Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உன்னை அறி 42

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2013 | , , ,

உன்னை அறி
உண்டி நிறைக்க
தன்னை இழக்கும்
தன்மை ஒழி

தன்னை நம்பி தேடியவரே
தீர்வுகள் எட்டினர்
உன்னை நம்பு
உதித்து எழு

மயிர்க்கணக்கில் கால்களிருந்தும்
மரவட்டை யல்ல ஊர்வதற்கு
மான் குட்டி நீ
துள்ளிக் குதி

உறைந்து போவது
பனிக்கட்டிக்கு இயல்பு
நீ புலிக்குட்டி
விடைத்து நில்
புஜங்கள்
புடைக்க நிமிர்

உயர்ந்த எண்ணங்களை
உள்ளத்தில் உரமிடு
விருட்சங்கள் அனைத்திலும்
சுபிட்சங்கள் விளையும்

படிப்போ பிழைப்போ
பொறுப்பாய்ப் பாடுபடு
தேர்விலும் வெல்லலாம்
தெருவிலும் உயரலாம்

முன்னமொரு முறை
முயன்றது போதுமென்ற
எண்ணம் துற,
முட்டி மோதியே
ஓடு உடைந்திட
உலகில் வெளிப்படும்
குஞ்சை நினை

தடைகள் வந்து இடைமறித்தால்
தாவிக் குதி
முட்டுச் சுவர்கூட முடிவல்ல
அப்பாலும்கூட
உலகம் இயங்குவதை
சிந்தையில் வை

சொல்ல விழைவதை
சுற்றி வளைத்திட
சோம்பல் மீறிடும்
பொட்டில் அடித்ததுபோல்
சட்டெனச் சொல்

கற்க மறுத்தது
தவறு என்பதை
உணரும்வரைதான்
உறக்கம் வரும்

உண்ணப் பசிக்கையில்
உலகம் மறுக்கையில்
உழைக்க உனக்குள்ளே
உத்வேகம் வரும்

அந்த
ஒற்றை இழை பிடி
உன்னை அதில் இழை
தென்னை நிமிர்ந்ததுபோல்
விண்ணை எட்டு

நல்ல வழி அறி
வெல்ல அதில் நட
வெற்றி வாய்க்கையில்
நெற்றி நிலம்பட
நன்றி நவில்!

Sabeer AbuShahruk

42 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

என்னை அறிய, உயர உயர்தரமான அழகான கவியாக்கம்!

Ahamed Ameen said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahrukh,

Poem "Know thyself" is plighted with success formulae generates energy whoever read it.

Knowing self is key to success.

Excellent thoughts brother.

Jazakkallah khairan.

B.Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Ebrahim Ansari said...

//தடைகள் வந்து இடைமறித்தால்
தாவிக் குதி
முட்டுச் சுவர்கூட முடிவல்ல
அப்பாலும்கூட
உலகம் இயங்குவதை
சிந்தையில் வை//

ஆஹா! அற்புத வரிகள். என்னை மிகவும் கவர்ந்த காந்த வரிகள்.

Shameed said...

//தடைகள் வந்து இடைமறித்தால்
தாவிக் குதி
முட்டுச் சுவர்கூட முடிவல்ல
அப்பாலும்கூட
உலகம் இயங்குவதை
சிந்தையில் வை//

கவி வரிகள் அனைத்தும் சிந்தையை கவர்ந்தது

Unknown said...

It's a motivational ultra, it is worth to add in the Personality Development workshops study materials. I much appreciate your wonderful and bewitching words. Keep continue post on...

Shahul Hameed

Anonymous said...

மருமகன் சபீர் அபுசாருக் கவிதை இடி ஓசை கேட்டு 'திடுக்'கென எழுந்தேன்.

எந்த வரிகளை தொடுவது எந்த வரிகளை விடுவது? ஒரு தடுமாற்றம். ஒன்றை பாராட்டினால் மற்றவைகளுக்கு ஓரவஞ்சம்.

மன சாட்சி குத்தும். எல்லாமே மூழ்கி எடுத்த முத்துக்கள்.. சிந்தனை தீப்பொறி. .

' சுய முயற்சி' தூண்ட.ல்.

S. முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உறைந்து போவது
பனிக்கட்டிக்கு இயல்பு
நீ புலிக்குட்டி
விடைத்து நில்
புஜங்கள்
புடைக்க நிமிர்//

ஆளுக்கொரு அர்த்தம் கொள்ளலாம் எனக்கு பிடித்தது அதன் உள்ளர்த்தம் ! எல்லாமே எதார்த்தம் !

கவிக் காக்கா, 'கட்டி'யணைப்பது போன்று கவிதை வேண்டும்... வாசிப்பவர்களின் பார்வைக்கு ஸ்க்ரீன் தேவையிருக்காது உங்கள் கவிதையில் அது தின்னம் !

ஒற்றை மை கொண்டு
உருவாகிறது அரசியல் தலைமை !
ஒற்றுமை கொன்று...
உறவாடுகிறது அதே அரசியல் தலை !

Ebrahim Ansari said...

உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி -

தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்

உன்னால் முடியும் தம்பி தம்பி

நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு


ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாரய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா

கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்


கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்

உன்னால் முடியும் -
உன்னால் முடியும் தம்பி தம்பி -
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

- புலமைப் பித்தன்.

Unknown said...

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்ற தத்துவத்தை
சொல்லவந்த சபீர் அதை தனக்கே உரிய கவிதை நடையில் சொல்ல வந்திருப்பது
தெரிகின்றது.

//நல்ல வழி அறி
வெல்ல அதில் நட
வெற்றி வாய்க்கையில்
நெற்றி நிலம்பட
நன்றி நவில்!//

வாழ்க்கையில் வென்று அல்லாஹ் தந்த அறிவினால் உச்சநிலையை அடையும்போது, அந்த வெற்றிக்கு சொந்தக்காரன் நான் அல்ல . அது அல்லாஹ் தந்த அறிவே என்று நினைத்து , இறுமாப்பு கொள்ளாமல்
அதற்காக , நன்றிக்கடனாக , நெற்றியை தரையில் வைத்து சுஜூது செய்யச்
சொல்லி கவிதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் உன் கவித் திறமையே
திறமை.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

குறிப்பைத் தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும். 

இந்தப் பதிவை என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மிகைத்த மதிப்பிற்குரிய இபுறாகீம் அன்சாரி காக்கா, ஃபாரூக் மாமா ஆகியோர் சிறார்களை நோக்கித் தாங்கள் சொல்வதுபோலவும்; என்னைவிட சிறியவர்களுக்கு நான் சொல்வதுபோலவும் கருதி வாசிக்கவும்.

ஏற்புரையில் இன்னும் பேசுவோம், இன்ஷா அல்லாஹ்.

நன்றி.

Unknown said...

சபீர் இந்தக்கவிதை பதிவு ஒரு பாடலை என் மனதில் எழ செய்கின்றது
அதுதான்

உன் கையை நம்பி உயர்ந்திடப்பாரு
உனக்கென எழுது ஒரு வரலாறு
உனக்குள்ளே சக்தி இருக்கு அதை
உசுப்பிவிட வழிபாரு,
சுப வேலை நாளை கூடிடும்.

எவனுக்கு என்ன குணம்
எவனுக்கு என்ன பலம்
கண்டதில்லை ஒருவருமே
ஒரு விதைக்குள்ளே அடைபட்ட
ஆலமரம் கண் விழிக்கும்
அதுவரை பொறு மனமே

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு.

உழைப்பின் உயர்வை ஒவ்வரு சொல்லிலும் உச்சரிக்கும்
உன் கவிதைக்கு அர்த்தம் சொல்லும் பாட்டு. (எனக்கு பிடித்த பாட்டு)

அபு ஆசிப்.

அதிரை.மெய்சா said...

அன்பு நட்பே. உன் சிந்தனைத்துளிகள் சிகரமாய் வீற்றேழுந்து ஒவ்வொரு வரிகளும் தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும் தரமான கவிநடையில் தட்டிக்கொடுத்திருக்கிறாய். அருமை.

