Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 17 20

அதிரைநிருபர் பதிப்பகம் | May 25, 2013 | ,



தொடர் : பதினேழு

இஸ்லாமிய பொருளாதாரத்தைத்  தாங்கி நிற்கும் தூண்கள். ( உழைப்பு க்குக் கூலி ) 

உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து அவர் களின் உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் வழங்கியிருக்கிறதென்றால் அது மிகைப்படுத்தப் பட்டதல்ல. இஸ்லாம் வழங்கும் மனிதாபிமானம் சார்ந்த பொருளாதார அடிப்படை   உரிமைகளும்  நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்து நடந்து கொண்ட விதமும் நடக்கச் சொல்லி போதித்த முறைகளும்  உலகெங்கும் கடைப் பிடிக்கப் பட்டால் தொழிலாளர் பிரச்சனைகள் தடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் உலகம் நடைபோடும் வகையில்  உற்பத்தி மேலோங்கும்.  

இதோ இறைமறையும் நபி மொழிகள் நமக்குத்தரும் சான்றுகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் என்று கடந்த வாரம் கண்டோம். இனி தொடர்ந்து இஸ்லாம் காட்டியும் கற்றும்  தரும் வழிமுறைகளைக் காணலாம்.  

“உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.” 

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி: 5460.

‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில்சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்” என மஃரூர் கூறினார். புகாரி: 30.

”மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன், 

 சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் 

கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி: 2270.

ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய பணியாளரிடம் அவர் (ஏதாவது தவறிழைத்துவிட்டால்) எத்தனை முறை மன்னிப்பை மேற்கொள்வது?என்று கேட்க நபியவர்கள் மௌனம் காத்தார்கள் பிறகு அம்மனிதர் மீண்டும் அதே போன்று கேட்க ஒவ்வொரு நாளும் எழுபது முறை மன்னிப்பை மேற்கொள்வீராக என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். திர்மிதீ: 1949.

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்து கொண்டிருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியார் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம் கொடுத்தனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந் தார்களோ அந்தத் துணைவியார் கோபமுற்று  அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு கீழே விழுந்து உடைந்துவிட்டது. உடனே ஆத்திரப்படாமல் நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை பொறுமையாக ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், அங்கிருந்த தோழர்களை நோக்கி, ‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை அங்கேயே நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார துணைவியாரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக் குரியவரிடம் நல்ல தட்டை மாற்றாகக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். புகாரி: 5225.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை” என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  புகாரி: 6038.

“உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள் ”  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி: 30 .

கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்துவிடுங்கள் என்பதும்    தன் அடிமைகள் மீதும் பணியாட்கள் மீதும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என்கிற இந்த  பெருமானார்( ஸல்) மொழிந்த முத்துக்களும் உலகப் புகழ்பெற்றவை. 

இஸ்லாம் தோன்றி வளர்ந்த அரபு நாடுகளில் கூட  தொழிலாளர் உரிமைகள் மதிக்கப் படுகின்றனவா?   தொழிலாளரை சுரண்டி வாழ்வது நிறுத்தப் பட்டுவிட்டதா? ஆகிய கேள்விகளை நமக்குள் எழுப்பிப் பார்ப்போமானால் மனசாட்சியுடையோர் “ இல்லை” என்றே  தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொல்ல முடியும்.  இறைவனின் கட்டளைக்கு மாறுபாடு செய்யப்படுகிற பல கதைகளை நாம் கேட்டுவருகிறோம். ஒரு அரபி தன் கீழ் பலரை   வெளியில் வேலை செய்யவிட்டுவிட்டு அப்படி வியர்வை வடித்து  உழைப்போர் இடமிருந்து மாதாமாதம் கறக்கும் பணம் அவரை கொழிக்கவும் செழிக்கவும் வைக்கிறது.  உழைக்காதவருக்கு உண்ண உரிமையில்லை . ஆனால் அத்தகையோர் உண்ணும்  ஒவ்வொரு பருக்கைக்கும் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இன்று சவூதி அராபியாவில் பலர் கண்கலங்கி நிற்க காரணம் இந்த ப்ராக்சி முறைதான். இஸ்லாம் தழைத்த நாடுகளில் – தியாக சஹாபாக்கள் ஒட்டிய வயிற்றில் கல்லை உளமொப்பிக் கட்டிக் கொண்டு பட்டினி கிடந்தது வளர்த்த இஸ்லாத்தின் நிழலில் இருப்போர் இப்படி அத்து மீறுவது அழகல்ல. அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை இவர்கள் தொடர்ந்து மறந்து வருகிறார்கள்.  

மேலும் அரபு நாடுகளில் வீட்டு வேலைக்குப் போகும் “கத்தாமா” எனப்படுகிற வீட்டுவேலை செய்யும் பெண்கள் அல்லலுற்று ஆற்றாது அழும்  கண்ணீர் செல்வத்தை தேய்க்கும் படையாகப்   போய்விடுமோ என்பதே நம் அச்சம். கொடுத்தும் பார்க்கிற இறைவன் கெடுத்தும் பார்ப்பான். அல்லாஹ் இன்னும் அத்தைகையோருக்கு நல்வழி காட்டுவானாக. 

நவீன உலகில் தனியார் மயம், உலக மயம், தாராள மயம் ஆகியவை  ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் பல உலகப் பொருளாதாரத்தின் சீர்கேட்டிர்கான வாயில்களைத்  திறந்து விட்டிருக்கின்றன.   மீண்டும் உலகெங்கும் ஆட்  குறைப்பு, வேலைவாய்ப்பின்மை, சுரண்டல் ஆகியவை அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன.  அமெரிக்கர்களும்  யூதர்களும் கோலோச்சுகிற  உலக வங்கியின் கட்டளைகளை உலக நாடுகள் பின்பற்றத்தொடங்கியதும் உலகப் பொருளாதாரத்தில் சீரழிவுகளை உழைப்போருக்கெதிராகவும் அரங்கேற்றி விட்டன.  அனைத்து அழிவுப்பதைகளில் இருந்தும் இஸ்லாமே உலகைக் காப்பற்ற வேண்டும். 

தொடர்ந்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ். 
இபுராஹீம் அன்சாரி

20 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இ.அ காக்க தங்களின் இஸ்லாமிய பொருளாதார சிந்தனையை உரசிப் பார்க்க நேரமில்லாத்தால் மேலோட்டமாக பார்வையை மட்டும் செலுத்திவிட்டு செல்கிறேன்.சாரி......... காக்கா .

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அருமையான விளக்கங்கள். கட்டுரையோடு ஒட்டியவாறு அமைந்த நபிமொழிகளின் நேர்த்தியான அணிவகுப்பு. இக்காலகட்டத்தில் தொழிலாளர்களுக்கான கூலி தருவதில் உலக நாடுகளின் நிலைபாடு என்று துல்லியமாக ஆராய்கிறது கட்டுரை.

இந்தக் கட்டுரை உருவாக்கத்திற்கான தங்களின் கடின உழைப்பை உணர முடிகிறது.அதற்கான கூலி தருவதில் அல்லாஹ் மிகைத்தவன் என்பது தாங்கள் அறிந்ததே.

தொடரட்டும் எழுத்துச் சேவை இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய கூலியில் இன்று காணப்படும் அவலத்தையும், அது பற்றி இஸ்லாத்தில் சொல்லப்பட்ட அருமை விளக்கங்களும் தெளிவாக தந்திருக்கிறீர்கள். இத்தகு மார்க்க சேவைக்கு அல்லாஹ் மகத்தான கூலியை உங்களுக்கு தருவான். இன்சா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

காக்கா,

கூலி தருவது குறித்து நபி மொழிகளாகவே தந்திருக்கிறீர்களே, இறை வசனங்களும் தந்தால் கட்டுரை மேலும் வலுவடையும் என்பது என் கருத்து.

அடுத்தடுத்த அத்தியாயங்களில் தரயிருக்கிறீர்கள் என்றால் என் முந்திரிக்கொட்டைத்தனத்தைப் பொறுக்கவும்.

Shameed said...

நல்ல விளக்கங்களும் அருமையான நபி மொழிகளும்

Unknown said...

பொருளாதாரப் பாடத்துடன் சேர்த்து ஹதீஸ் பாடங்களையும் நடத்தி வரும் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு, அல்லாஹ் எல்லாவித பரக்கத்துக்களையும் தருவானாகவும்,ஆமீன்...

ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari,

//.சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் //


இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் [ உலக நாடுகளில் ] புதிய சட்டம் Anti Human Trafficking Act இதன் அடிப்படையில் உருவானது.

இப்படியெல்லாம் நடக்கும் என்று நபி முஹம்மது [ ஸல் ] அவர்கள் ஏற்கனவே தடை விதித்திருக்கிறார்கள்.


உங்கள் ஒவ்வொரு வரியிலும் இஸ்லாம் ஏற்கனவே 'வருமுன் காக்கும்" சட்டங்களை இயற்றியிருப்பதன் உண்மையை விளக்குவதன் மூலம் இஸ்லாமிய தாக்வா பணியில் ஈடுபட்டிருக்கும் ஆக்கமாக இதை கருதுகிறேன்.


Anonymous said...

/இஸ்லாம் தோன்றி வளர்ந்த அரபு நாடுகளில்கூட//

இந்த பத்தி முழுதும் சொன்னவை எல்லாம்உண்மை. உண்மைஅன்றி கற்பனை அல்ல; அரபு நாட்டில் மட்டும் அல்ல அதிராம்பட்டினதிலிருந்து அமேசான்கரை வரை இஸ்லாமிய முதலாளிகள் செய்யும் அட்டகாசம் இது. ஒரு நாளைக்கு ஐவேலை தொ ழுகையும்ஆண்டுக்கு ஆண்டு ஹஜ் யாத்திரையும்" கை" கொடுக்கும் என்றநம்பிக்கைஅவரகளின் பாவத்தை புனிதமாக்குமா? "இந்தமுதலாளிகள் முதலாளி ஆனது இப்படிதான். பிறகு.. எப்படி மாறுவார்கள்இந்த. ருசி கண்ட பூனைகள்? "ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரபபா நீ" என்றார் புரட்சி கவிஞர் பாரதிதாசன். உணர்வுகள் பொங்கி வரும் காலம் எப்போதப்பா?

முகம்மது ஃபாரூக்

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் ! நன்றி.

தம்பி சபீர் அவர்களுக்கு,

திருமறையின் வசனங்களை குறிப்பிடவில்லை என்கிற தங்களின் கருத்து நியாயமானதே. அதேநேரம் எனது நான் படித்தறிவைகளிலே பேசுபொருளை நேரடியாக எளிதில் விளக்குவதற்காக நபிமொழிகளைக் குறிப்பிட்டேன்.

திருமறையில் பேசுபொருள் பற்றி நான் படித்தறிந்தவரையில் பல குறிப்புகள் இருந்தாலும் அவை நேரடியாக சொல்லப் படாமல் இருந்ததால் நீண்ட விளக்கங்கள் கொடுத்து விளக்க வேண்டி வருமென்பதால் நீளம் கருதி குறிப்பிடவில்லை.

உதாரணமாக

( நம்பிக்கை கொண்டோரே) நீங்கள் நீதி செலுத்துமாறும் நன்மை புரியுமாறும் உறவினர்களுக்கு உதவிசெய்யுமாறும் நிச்சயமாக அல்லாஹ் கட்டளை இடுகிறான் (16:90)

என்கிற வசனத்தையும்

மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டிய பொருள்களை நீங்கள் குறைத்துவிடாதீர்கள் . பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள் (26:183)

என்கிற வசனத்தையும்

" நீங்கள் ஒருமற்றவரின் பொருளைத் தவறான வழியில் உண்ண வேண்டாம் " (2:188) என்கிற வசனத்தையும்

இந்தத் தொடரில் இணைத்து எழுதி இருந்தேன். இவைகளின் விளக்கம் நீண்டது. அத்துடன் இவைகள் பொதுவாகக் கூறப்படுபவையாகத் தோன்றியதால் நபிமொழிகளை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

நபி மொழியும் இறைமறையின் விளக்கமும் வெளிச்சமும்தான் என்கிற உறுதிப்பாட்டில்.

ஜசக்கல்லாஹ் ஹைரன்.

பாசமிகு மச்சான் முகமது பாரூக் அவர்கள் தந்திருக்கிற பின்னூட்டம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. நன்றி.

புரட்சிக்கவிஞ்ர் பாரதிதாசன் உழைப்போருக்காக பாடிய பாடலை நினைவு படுத்திவிட்டீர்கள்

சித்திரச்சோலைகளே! உம்மைத் திருத்த
இப்பாரினிலே முன்னர்
எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேர்களிலே - என்று பாடியவர்

பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்
பெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்!
நீரோடை நிலங்கிழிக்க நெடும ரங்கள்
நிறைந்துபெருங் காடாக்கப் பெருவி லங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
புதுக்கியவர் யார்?அழகு நகருண் டாக்கி!

சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கிய நல்வாய்க் காலும்வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?

கற்பிளந்து, மலைபிளந்து, கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?

அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி
அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்
இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்
இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்
புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்
புனலுக்கும், அனலுக்கும், சேற்றினுக்கும்,
கக்கும்விஷப் பாம்பினுக்கும், பிலத்தி னுக்கும்,
கடும்பசிக்கும், இடையறா நோய்க ளுக்கும்,

பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்
பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்
சலியாத வருவாயும் உடைய தாகத்
தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்
எலியாக, முயலாக, இருக்கின் றார்கள்
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக்கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?

- என்றும் தொழிலாளர்கள் நரம்பு முறுக்கேறப் பாடியவனும் பாரதி(ர) தாசனே. நினைவூட்டியமைக்கு நன்றி.


Ebrahim Ansari said...

தம்பி அபூபக்கர், எம் ஹெச் ஜெ. , முகமது இப்ராஹீம் , மருமகன் சாவன்னா ஆகிய அனைவரின் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.

Unknown said...

தனக்கு விரும்புவதை தன் (மு'மினான)சகோதரனுக்கும் விரும்பும்வரை
ஒருவன் உண்மையான மூமினாக ஆகமுடியாது. (நபி ஸல் )

எவ்வளவு ஒரு பரந்த உள்ளத்தை போதிக்கின்ற மார்க்கம் இஸ்லாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும் அது எந்தத்துறையாக இருந்தாலும் சரி, அதி மேதாவிகளும் சரி, அடி முட்டாளும் சரி ஒவ்வருவனும் எடுத்து வாழ்வில் பின்பற்றியே ஆக வேண்டிய சொல்லாகத்தான், ஒரு மனிதாபினம் பேணப்படுகின்ற வழியை ஒட்டித்தான் ரசூல் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அமையப்பெற்றிருந்தது.

உழைப்பவனின் வியர்வை நிலத்தில் சிந்துமுன் அவன் கூலியைக் கொடுத்து விடுங்கள் என்ற சொல் படிப்பதற்கு ஒரு சில வாக்கியங்களைப்படிப்பதுபோல் இருக்கலாம். ஆனால் அதில் உள்ள ஆழமான கருத்தை ஆராய்ந்து பார்த்தால் ஒரு உழைப்பவனின் உரிமை எவ்வளவு ஆணித்தரமாக சொல்லப்பட்டிருக்கின்றது என்ற உண்மை தெரியவரும். மேலும் இந்தக்காலத்தில் உழைத்து ஐந்து மாத சம்பள பாக்கி , ஆறு மாத சம்பள பாக்கி , என்றல்லாம் கேள்விப்படுகின்றோம் , அதுவும் அல்லாமல் , உழைப்பவனுக்கு அவனுடைய கூலியை அவனுக்கு தேவையான காலத்தில் கொடுக்காமல் அதை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு காலம் தாழ்த்தி கொடுக்கும் கொடுமையையும் பார்க்கின்றோம். இதைவிட ஒரு ஹராமான சம்பாத்தியம் வேறென்ன இருக்க முடியும் ?

இஸ்லாத்தில் பெயரளவில் இருந்துகொண்டு ஒரு கொடுமையான செயலில் இறங்கி மனிதாபிமானத்தை குழி தோண்டி புதைத்து அதன் மேல் நடமாடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த பூமியும் இதற்க்கு விதி விலக்கல்ல. உழைக்கும் வர்க்கம் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. கொழுக்கும் வர்க்கம் கொழுத்துக்கொண்டுதான் இருக்கின்றது. இடையில் உள்ள இடைவெளியோ நீண்டு கொண்டே செல்கின்றது, ஏனனில் அல்லாஹ்வின் தூதரின் சொல்லின் தாக்கம் இவர்களின் நெஞ்சை தொடவில்லை . அது பின்னுக்குத்தள்ளப்பட்டு, உலக மாயை, பேராசை, பொறாமை, என்னும் மாய உலகின் வலையில் வீழ்ந்து அதிலிருந்து மீண்டு வரா ஒரு நோயில் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்நோய் நீங்கினால் ஒழிய இவர்கள் திருந்தப்போவதில்லை

திருந்துவதும் , திருந்தவைப்பதும் , என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ
அவன் கையில்.

திருந்துவார்கள் என்று நம்புவோம்.

ஆமீன்.

அபு ஆசிப்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நம் சகோதரர்கள் படும் இன்னல்களை எழுத ஆரம்பித்தால் நீண்ட தொடராகி விடும். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் தொடர்பே இல்லாத ஆள் சப்ளை வேலையை எவன் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. இந்த முறையை கண்டுபிடித்தவனுக்கும் செய்து கொண்டு இருப்பவனுக்கும் கீழ்க்கண்ட நபிமொழியே! போதும் திருந்துவதற்கு???

///சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்

கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி: 2270.////

அழகிய ஹதீஸ் ஆதாரத்துடன், விளக்கத்துடன் வழங்கியதற்கு வாழ்த்துக்கள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கோடிட்டு காட்டிய ஹதீஸ்கள் கோடிகள் புழங்குமிடத்தில் அடிக்கடி பதிக்கப்பட வேண்டியவைகள் !

//சுதந்திரமானவை (அடிமையாக) விற்று கிரயத்தை சாப்பிட்டவன் !//

இதில் எத்தனை விதமான கிரயம் பெற்றவர்களை பட்டியலிடலாம் !

காக்கா, நீங்கள் கட்டுரைக்கு எடுக்கு ஆய்வு நேரங்களை எண்ணி வியந்திருக்கிருக்கிறேன், அதுமட்டுமல்லா எத்தனையோ அலுவல்களுக்கு மத்தியில் இவ்வாறான தங்களின் சிறப்பான பணி செழிப்பாக இருப்பதற்கு தங்களின் ஆர்வமும் சமுதாய அக்கரையும் அதோடு எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும்.... ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

இன்னொரு அத்தியாத்திற்கு எடுக்கும் சிரத்தை தாங்கள் பின்னூட்டங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவமும் அதற்கு கொடுக்கும் விளக்கங்களும். !

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தை வழங்குவானாக !

Ebrahim Ansari said...

அருமைச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் அங்கீகாரத்துக்கு நன்றி.

ஒரு "அரபாப்" என்கிற பெயருடைய ஸ்பான்சரின் கீழே இருந்து கொண்டு அவனுக்கு மாதாமாதம் அவனுடைய வாசலில் போய் கால் கடுக்கக் காத்திருந்து கப்பம் கட்டும் முறைகள் - வேலையே இல்லாவிட்டாலும் - வருமானமே இல்லாவிட்டாலும் - விசா புதுப்பிக்க மற்றும் அடையாள அட்டை புதுப்பிக்க பணம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் - அப்படியே பணம் கொடுத்தபிறக்கும் அந்தப் பணத்தை தனது சொந்த ஆடம்பரத் தேவைகளுக்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் பணம் கொண்டுவரச்சொல்லும் பணவெறி பிடித்தவர்கள் ஆகியோரின் கதைகளை நிறையக் கேட்டு இருக்கிறோம். சில ஆடம்பர அரபுகளின் உல்லாச வாழ்வுக்கு பலியாவது ஆசியத் தொழிலாளர்களின் வியர்வை. இது கண்கூடு. நாம் காணும் கொடுமைகள்.

உண்மையை உரக்கச் சொல்வோம் என்கிற முறையில் இந்த அவலங்களைப் பற்றியும் விளக்கமாக யாரேனும் எழுதினால் நலமாக இருக்கும். இஸ்லாம் போதித்த முறைகளுக்கு மாறுபாடுகள் -அதுவும் மிகத்தீவிரமாக - கொடுமையாக இஸ்லாம் பிறந்த மண்ணிலே அரங்கேறுவது உள்ளத்தை நடுங்கச் செய்கிறது.

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி அபூ இப்ராஹீம்.

தாங்கள் தொடந்து காட்டிவரும் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஆறுதல் மற்றும் உற்சாக வார்த்தைகளுக்கும் என்றென்றும் கடமைப் பட்டு இருக்கிறேன்.

அதிரை நிருபர் வட்டம் ஒரு அழகிய குடும்பம் என்பதே என் கருத்து. இந்தக் குடும்பத்தில் பல முத்துக்கள் ஜொலிக்கின்றன.

மூத்தோர் இளையோரை அரவணைப்பதும் இளையோர் மூத்தோரிடம் காட்டும் பணிவும் அன்பும் பலருக்கும் உதாரணம்.

அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி அபூ ஆசிப் அவர்களுக்கு,

மிகவும் அருமையான கருத்துக்களை எனது இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து இந்தத் தொடரில் தங்களின் அன்பான கருத்துக்களை எதிர் நோக்கியவனாக,

Ebrahim Ansari said...

// சுதந்திரமான ஒருவனை அடிமையாக விற்று // என்கிற இந்த ஹதீஸின் வரிகளின் பின்னால் பல கண்ணீர்க் கதைகள் இருக்கின்றன.

உலகின் அடிமை வியாபாரம் பற்றியும் உலகப் பொருளாதார வரலாற்றில் அதன் தாக்கம் பற்றியும் எழுதவேண்டுமென்று பல நாட்களாக கண்டு வரும் கனவு இப்போது எழுதி வரும் பொருளாதாரத்தொடர் நிறைவுற்றதும் நிறைவேறத்தொடங்குமென நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்.

அப்துல்மாலிக் said...

நன்றி காக்கா

இதே நேரத்தில் அமீரகத்தில் இயங்கும் இஸ்லாமிக் வங்கிகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள ஆசை, இப்போது இந்த வங்கிகளும் பெர்சனல் லோன், கார் லோன் இப்படி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், ஷரீயத்துக்கு கட்டுப்பட்டு வட்டி இல்லாமல் கொடுப்பதாக சொல்கிறார்கள் ஆனால் ஒன்னுமே புரிய மாட்டேங்குது..

Ebrahim Ansari said...

தம்பி அப்துல் மாலிக்

இன்ஷா அல்லாஹ் நீங்கள் கேட்டவை பற்றியும் விவாதிக்கலாம். காத்திருக்க வேண்டுகிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு