தொடர் : பதினாறு
இஸ்லாமிய பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். (உழைப்புக்குக் கூலி ).
பொருளாதாரத்தை வடிவமைக்கும் முக்கிய காரணிகள் என்று பொதுவான பொருளியல் அறிஞர்கள் குறிப்பிடுவன நான்கு காரணிகளாகும். அவையாவன நிலம், உழைப்பு, முதலீடு, தொழில் முனைவர்கள் ஆகியவைகளாகும். ( LAND, LABOUR, CAPITAL & ENTREPRENEUR).
இந்த நான்கு காரணிகளின் கலவையால்தான் உற்பத்தி எனும் பொருளியலின் அடிப்படை இயக்கம் செய்யப்படுகிறது. இந்தக் காரணிகள் உற்பத்திக்கான தங்களின் பங்களிப்புகளின் அடிப்படையில் தங்களால் உற்பத்தி செய்யப்பட்டவைகளின் உபரிகளைப் பிரித்துக் கொள்கின்றன. நிலத்துக்கு வாடகை (RENT) உழைப்பவர்க்குக் கூலி அல்லது சம்பளம் (WAGES OR SALARY) முதலீட்டுக்கு வட்டி அல்லது இலாபப் பங்கு (INTEREST or DIVIDENT ) தொழில் முனைவோருக்கு இலாபம் (PROFIT) என்கிற அளவில் இவைகள் பங்கிடப்படுகின்றன. ( வட்டி என்றதும் இப்போதே யாரும் அடிப்பதற்கு கம்பைத் தூக்கி விடாதீர்கள்- இது பற்றி நிறைய எழுத இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்) இப்போது சில அடிப்படையான பொருளாதார இயல்புகளைக் குறிப்பிட வேண்டி இருப்பதால் இவற்றைப் பற்றி மட்டும் பேசுகிறோம்.
மேற்கண்ட நான்கு காரணிகளில் எதன் பங்களிப்பு அதிகம்? எதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்? எந்தக் காரணிக்கு மூத்த பங்காளராக இருக்க முடியும் என்பதில்தான் முதலாளித்துவ மற்றும் பொதுவுடமைக் கோட்பாடுகள் போட்டிபோட்டுக் கொண்டு நிற்கின்றன. நிலத்துக்கு முதன்மை இடம் தரப்பட வேண்டுமா? உழைப்புக்கு முதலிடம் தரப்பட வேண்டுமா? இடும் முதலீட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டுமா அல்லது இவைகளை எல்லாம் ஒருங்கிணைத்து நிர்வகிக்கிற தொழில் முனைவோனுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டுமா என்பதில் சர்ச்சைகள் நிலவுகின்றன. ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் உருவாக்கம் என்பது நடைபெற முடியும் என்கிற அமைப்பில் யார் பெரியவன் என்கிற போட்டி நிலவி அதிகார வர்க்கங்கள் தங்களின் பங்கை சிறந்டிக் கொண்டால் எழுவதே உழைப்போர் போராட்டம்.
வங்கிகள் தரும் முதலீட்டுக்கு அதிக வட்டியை சுரண்டிக்கொள்கின்றன. பணம் பத்தும் செய்யும் என்கிற காரணத்தாலும் பணம் உள்ளோனே பலவான் என்பதாலும் பணம் படைத்தவர்களால் தாங்கள் விருப்பம்போல் எதையும் ஆட்டிப் படைக்க முடியும். இதனால்தான் முன்னறிவிப்பின்றி மத்திய வங்கிகளின் வட்டி வீதம் திடீரென்று கூட்டப் படுகிறது குறைக்கப் படுகிறது.
அதேபோல் தொழில் முனைவோர் நிர்வாகத்தில் இருப்பதால் அவர்கள் தடி எடுக்கும்போதெல்லாம் தண்டல்காரர்களாக மாற அவர்களாலும் முடியும். நிர்வாகத்தில் இருப்போர்கள் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தோருக்கும் தங்களின் அதிகாரத்தைக் கொண்டு கூடுதலான சம்பள விகிதங்களையும் சலுகைகளையும் அடைந்து கொண்டு இலாபத்தின் அளவைக் குறைத்துக் காட்டலாம்.
நிலவுடைமை அதிகார வர்க்கங்கள் போடும் ஆட்டமும் அளவற்றது.
எஞ்சி இருப்பது உழைப்போர் வர்க்கமே. இஸ்லாமியப் பொருளாதாரம் உழைப்போர் பக்கமே அதிகம் சார்ந்து இருக்கிறது என்பதை இங்கு நிலை நாட்டுவோம்.
பிழைப்பவரின் பேருழைப்பை முடிந்த மட்டும்
பிழிகின்ற கொடுமைக்குப் பெயர் சுரண்டல்!
உழைப்பவரின் குருதியினை உறிஞ்சுகின்றோர்
உலகினிலே கொழுக்கின்றி சுரண்டல்காரர்!
தழைக்கின்ற வளமனைத்தும் உழைக்காதார்க்கா?
தாழ்வுறுத்தும் வளமையெல்லாம் உழைப்போருக்கு?
உழைக்கின்ற மக்களெலாம் சிந்திக்கின்ற
உழைப்பேற்காக் காரணத்தால் தொடரும் துன்பம்!
அன்புணர்வு மாந்தர் நேயம் என்னும் சொற்கள்
அவற்றின்நற் பொருளிழந்த அலங்கோலத்தால்
முன்பிருந்த நல்லிணக்கம் அமைதி வாழ்க்கை
முற்றிலமாய் இன்றைக்கு எங்கும் இல்லை!
நின்றெண்ணிப் பார்த்திடவே ஒருவருக்கும்
நேரமில்லை; காலமில்லை; விரைவு, ஓட்டம்!
வென்றுயர வேண்டுமெனும் வேகப் போக்கில்
வீழ்த்துவதோ நல்லுணர்வை சிந்திப்பீரே! - என்று ஒரு கவிஞர் புலம்புகிறார்.
உழைப்போர் ஒருதலைப் பட்சமாக வஞ்சிக்கப் பட்டு சுரண்டபட்டதால் உலகில் நடந்த புரட்சிகள் வரலாற்றின் சுவடிகளில் இரத்தக்கறை படிந்தவைகளாகும். இன்னும் இவற்றின் வடுக்கள் உலகெங்கும் நினைவுச்சின்னங்களாய் நிற்கின்றன. தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டமும் புரட்சிகளும் நடைபெறாத நாடுகளே உலகில் இல்லை. இந்தப் புரட்சிகளுக்கும் சிந்தப் பட்ட இரத்தத் துளிகளுக்கும் காரணம் உழைப்போருக்கு உரிய கண்ணியத்தையும், அவர்களின் பங்கையும் அளிக்கத்தவறிய கோட்பாடுகளும் நடை முறைகளுமே.
வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும். ஆனால் அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழைப்பாளிகளை எவரும் கண்டு கொள்வதேயில்லை.
உலகத்தொழிலாளர்கள் பட்ட துன்பங்களின் வரலாறு இப்படி சில சான்றுகளை நமக்குச் சொல்கிறது.
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைப்பாளிகள், முதலாளிகளால் மிக மோசமான முறைகளில் நடத்தப்பட்டனர். எந்தளவிற்கெனில் நாளொன்றுக்கு 12முதல் 18 மணி நேரம் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும் என்றொரு நிலை அன்றிருந்தது. இக்கொடுமைக்கெதிராக பல நாடுகளில் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்களும் கண்டனக்கனைகளும் தோன்ற ஆரம்பித்தன.
இங்கிலாந்தில் வேலை நேராக குறைப்பை கோரிக்கையாக வைத்து
‘சாசன இயக்கம்’ என்றொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
ஃபிரான்ஸில் 1830 களில் நெசவுத்தொழிலாளிகள் 15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை எதிர்த்து 1834 ஆம் ஆண்டு ‘ ஜனநாயகம்’ அல்லது மரணம் என்றொரு கோஷத்தை முன்வைத்து நெசவுத்தொழிலாளிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் .
அமெரிக்காவில் 1832 ல் பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளிகள் 10 மணி நேர வேலை என்றொரு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1835ல் பிலடெல்பியாவிலும்,பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உழைப்பாளிகளால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.
1877 ல் பென்சில்வேனியாவில் சுரங்கத்தொழிலாளிகளும், இரயில்வே தொழிலாளிகளும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1886 ல் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றினைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டதோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது. இதுவும் மே தினம் என்கிற உழைப்பாளர் நாள் உருவாக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில்1856 ல் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மெல்போர்னில் கட்டிடத்தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.
ரஷ்யாவில் 1895 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலங்களில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் குறைவான நேரம் வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றன.
சிக்காக்கோவில்1886 மே 3அன்று ஒரு பிரபலமான நிறுவனத்தின் வாசலில் 3000க்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் கண்டனக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது 4 தொழிலாளிகள் காவல் துறையினரால் சுடப்பட்டு பலியாயினர். இதைக் கண்டிக்கும் வகையில் மே 4 அன்று ஏமார்க்கெட் சதுக்கத்தில் 2500 தொழிலாளிகள் கலந்து கொண்டு மாபெரும் கண்டனக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது திடீரென்று கூட்டத்திற்குள் வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதில் காவல்துறையினரில் ஒருவர் பலியாகவே, உடனே காவல்துறை கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் தலைவர்களை கைதுசெய்து வழக்கும் தொடுத்து 1886 மே21 அன்று 8 பேருக்கு தூக்குத்தண்டணையும் பெற்றுக்கொடுத்தனர்.
1887 ஆம் ஆண்டு அந்த 7பேரும் தூக்கிலிடப்பட்டனர் இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.
8 மணி நேர வேலைக்கான போராட்டமும் சிக்காக்கோ தியாகிகளின் தியாகமும் தான் இன்று மே 1 அன்று உழைப்பவர் தினமாக வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.
பாரீசில் 1889 ஜீலை 14 அன்று பாரீசில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டகூட்டத்தில் 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எனவும் சிகாகோ சதியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு 1890 மே 1 அன்றிலிருந்து அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. இதுதான் ஆண்டுதோறும் மே 1 அன்று உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினம் என்று கடைப்பிடிக்கப் படுகிறது.
இப்படி ஒரு நாளை உழைப்போர்க்கு அறிவித்ததால் மட்டும் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் முழுக்க முழுக்க தீர்ந்தபாடில்லை. மிகவும் பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால் இன்று வரை இன்னும் பல நாடுகளில் பல நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் உழைப்பாளிகள் கொத்தடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவுமே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. அவர்கள் செல்லொணாத்துன்பங்களை சந்தித்து வருகின்றனர். சின்னஞ்சிறு அரும்புகள் குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக கொடுமைகளின் கூடாரத்தில் வாழ்ந்து வருகின்றனர். கல்வி மறுக்கப்பட்டு புத்தக சுமைகளை சுமக்கிற வயதில் கருங்கல் சுமைகளைத் தூக்குகின்ற அவல நிலை பல நாடுகளில் உள்ளன.
தாய்லாந்து போன்ற நாடுகளில் விபச்சாரம் போன்ற இழிவான செயலைக் கூட ஒரு தொழிலாக அரசே அங்கீகாரம் அளித்து இருக்கிறது. இந்தியாவின் சில மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
உழைப்பாளிகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் நடைமுறையில் உள்ள பொருளாதாரக் கோட்பாடுகளின் மூலம் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை.
இவர்களெல்லாம் போராடுவதற்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னாலே உழைப்பாளிகள் எதற்காக பாடுபட்டார்களோ அவை அனைத்தையும் இஸ்லாம் வழங்கிவிட்டது. ஆகவே இஸ்லாத்தால் மட்டுமே அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க முடியும் இஸ்லாம் காட்டுகிற கொள்கைகளால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரப் பொருளாதாரப் பிரச்னைகளைக் களைய முடியும்.
உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து அவர் களின் உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் வழங்கியிருக்கிறதென்றால் அது மிகைப்படுத்தப் பட்டதல்ல. இஸ்லாம் வழங்கும் மனிதாபிமானம் சார்ந்த பொருளாதார அடிப்படை உரிமைகளும் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்து நடந்து கொண்ட விதமும் நடக்கச் சொல்லி போதித்த முறைகளும் உலகெங்கும் கடைப் பிடிக்கப் பட்டால் தொழிலாளர் பிரச்சனைகள் தடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் உலகம் நடைபோடும் வகையில் உற்பத்தி மேலோங்கும்.
இதோ இறைமறையும் நபி மொழிகள் நமக்குத்தரும் சான்றுகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்…
இபுராஹீம் அன்சாரி
25 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,
இப்பதான் தங்கள் வகுப்பை விட்டு வெளியே வருகிறேன். புள்ளி விவரங்களைவிட பிரமிக்க வைக்கின்றது தாங்கள் அவற்றை பட்டியலிட்ட விதம். உண்மையைச் சொன்னால், புள்ளி விவரங்கள்தானே என்று இலகுவாகக் கடந்து போக விடாமல் வரிசையாக வாசிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார் தங்களுக்குள் உள்ள எழுத்தாளர்.
மாஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ்!!!
நமதூர் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரியிலும் பொருளாதார சிறப்பு வகுப்புகள் எடுப்பீர்களானால், சமூகம் பயனுறும். அதற்காக, எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருவானாக, ஆமீன்.
இதுபோன்ற அறிவுஜீவியான கட்டுரையாளர்கள் எழுதும் தளத்தில் வாசகனாக இருக்க பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
(பின் குறிப்பு: மீண்டும் ஒரு முறை நுணுக்கமாக வாசித்துவிட்டு சந்தேகங்கள் எழுந்தால் கேட்கிறேன்)
ஒரே போராட்டம்... போராட்டம் வேலை நிறுத்தம்!
நிறுத்துங்க! இதற்கு தீர்வு இருக்கு அது இஸ்லாத்தில் மட்டுமே இருக்கு ,ன்னு தெளிவாக சொல்லி அதற்கு ஆதாரமும் தரப் போறீங்க!
ஆரோக்கியத்தை அல்லாஹ் தந்து, ஆழமான கருத்துக்கள் அனைவரையும் சென்றடைந்து பொருளாதாரம் சிறக்கட்டும்
காக்கா,
சந்தேகங்கள் என்று ஒன்றுமில்லை. ஆனால், சில விளக்கங்கள் பெற வேண்டி கேட்கிறேன்.
மெற்சொன்னப் போராட்டங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் அந்தப் போராட்டங்களின் பலனாகக் கிடைக்கும் அனுகூலங்கள் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு/நாட்டிற்கு மட்டுமே அமலாக்கப்படுமா, அல்லது உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த உழைப்பாளிகளுக்கும் கிடைக்குமா?
உழைப்பாளி அதிகமாகக் கேட்கிறார் என்று முதலாளியும் முதலாளி குறைவாகத் தருகிறார் என்று தொழிலாளியும் புகார் செய்யும்போது, தொழிலாளிகளுக்கான சரியான கூலியை நிர்ணயிப்பது யார்? அப்படி நிர்ணயிக்க அரசோ, சங்கமோ காரணிகளாகக் கொள்வது எவற்றை?
நிறைய தமிழ் சினிமாவில் காட்டுவதுபோல, தொழிலாளிகளின் கோரிக்கைக்கு மறுக்கும் சர்வாதிகார முதலாளி “கம்பெனியை இழுத்து மூடிவிடுவேன்” என்று பயமுறுத்துகிறாரே, அவருக்கு அந்த உரிமை இருக்கிறதா? 1000 தொழிலாளிகள் வேலை செய்யும் தொழிற்சாலையை ஒரே ஒரு வயிற்றைக்கொண்ட முதலாளி மூடுவதை அரசு அனுமதிக்கிறதா?
நன்றி, காக்கா.
(நான் பொருளாதாரம் பயின்றவனல்லன்)
Sabeer Ahmedo
Excellent explanation of Labor Revolution and well explained about Labor Day.
Deeply impressed here about past Global Labor status and revolution. This is not yet stopped, Still going on in any corner of the world. Why this is happening? Cause of gutter fiscal policy. Islam has cute solution for this problem. Dear Ibrahim Ansari kaka, we are looking your nice script on your upcoming articles.
Abdul Razik
Dubai
அன்புச் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
வாழ்த்துக்கள்! தங்களுக்கு வல்ல அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நல்லருள் புரியட்டும். தொடர்ந்து எழுதுங்கள்!
///உழைப்பாளிகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் நடைமுறையில் உள்ள பொருளாதாரக் கோட்பாடுகளின் மூலம் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை. ///
நிச்சயம் இவர்களிடம் ஒரு தீர்வும் இல்லை!
///உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து அவர் களின் உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் வழங்கியிருக்கிறதென்றால் அது மிகைப்படுத்தப் பட்டதல்ல. இஸ்லாம் வழங்கும் மனிதாபிமானம் சார்ந்த பொருளாதார அடிப்படை உரிமைகளும் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்து நடந்து கொண்ட விதமும் நடக்கச் சொல்லி போதித்த முறைகளும் உலகெங்கும் கடைப் பிடிக்கப் பட்டால் தொழிலாளர் பிரச்சனைகள் தடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் உலகம் நடைபோடும் வகையில் உற்பத்தி மேலோங்கும். ///
உலகையும், மனிதனையும் படைத்த வல்ல அல்லாஹ்வின் சட்டத்தில்தான் இதற்கான தீர்வு இருக்கிறது என்பதை தலையில் களிமன் உள்ள பண முதலைகள் , அதிகார வர்க்கங்கள் ஏற்க (சிந்திக்க) மறுக்கிறார்கள்.
//தாய்லாந்து போன்ற நாடுகளில் விபச்சாரம் போன்ற இழிவான செயலைக் கூட ஒரு தொழிலாக அரசே அங்கீகாரம் அளித்து இருக்கிறது. இந்தியாவின் சில மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. //
தொடர்ந்து வரும் இந்த ஈனத்தொழிலில் எத்தனையோ பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டாலும் ஒரு சின்ன இயற்கையின் சீற்றத்தை கூட தாங்கமுடியாத பொருளாதாரத்தைத்தான் இந்த நாடு கொண்டிருக்கிறது.
இத்தனை நாள் நடந்த தொழிலில் ஏன் மக்கள் வசதியானவர்களாக வாழ முடியவில்லை.??
படைத்த இறைவன் எல்லோருக்கும் பொதுவாக எழுதிய சட்டம் [ குர் ஆனில் ] தொடர்ந்து புரக்கணிக்கப்பட்டதால்.
குர் ஆனில் எழுதியிருப்பதால் அது முஸ்லீம்களுக்கு மட்டும் உள்ள புத்தகம் என்று மற்றவர்கள் நினைப்பதும்...அது அப்படித்தான் என்பதுபோல் முஸ்லீம்கள் நடந்துகொள்வதும் காரணம்,
இதுநாள் வரை நம் சிந்தனைகளை ஓடவிடாத கண்ணோட்டத்தில் உங்களின் கட்டுரைப் பயணம் பயணிக்கிறது !
நிறையபேரால் நேசிக்கவைக்கும் தொடர் ! மாஷா அல்லாஹ் !
//உழைப்பாளிகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் நடைமுறையில் உள்ள பொருளாதாரக் கோட்பாடுகளின் மூலம் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை. //
இவர்கள் என்ன செய்தாலும் "கருங்" கல்லில் முட்டிக்கொண்ட செயலாகவே இருக்கும் இதற்க்கு ஒரே வழி இஸ்லாம் காட்டிய வழியோ
அன்பின் தம்பி சபீர் அவர்களுக்கு,
அலைக்குமுஸ்ஸலாம். காலையில் குடந்தை போய்விட்டு இப்போதுதான் வந்து திறந்து படித்தேன். தங்களின் அருமையான கேள்விகளுக்கு முதற்கண் மிக்க நன்றி. இதற்குரிய பதில்களை தருவதற்கு நாளை காலை வரை அவகாசம்.
தம்பி கவிஞர் சபீர் அவர்கள் இப்படிக் கேட்டிருக்கிறார்கள். இவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு உடையேன்.
தொடக்கமாக, //மெற்சொன்னப் போராட்டங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் அந்தப் போராட்டங்களின் பலனாகக் கிடைக்கும் அனுகூலங்கள் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு/நாட்டிற்கு மட்டுமே அமலாக்கப்படுமா, அல்லது உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த உழைப்பாளிகளுக்கும் கிடைக்குமா?//
தொழிலாளர் போராட்டங்கள் தேவைப்பட்டால் மட்டுமே அந்தந்த நாடுகளில் இருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி போராடப்படுகின்றன. உதாரணமாக நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலையில் தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக ஆக்கும்படி போராட்டம் / வேலை நிறுத்தம் நிகழ்ந்தது. இந்தப் போராட்டத்துக்கு நிரந்தரத் தொழிலாளர்களும் ஒத்துழைப்புக் கொடுத்தனர். தொழிலாளர் சார்பிலும், நிர்வாகத்தின் சார்பிலும் அரசின் சார்பிலுமான முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்று அனைத்துத் தரப்பும் ஏற்றுக்கொள்ளும் உடன்பாடு ஏற்பட்டது. இப்படி உடன்பாடு ஏற்படும்போது அங்கு அழுத பிள்ளை மட்டுமே பால் குடிக்கும். அழாத பிள்ளைகளுக்கு பால் கிடைக்காது. தாயைப் போல் தானே “நினைந்தூட்டும்” முதலாளி வர்க்கத் தாய்மார்கள் இல்லை.
ஒரு தொழிற்சாலையில் நடக்கும் போராட்டத்துக்கான தீர்வு ஒட்டு மொத்த நாட்டுக்கோ அல்லது உலகத்துக்கோ தீர்வாக எடுக்கப்படுவது இல்லை. இதற்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இங்கு மே தினம் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். ஆனால் இந்த மே தினம் உலகம் முழுதும் உள்ள நாடுகளில் இன்னும் முழுதுமாக அமுல படுத்தப் படவில்லை. உதாரணமாக நான் பணியாற்றிய , நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிற ஐக்கிய அரபு அமீரகத்தில் மே தினத்துக்கு விடுமுறை இல்லை.
இரண்டாவதாக,
//உழைப்பாளி அதிகமாகக் கேட்கிறார் என்று முதலாளியும் முதலாளி குறைவாகத் தருகிறார் என்று தொழிலாளியும் புகார் செய்யும்போது, தொழிலாளிகளுக்கான சரியான கூலியை நிர்ணயிப்பது யார்? அப்படி நிர்ணயிக்க அரசோ, சங்கமோ காரணிகளாகக் கொள்வது எவற்றை?//
எல்லா நாடுகளிலும் குறைந்த பட்சக் கூலி சட்டம் என்கிற ஒன்று இருக்கிறது. அத்துடன் விலைவாசிகளின் உயர்வைப் பற்றிய தகவல்களை திரட்டித்தர புள்ளிவிவரத் துறையும் இருக்கிறது.
தேவைப்படும்போது அரசு சம்பளக் கமிஷன் ( PAY COMMISSION) என்ற ஒன்றை அமைத்து சமபள அல்லது கூலி விகிதங்களின் மாற்றங்கள் தேவையா என்று ஆராய்ந்து அறிக்கை கேட்கும். இந்த கமிஷன் சம்பளம் அல்லது கூலியை ஆய்ந்து தேவையான மாற்றங்கள் தேவை அல்லது தேவை இல்லை என்று அறிக்கை தரும்.
பெரும்பாலும் அரசுகள் இந்த கமிஷனின் சிபாரிசுகளை ஏற்றுக் கொள்ளும்.
அப்படி நிர்ணயிக்கக் காரணிகளாக கொள்வது பெரும்பாலும் விலைவாசிகளின் உயர்வு, குறிப்பிட்ட ஆண்டுகளின் விவசாய உற்பத்தி, நாட்டின் தன்னிறைவுகளின் ஏற்ற இறக்கங்கள், வீட்டு வாடகை மாற்றங்கள், மக்களின் வாழ்வுமுறைகளின் வளர்ச்சி/தளர்ச்சி மக்களின் தேவைகளின் மாற்றம், தேவைக்கேற்றபடி அளித்தலின் நிலைமைகள் ( DEMAND & SUPPLY) ஆகியவைகளாகும் .
இந்த PAY COMMISSION பற்றிய ஒரு வேடிக்கை செய்தி . 1970 களில் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு அரசு தங்களின் ஊழியர்களின் சம்பள விகிதங்களைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர ஒரு கமிஷனை அமைத்தது. அதன் தலைவர் பூதலிங்கம்.
அதேபோல் மத்திய அரசும் PAY COMMISSION என்று அமைத்தது. ஒரு மத்திய அரசு ஊழியரும், மாநில அரசு ஊழியரும் சந்தித்தபோது நலம் விசாரித்துக் கொண்டனராம்.
என்ன நலம்? நீங்கள் பேயை எதிர்பார்க்கிறீர்கள் நாங்க பூதத்தை எதிர்பார்க்கிறோம் என்று பதில் வந்ததாம்.
மூன்றாவதாக,
//நிறைய தமிழ் சினிமாவில் காட்டுவதுபோல, தொழிலாளிகளின் கோரிக்கைக்கு மறுக்கும் சர்வாதிகார முதலாளி “கம்பெனியை இழுத்து மூடிவிடுவேன்” என்று பயமுறுத்துகிறாரே, அவருக்கு அந்த உரிமை இருக்கிறதா? 1000 தொழிலாளிகள் வேலை செய்யும் தொழிற்சாலையை ஒரே ஒரு வயிற்றைக்கொண்ட முதலாளி மூடுவதை அரசு அனுமதிக்கிறதா?//
சினிமாவில் நடப்பவை பல உண்மை வாழ்வில் நடப்பதல்ல என்பதை நான் சொல்லியா உங்களுக்குத் தெரியவேண்டும்? சினிமாவில் நடக்கும் நீதிமன்றக் காட்சிகளுக்கும் உண்மை நீதி மன்றங்களுக்கும் எள்ளின் மூக்கின் முனை அளவாவது தொடர்புண்டா?
இருந்தாலும், தங்களின் அன்பான கேள்விக்கு பதிலாக,
அரசு நிலைமைகளை ஆராயும். தொழிலாளர் பிரச்னைகளால் முதலாளிகளால் மூடப்படும் தொழிலின் அத்தியாவசியம் அல்லது அனாவசியம் கருதி அரசே அந்தத் தொழிற் சாலையை முதலாளிகள் நடத்த தன்னால் ஆன உதவிகளைச் செய்யும் அல்லது தானே ஏற்று நடத்த ஆரம்பித்துவிடும். அல்லது அரசுக்கு இருக்கும் இந்த அதிகாரத்தைக் காட்டி முதலாளிகளை மிரட்டவும் செய்யலாம். இதற்கு பயந்து முதலாளிகள் பணியலாம்.
இன்னும் தங்களின் அறிவுபூர்வமான கேள்விகளுக்காக என் இதயக்கதவுகள் திறந்து இருக்கின்றன.
அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு
வ அலைக்குமுஸ் ஸலாம். தங்களின் அன்பான கருத்துரைக்கு ஜசக் அல்லாஹ்.
இதற்கான காரணம் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எத்தி வைப்பதில் நாம் காட்டும் பொடுபோக்குத்தான். அழைப்புப் பணிக்கு இடையூறாக அரசியல் புகுந்துவிட்டது. மனித குலத்துக்கு இறக்கப் பட்ட மாமறை இன்னும் சகல இடங்களிலும் சரியாக சென்று சேர்க்கப் படவில்லை.
தம்பி ஜாகீர் அவர்களும் தாய்லாந்து நிகழ்வை கோடிட்டுக் காட்டி இருக்கிறார்கள். இதேபோல் ஆப்ரிக்காவில் பல நாடுகளின் மக்கள் என்ன மார்க்கத்தில் இருக்கிறார்கள் என்றே தெரியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். வந்தானுக்கு வந்தான் போனானுக்குப் போனான் என்று வாழ்க்கை ஓடுகிறது பல இடங்களில்.
இன்ஷா அல்லாஹ் அழைப்புப் பணி ஆர்ப்பரித்து எழவேண்டும். இஸ்லாத்தைப் பரப்பும் இயன்க்கங்கள் எழுச்சி பெற வேண்டும். போலி போஸ்டர் இயக்கங்கள் புதைக்கப் படவேண்டும்.
எல் கே ஜி பசங்களுக்குக்கூட புரியும் தங்களின் விளக்கங்கள். மிக்க நன்றி காக்கா.
(கேள்வி - பதில் பகுதி ஒன்று ஆரம்பித்தால் என்ன அ.நி.?)
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
// மே தினம் உலகம் முழுதும் உள்ள நாடுகளில் இன்னும் முழுதுமாக அமுல படுத்தப் படவில்லை. உதாரணமாக நான் பணியாற்றிய , நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிற ஐக்கிய அரபு அமீரகத்தில் மே தினத்துக்கு விடுமுறை இல்லை.//
தகவலுக்காக.
இங்லாந்தில் மே மாதம் முதல் திங்கள் கிழமை தான் மே தின விடுமுறை (1ந்தேதி அல்ல)
இஸ்லாம் மட்டுமே தொழிலாளர்களுக்கு உரிய உரிமையயும்,கண்ணியத்தையும் வெட்ட வெளிச்சமாக உலகுக்கு சொல்லித் தருகிறது என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளீர்கள். மாஷா அல்லாஹ்...!! பொருளாதார பாடம் சிறப்பாக நடத்தி வரும் தங்களுக்கு அல்லாஹ் நற்சுகத்தோடு கூடிய நீண்ட ஆயுளைத் தருவானாகவும்... ஆமீன்......!!!
இஸ்லாம் மட்டுமே தொழிலாளர்களுக்கு உரிய உரிமையயும்,கண்ணியத்தையும் வெட்ட வெளிச்சமாக உலகுக்கு சொல்லித் தருகிறது என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளீர்கள். மாஷா அல்லாஹ்...!! பொருளாதார பாடம் சிறப்பாக நடத்தி வரும் தங்களுக்கு அல்லாஹ் நற்சுகத்தோடு கூடிய நீண்ட ஆயுளைத் தருவானாகவும்... ஆமீன்......!!!
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,
மாஷா அல்லாஹ், அருமையான விளக்கம். ஜஸக்கல்லாஹ் ஹைரன்.
//இஸ்லாம் வழங்கும் மனிதாபிமானம் சார்ந்த பொருளாதார அடிப்படை உரிமைகளும் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்து நடந்து கொண்ட விதமும் நடக்கச் சொல்லி போதித்த முறைகளும் உலகெங்கும் கடைப் பிடிக்கப் பட்டால் தொழிலாளர் பிரச்சனைகள் தடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் உலகம் நடைபோடும் வகையில் உற்பத்தி மேலோங்கும். //
ஒரு சிலர் இறையச்சத்துடன் கடைப்பிடித்து வருகிறார்கள். அல்லாஹ் அது போன்ற நல்லவர்களுக்கு செல்வசெழிப்பை அதிகமதிகம் கொடுக்கிறான்.
செல்வமும் பிள்ளைகளும் அல்லாஹ் நமக்கு கொடுக்கும் சோதனை எனபதை உணர்ந்தாலே போதும்.
தகவலுக்காக...
ஈசா நபி திரும்பி இவ்வுலகிற்கு வரும் போதும், வாங்குவதற்கு ஆளில்லாமல் எல்லோரிடமும் செல்வம் பெருகெடுத்து ஓடும் என்று காரணத்தோடு நம் கண்மனி நபி(ஸல்) அவர்கள் முன்னறிவுப்பு செய்துள்ளார்கள்.
// இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
Bukari: 2222, Volume :2 Book :34//
Abdul Razik சொன்னது…
அதே சிறந்த தொழிற் புரட்சியின் விளக்கம் தொழிலாளர் தினத்தை பற்றி விளக்கினார்.
ஆழ்ந்த கடந்த உலக தொழிலாளர் நிலை மற்றும் புரட்சி பற்றி இங்கே ஈர்க்கப்பட்டார். இந்த இன்னும் இன்னும் உலகின் எந்த மூலையில் நடந்து, நிறுத்தி இல்லை. ஏன் இப்படி நடக்கிறது? நீரோடி நிதி கொள்கையின் காரணமாக. இஸ்லாமியம் இந்த பிரச்சனைக்கு அழகான தீர்வை உள்ளது. இப்ராகிம் அன்சாரி காகா கண்ணே, நாங்கள் உங்கள் வரவிருக்கும் கட்டுரைகளில் உங்கள் நல்ல ஸ்கிரிப்ட் தேடும்.
அப்துல் Razik
துபாய்
//Canada Kader சொன்னது…
Abdul Razik சொன்னது…
அதே சிறந்த தொழிற் புரட்சியின் விளக்கம் தொழிலாளர் தினத்தை பற்றி விளக்கினார்.
ஆழ்ந்த கடந்த உலக தொழிலாளர் நிலை மற்றும் புரட்சி பற்றி இங்கே ஈர்க்கப்பட்டார். இந்த இன்னும் இன்னும் உலகின் எந்த மூலையில் நடந்து, நிறுத்தி இல்லை. ஏன் இப்படி நடக்கிறது? நீரோடி நிதி கொள்கையின் காரணமாக. இஸ்லாமியம் இந்த பிரச்சனைக்கு அழகான தீர்வை உள்ளது. இப்ராகிம் அன்சாரி காகா கண்ணே,
நாங்கள் உங்கள் வரவிருக்கும் கட்டுரைகளில் உங்கள் நல்ல ஸ்கிரிப்ட் தேடும்.//
Mr.கனடா காதர், அப்துல் ராஜிக் என்னா சொல்ல வர்றீங்க ஒன்னுமே புரியலே!
அன்பின் தம்பி ஜகாபர் சாதிக் அவர்களே! சகோதரர்கள் கனடா காதர் அவர்களும் ராசிக் அவர்களும் சொல்ல வருவது புரியவில்லையா?
ராசிக் அவர்கள் மேலே ஆங்கிலத்தில் இட்டுள்ள பின்னூட்டத்தின் கூகுள் தமிழின் மொ(வி)ழி பெயர்ப்பே அது என எண்ணுகிறேன். அதனால்தான் இந்த அறுபது வயது அன்சாரியை கண்ணே என்றெல்லாம் அழைக்கிறது.
அவர்கள்தான் உறுதிப் படுத்த வேண்டும்.
//கேள்வி பதில் பகுதி ஒன்று ஆரம்பித்தால் என்ன?//
அருமையான யோசனை. அந்தந்த துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலை தெரிந்தவர்களிடமிருந்து கேட்டுப் போடலாம்.
மார்க்கம், சட்டம், வாழ்வியல், மருத்துவம் , முதலீடு. சுற்றுலா இன்ன பிற துறைகளுக்கான கேள்விகளை சந்தேகங்களை விளங்க வைக்கலாம்.
தம்பி சபீர் அவர்களின் கருத்துக்கு நான் ஓட்டுப் போடுகிறேன்.
////கேள்வி பதில் பகுதி ஒன்று ஆரம்பித்தால் என்ன?//
அருமையான யோசனை. அந்தந்த துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலை தெரிந்தவர்களிடமிருந்து கேட்டுப் போடலாம்.
மார்க்கம், சட்டம், வாழ்வியல், மருத்துவம் , முதலீடு. சுற்றுலா இன்ன பிற துறைகளுக்கான கேள்விகளை சந்தேகங்களை விளங்க வைக்கலாம்.
தம்பி சபீர் அவர்களின் கருத்துக்கு நான் ஓட்டுப் போடுகிறேன். ///
காக்கா(ஸ்): இது நீண்ட நாள் விருப்பம், இதற்கென ஏற்கனவே ஒப்புக் கொண்டவர்கள் மற்றும் இனியும் ஒப்புக் கொள்பவிருப்பவர்களுக்கும் நீண்ட ஆயுளுடன் தொடர அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
மே தினமென்றால் தொழிலாளர்கள் தினம் ஆனால் அது எப்படி உருவாக்கப்ப்டாது என்பதௌ புள்ளியல் விபரங்களுடன் தொகுத்தது அருமை...
இங்கு இதைபற்றி பேச மன்னிக்கவும்,
சில தினங்களுக்கு முன் வெளிவந்த “பரதேசி” என்ற சினிமாவில் தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளும், அவர்களின் கூலிகளும் மறுக்கப்பட்ட விதத்தை சொல்லியிருக்கு. 1939ல் நடந்ததாக காண்பிக்கப்படுகிறது, ஆனால் இன்றும் இதே அவல நிலை தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கு என்பதை நினைத்தால் இஸ்லாம் சொல்லியிருக்கும் லேபருக்கான விதியை அடுத்த பதிவில் எதிர்பார்த்து....
எல்லா பிரச்சனைகளையும் முளையிலயே கிள்ளி எறிவதில் இஸ்லாம் வழிகாட்டுகின்றது ..தொழிலாளிகளின் விசயத்தில் எவ்வாறு என்பதை படிக்க மிக ஆர்வலாக இருக்கின்றோம்....
Post a Comment