வாழ்த்துக்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தே! அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்களின் இன்றைய வெளியீடான “உன்னை அறி’ யில் இந்த வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன: ஏன் என்று புரிந்து கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்:


\\உன்னை அறி
உண்டி நிறைக்க
தன்னை இழக்கும்
தன்மை ஒழி\\

Unknown said...

//தடைகள் வந்து இடைமறித்தால்
தாவிக் குதி
முட்டுச் சுவர்கூட முடிவல்ல
அப்பாலும்கூட
உலகம் இயங்குவதை
சிந்தையில் வை//

அற்புத வரிகள். என்னை மிகவும் கவர்ந்த காந்த வரிகள்.

JAFAR said...

அர்த்தமுள்ள சிந்தனைக்கவிகள் வாழ்த்துக்கள் கவிஞரே.

Shameed said...

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
கவிவேந்தே! அஸ்ஸலாமு அலைக்கும்!

//உங்களின் இன்றைய வெளியீடான “உன்னை அறி’ யில் இந்த வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன: ஏன் என்று புரிந்து கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்://


\\உன்னை அறி
உண்டி நிறைக்க
தன்னை இழக்கும்
தன்மை ஒழி\\எங்கே உங்களை அதிரை (நிருபர்)பக்கமே காணோம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவிவேந்தே! அஸ்ஸலாமு அலைக்கும்!
//எங்கே உங்களை அதிரை (நிருபர்)பக்கமே காணோம்!/

/ஆமாங்க நானும் (தேட்டத்துடன்) தேடினேன்

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர்கள் சுட்டும் விழிச்சுடர் காமிரா கலைஞர் ஷா ஹமீட் மற்றும் இலண்டன் இளங்கவிஞர் ஜஃபர் ஸாதிக் ஆகியோரின் தேட்டமான எண்ணங்களைப் புரிந்து கொண்டவனாய் என் உளம்நிறைவான நன்றியை உரித்தாக்குகிறேன்.


குறிப்பு:”கவிவேந்தே” என்று நான் மிகவும் அன்புடன் சபீர் அவர்களையே அழைப்பேன். எனவே, அவர்க்கு நான் இட்ட இந்த அடைமொழியை எனக்கு இட்டு அழைக்க வேண்டா.

Ebrahim Ansari said...


விழுவதேனில் உன்
காலடியில் விழு
எழுவதெனின் உன்
கை ஊன்றி எழு
உன் கைதான் உனக்குதவி


கைக்குட்டையை நழுவ விடுவதுபோல் -உன்
கவலைகளைத் தொலத்திடு
சட்டைப் பயில் பேனாவைப்போல்
மகிழ்ச்சியை என்றும் உன்
நெஞ்சோடு வை!


நாளைச் சூரியன்
மலைகளுக்கு மத்தியில் உதிக்காது
உன் தோள்களுக்கிடையில்தான்
உதயமாகும்.

- படித்து மகிழ்ந்த ஒரு கவிதை பகிர நினைத்த கவிதை. ( மோகன் எழுதியது)

Ebrahim Ansari said...

கீழ்க்கண்ட கவிதையை ஒரு முறை படித்து மலைத்திருக்கிறேன். அதையெல்லாம் தூக்கி சாப்பிட நம் மண்ணின் தம்பி சபீர் அவர்களின் கவிதை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

நாங்கள் உங்களுக்குச் சொல்வதாக இருந்தாலும் உண்மையில் நீங்கள் எங்களுக்கும் சொல்வதாகவே எடுத்துக் கொள்கிறேன். இன்றைய நிலையில் எல்லோருக்கும் பூஸ்ட் தேவைப் படுகிறது. கவிதை வடிவ பூஸ்ட் உள்மனதில் விரைவில் உட்கொள்ளப்படும். சீக்கிரம் செரிமானம் ஆகும். மனக்குடலின் குடலுறிஞ்சிகள் இப்போதே உறிஞ்சி இரத்தத்தில் கலக்க வைக்கும் .

இதோ அந்தக் கவிதை எனக்குப் பிடித்தது. அனைவருக்கும் பிடிக்கும் .

====================================================================

நண்பனே…

உன்னைப் பற்றி
நீயேன்
உயர்வாய் நினைக்கத்
தயங்குகிறாய் ?

மாலுமிகளே
சஞ்சலப் பட்டால்
சுக்கான் பிடிப்பது
சுலபமாயிருக்குமா ?

நீ
சொல்லுமிடம் செல்ல
உன் கால்கள்,
நீ
நீட்டுமிடம் நிற்க
உன் கைகள்
பின் ஏன் தனியன் என்று
தாழிக்குள் தாழ்கிறாய் ?

பூக்களின் பெருமையை
வண்டுகள் வாசித்துச்
சொல்லும்,
ஆனால் மொட்டை விட்டு
வெளியே வருவது
பூக்களின் பணியல்லவா ?

தானியம் தின்னும் கலை
தாய்க் கோழி தரும்
ஆரம்பக் கல்வியாகலாம்,
ஆனாலும்
அலகு கொத்துதல்
குஞ்சுகளின் கடமையல்லவா?

ஒவ்வோர் மரமும்
ஒவ்வோர் வரம்.
மூங்கில்கள் மட்டுமே
முளைக்குமென்றால்
பூமியின் தேவைகள் தீராது.

தூக்கம் வந்தாலே
சவக்குழிக்குள்
படுத்துக் கொள்ளும்
தாழ்வு எண்ணக் குழிகளை
ஏன்
தொடர்ந்து வெட்டுகிறாய் ?

கூடு கலைந்து போனதால்
தூக்கிலிட்டுக் கொண்ட
தூக்கணாங்குருவியை
நீ
தவமிருந்தாலும் பார்க்க இயலுமா ?

வலை கிழிந்து போனதால்
செத்துப் போக
சம்மதிக்கும்
சிலந்தியை
உன்னால் சந்திக்க இயலுமா ?

ஆறாவது அறிவு
ஆராய்வதற்கு.
அழிவின் வழிகளை
ஆயத்தப் படுத்த அல்ல.

நம்பிக்கை கொள்,
சுற்றிக் கிடக்கும்
சாபங்களை விடுத்து
உனக்குள் இருக்கும்
சாரங்களை வெளிக்கொணர்.

நீ
வைக்க மறுக்கும் நம்பிக்கையை
உன்மேல்
வேறு
யார் வைக்க இயலும் ?

நீ
காற்று.
இலைகள் அசையவில்லையென்று
கவலை எதற்கு.

நீ
தண்ணீர்.
ஆழம் போதாதென்ற
தாழ்வு மனம் எதற்கு ?

உன் தோளில்
நீயே கட்டிவைக்கும்
எந்திரக் கற்களை
இப்போதே எடுத்தெறி.

இல்லையேல்
நாளை
மாலையிட வரும் கைகளுக்கு
உன் தோள்கள்
புலப்படாது.

- மோகன் .

ZAKIR HUSSAIN said...

//உன்னை அறி
உண்டி நிறைக்க
தன்னை இழக்கும்
தன்மை ஒழி//


இந்த முதல்வரியே கவிதைக்கு அஸ்திவாரம்.

"புண்ணியமின்றி விலங்குகள் போல்....' என்ற பழைய பாடலில் கேட்பதுபோல் இப்போது சாப்பாடு சாப்பாடு என்று கலரிச்சாப்பாட்டுக்கு அழையும் சமுதாயம் ஒரு வைரஸ் போல் கண்ணுக்கு தெரியாமல் வளர்ந்து கிளை விட்டிருப்பதை அழகாக உன் கவிதையில் தந்திருக்கிறாய்.

sabeer.abushahruk said...

இன்று புகையிலை எதிர்ப்பு தினமாமே?!

சிகரெட் 
விரலிடுக்கில் சிக்கிய வாழ்க்கை
நசுக்கப்படுவது உறுதி!

சிகரெட்
உதடுகளில் வாழும் உயிர்
உமிழப்படுவது உறுதி!

சிகரெட்
புகைப்பவருக்குள் புழங்கும் பூதம்
புண்ணாக்கப் போவது உறுதி!

சிகரெட்
ஆக்ஸிஜனை அசிங்கப்படுத்தும் அருவருப்பு
அணுஅணுவாய் அரிக்கப்போவது உறுதி!

சிகரெட்
சில்லரையாகச் செலவு வைத்து
மொத்தமக மூழ்கடிக்கும் கடன்.

சிகரெட்
சுவாச உருப்புகளில் போடப்பட்ட தார்ச்சாலை
பூக்களின்மேல் போர்த்தப்பட்ட கேன்வாஷ்

சிகரெட்....
தொடர்கதைபோல நீளும்  வாழ்க்கையை 
சிறுகதையாக்கும் அவசரம்...
சிலசமயம் துணுக்காக முடித்துவிடும் அபாயம்!

sabeer.abushahruk said...

கவிதைக்கான இந்த ஒற்றை மேடையை கவியரங்குக்கான வட்டமேடையாக சிறப்பாக்குகின்றன இங்கே மேற்கோள் காட்டப்படும் கவிதைகள். இந்த வட்டமேடையில் கிரவுனுக்கான நாற்காலி இன்னும் காலியாகவே இருப்பதால், இவற்றில் ரொம்ப கவரும் வரிகளைப் பற்றி சிலாகித்துவிட்டு ஏற்புரை எழுதிவிடலாம்.

//வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு//

//சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு.//

//எழுவதெனின் உன்
கை ஊன்றி எழு
உன் கைதான் உனக்குதவி//

//நம்பிக்கை கொள்,
சுற்றிக் கிடக்கும்
சாபங்களை விடுத்து
உனக்குள் இருக்கும்
சாரங்களை வெளிக்கொணர்.//Unknown said...

சமீப காலங்களில்
சபீர் காக்காவின் கவிதையை
படிக்க...படிக்க...
இதயம் துடிக்க..துடிக்க
சிலிர்க்கிறது.

கவிஞர்கள் மன்னிக்கவும். சும்மா மடக்கி எழுதி என் ஆவலை தீர்த்துள்ளேன்.

//நல்ல வழி அறி
வெல்ல அதில் நட
வெற்றி வாய்க்கையில்
நெற்றி நிலம்பட
நன்றி நவில்!//

சிறு சந்தேகம்... நெற்றி நிலம் பட நன்றி நவிழ்வது வெற்றி வாய்க்கையில் மட்டும்தானா கவிஞரே?

crown said...

உன்னை அறி
உண்டி நிறைக்க
தன்னை இழக்கும்
தன்மை ஒழி
------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.முதல் வரியே கவிதையின் முகவரியாகவும்,முத்தான வரியாகவும் வரிந்து கட்டி தன் ஆதிக்கத்தை தொடங்கிவிடுகிறது.அல்ஹம்துலில்லாஹ்!உண்டி நிறைக்க தன்னை இழக்கும் தன்மை ஒழி! இதில் சொல்லபட்ட நீதி நேர்மையுடன் உண்மை அறிதலும், தன்னை அறிதலும். மேலும் உண்டி(உணவு)க்காகவும் பிறர்காலில் வீழும் தன்மானமற்றவர்களையும் சாடுவதாக இருபொருள் பட அமைந்த வரிகள்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

பதிவு எழுதுவதைவிட பதிவுக்கான கருத்துகளை வாசித்துவிட்டு ஏற்புரை எழுதுவது எப்போதும் எனக்கும் இஷ்ட்டம். காரணம், பதியும்போது யாவருக்கும் பிடிக்க வேண்டுமே என்கிற தயக்கம் இருக்கும். அது, கருத்துகளைக் கண்டதும் ஆசுவாசப்பட்டுவிடும். நன்றி சொல்லப் புறப்பட்டு மேற்கொண்டு நாலு வார்த்தை சொல்லி நிறைவு செய்வோமே என்று தோன்றும். அதிலும் குறிப்பாக, கிரவுன் போன்ற ரசனை மிக்கவர்களின் கருத்துகளில் தமிழ் கொஞ்சுவதைக் காணக்காண மனம் குதூகலிக்கும்.

எம். ஹெச். ஜே.: பாராட்டுக்கு நன்றி. (அடிக்கடி “ட்டீ இன்னும் வரல”ன்னு சொல்றேனே விளங்களயா?. கவிதை என்னாச்சு?)

Bro. Ahamed Ameen: Repeated preaching explaining the success notes to pessimists can always bring changes. Thanks for your encouragement.

மதிப்பிற்குரிய இபுறாகீம் அன்சாரி காக்கா அவர்கள்,
வணிக மற்றும் பொருளாதாரப் பதிவுகளின் வாயிலாக வரி விதிப்புகளை எங்களுக்கு விளக்கிச் சொல்லிவரும் தங்களுக்கான வலைவிரிப்பே இப்பதிவு.

காசுபண வரியைக் கற்றிருக்கும் தங்களுக்கு கவிதை வரிகளிலும் அபரிதமான ஆர்வம் உண்டு என்பதை அறிவேன். இந்த வலைவிரித்தேன்; எத்துணை ஆழமான வரிகளைத் தேடி எடுத்து இங்கே எங்களுக்காகப் பதிந்துள்ளீர்கள். நன்றி காக்கா.

மதிப்பிற்குரிய கவியன்பன் அவர்கள்,
பாராட்டுக்கு மிக்க நன்றி. தனி மடலில் இந்தப் பதிவின் துவக்கத்தை மரபாக்கிக் கற்பித்த தங்களின் பெருந்தன்மைக்கும் நன்றி. அது நன்றாக வந்திருந்ததால் தங்களின் அனுமதியின்றி இங்குப் பதிகிறேன். பிழையெனில் பொறுக்கவும்.

\\உன்னை அறி
உண்டி நிறைக்க
தன்னை இழக்கும்
தன்மை ஒழி\\

இவ்வரிகளைச் சற்று “அசை”த்து எழுதி விட்டால் போதும் இப்படியாக (உங்கள் பொன்னான வரிகளை மாற்றும் என் பணிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்)

“உன்னை அறிதலால்
உண்டி நிறைக்கும்
தன்னை இழந்திடும்
தன்மை ஒழியும்!”


(வஞ்சி விருத்தம்; அல்லது, அளவொத்த கண்ணி என்ற வாய்பாட்டில் அமர்ந்து கொண்டு ஓசையால் ஈர்க்கும்)

crown said...

தன்னை நம்பி தேடியவரே
தீர்வுகள் எட்டினர்
உன்னை நம்பு
உதித்து எழு.
-------------------------------------
இறை நம்பிக்கையுடன் உள்ளவர்களே தன்மேல் நம்பிக்கை கொள்வர் என்பது இயல்பு!அல்லாஹ் இருக்கிறான்.அவன் மெய்வருந்த கூலிதருவான் என கொள்வோர் வெற்றி பெருவர்.

crown said...

மயிர்க்கணக்கில் கால்களிருந்தும்
மரவட்டை யல்ல ஊர்வதற்கு
மான் குட்டி நீ
துள்ளிக் குதி
--------------------------------------------
என்னே! ஒரு உருவகம்!!!!ஈமான் உள்ள மான் குட்டி நீ! எதற்கு தயக்கம்? மேலும் உதிர்ந்துவிடும் மயிர் கால்களா? உந்தன் நம்பிக்கை! அது உயர்ந்த கோட்பாடு மிக்கது எனவே வெற்றி நமதே என உணர்!

sabeer.abushahruk said...

தம்பி ஜாஃபர்,

//சிறு சந்தேகம்... நெற்றி நிலம் பட நன்றி நவிழ்வது வெற்றி வாய்க்கையில் மட்டும்தானா கவிஞரே?//

கண்டிப்பாக இல்லை, ஜாஃபர். தோல்வியின்போது துயரம் நீக்க வேண்டி நெற்றி நிலம் படும்; வெற்றியின்போதே நன்றி நவிலுவதற்காக நெற்றி நிலம் பட வேண்டும்.

அன்றியும், எப்போதெல்லாம் நெற்றி நிலம்பட நன்றி நவிலுதல் வேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

crown said...

உறைந்து போவது
பனிக்கட்டிக்கு இயல்பு
நீ புலிக்குட்டி
விடைத்து நில்
புஜங்கள்
புடைக்க நிமிர்
------------------------------------------
உறைவது பனிக்கட்டியின் இயல்பு எனில் புலிக்குட்டியின் குணம் வீரம்! இப்படி இயல்பாகவே உன்னுள் இருக்கும் ஆற்றலை உணர் என கவிஞர் அழகாய் சுட்டி காட்டுகிறார், இங்கே பாரு நிலா.
நிலா, நிலா ஓடிவா என ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறுட்டுவதுபோல் சமுக கரிசனையுடன் சொல்லியுள்ளார் பாரட்டுக்கள்.

crown said...

உயர்ந்த எண்ணங்களை
உள்ளத்தில் உரமிடு
விருட்சங்கள் அனைத்திலும்
சுபிட்சங்கள் விளையும்
------------------------------------------
ஆஹா! அருமை!உயர்ந்த எண்ணத்துடன் இடப்படும் உரத்தின் வீரியத்தில் பூக்கும் நம்பிக்கை பூவிலெல்லாம் சுபிட்சம் என்னும் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும்.

crown said...

படிப்போ பிழைப்போ
பொறுப்பாய்ப் பாடுபடு
தேர்விலும் வெல்லலாம்
தெருவிலும் உயரலாம்
--------------------------------------------
எதார்த்தம் கவிஞரின் வாழ்வில் நிகழ்ந்ததைத்( இன்னும் நிகழ்வதை)தான் சொல்லியுள்ளார்! அந்த தகுதி வாய்க்க பெற்றதால் "தான் பெற்ற இன்பம் அனைவரும் பெறட்டும் என எண்ணும் வைர குணம்.

crown said...

முன்னமொரு முறை
முயன்றது போதுமென்ற
எண்ணம் துற,
முட்டி மோதியே
ஓடு உடைந்திட
உலகில் வெளிப்படும்
குஞ்சை நினை
---------------------------------------
ஒரு வெற்றியுடன் ஓய்ந்துவிடாதீர்!தொடர் வெற்றியில் படிக்கட்டுங்கள் பின் வருபவர்கள் அதில் ஏறி மேலும் வெற்றி பெறட்டும்.இதில் சொல்லபட்ட குஞ்சின் பிறப்பு ஒரு முயற்சியின் சிறப்பு!இதை அறியாத கூமுட்டையாய் இல்லாமல்!தெளிந்து நில் என கவிஞர் சொல்லும் ஒவ்வொரு ஆலோசனையும் தெளிவான போதனை!

crown said...

தடைகள் வந்து இடைமறித்தால்
தாவிக் குதி
முட்டுச் சுவர்கூட முடிவல்ல
அப்பாலும்கூட
உலகம் இயங்குவதை
சிந்தையில் வை
-------------------------------------------------
கவிஞரே!கவிஞரே! நான் என்ன சொல்ல?எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!இப்படி வாய்க்கும் வார்த்தைகள் எங்களுக்கு வாய்க்கும் கைக்கும் உள்ள தூரமாய் ஆக்கி எங்களையும் உங்களை போல் யோசிக்க வைக்கிறீர்களே! அருமை!crown said...

சொல்ல விழைவதை
சுற்றி வளைத்திட
சோம்பல் மீறிடும்
பொட்டில் அடித்ததுபோல்
சட்டெனச் சொல்
-----------------------------------
என்னைப்போல் வழ,வழ.கொழ,கொழன்னு சொல்லாமல் சொல்லை சொல்லியவிதத்திலும் தேனை குழைத்து சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

crown said...

கற்க மறுத்தது
தவறு என்பதை
உணரும்வரைதான்
உறக்கம் வரும்

உண்ணப் பசிக்கையில்
உலகம் மறுக்கையில்
உழைக்க உனக்குள்ளே
உத்வேகம் வரும்

அந்த
ஒற்றை இழை பிடி
உன்னை அதில் இழை
தென்னை நிமிர்ந்ததுபோல்
விண்ணை எட்டு
-----------------------------------------------
ஒவ்வொரு அனுபவமும் ஆசான்!அது படித்துதரும் பாடம் தேறிவிட்டால் தென்னைபோல் விண்(win)னை எட்டலாம்.

crown said...

நல்ல வழி அறி
வெல்ல அதில் நட
வெற்றி வாய்க்கையில்
நெற்றி நிலம்பட
நன்றி நவில்!
------------------------------------
அல்ஹம்துலில்லாஹ் என்ற நன்றி உரையை நன்றாய் நவின்றீர்கள்.

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா அவர்களின் கருத்து கவிதையின் தாக்கம் குறையாமல் எழுதப்பட்டதுபோல் உத்வேகமாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருக்கிறது. சிந்தனை தீப்பொறி, சுயமுயற்சி தூண்டல் ஆகிய வார்த்தைகள் கவிதைக்குச் சுதி சேர்க்கின்றன. ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

சகோ.Shahul Hameed, ஹமீது, adirai asina, JAFAR,Jafar Hassan ஆகியோருக்கும்

நண்பர்கள் மெய்சாவுக்கும் காதருக்கும் ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

அபு இபு,

//ஒற்றை மை கொண்டு
உருவாகிறது அரசியல் தலைமை !
ஒற்றுமை கொன்று...
உறவாடுகிறது அதே அரசியல் தலை !//

ஆஹா ஆஹா.

ஜாகிர்,
நாம் கண்டும் கண்டித்தும் வந்த சில மனிதர்கள்தான் இன்ஸ்பிரேஷன்.


இன்னும் யாசிரைக் காணோமே!

sabeer.abushahruk said...

கிரவுன்,

எல்லோரும் மொத்தமாக படித்துப் பாராட்ட, நீங்கள் மட்டும் ஒவ்வொன்றாய் எடுத்துச் சீராட்டுவது எனக்குக் கிடைத்தக் கெளரவம். கவிதையை மட்டுமல்லாது ஆங்காங்கே எழுதியவனையும் பாராட்டுவது தலைநிமிர வைக்கிறது. மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது.

//இப்படி வாய்க்கும் வார்த்தைகள் எங்களுக்கு வாய்க்கும் கைக்கும் உள்ள தூரமாய் ஆக்கி எங்களையும் உங்களை போல் யோசிக்க வைக்கிறீர்களே!//

என்று தாங்கள் சொல்வது சரியென்றால் இந்தப் பதிவு வெற்றிப் பதிவே என்கிற மனதிருப்தியோடு தங்களுக்கு நன்றி சொல்லி; அதிரை நிருபருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன், நன்றி.

வஸ்ஸலாம்.

ZAEISA said...

நல்ல வழி அறி
வெல்ல அதில் நட
வெற்றி வாய்க்கையில்
நெற்றி நிலம்பட
நன்றி நவில்!//
அருமை..."இதுதான் அனைத்து வயதினருக்கும் உகந்தது."
(ஹார்லிக்ஸ் விளம்பரம் அல்ல.)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//(அடிக்கடி “ட்டீ இன்னும் வரல”ன்னு சொல்றேனே விளங்களயா?. கவிதை என்னாச்சு?//

வ அலைக்கு முஸ்ஸலாம் சபீராக்கா,
இடையில ட்டீ கேட்டது நெஜமா வெளங்கயில, லேட்டா புரிஞ்சிச்சு
Tட்டீ தடங்கலுக்கான Dடீடையிலு உங்க மெயிலில்!

Yasir said...

”உன்னை அறி” என்னையறியாமலயே உணர்ச்சி பொங்க வைத்துவிட்டது...கவிக்காக்கா தாமதிற்க்கு மன்னிக்கவும்..வெளியூர் சென்றுவிட்டதால் முதல் நாளே படித்தும் உடனடியாக கருத்து பதிய முடியவில்லை....ஆனால் உங்கள் கவிதை சென்ற இடத்தில் ஒரு உத்வேகத்தைக் கொடுத்து அல்லாஹ்வின் உதவியால் காரியம் வென்றியடைய உதவியது

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு