Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தண்ணீர் ! தாகம் தீர்க்கவா ? தாரை வார்க்கவா? – இரண்டாம் பகுதி 22

அதிரைநிருபர் பதிப்பகம் | May 04, 2013 | , ,


இந்த தலைப்பில் பகுதி ஒன்று கடந்த 2012 ஏப்ரலில்  அதிரைநிருபர் வலைதளத்தில் ஒரு எச்சரிக்கையூட்டும் ஆக்கமாக என் பெயரில் பதியப்பட்டது. அதனுடைய இணைப்பை இங்கே காணலாம். 


இப்போது எழுதப்படப் போகும் இந்தப் பகுதியை படிக்கும் முன்பு  ஒரு வருடத்துக்கு முன்பே இது பற்றிய எச்சரிக்கை விடுத்து பதியப்பட்ட முதல் பகுதியை படித்துக் கொண்டால் இந்த பிரம்மாண்டப் பிரச்னையின் உண்மை உருவம்  தெரியும் . 

கடந்த ஆண்டு டிசம்பரில் தலைநகர் புது டில்லியில் தேசிய நீர் வளத்துறை கவுன்சிலின் ஆறாவது கூட்டம், மினரல் வாட்டர்  பாட்டில்கள் மேசைகளை அலங்கரிக்க நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய நீர்க் கொள்கை 2012 – ன் வரைவு வடிவம்  ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்றுக்  கொல்லப்பட்டது   என்று எழுதினாலும் அதனால் தவறு வந்துவிடாது. இந்தக் கூட்டத்துக்கு இந்தியாவின் மவுன சாமியார்களின்  தலைவர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை  தாங்கினார். இந்தத் தலைப்பில் நாம் பதிந்த பகுதி ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்ட அத்தனை அபாயங்களையும்  இந்தக் கூட்டம் அட்சதை தூவி அங்கீகரித்தது. 


இதன்படி,

அரசோ அல்லது அரசின் உள்ளாட்சி அமைப்புகளோ இன்மேல் குடிநீர்  மற்றும் விவசாயத்துக்கான பாசன நீரை வழங்காது. (பேரூராட்சி மன்ற தலவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இனி தெரு குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்கிற தண்ணீர் பிரச்னைகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை) . இதை செய்யப் போவது தனியார் அல்லது பன்னாட்டு வர்த்தக நிறுவனம்தான். 

மளிகைக்கடையில் விற்கப்படும் மஞ்சள் மிளகாய் கொத்தமல்லி மைதா சீனி போல் இனி தண்ணீரும் ஒரு வணிகப் பொருள். இந்தத் தண்ணீர் ஆற்றில் ஓடி வந்தாலும் சரி, நிலத்தடிகளில் இருந்தாலும் சரி, பாசன நேரானாலும் சரி அவற்றிற்கு விலை உண்டு. 

காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில்  இருக்குது  
 மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது” 

என்று பாடப்பட்டது ஒரு காலம். இப்போது நீரும் நம்மை விட்டுப் பிரிக்கப் பட்டு வர்த்தகப் பொருள் ஆகிவிட வழி திறக்கப்படப்  போகிறது.  இப்படியே போனால் காற்றும் கூட பைகளில் அடைக்கப்பட்டு       விற்கப்படலாம். 

வீட்டுக்குத் தேவையான தண்ணீரின் அளவின்  பயன்பாடு, விவசாயம், தொழில் என்று தண்ணீர் பயன்படுத்துதலை நிர்வாகம் செய்ய தண்ணீர்  ஒழுங்காற்று  ஆணையம் என்ற ஒன்று அமைக்கப்படும் . யார் கண்டது இனி பெரும் விருந்துகள் வைக்க வேண்டுமென்றாலும் ஒரு ஆளுக்கு இவ்வளவு தண்ணீர்தான்  என்ற அளவு  அரசால் அனுமதிக்கப் படலாம். தொண்டையில் விக்கல் வருமென்று கூடுதலாக இரண்டு பீப்பாய்  தண்ணீர் ப்ரோவிஷன் வைத்தால் கூட அதைவிடக் கூடுதலாக சிலருக்கு விக்கல் ஏற்பட்டாலும் தாசில்தாரிடம் அனுமதி பெற்று, ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று வாங்கிவந்துதான்   விக்கல் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலை ஏற்படலாம். 

இப்போது வரவிருக்கும் மசோதாவின்படி, தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கங்கள் அமைத்து அவரவர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட நீரை நிர்வகித்துக் கொள்ள வேண்டும். அரசு தலையிட்டு ஒழுங்கு படுத்த வேண்டிய நிதி   - காப்பீடு – சேமிப்பு தொடர்பான  பல சேவைகளை  கட்டுப்பாடு இன்றி - தடையின்றி திறந்து விடுகிறது. தண்ணீர் போன்ற  அத்தியாவசிய ஆனால் இலகுவாக நிர்வகிக்க இயலாத துறைகளில் தடைகளை அதிகரிக்கிறது. இதனால் தனியார்க்கு தண்ணீர் பட்ட பாடாகப் போகிறது. 

மின்கட்டணத்தை கூட்டுவது குறைப்பது, தொலைபேசிக் கட்டணத்தை கூட்டுவது குறைப்பது, போக்குவரத்துத்த்க் கட்டணமனங்களை கூட்டுவது குறைப்பது ஆகியவைகளுக்கு   ஒழுங்கு படுத்தும் ஆணையம் அமைந்திருந்து மக்களின் நாடித்துடிப்பை அறியாமலேயே திடீர் முடிவுகளை அறிவிக்கும்  ஆணையங்கள் அமைந்திருப்பதுபோல் தண்ணீருக்கும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.

இதில் நாம் முக்கியமாக உற்று நோக்க வேண்டிய அம்சம்  என்னவென்றால் அரசு அல்லது அரசுத்துறைகள் என்பது தண்ணீர்  வழங்கும் “ சேவை” செய்யாது. தண்ணீர் வழங்கும்  வசதிகளை வழங்குபவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு அதை இலாபகரமாக நிர்வகிக்கும் “வர்த்தகத்துறை" ஆகிவிடும் என்பதே.  இதன் மூலம் நாம் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது என்ன வென்றால் தண்ணீர் பங்கீட்டு சேவை என்பது அங்கங்களுக்கோ அல்லது அரசு- தனியார் பங்கேற்பு நிறுவனங்களின் பொறுப்புக்கோ மாற்றப் படும்.

இதுதான் தலையில் இறங்கும் இடி. அதாவது நிலத்தின் சொந்தக்காரர்கள், வீடுமனை உரிமையாளர்கள் தங்களுக்கு  சொந்தமான நிலப்பகுதியில் கிணறு தோண்டவோ, ஆழ்துளைக் குழாய் வைத்து கிணறு தோண்டி நிலத்தடி நீரை எடுக்கவோ அவருக்கு உரிமை இல்லை. இனி பத்திரப் பதிவுகள் நடக்கும்போது ஸ்தாவர ஜங்கம சொத்துக்கள் என்று எழுதவேண்டியது இருக்காது. குறிப்பிட்ட நிலத்தின் அடியில் இருக்கும் நீர்,  நிலத்தை வாங்குபவருக்கு சொந்தமல்ல. ஆகவே பத்திரப்பதிவில் இத்தனை கிழமேல் ஜாதியடிக்கு உட்பட்ட நிலத்துக்கு  அடியில் இருக்கும் நீர் தவிர மற்றவைகளை அனுபவித்துக் கொள்ள வேண்டியது என்று எழுத வேண்டி இருந்தாலும் இருக்கலாம். 

மற்றொரு  குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால் தேசிய அளவிலும் மாநிலங்களுக்கு இடையிலும் ஏற்படும் தண்ணீர் தொடர்பான் பிரச்னைகளை விசாரித்து தீர்வு காண மத்திய அரசு ஒரு நிரந்தரமான தண்ணீர் வழக்கு நடுவர் மன்றத்தை உருவாக்கும். இந்த ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே பொதுவாக வரவேற்கலாம். அதற்காக ஆட்டுக் குடல் கறி சாப்பிடவேண்டுமென்ற  ஆசைக்காக ஒரு ஆட்டையே அறுக்கலாமா?

இப்போது மேற்கண்ட அம்சங்களைக் கொண்ட ஒரு வரைவு சட்டம் பாராளுமன்றத்துக்கு வர இருக்கிறது. இந்தக் கொள்கையை கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களுடன் ஐந்து நதிகள் பாயும் பஞ்சாப் மாநிலமும் எதிர்த்துள்ளன. 

அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமையை சில தனிப்பட்ட முதலாளிகளை திருப்திப் படுத்துவதற்காக இந்த தேசிய நீர்க் கொள்கையின் வரைவுசட்டம் வர இருக்கிறது. இது முழுக்க  முழுக்க  மாநிலங்களின் உரிமை மீது அதிகாரம் செலுத்தும் நடவடிக்கைதான் என்று மாநில முதலமைச்சர்கள் அலற ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மாநிலங்களில் விவசாயம் மற்றும் தண்ணீர் பயன்பாடு ஆகியவற்றை மத்திய அரசே கட்டுப் படுத்தும். நாடு முழுதும் உள்ள நதிகள், ஆறுகள், காட்டாறுகள், ஏரிகள், குல்ன்கள், ஆழ்துளை கிணறுகள் உட்பட்ட எல்லா  வகையான நீர் ஆதாரங்களையும் மத்திய அரசு அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். தண்ணீர் கொள்கை என்ற பெயரில் தண்ணீரை விலை வைத்து விற்கவும் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கவும் முயற்சிப்பதை தடுக்க ஒன்றிணைவது ஒரு காலத்தின்  கட்டாயமாகும். 

ஒரு விவசாயத்தை நம்பி இருக்கிற நாட்டில் தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்வதை தனியாரிடம் விட்டால் அது ஏற்கனவே சீர்கெட்டிருக்கிற விவசாயிகளின் வாழ்வையும் விவசாயத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும்.   

இந்தியாவில் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் என்பது மிகப்பெரிய பிரச்சனை என்பது குறிப்பிடத்தக்கது. பரவும் நோய்களில் 21% மோசமான நீராதாரங்களினால் ஏற்படுகிறது என்பதும் 5 வயது வரையிலான குழந்தைகள் இறப்பிற்கு சுகாதாரமற்ற நீராதாரங்களே காரணம் என்பதும் குறிப்பிடப்படவேண்டியது. இந்தியாவில் அனைத்து முனிசிபாலிட்டிகள் மக்களுக்குத் திறந்து விடும்  தண்ணீர் எதுவும் பாதுகாப்பானதல்ல என்பது மிகவும் கவனத்திற்குரியது. ஏதோ தண்ணீர் என்ற பெயரில் உள்ளூராட்சி மன்றங்கள் திறந்துவிடும் தண்ணீர் பாதுகாப்பானதா சுத்தமானதா என்பதை சோதிக்க எவ்வித அமைப்பு ரீதியான ஏற்பாடும் இதுவரை இல்லை. 

மேல்நிலை நீர் தொட்டிகளின் உள்ளே எலியும் பூனையும் ஒன்றாக கட்டிப் பிடித்துக்கொண்டு  செத்துக்கிடந்த செய்திகள் எல்லாம் வெளியாகின்றன. நல்ல நீரும் சாக்கடை நீரும் சரசமாடிக் கலப்பது பூமிக்கடியில் நடக்கும் புதிய காதல் கதை. எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப் ப்பட்ட பகுதிகளில் குடிக்கத்தரும் தண்ணீரில் எரிபொருள் வாடை வருவதை மறுக்க முடியுமா?  

மேலும் நல்ல நீரை மட்டும் பிரித்து எடுத்து வாட்டர் பாட்டில் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. அதுதான் பாதுகாப்பானது என்ற பிரச்சாரமும், மக்களின் நம்பிக்கையும் வலுத்து வருகிறது. பேருந்துகள்  நிறுத்தப் படும் இடங்களில் வாங்கிக் குடிக்கும் தண்ணீர் தயாரிக்கப் பட்ட விதம்  பற்றி நாம் எண்ணிப் பார்த்து இருக்கிறோமா? 

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு – குடி தண்ணீர் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது . அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் 5000 கோடி ரூபாயாம் . தமிழகத்தில் 10,000 க்கும் அதிகமான தண்ணீர் விற்கும் நிறுவனங்கள் இயங்குகின்றன . நாளுக்கு நாள் அழியும் இயற்கை வளங்களில் தண்ணீரே முதன்மையானதாக உள்ளது .

ஆனால் அயல்நாட்டு முதலாளிகளுக்கு எப்படி நம் ஆதாரங்களைச் சுரண்ட அனுமதி அளிக்கலாம் அதற்கு ஏற்றபடி எவ்வாறு சட்டங்கள் இயற்றலாம், எதிர்த்து வரும் போராட்டங்களை எப்படி அடக்கலாம் என்பதிலேயே மத்திய  அரசு கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில் இதுபோன்ற விவகாரங்களை சிந்திக்க அரசுக்கு நேரம் எங்கே  இருக்கிறது? மண், பொன், பெண்  ஆகிய மூன்று போகப் பொருள்களுகாகவே போர்கள் நடைபெற்றதாக உலக சரித்திரம் கூறுகிறது. இனியொரு போர் நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற ஒரு உலகளாவிய அச்சம் உருவாகியுள்ளது. 

நிலமும் நீரும் இந்தியப் பொருளாதாரம் ஏற்றம் பெறத் தேவையானவை. ஏற்கனவே நிலங்கள் சிறையிடப்பட்டு நெல் விளைந்த பூமிகளில் கல் விளைந்து வீணாகக் கிடக்கின்றன. இப்போது தண்ணீரையும் தனியார்க்கு தாரை வார்த்துக் கொடுப்பது மண்ணின் மக்களின் அடிமடியிலே கை வைக்கும் அக்கிரமம் என்பதை அரசு உணரவேண்டும். நீர் வளத்தை ஒரு லட்டாகப் பிடித்து அடுத்தவர் கையில் கொடுக்க அரசு ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறது? ஏற்கனவே மழை பெய்ய மறுக்கிறது. மேகங்கள் கூடிக் கூடி கலைந்து வித்தை காட்டுகின்றன;  நகரமயமாவதால் மரங்கள் வெட்டப்படுகின்றன. விலை மதிப்பற்ற காடுகள் வெட்டி           வீழ்த்தப்படுகின்றன. ஒரு காய்ச்சல் குருவியைப் பிடித்தால் கூட கைது செய்யும் வனத்துறை, வனங்களை அழிக்கும் வலிமை உடைய அரசியல்வாதிகளை கண்டு கொள்வதே இல்லை.    

சுற்றுப்புற சூழ்நிலைகளை மேம்படுத்துவதை விட்டு விட்டு கழுதைகளுக்குக் கல்யாணம் செய்துவைத்தால் கன  மழை பெய்யும் என்று காத்திருக்கிறோம். தண்ணீரின் தேவை மக்கள் பெருக்கத்தால் அதிகரித்து வருகிறது. குளங்கள் மற்றும் ஏரிகளில் குளித்துப் பழகியவர்கள் வீடுகளுக்குள் நீச்சல் குளம் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கிராமங்களில் உள்ள ஏரி  மற்றும் குளங்கள் தூர்  வாரப்படாமல் வருடக்கணக்கில் கிடப்பதால் மேடு தட்டிப்போய், எப்போதாவது இஷடப்பட்டால் பெய்யும் மழை நீரையும் சேகரித்துவைத்துக் கொள்ள வகை தெரியாமல் கிடக்கின்றன. ஏரிகளில் குளங்களில் தனியார் மண் அள்ளுவது தடுக்கப் பட்டு இருக்கிறது அரசும் இதை கவனிக்காமல் அலட்சியப்படுத்துகிறது. இருக்கும் நிலத்தடி நீரையும் கெடுத்துவைப்பதற்காக இரசாயனக்கழிவுகள் காட்டாறாக ஓடுகின்றன; இறால்  பண்ணைகள் இலாபகரம் என்பதால் கடற்கரையோர கிராமங்களில் தினமும் தோண்டப்பட்டு வளர்ந்தோங்கி வருகின்றன. இதனால் உப்பு நீர் கடலில் இருந்து ஊருக்குள் வரவேற்பு வளையம் வைத்து  கொண்டுவரப் படுகிறது. எங்கேயாவது பேருந்து நிலையமோ, சந்தைகளின் விரிவாக்கமோ திருமண மண்டபங்களோ அரசின் தரப்பில் மணிமண்டபங்களோ நினைவுச் சின்னங்களோ  கட்ட இடம் தேவைப்பட்டால்  குளங்களும் ஏரிகளும் குறிவைத்து தூர்க்கப் பட்டு அவற்றின் மேல்  காங்க்ரீட் கட்டிடங்கள் கட்டப் படுகின்றன. உதாரணமாக சென்னை வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது ஒரு ஏரியை உயிருடன்  எரித்து சாம்பலாக்கிவிட்டுத்தான் . அதனால்தான் அந்தப் பகுதி இன்றும் லேக் ஏரியா என்று அழைக்கப் படுகிறது.  குளத்தங்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் குடிசைகள் கட்டி அரசியல் பின்பலத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டன.

உலகிலேயே அதிகம் மழை பெய்யும் சிரபுஞ்சியிலேயே தண்ணீர் பஞ்சம் என்று வெட்கமின்றி தம்பட்டம் அடிக்கிறார்கள். கோடை வாசஸ்தலங்கலாகிய   சிம்லா, ஊட்டி, கொடைக்கானலில் கூட தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது . இத்தகைய இழிநிலைக்குக் காரணம் தண்ணீரை மேலாண்மை செய்வது சரியில்லை என்பதுதான். சிரபுஞ்சியிலேயே தண்ணீர்ப் பஞ்சம் என்றால் உலகமே நம்மைக்  கேலி செய்யும். 

மேலே சொல்லப்பட்ட குறைகளைக் களைந்து தண்ணீரை காப்பாற்றும் முயற்சிகளை  முன்னிறுத்தும் வகையிலும்   தண்ணீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையிலும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளை மத்திய அரசு கொண்டுவந்தால் யாவரும் வரவேற்கலாம். அதைவிட்டுவிட்டு இன்னும் பிரச்னைகளை அதிகப் படுத்தும் மசோதாவை அவசர அவசரமாக கொண்டு வருவது அரசின் உள்நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது. ஏற்கனவே நேரடி அந்நிய  முதலீடு, உலகமயமாக்கல், தாராளமயமாக்கள், 2 G, இத்தாலிய ஹெலிகாப்டர், சி. பி .ஐ. அறிக்கை கசிவு என்று தன் மீது பல களங்கங்களை சுமந்து நிற்கும் மன்மோகன் அரசு,  தண்ணீரை தனியார்க்கு தாரை வார்ப்பதன் மூலம் மற்றொரு சாக்கடையை அள்ளி சந்தனமாகப் பூசப்போகிறது.  

தண்ணீரை திரவத்தங்கம் என்பார்கள். இந்தத் தங்கத்தையும் தனியாரிடம் கொள்ளை இலாபம் ஈட்ட வழிகளை திறந்துவிடும் அரசை வகை கெட்ட அரசு என்றே கூற முடியும்.

இபுராஹீம் அன்சாரி

22 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் இ அ காக்கா,

நல்ல அருமையான ஆய்வு... தெளிவான ஆதங்கம்...

பங்கு வர்தகத்தை வைத்து தண்ணீரின் இன்றைய விலை என்ன என்பதை அறியும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

திருடர்களின் ஏஜண்டுகள் பொறுப்புகளில் இருக்கும் போது, பெருளாதார தாராளமயம் நல்லாவே வேலை செய்கிறது..

Shameed said...

தண்ணீ பட்ட பாடு ன்னு சொல்வாங்களே அது இதுக்குத்தானோ

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அரசு தலையிட்டு ஒழுங்கு படுத்த வேண்டிய நிதி - காப்பீடு – சேமிப்பு தொடர்பான பல சேவைகளை கட்டுப்பாடு இன்றி - தடையின்றி திறந்து விடுகிறது. தண்ணீர் போன்ற அத்தியாவசிய ஆனால் இலகுவாக நிர்வகிக்க இயலாத துறைகளில் தடைகளை அதிகரிக்கிறது. இதனால் தனியார்க்கு தண்ணீர் பட்ட பாடாகப் போகிறது. //

நமக்கு தண்ணீர் படாத பாடாகப் போகிறதுன்னு சொல்லுங்க !

//குடி தண்ணீர் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது . அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் 5000 கோடி ரூபாயாம் . தமிழகத்தில் 10,000 க்கும் அதிகமான தண்ணீர் விற்கும் நிறுவனங்கள் இயங்குகின்றன //

"குடி"மக்களின் தண்ணி கணக்கில் வராதுதானே காக்கா...

//விலை மதிப்பற்ற காடுகள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. ஒரு காய்ச்சல் குருவியைப் பிடித்தால் கூட கைது செய்யும் வனத்துறை, வனங்களை அழிக்கும் வலிமை உடைய அரசியல்வாதிகளை கண்டு கொள்வதே இல்லை. //

வெட்டித் துறை !

தண்ணியும் தங்கமும் (விலை மதிப்பில்) ஒன்றானால் எப்படியிருக்கும் !?

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நல்லதொரு ஆய்வுக் கட்டுரை தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.

நான் தண்ணீர் சம்பந்தமாக ஒரு ஆய்வுக்கட்டுரையை படித்தேன்.(ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும்) இந்த இந்திய அரசியல் கொள்ளைக்காரர்கள் எங்கிருந்து இந்த தண்ணீர் கொள்கையை (யார் வாந்தியை வாங்கி இவர்கள் விழுங்கி மீண்டும் வாந்தி எடுத்திருக்கிறார்கள் என்பதை) என் கருத்தில் விளக்குகிறேன்.

இந்த காங்கிரஸ் பேசாமடைந்தை – முன்னால் உலக வங்கியில் வேலை பார்த்த அமெரிக்காவின் தயாரிப்பு அடிமை மண்ணுமுட்டி காங்கிரஸின் ஊமைத்தலைவருக்கும் மற்றும் காங்கிரஸ் அடிவருடிகள் அனைவருக்கும்
வல்ல அல்லாஹ்வின் வசனத்தை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்:

மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்தவதற்காகவும், அவர்கள் திருந்துவதற்காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது.(அல்குர்ஆன்: 30:41)

அலாவுதீன்.S. said...

உலக ரவுடி வங்கி (ஊரை அடித்து உலையில் போடுகிறான் என்று சொல்வார்கள்) தண்ணீர் கொள்கை – 2030 என்ற திட்ட வரைவை தயாரித்து, இந்தியாவை வந்த விலைக்கு சிறிது சிறிதாக விற்று கொண்டிருக்கும் கயவர்களின் கையில் கொடுத்து விட்டான் பகல் கொள்ளை திருடன் உலக வங்கி.

உலக தாதா பகல் கொள்ளையடிக்கும் ரவுடி வங்கிக்கு: பல வருடங்களுக்கு முன்பாகவே இந்தியாவில் தண்ணீர் எங்கெங்கு கிடைக்கிறது, நிலத்தடி நீர் எங்கு உள்ளது என்ற விபரங்கள் அனைத்தும் ஆய்வு செய்து – அரசியல் வியாதிகள் மற்றும் தொண்டு நிறுவன போர்வையில் உள்ளவர்களின் உதவியால் அறிக்கை சென்று விட்டது.

இதை வைத்துதான் தண்ணீர் கொள்கை 2030 என்ற திட்டத்தை முடிவான அறிக்கையாக பொம்மை அடிமை அரசிடம் வழங்கி விட்டான் உலக வங்கி.
பல ஆண்டுகளாக இந்தியாவின் வளங்களை உலக வங்கியின் திட்டத்தின் படி தாரை வார்த்துக் கொண்டு இருக்கும் கொள்ளையர்கள் , கயவர்கள், தங்கள் கொண்டு வந்த திட்டம் போல் செயல்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

அலாவுதீன்.S. said...

ஒழுங்கு முறை ஆணையம் என்றால் மக்களை கொடுமைக்கு ஆளாக்கும் ஆணையம் என்று பொருள்: இவர்கள் தற்பொழுது கருத்துக் கேட்கும் லட்சணத்தை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். தற்பொழுதுதானே மின்சார கட்டணம் உயர்ந்தது மீண்டும் , உயர்த்த மக்களின் கருத்தைக் கேட்ட பிறகு உயர்த்துவார்களாம் தமிழ்நாடு முழுவதும் கருத்து கேட்பார்கள் என்று நான் நினைத்தேன். தமிழ்நாட்டில் பெரிய நகரங்களை உ: சென்னை , கோவை, திருச்சி என்று இவர்கள் கருத்து கேட்பது குறைந்தது ஒரு 300 பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதுதான் ஒழுங்கு முறை ஆணையம் மக்கள் மேல் கொண்டுள்ள அக்கரை.

ஒழுங்கு முறை ஆணையம் என்பதே ஒரு நயவஞ்சகத்தனம்.

தெரியுமா சேதி மின்சார வாரியம் உலக ரவுடி வங்கிக்கு கட்டும் வட்டி மட்டும் ஆயிரக்கணக்கான கோடியாம். கடன் 45ஆயிரம் கோடி என்று படித்த ஞாபகம்.

அலாவுதீன்.S. said...

உலக ரவுடி வங்கி இந்தியா முழுவதும் உள்ள காடுகளையும் பண முதலைகளுக்கு தாரை வார்க்கச் சொல்லி விட்டான். வனப்பாதுகாப்பு என்ற பெயரில் அங்கு அரை வயிறு சாப்பிட்டு நிம்மதியாக எந்தப் பண ஆசையும் இல்லாமல் வாழ்ந்த மக்களை ஒட்டு மொத்தமாக நடைப்பாதை பிச்சக்காரர்களாக ஆக்கியே தீருவோம் என்று உலக ரவுடி வங்கியின் அடிமையான இந்திய அரசியில் வியாதிகள் முடிவெடுத்து விரட்ட ஆரம்பித்து கெடுபிடி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

காட்டில் வாழும் மக்கள் நாங்கள் எங்கு போவோம் நகர வாழ்க்கை என்னவென்று நாங்கள் அறியாதது. என் பாட்டன் முதல் இந்தக்காட்டைத்தான் நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எங்களை சுட்டாலும் இங்கிருந்து போக மாட்டோம் என்ற பேட்டியை கேட்கும்பொழுது மனம் கனக்கிறது.

அலாவுதீன்.S. said...

காட்டில் உள்ள மக்களை விரட்ட என்ன காரணம் : காட்டில் உள்ள கனிம வளங்கள், மூலிகை வளங்கள், மர வளங்கள் இவற்றை கொள்ளையடிக்கவும்.

சுற்றலா தளம் அமைத்து பசுமை காட்டை > கான்கீரிட் காடாக மாற்ற பணத்திற்கு பின்னால் வெறித்தனமாக அலையும் வெறியர்கள் கல், மலை மனம் படைத்த கயவர்கள் உள்நாடு, வெளிநாடு என்ற பேதமில்லாமல் கைகோர்த்த காரணம்தான் மண்ணின் மைந்தர்களை விரட்டுவது.

அலாவுதீன்.S. said...

உலக வங்கி சொன்னான் என்று : மருத்துவம்,காப்பீடு. கல்வி, மக்களின் சேவைத்துறை அனைத்தையும் தாரை வார்த்த கயவர்கள் ஏன் இந்திய அரசியல் பதவியை மட்டும் ஓட்டுப் பொறுக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

அரசியல் வியாதிகள் என்ன செய்கிறார்கள் இப்பொழுது:
இந்திய கொள்ளைக்காரர்கள், உலக கொள்ளைக்காரர்கள் இந்த இரு பணமுதலைகளும் இந்தியாவை கொள்ளையடிப்பதை மக்கள் எதிர்க்கக்கூடாது என்பதற்காக அரச பதவியில் இருக்கிறார்கள். மக்கள் எதிர்த்து கேட்டால் அடக்குவதற்கு மட்டும்தான் இந்த பதவிகள்.

கொள்ளைக்காரர்களுக்கு அடிமை சேவகம் செய்கிறார்கள்.

அலாவுதீன்.S. said...

//// இதுதான் தலையில் இறங்கும் இடி. அதாவது நிலத்தின் சொந்தக்காரர்கள், வீடுமனை உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான நிலப்பகுதியில் கிணறு தோண்டவோ, ஆழ்துளைக் குழாய் வைத்து கிணறு தோண்டி நிலத்தடி நீரை எடுக்கவோ அவருக்கு உரிமை இல்லை. ///
**************************************************************************
இந்த தண்ணீர் திட்ட வரைவை பற்றி மண்ணுமுட்டி சிங் பல மாதங்களுக்கு முன் பேசும்பொழுது தண்ணீர் இந்தியாவில் வீணடிக்கப்படுகிறது. அதனால் சரியான சட்டம் கொண்டு வந்து மடைமாற்றப்பட வேண்டும் என்று சொன்னார்.

இவர் மடைமாற்றம் என்று எதை சொன்னார் உலக வங்கியின் வரைவு திட்டத்தின்படி:
கேளிக்கை விடுதிகளுக்கு!
சுற்றலா விடுதிகளுக்கு!
அநாச்சாரம் நடக்கும் இடங்கள் அனைத்திற்கும்!
தண்ணீர் வியாபாரிகளுக்கு
மொத்தத்தில் விற்பனைக்கு!

வீடுகளுக்கு தண்ணீர் கிடையாது
ஏழை மக்களுக்கும் தண்ணீர் கிடையாது.
******************************************************************************************************************
இந்த கொள்ளளையர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பாடல் வரியைக் கேட்டேன்:
என் தாயும் விற்பனை சரக்கு அல்ல!
என் தாய்நாட்டின் தண்ணீரும் விற்பனை சரக்கு அல்ல!
கொள்ளையர்களே வெளியேறுங்கள்!

அலாவுதீன்.S. said...

///தண்ணீரை திரவத்தங்கம் என்பார்கள். இந்தத் தங்கத்தையும் தனியாரிடம் கொள்ளை இலாபம் ஈட்ட வழிகளை திறந்துவிடும் அரசை வகை கெட்ட அரசு என்றே கூற முடியும்.////


இதுவா வகை கெட்ட அரசு? இந்தியாவின் வளங்களை தாரை வார்ப்பதால் இந்த அரசியல் வியாதிகளுக்கு கிடைக்கும் ஆதாயம் ஏரரளம். அடையும் பயன்களும் அதிகம்.

மக்கள்தான் தவித்த வாய்க்கு தண்ணீர் வாங்க காசு இல்லாமல் தினம் தினம் சாகப் போகிறார்கள்.

இந்தியாவின் ஒட்டு மொத்த மண்ணின் மைந்தர்களின் சாபத்தை தினம் தினம் வாங்கி வேதனைப்படப்போகிறார்கள் அரசியல்வியாதிகள்.

அலாவுதீன்.S. said...

ஒரு கட்டுரையில் படித்தேன்: மூன்றாம் உலகப்போர் வரும்.

நல்ல தண்ணீர் உள்ள நாடுகளை அடிமைப்படுத்தவும் -அதனோடு போர் செய்யவும் உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்யுமாம்.

தண்ணீருக்காக ஒரு போர் விரைவில் வர இருக்கிறது.

உலகில் நல்ல தண்ணீர் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

போர் வருவதற்கு முன்னால் தண்ணீர் வாங்க காசு இல்லா மக்களின் நிலை என்ன?

அலாவுதீன்.S. said...

///ஒரு விவசாயத்தை நம்பி இருக்கிற நாட்டில் தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்வதை தனியாரிடம் விட்டால் அது ஏற்கனவே சீர்கெட்டிருக்கிற விவசாயிகளின் வாழ்வையும் விவசாயத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். ////

விவசாயிகளா? இப்படி ஒரு வார்த்தை வரும் காலங்களில் ஏட்டில் இருந்தே அழிக்கப்பட்டு விடும்.

விவசாய நிலங்கள் ஒரு பகுதி அனைத்தும் ஆதிக்க சக்திகளிடம் போய் விடும்!

ஒரு பகுதி நிலங்கள் மரபணு மாற்று விதை தயாரிக்கும் மான்சண்டே கொள்ளைக்காரன் கையில் மாட்டிக் கொண்டு நிலம் மலடாகி விடும்.

மீதம் உள்ளது கான்கீரிட் காடாகி விடும்.

இனி ஆரஞ்சு பளபளப்பாக இருப்பதற்கு தவளையின் மரபணுவையும் ஆரஞ்சு மரபணுவையும் கலந்து விதை தயாரித்து பயிரிடப்படுமாம்.

விலங்குகள் பாதி )))> பழங்கள் காய்கறிகள் பாதி என்று நாம் சாப்பிட வேண்டியதுதான்.

உலக கொள்ளைக்காரர்கள் இந்திய அரசியல் கொள்ளைக்காரர்களோடு சேர்ந்து இந்திய மக்களை சோதனை எலியாக்கி விட்டார்கள்.

அலாவுதீன்.S. said...

இன்னும் நிறைய இருக்கிறது – நேரமோ இரவு 12:30 கை வலிக்கிறது வேதனையை டைப் செய்து. நேரம் இருந்தால் இன்ஷாஅல்லாஹ் நாளை!

இறுதியாக போன வாரம் ஜூம்ஆ தொழுது விட்டு வரும் வழியில் ஒரு சகோதரரை சந்தித்தேன் ( மழையும் பெய்து கொண்டு இருந்தது) அவர் சொன்னதிலிருந்து:

பாய்! குளோபலிஷம் என்று கூறி உலகம் முழுவதையும் அழித்தது போதாது என்று இந்தியாவில் எல்லா துறைகளயும் கொள்ளைக்காரர்களின் கையில் கொடுத்து விட்டான்கள் இந்த அரசியல் வியாதிகள்.

மக்களை கொடுமைப்படுத்தி வாழ்வதற்கு வகை இல்லாமல் செய்து விட்டான்கள்.

அல்லாஹ்வின் சோதனை இவர்களை விரைவில் பிடிக்கும். மிகப் பெரிய போர் வரும்.

இந்த போர் மூலம் நாமும் நம் குடும்பங்களும் அழியலாம் ஆனால் அத்தனை கொள்ளைக்காரர்களும் வல்ல அல்லாஹ்வால் சுத்தமாக சுனாமி வந்ததது போல் துடைத்து எறியப்படுவார்கள் என்றார்.

வல்ல அல்லாஹ் நமக்கும் அனைத்து அப்பாவி மக்களுக்கும் நல்லருள் புரிந்து அவனின் கருணையால் நம்மை காப்பாற்ற வேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தண்ணீர் எதிர் நோக்கும் பிரச்சனைகள் இவ்வளவா!
தமிழ் கலக்கல்!

நம்ம நிலத்தடி நீர் கூட நமக்கு சொந்தம் இல்லை என்கிறீகள். வானத்திலிருந்து நம் நிலத்திற்குள் பெய்யும் மழை நீராவது நமக்கு சொந்தமாக இருக்குமா?

//பேரூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இனி தெரு குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்கிற தண்ணீர் பிரச்னைகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை . இதை செய்யப் போவது தனியார் அல்லது பன்னாட்டு வர்த்தக நிறுவனம்தான்.//

ஆமாம் காக்கா இவங்களும் உசாராகி விட்டார்கள் போலிருக்கு! 3 நாளைக்கு முன் CMP லைன் பகுதிகளில் புதுசா போட்ட பைப் லைன் கூட தரமற்று போட்டதால் உடைப்பெடுத்து குடிநீர் வெள்ளமாய் ஓடியதாமே!




sabeer.abushahruk said...

wonderful article

Allah aaththik aafiya, kaakkaa

-sabeer

Ebrahim Ansari said...

அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,

அலைக்குமுஸ் ஸலாம்.

கங்கையும் காவிரியும் இணைந்ததுபோல் அருமையான நீண்ட கருத்தாய்வு தந்துள்ளீர்கள். ஜசக் அல்லாஹ்.

இந்தக் கதைகள் இன்னும் எழுதவேண்டி இருக்கின்றன.

இந்த மசோதா தண்ணீர் தேங்குவது போல் பாராளுமன்றத்தில் தேங்கி நிற்கிறது. எதிர்க் கட்சிகள் இந்த மசோதாவை மட்டுமல்ல ஏந்த மசோதாவையும் நிறைவேற்ற முடியாத நிலைமைகளை உருவாக்கி வெட்டியாக்கிவிட்டார்கள்.

உணவுப் பாதுகாப்பு மசோதாவைக் கூட நிறைவேற்ற முடியாத சோதாக்கள்.

அப்துல்மாலிக் said...

சொட்டு தண்ணீரும் தேவை என்பதை உணர்த்துக் அருமையான அலசல் கட்டுரை காக்கா...

அப்துல்மாலிக் said...

இந்திய அனைத்து நதி நீர்களின் இணைப்பு ஒன்று மட்டுமே இதிலிருந்து தப்பிக்க சாத்தியம்

sheikdawoodmohamedfarook said...

இனி தண்ணிரை தேடி அலையும் மனிதர்களின்கண்ணீரையும் பாட்டிலில் அடைத்து விற்று விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

sheikdawoodmohamedfarook said...

இனி தண்ணிரை தேடி அலையும் மனிதர்களின்கண்ணீரையும் பாட்டிலில் அடைத்து விற்று விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari,

காவிரி நீர் உடன்படிக்கையின் முக்கிய பகுதிகளில் சேர்க்க வேன்டிய தொகுப்பு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு