரையில் திருமணம் களைகட்டுகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதெப்படி அதிரை திருமணங்கள் களைக்கட்டுகிறது என்பதை இந்தப் பதிவில் கொஞ்சம் மற்றொரு கோணத்தில் பார்ப்போம்!
ஒரு காலத்தில் வசதியானவர்கள் வீட்டுத் திருமணத்தில் பூவந்தி போன்ற நார்ஸாவும், மார்க்கம் வலியுறுத்திய வலிமாவாக தேங்காய்ச் சோறுடன் / நெய்ச்சோறுடன் 5 கறி சாப்பாடு அல்லது ஆட்டு இறைச்சி பிரியாணியும் சொந்தங்களுக்கும், வறியவர்களுக்கும் விருந்தாக இருந்தது. பிறகு உண்மையில்லாத கவுரவத்தை தலையில் சுமந்து, வரதட்சணை மூலம் போலி வசதி வாய்புகளை பெற்று, அவற்றை மூலதனமாக வைத்து ஊராருக்கு பகட்டு காட்ட தங்களுடைய சக்திக்கு மீறிய திருமண வைபவங்களில் வரம்பு மீறி செலவழிக்க தொடங்கினார்கள் மேலும் பலர்.
பின்னர் ஏகத்துவ பிரச்சார எழுச்சியால், பகிரங்கமாக வற்புறுத்தி வாங்கப்பட்ட வரதட்சணைகள் என்ற கேவலமான செயலை முஸ்லீம்களிடம் அழித்தெறிய அரும்பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்கள். ஆனால் நேரடியாக வரதட்சணை மூலம் கொள்ளையடித்த மணமகன் வீட்டார் வேறொரு வேடம் தரிக்க ஆரம்பித்து என் மகன் நஜாத்து, தவ்ஹீத் கொள்கைவாதி வரதட்சணைப் பணமா வாங்கினா ஏசுவான் என்று ஊராரிடம் பெருமையடிப்பது ஒரு புறமிருந்தாலும், கொல்லைப்புறம் வழியாக சீருசிராட்டு என்று வாங்க வேண்டியதை வாங்குவது வரதட்சணை என்ற கணக்கில் அது வராது என்று சொல்லி பண்ணுகிற அடாவடியும். இதுநாள் வரை குறைந்தபாடில்லை. அவைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் நீண்டதொரு லிஸ்டே போடலாம். முன்கூட்டியே முடிவு செய்யப்படும் அந்த கைக்கூலியான வரதட்சணையே இந்த கொடுமைகளுக்கு தேவலாம் என்ற எண்ணத்திற்கு பெண் வீட்டார் தள்ளப்படுகிறார்கள்.
அப்படி என்னதான் நடைபெறுகிறது இதோ பின்வரும் தகவல்கள் ஓர் உண்மை(யான) காட்டு, மாறாக எந்தவொரு குடும்பத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற துளியளவு எண்ணத்தில் இது பதிக்கப்படவில்லை. மார்க்க வரம்பு, நபிவழி, வீண் விரையம் செய்ய வேண்டாம், என்று ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லுபவர்களே இதுபோன்ற காரியங்களுக்கு துணை போகிறார்கள் அல்லது கண்டும் காணாதவாறு உள்ளார்களே என்ற ஆதங்கத்தினாலே பதிக்கப்படுகிறது. இவ்வாறு சுட்டிக் காட்டப்படுபவைகள் ஏன் நமது வீடுகளில் கூட நடைபெற்றிருக்கலாம், இனி அவ்வாறு நடைபெறாமல் இருக்க நாம் துணிந்து போராட வேண்டும், அதற்காக வீட்டாரை தயார்படுத்த வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
களைகட்டும் அதிரை திருமணங்களில் உண்மையில் களைகட்டுகிறதா என்று பார்ப்போம்.
- மணமகன் முதுநிலை பட்டதாரி, சென்னையில் வேலை செய்கிறான், திருமணத்திற்கு பின்பு வெளிநாட்டிற்கு போகப்போகிறான். தனக்கு மனைவியாக வரவேண்டியவள் படித்தவளாகவும் மார்க்க பற்றுள்ளவளாகவும், ஒழுக்கமுள்ளவளாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது அவனின் கண்டிசன்.
- மணமகன் குடும்பம் நல்ல வசதியான குடும்பம், வரதட்சணை எல்லாம் நாங்க வாங்க மாட்டோம், வரதட்சணை வாங்குவது கேவலம் என்று ஒரு மெகா சீரியல் பிரச்சாரம் செய்யும் குடும்பம். எங்கள் வீட்டில் யாருக்கும் நாங்க வரதட்சணை வாங்கியதில்லை, இனியும் யாருக்கும் வாங்க மாட்டோம். சொந்த வீடு ஊரிலும், பிற ஊர்களில் நிலங்களும் உள்ளது.
- மணமகள், இளநிலை பட்டதாரி, ஆலிமாவும் கூட.
- மணமகள் குடும்பம், தாய் பள்ளிக்'கொடம்' தாண்டி பள்ளிகூடம் தாண்டாவர்கள் ஆனால் மூத்த மகளை நல்லவளாக வளர்த்து சாதனை படைக்க வைத்தார்கள். கூடப்பிறந்தது ஒரு தங்கை, ஒரு தம்பி அனைவரும் நன்றாக படிக்கிறார்கள். தந்தை 23 வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்து, தன்னுடன் பிறந்த ஒரே காரணத்திற்காக (அதிரையின் விதிப்படி) தன் இரு சகோதரிமார்களுக்கும் தனி வீடுகட்டி கொடுத்து, மீதியை தனது மூத்த பிள்ளைக்கு மட்டும் தனி வீடு கட்டி வைத்திருக்கும் ஒரு நடுத்தர சராசரி வரு’மானமுள்ளவர்’. மகள் திருமணத்திற்கு பிறகு அடுத்த மகளுக்கு வீடுகட்ட வெளிநாடு சென்றால் தான் முடியும் என்ற எழுத்தப்படாத விதி வேறு உட்பிரிவாக இருக்கிறது. 46 வயதான தகப்பனுக்கு High-BP, அடிக்கடி வரும் ஒற்றை தலைவலி (migraine) என்பது வேதனையான அந்த வயதுக்கேற்ற medical qualifications. பயிற்சிமுறை உணவு உட்கொள்ளும் மருத்துவ ஆலோசனைகளைக் கடைபிடித்து தன்னுடைய நோயை குணப்படுத்தி வந்தவருக்கு, மகளின் திருமணத்திற்காக பணம் ஏற்பாடு செய்யும் டென்ஷனில் மீண்டும் ஆங்கில மருந்துகளுக்கு அடிமையாகி போனவர்களில் இவரும் ஒருவர். ஆனால் தன்னுடைய மகள் கண்கலங்காமல் வாழனும் என்பதற்காக திருமண வேலையில் சுறு சுறுப்பாக ஈடுபடுகிறார்.
என்று மணமக்கள் குடும்பங்கள் பற்றிய குறிப்புகள்.
இதோ வரதட்சணை வாங்காத மணமகன் வீட்டாரின் கொல்லைப்புற அடாவடித்தனங்களைப் பார்ப்போம்.
1. பெண் பார்க்க வருகிறார்கள், எப்படியும் குறைந்தது 50 பேர்களுடன்
வருபவர்களுக்கு டி, பிஸ்கட்டு, மிக்சரு, 10 சஹன் அல்வா, டீ பிடிக்காதவர்களுக்கு ரோஸ் மில்க். இவ்வாறாக 13,000 ரூபாய் மணமகள் வீட்டு செலவு.
2. பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லி விட்டார்கள். அவங்க வரதட்சணைதான் வாங்கல, ஏதாச்சும் பண்ணிக்குடுக்க வேண்டாமா என்று 50 முர்தபாவும், கோழி பெரட்டலும், அனுப்பி வைக்கிறோம் என்று தூதுவர்கள் (இவர்களை பற்றி ஒரு தொடரே எழுதும் அளவுக்கு தூதுச் செய்திகள் இருக்கிறது) மூலம் மணமகன் வீட்டிற்கு சொல்லியனுப்பியாச்சு.
வரதட்சணை வாங்காத அந்த புண்ணியக் குடும்பத்தில் உள்ள பெரிய மனுசியொருவர், சீர் செய்தியோடு வந்த தூதுவரிடம் “நாங்க பெரிய பிச்சளம் 50 முர்தபாவுலாம் பத்தாது, 200 முர்தபா அனுப்ப சொல்லுவுள” என்று சொல்லிவிட. அதுவும் ரெடியாகி அடுத்த நாளே மணமகன் இல்லத்திற்கு அவர்கள் கேட்ட 200 முர்தபா, கோழி பெரட்டல் அனுப்படுகிறது.
இப்படி கொஞ்சம் கொஞ்சமா சீருசீராட்டுகள் நடைபெறுவதைக் அங்கொன்றும் இன்கொன்றும் கண்ட மணமகன், “ஏம்மா இதெல்லாம் வாங்குறீங்க, மார்க்கத்துல கூடாதும்மா” என்று கேட்க. “இல்ல வாப்பா நாமலா கேட்கல, எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க, வானா வானாங்க அனுப்புறாங்கம்மா. நாமலா கேட்டு வாங்கினாத்தானே பாவம், அவர்களா தந்தா அது தப்பில்லை வாப்பா” என்று சொல்லி மணமகனின் வாயை பஞ்சு வைத்து அடைக்கப்பட்டாகி விட்டது.
தன் குடும்பம் இது வரை மணமகள் வீட்டாரிடம் வாங்கிச் சாப்பிட்ட பிறகு, அந்த நிலையிலாவது மணமகன் வீட்டார் வாங்கியவைகளை திருப்பி கொடுத்தால்தான் நான் கல்யணம் செய்து கொள்வேன் என்று சொல்ல அந்த மணமகனை திடமற்றவனாக மாற்றி விடுகிறது குடும்ப கவுரவமும், தாய் பாசமும். ஆக 40,000/- மணமகள் வீட்டு செலவு.
3. திருமண கூப்பாட்டில் மணமகள் வீட்டார், மணமகனின் மாமாவையோ அல்லது சாச்சாவையோ அல்லது பேசிமுடித்துக் கொடுத்த மாமியையோ ஞாபக மறதியால் கூப்பிட தவறிய அந்த செய்தி மாப்பிள்ளையின் உம்மாவுக்கு தெரிய வந்தால், அவ்வளவுதான் மிகப்பெரிய வார்த்தைப் போர் ஆரம்பமாகிவிடும். இது ஒன்னு போதும் தலைமுறை தலைமுறையாக குறை சொல்ல. சரி மறந்துவிட்டோம் என்று, திருமணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு திரும்பப் போய் அந்த மனுசனை / மனுசியை கூப்பிட போனால், உலக கவுரவக்காரர்களின் சங்கத் தலைவர் போல் இருந்து கொண்டு வறட்டு பிடிவாதத்தோடு செய்யும் சாட்டித்தனத்தால், மணமகளில் தந்தைக்கு இருக்கும் BP வியாதியை, இருதய நோயாகும் நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு கூப்பிட மறந்த உறவுக்காரர்கள், மணமகள் குடும்பத்தை அலைக்கழிப்பார்கள்.
4. “இன்று இரவு 8 மணிக்கு செப்பு சாமான்களோடு, மணமகளுக்கு முகம் துடைக்க வருகிறோம், என்று சொல்லி நாங்க 50 பேர் வருகிறோம், 100 முர்தபா, கோழி, கடப்பாசி செய்து வைங்க, கடைல வாங்க வேண்டாம், வூட்ல பண்ணுங்க” என்று பகல் 3 மணிக்கு தூதுவர் மூலம் செய்தி அனுப்பப்படுகிறது. “உம்மாடியோவ் திடீர் என்று சொல்லியனுப்பிட்டாகலே, இது பெரிய குடும்பம்லே, வரதட்சணை வாங்காதவோ, புதுசா கேட்டுப்புட்டாஹலே” என்று மணமகள் வீட்டார், அடுத்த நாள் காலை ‘பசியார’வுக்காக தயாரித்து வைத்திருந்த பெருட்களை அரக்கப்பரக்க தயாரித்து, ஒரு வழியாக கேட்ட உணவு வகைகள் ரெடி. முகம் துடைத்து, சாப்பாடு சாப்பிட்டார்கள், அந்த நேரத்தில் மாப்பிள்ளையோட மாமிக்காரி ஒருத்தி சாப்பாட்டில் கோழி வெந்து கரைஞ்சு போச்சு என்று பெண் வீட்டாரிடம் பிரச்சினை பண்ணி, சந்தோசமாக இருக்க வேண்டிய அந்த இரவில் பெண்ணை பெற்றவர்களுக்கு பக் பக் என்று விடியும் வரை ஈரக்கொலையில் ஒரே படபடப்புதான். அன்றைய இரவு திடீர் விருந்தின் செலவு 20,000 ருபாய்.
5. பொதுவாக திருமண தினத்தில் நார்ஸா மணமகள் வீடு தான் கொடுப்பது வழக்கமாக உள்ளது. பெண் வீட்டின் வசதிக்கு தகுந்தாற் போல் பிஸ்கட், தம்ரூட், பூவந்தி என்று கொடுப்பார்கள். இதன் பின்னனி நிறைய பேர்களுக்கு தெரியாது. நிறைய வீடுகளில் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சொல்லும் மணமகன் வீட்டார் தான் முடிவு செய்கிறார்கள். என்ன நார்சா மணமகள் வீட்டார் கொடுக்க வேண்டும் என்று. அந்த நார்ஸா எவ்வளவு விலையானாலும் பெண் வீட்டார் தான் வாங்க வேண்டும். இந்த கொடுமை வரதட்சணை வாங்கவில்லை என்று மார்தட்டிக் கொள்ளும் மாப்பிள்ளை வீட்டாரால் நடத்தப்படுகிறது. நார்சாவுக்கு என்று 5,000 ரூபாய் பட்ஜெட் என்று எண்ணிய பெண்ணின் தந்தைக்கு மேலும் 45,000 ரூபாய் கூடுதல் செலவு.
6. வரதட்சணை தான் நாங்க வாங்கவில்லை, காலை பசியார 100 சஹன் தாருங்கள் என்று கேட்டு வாங்கிய பின்பும், சாப்பாடு பற்றாக்குறை என்று சொல்லி மீண்டும் மணமகள் வீட்டாரிடம் இன்னும் 25 சஹன் அனுப்புங்கள் என்று கல்யாண காலைல கொடுக்குற இனிமா இருக்கிறதே. அல்லாஹு அக்பர். மாப்பிளை வீட்டுக்கு காலை பசியார செலவு: 1,25,000/- ரூபாய்.
7. திருமணம் முடிந்த நாள் முதல் குறைந்த பட்சம் 3 நாட்களுக்காவது, மாப்பிள்ளையுடன், மணமகள் வீட்டிற்கு காலை பகல் இரவு என்றும் அதனைத் தொடர்ந்து திருமணநாள் வர இயலாதவர்கள் லிஸ்ட் என்று ஒன்று போட்டு அவர்களுக்கு சாப்பாடு என்று எகிறும் செலவினங்களை நினைத்தால் கண்ணை கட்டும். உம்மாடி இந்த குடும்பத்திலையா நாம சம்பந்தம் கலந்தோம் என்று பெருமூச்சுவிட வைக்கும் பெண்ணை பெத்தவர்களுக்கு. மணமகள் இல்லத்தில் அந்த 3 நாட்களுக்கு ஏற்படும் செலவு ரூ 50,000/-.
இப்படி கொல்லைப்புறத்து வரதட்சணை லிஸ்ட்டை சொல்லிக் கொண்டே போகலாம். மேலே சொல்லப்பட்டவைகளில் சில நாம் சந்தித்திருக்கலாம், ஆனால் அத்தனையும் ஊரில் நடைபெறுகிறது, மேலும் நிறைய கொல்லப்புர வரதட்சணை கொடுமைகள் நடைபெறுகிறது.
மேலே சொல்லப்பட்டவைகளில் இருந்து கணக்கிட்டு மொத்தம் பார்த்தால், 2,98,000/- ரூபாய் தெருவாசல் வழியாக வரதட்சணை வாங்காத திருமணத்திற்கு கொல்லைப்புறத்தில் கொடுக்கப்பட்ட வரதட்சணைக்கு ஏற்பட்ட செலவும் (இவைகள் தோராய பட்ஜெட்).
வரதட்சணை வாங்காத தவ்ஹீத் மாப்பிள்ளை, தப்லீக் மாப்பிள்ளை என்று வெளிப்புறத்தில் ஒரு தோற்றம், சீர் சீராட்டு, பசியாற, முகம் துடைப்பு சாப்பாடு, பெண் பார்த்தல் உணவு என்று மறைமுகமாக வரதட்சணை வாங்கப்படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மற்றொரு புறம். இது தான் நபி வழியா? இதற்கெல்லாம் எங்கே ஆதாரம் உள்ளது?
இவைகள் திருமணம் விருந்து உபசரிப்பு என்று நமக்கு மேலோட்டமாக தெரிந்தாலும், வெளித்தோற்றத்தில் நடைபெறும் ஒவ்வொரு திருமண தினத்திலும் பெண்ணை பெற்றவர்கள் சந்தோசமாக இருப்பது போல் தெரிந்தாலும், அந்த திருமண நிகழ்வுக்கு பின்னால் நாம் மேற்சொன்ன மணமகன் வீட்டாரின் அடாவடிகளால் பொருளாதார ரீதியாகவும் உளரீதியகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை பெற்றவர்களின் சோகக்கதைகள் எண்ணிலடங்காதவை. பெண் பிள்ளை திருமணத்திற்கு பின்பு சந்தோசமாக இருந்தாலும், பேரக்குழந்தைகள் கிடைத்தாலும், தட்டுத் தடுமாரிய தருணங்களில் திருமண நேரத்தில் மணமகன் வீட்டார் செய்தவைகள் மறக்க முடியாத நிகழ்வாகவே நிலைத்து விடுகிறது.
இங்கு குறிப்பிட்டது அல்லாமல், இன்னும் 'சீர்'கேடுகளும் இருக்கத்தான் செய்கிறது, பின்னூட்த்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். இவைகள் அனைத்தும் படிப்பினை பெறுவதற்கே அன்றி வேறில்லை !
இது போன்ற வரதட்சணைகள், சீர்களை அறவே புறந்தள்ளிவிட்டு மிகவும் எளிமையாக, செலவுகள் குறைவாகவும், வீண் விரையம் இன்றியும் திருமணங்களும் நமதூரில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
சீர் என்று மாற்று பெயரில் இருக்கும் இந்த வரதட்சணை நம் சமூகத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும். பெண் வீட்டார் இவ்விசயத்தில் இனி கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள் அது உங்களுக்கிடையே அன்பை வளர்க்கும் - நபிமொழி, ஆனால் கேட்டுப் பெறுவதற்கு அன்பளிப்பு என்ற ஒரு போர்வை நபிவழியல்ல, அது யாசகம் !
நபிவழிக்கு புறம்பான இத்தீய காரியமான சீர்களுக்கு நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவுகள் அளித்து வந்திருந்தால், அல்லாஹ்விடம் தவ்பா செய்வோமாக. இது போன்ற பாவங்களிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்.
அதிரைநிருபர் பதிப்பகம்