Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று ! நாளை?- 2 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 28, 2013 | , , , , , , , ,


கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களைப் போன்ற ஒரு தலைவர் தமிழ்மண்ணில் பிறந்தது நம் கண் முன்னே வாழ்ந்து மறைந்த காட்சிகளைக் காண நாம் பாக்கியம் செய்தவர்கள். இன்றைய இளைய சமுதாயத்தினர் நம்பி பின் தொடர்ந்து போகும் பல மாறுபட்ட இயக்கங்களின் தலைவர்கள் இத்தகைய தகுதிகளைப் பெற்று இருப்பார்களா என்பது பெரும் சந்தேகத்துக்குரியது. காயிதே மில்லத் அவர்களைப் பற்றி இன்னும் இரண்டொரு செய்திகளை சுட்டிக் காட்டிவிட்டு தொடர எண்ணுகிறேன். 


காயிதே மில்லத் அவர்களின் புகழுக்கு மணிமகுடம் வைப்பது அரசியல் நிர்ணய சபையில் அவர் ஆற்றிய உரை. ஒரு தமிழனாக தனது தாய்மொழியாம் தமிழ்தான் இந்த நாட்டின் ஆட்சிமொழியாக வேண்டுமென்று துணிச்சலாக வாதாடிய வரலாறு அவருக்குண்டு. இறுதியில்  அவர் கருத்து வாக்கெடுப்புக்கு விடப் பட்டபோது இராஜேந்திர பிரசாத் போட்ட ஒரே  ஒரு ஓட்டின் வித்தியாசத்தால் தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்து பெறும்  முயற்சி தோல்வியடைந்தது. இல்லாவிட்டால் ஜிஸ் தேச மே கங்கா பஹ்திகே என்று பாடம் இருக்காது. இந்நாட்டில் காவிரி ஓடுகிறது என்றே பாடம் படிக்கப் பட்டுக் கொண்டு  இருக்கும். 

நாடு இரண்டாக உடைந்ததற்குக் காரணம் யார்? ஜின்னாவா? நேருவா? நடுநிலையாளர்கள் அறிவார்கள். விடுதலை பெற தயாராகிக் கொண்டிருந்த  இந்தியாவில் ஜின்னாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து விடுங்கள். நாடு உடையாமல் காப்பாற்றுங்கள் என காந்தியார் முன்வைத்த கடைசி நேர சமரசத்தை நிராகரித்தது யார்? சகாக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் எனச் சாக்குச் சொல்லி, கடைசி நேர வாய்ப்பையும் கைகழுவி, இந்தியா இரண்டாக உடையக் காரணமாக இருந்தது நேருபிரான் அல்லவா? 

நேரு அரசியலில் தனது போட்டியாளர்களாகக் கருதியது இருவரைத்தான். ஒருவர் நேதாஜி. மற்றவர் ஜின்னா. ஒன்று நேருவுக்கு தலைவலி. மற்றது திருகுவலி. இந்தியா விடுதலைப் பெறப் போகிறது. நேதாஜி இனி இந்தியாவுக்குத் திரும்பப் போவதில்லை. ஜின்னாவுக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து இந்தியா உடையாமல் காப்பாற்றலாம். ஆனால் தனது திருகுவலி நிரந்தரமாகிவிடும். சிறந்த சட்ட மேதையான ஜின்னா அரசியல் அமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் பதவியை செயல் அதிகாரமுள்ள பதவியாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டால்? தட்டிக் கேட்பார். யாருமின்றி இந்தியாவைத் தன்னால் ஆள முடியாதே? நேருவின் இந்த சர்வாதிகார மனோபாவத்தால்தான் நாடு பிளவுண்டது. பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதைப் போல இந்தியாவில் எஞ்சி நின்ற நான்கு கோடி முஸ்லிம்களும்தான் பிரிவினைக்கு காரணமானவர்கள் என்று அவர்கள் காங்கிரசாரால் தூற்றப்பட்டார்கள்.

இந்தச் சூழலில்தான் 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. 1906 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சிக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் அது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக இந்தியா பிரிந்துவிட்ட நிலையில் கட்சியைக் கலைத்து விடுவதற்காகக் கூடிய கூட்டம் அது.

கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஒரு பொறுப்பாளரும், இந்தியாவுக்கு ஒரு பொறுப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரு பொறுப்பாளர்களும் அவரவர் நாட்டில் மூன்று மாதங்களுக்குள்ளாக கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பொறுப்பாளராக லியாகத் அலிகான் அவர்களும், இந்தியாவுக்கான பொறுப்பாளராக நமது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் உள்ள நான்கு கோடி முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு ஒரு தமிழனின் தோள்களில், நம் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தோள்களில் அன்று கராச்சியில் சுமத்தப்பட்டது.

நமது காயிதே மில்லத் இந்திய முஸ்லிம்களைக் காப்பாற்றும் பணியை, அன்றே, கராச்சியிலேயே தொடங்கிவிட்டார். எவ்வாறு?

கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் அனைவருக்கும் ஒரு விருந்தளித்தார். விருந்தின் முடிவில் லியாகத் அலிகான் காயிதே மில்லத்திடம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், என்ன உதவி என்றாலும் நாங்கள் செய்யத் தயார் என்றார். அப்போது தெள்ளத் தெளிவாக, ஆணித்தரமாக காயிதே மில்லத் சொன்னார்,

“நீங்கள் ஒரு நாட்டினர். நாங்கள் வேறு நாட்டினர். எங்கள் நாட்டு முஸ்லிம்களின் நன்மை தீமைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். அதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை. எங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய விரும்பினால், உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு (இந்து, சீக்கியர், கிறித்துவர்) ஒரு துயரமும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோதும்!” எவ்வளவு ஆழமும், அர்த்தமும் பொதிந்த வேண்டுகோள் அது!

இந்தியா திரும்பிய காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைக் கூட்டினார். அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தச் சமயத்தில் முஸ்லிம் லீகைச் செத்த பாம்பு என வர்ணித்தார் நேரு. செத்த பாம்பை  எடுத்து ஆட்டிக் காட்டுகிறார் பேட்டை இஸ்மாயில் என காயிதே மில்லத் அவர்களைக் கேலி செய்தார்கள் காங்கிரசார். ஒரு படி மேலே போய், பிரிந்து போய்விட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியிடம், கோடிக்கணக்கில் பணமும் சொத்துக்களும் உள்ளன. இந்தியாவில் மீண்டும் முஸ்லிம் லீக் கட்சியைத் தொடங்கி நடத்தினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பாகிஸ்தானியர் சொன்னதாலேயே காசுக்கு ஆசைப்பட்டு காயிதே மில்லத் கட்சி தொடங்கியிருப்பதாக வல்லபாய் பட்டேல் குற்றம் சாட்டினார்.

அப்போது கவர்னர் ஜெனரலாய் இருந்த ராஜாஜி, காயிதே மில்லத்தை நேரில் அழைத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீகிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சொத்துக்கள், பணப் பரிமாற்றம் ஏதேனும் செய்ய வேண்டியதிருந்தால் அதற்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் தான் செய்வதாகக் கூறி பார்ப்பன ஆழம் பார்த்தார். வேற்று நாட்டிலிருந்து தங்கள் கட்சிக்கு எந்த உதவியும் தேவை இல்லை நாங்களே கட்சி நடத்திக் கொள்வோம் உங்கள் பருப்பை எங்களிடம் வேகவைக்கப் பார்க்காதீர்கள் என ராஜாஜியிடம் காயிதே மில்லத் தெரிவித்து விட்டார்.

நாடு என்று வரும்போது நான் முதலிலும் இந்தியன், கடைசியிலும் இந்தியன். மதம் என்று வரும்போது நான் முதலிலும் முஸ்லிம். கடைசியிலும் முஸ்லிம் என அலி சகோதரர்களில் ஒருவர் கூறியதை, தனது ஒவ்வொரு நகர்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டினார் காயிதே மில்லத்.

அப்படிப்பட்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் அலங்கரித்த எதிர்க் கட்சித்தலைவர் பதவியின் நாற்காலியில்  இன்று யார் யார் பெயரோ  எழுதப்பட்டு அமர ஆள் இல்லாமல் அல்லது அமரும் ஆள் வந்து அமராமல் அல்லது வரவிடாமல்  ஒட்டடை படிந்து கிடக்கிறது என்பது தமிழக சட்டமன்றத்தின் அழுக்குப் படிந்த வரலாறு.

அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது , சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவரான திரு. பி.ஜி. கருத்திருமன் என்பவர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து அந்தப் பதவியை அலங்கரித்தார்.  காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. விநாயகம் என்கிற உறுப்பினரும் , சுதந்திரா கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஹண்டே அவர்களும் இருந்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டங்கள் ஒவ்வொன்றும் கருத்துச்செரிவும் கண்ணியமும் காத்தவை. சட்டமன்றத்தின் பொற்காலம் என்று இதைக் கூறலாம்.

திரு. விநாயகம் அவர்கள் கேள்வி கேட்பதில் வித்தகர். முதல்வர் அண்ணா அழகாக பதில் சொல்வார். ஒருமுறை தொடர்ந்து விநாயகம் கேள்விகள் கேட்ட போது எரிச்சலுற்ற ஆளும் கட்சி உறுப்பினர் விநாயகம் அவர்களைப் பார்த்து, “இப்படியே எவ்வளவு கேள்விகள் கேட்பீர்கள்?” என்று கோபமாக கேட்டார். அண்ணா அமைதியுடன் எழுந்து “ அவர் கேட்கட்டும் இன்னும் கேட்கட்டும் அவர் பெயரிலேயே வினா இருப்பதால் அப்படித்தான் கேட்பார்” என்று கூறினார்.  சட்டமன்றத்தில் வங்கக் கடலின் அலைகள் சிரிப்பொலிகளாக எழுந்தன. ஒரு இலக்கிய மன்றத்தின் கூட்டம் நடைபெறுவதுபோல் சட்டமன்றக் கூட்டங்கள் நடக்கும்.  இன்றோ சட்டமன்றம் வசவுகளின் மன்றமாகிவிட்டது. 

அதே திரு. விநாயகம் அவர்கள் அண்ணா சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையின் விமர்சனத்தில் பேசும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால் திமுக ஆட்சியைக் கலைத்துவிடுவோம் என்கிற தோரணையில் “ YOUR DAYS ARE NUMBERED “ என்று கூறினார். ஆனால் அண்ணா அமைதியுடன் “ NO! OUR STEPS ARE MEASURED” என்று பதில் அளித்தார். “ உங்களின் நாட்கள் எண்ணப் படுகின்றன “ என்று சொல்லிய  வினாயகத்துக்கு, “ நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அளக்கப் படுகிறது “ என்ற அற்புதமான பதிலை அளித்தார். 

இந்நிகழ்ச்சி நடைபெற்று கொஞ்ச காலத்துக்குள் அண்ணா கடும் நோய்வாய்ப் பட்டார். இறந்தும் போனார். இறுதி அஞ்சலியில் தன் முகத்தை அண்ணாவின்  கால்களுக்கு இடையே பதித்துக் கொண்டு விநாயகம் கதறி அழுதார். உங்களின் நாட்கள் எண்ணப் படுகின்றன என்று தான் கூறியது அரம் பாடியதாக ஆகிவிட்டதோ என்று கதறினார். இங்கு பதிய வேண்டிய இன்னொரு தகவல் விநாயகமும் அண்ணாவும்         பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த கல்லூரித் தோழர்கள் என்பதாகும். இது அன்றைய அரசியல் நாகரீகம். இன்று இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் எதிர்க் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் இறப்பைக்  கொண்டாடுவார்கள். 

அண்ணாவின் ஆட்சிகாலத்தில் உணவுக்குப் புளித் தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்று புலிப் பிரச்னைகள் இந்த அளவுக்குக் கிடையாது. புளிப் பிரச்னைதான்.  மிகக் கூடுதலான விலைக்குக் கூட தமிழகத்தில் புளி கிடைக்கவில்லை. அந்த நேரம் காங்கிரசின் ஆட்சியில் இருந்த கர்நாடகத்தின்  மைசூர் பகுதிகளில் புளி ஏகபோகமாக விளைந்து இருந்தது. முதல்வரும் எதிர்க் கட்சித்தலைவரும் கலந்து பேசி மைசூரில் இருந்து மத்திய அரசு மூலம் தமிழகத்துக்கு தட்டுப் பாடு இன்றி புளி கொண்டுவர உதவினர். புளிப் பஞ்சம் நீங்கியது. இதுபற்றி ஒரு முறை சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது திரு. பி.ஜி. கருத்திருமன் எழுந்து , “ புளிப் பிரச்னை யாரால் தீர்க்கப் பட்டது ?” என்று மிகவும் மிதப்பாகக் கேட்டார். உடனே அண்ணா எழுந்து    “ புளிப் பிரச்னை தீர்ந்தது புளிய மரத்தின்  உதவியால் “ என்றார். சட்டமன்றத்தில் சிரிப்பலைகள். கருத்திருமனும் நன்றாக சிரித்துவிட்டார். இப்போது போல் யாரும் மேசைகளைத் தட்டவில்லை. அப்போது இருந்த இதுபோல் அரசியல் நாகரிகம் இப்போது உண்டா?
இன்ஷா அல்லாஹ் இன்னும் சொல்லலாம். 
முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc; 

15 Responses So Far:

Ebrahim Ansari said...

பகுருதீன் என்கிற களஞ்சியத்தில் இருந்து அருமையான செய்திகள் கொட்டுகின்றன. அருமை! பாராட்டுக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்திய பிரிவினைக்கு வித்திட்ட வித்தகர்களின் சதிப் பின்னலை எத்தனை போர்வை போட்டு மறைத்தாலும் இவ்வாறான பதிவுகள் வெளிக் கொண்டு வந்து கொண்டிருக்கும்.

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களின் துனிச்சலும், அவர்கள் போற்றிய இந்திய் இறையன்மை கொள்கையும் இப்போது இருக்கும் எந்த அரசியல் வாதிக்கும் இல்லை !

//நாடு என்று வரும்போது நான் முதலிலும் இந்தியன், கடைசியிலும் இந்தியன். மதம் என்று வரும்போது நான் முதலிலும் முஸ்லிம். கடைசியிலும் முஸ்லிம் என அலி சகோதரர்களில் ஒருவர் கூறியதை, தனது ஒவ்வொரு நகர்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டினார் காயிதே மில்லத்.//

தலைநிமிர வைக்கும் இஸ்லாமியரின் துணிவு !

//அந்தச் சமயத்தில் முஸ்லிம் லீகைச் செத்த பாம்பு என வர்ணித்தார் நேரு. செத்த பாம்பை எடுத்து ஆட்டிக் காட்டுகிறார் பேட்டை இஸ்மாயில் என காயிதே மில்லத் அவர்களைக் கேலி செய்தார்கள் காங்கிரசார். ஒரு படி மேலே போய், பிரிந்து போய்விட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியிடம், கோடிக்கணக்கில் பணமும் சொத்துக்களும் உள்ளன. இந்தியாவில் மீண்டும் முஸ்லிம் லீக் கட்சியைத் தொடங்கி நடத்தினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பாகிஸ்தானியர் சொன்னதாலேயே காசுக்கு ஆசைப்பட்டு காயிதே மில்லத் கட்சி தொடங்கியிருப்பதாக வல்லபாய் பட்டேல் குற்றம் சாட்டினார்.//

தூரோகக் கும்பலின் கூடாரம் அடிக்கப்பட்டது இன்றல்ல, அன்றே (தேசக் குழந்தைகளின் மாமா) தோண்டிய குழியில் இன்னும் வீழ்ந்து கொண்டிருக்கின்றனர் இந்திய முஸ்லீம்கள் !

பள்ளிப் பாடங்களில் முதுகுக்குப் பின்னால் குத்துபவர்களை இரும்புமனிதன் என்று திரித்த வரலாறு மறைக்கப்பட்டிருந்தாலும் மறுக்க முடியாத உண்மை !

Unknown said...

போலியான இந்திய வரலாறாக இல்லாமல்

ஒளிவு மறைவின்றி அழகிய முறையில் எடுத்துச்சொல்லப்பட்டு இருக்கின்றது
சகோதரர் பகுருதீன் மூலம்.

எத்தனையோ தவறான விஷயங்கள் இந்திய வரலாறு என்ற முறையில் நாமெல்லாம் படித்து வந்து இருக்கின்றோம் என்பதை நினைக்குபோது, நாம் முஸ்லிம் என்ற முறையில் எவ்வளவு வஞ்சிக்கப்பட்டு இருக்கின்றோம் என்பதை நினைக்கும்போது மன கனக்கத்தான் செய்கின்றது.

உண்மை இந்திய வரலாறு பாடமாய் என்றைக்கு குழந்தைகள் கற்கும் பள்ளிகளில் வருமோ அந்தக்காலங்கள் தான் முஸ்லிம்களின் உண்மைத்தியாகம் உடலாலும் பொருளாலும் எவ்வளவு செலவழிக்கப்பட்டு இருக்கின்றது என்பது எதிர்காலத் தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பு கிட்டும்.

இது வஞ்சகமும், காழ்ப்புணர்ச்சியும்,கொண்ட இந்திய அரசியல்வாதிகள்
இருக்கும் வரை, நாம் சிறுபான்மையினராக இருக்கும் வரை நடைபெறுமா
என்பது கேள்விக்குறியே ?

அபு ஆசிப்.

Anonymous said...

ஜனாப் பகுருதீன் அவர்களின் தொடர் இன்றய தலைமுறை கற்க வேண்டிய அரசியல் பாடமும் பண்பாடும் ஆகும்.

காலத்தின் மாற்றம் கருதி அவர் தரும் தொடர் தொடர என் வேண்டு கோளையும் வாழ்த்தையும் சமர்பிக்கிறேன்.

S.Mohamed Farook - Adirai

அப்துல்மாலிக் said...

நிறைய வரலாறுகள் திரித்துக்கூறப்பட்டும் மறைக்கப்பட்டும் உள்ளது. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை பற்றி நிறைய அறியத்தந்ததற்கு நன்றிகள்..

sabeer.abushahruk said...

காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
பள்ளி, கல்லூரி காலங்களைப்போல மிகவும் சுவாரஸ்யப்படுத்துகிறது தங்களின் இந்தப் பதிவு.  தங்களின் எழுத்தில் நிதானம் தெரிந்தாலும் வாசிக்கும்போது எங்களுக்கு உற்சாகம் தொத்திக் கொள்கிறது.  இத்தனை காலம் இவற்றையெல்லாம் வாசிக்கக் கிடைக்காமல் போனதே என்கிற ஏக்கம் மேலோங்குகிறது.
 
பத்திரிகைகளின் அத்துணை அம்சங்களையும் உள்ளடக்கிய அதிரை நிருபரில் , ஆனந்த விகடனின் பொக்கிஷம் பகுதிபோல, தொடர்ந்து தங்களின் பதிவுகளும் அலங்கரிக்க வேண்டும் என்பதே ஆசை.
 
அந்தக் கால அரசியல் நிகழ்வுகள் நீங்கள் சொல்லச் சொல்ல ஆச்சரியமாக இருக்கிறது.  மக்கள் நலன் காக்க சேவை செய்த மாபெரும் தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.  மேலும், அவர்கள் அடிமை இந்தியாவில் அவதியுற்று சுதந்திரம் பெற்றதால் அதன் அருமை உணர்ந்து தொண்டாற்றினர்.
இக்காலத்தில் சுயநலம் மட்டுமே அரசியல் என்றாகிப்போனதால் எங்களுக்கெல்லாம் அரசியல் ஒரு வியாபாரமாகவேத் தெரிகிறது.

தொடருங்கள். 

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
(சிறப்பான பதிவுகளைப் பதிந்துவரும் தாங்கள், நிறைவாக, கருத்துகளுக்கான ஏற்புரை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தலைசிறந்த அரசியல் பாடம்!
தொடர் தொடர வேண்டும்!

Ebrahim Ansari said...

அண்ணாவும் காயிதே மில்லத் அவர்களும் இருக்கும் இந்தப் பதிவில் உள்ள புகைப் படத்தைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

இன்றைக்கு பெரிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்களை தோழமைக் கட்சியினர் முன் அனுமதி பெற்றே தோட்டத்திலும் புறத்திலும் பூச்செண்டு கொடுத்து சந்திக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் 1967 தேர்தலில் தி மு க அண்ணா தலைமையில் தேர்தல் களம் கண்டபோது முஸ்லிம் லீக் அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்தது.

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளின் லிஸ்டையும் தன்னுடன் எடுத்துப் போய் புதுப்பேட்டையில் காயிதே மில்லத் அவர்கள் வசித்த இடத்துக்குப் போன அண்ணா மொத்த தொகுதிகளின் லிஸ்டையும் காயிதே மில்லத் அவர்களின் கரங்களில் கொடுத்து உங்களுக்கு எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்று முதலில் டிக் அடித்து கேட்டார். காயிதேமில்லத் அவர்கள் தனது கரங்களால் 12 தொகுதிகளை டிக் அடித்துக் கொடுத்தார்கள். இவை மட்டும் போதுமா என்று அண்ணா கேட்டார்கள். இந்த பனிரெண்டு தொகுதிகளும் முதலில் முஸ்லிம் லீகுக்கு ஒதுக்கப்பட்ட பிறகுதான் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. அவ்வளவு மரியாதை இந்த சமுதாயத்துக்கு தரப்பட்டது. காரணம் ஒற்றுமையாக இருந்தோம்.

இன்றோ இரண்டு இடம் மூன்று இடங்களுக்காக தாழ்வாரங்களிளும் மரத்தடிகளிலும் காத்துக் கிடக்கிறோம். சமுதாயத்தை அடகுவைக்கத் திரியும் இன்றைய தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பார்த்து நமக்கு நாமே வெட்கப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

இப்படி நமக்குள் போட்டி போட்டுக் கொண்டு நம்மை நாமே தோற்கடித்துக் கொண்டோம். வாணியம்பாடியில் சேப்பாக்கத்தில் துறைமுகத்தில் முஸ்லிம் வேட்பாளர்கள் தோற்றுப் போக நாமே காரணம் ஆனோம். கூட்டணி என்ற பெயரில் பிரிந்து பலியானோம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தாமதமான கருத்திற்கு மன்னிக்கவும். இது போன்ற கண்ணியம் காக்கப்பட்ட நம் முன்னோர்களின் பொக்கிஷ வரலாறுகள் பதிக்கப்பட்ட ஒரு தொகுப்பு இன்று இந்தியாவில் எங்கேனும் ஒரு மூலையில் அச்சிட்டு வெளியிடப்பட்டால் அது ஒரு தேச துரோகம், பிரிவினைவாதம் என்று பெரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி அப்புத்தகத்தை உடனே தடை செய்ய உயர்நீதிமன்ற‌, உச்சநீதிமன்ற படிகளை எத்தனையோ பார்ப்பனம் ஏறி இருக்கும் இந்நேரம்....காரணம் அவ்வளவு விஷமத்தனமான கருத்துக்களும், ஆபாசங்களும் நிறைந்த புத்தகமாகவல்லவா இது இருக்கிறது???

காரணம் நல்லவைகளை ஆணித்தரமாக எடுத்துவைப்போர், உண்மைகளை உரக்கச்சொல்வோர் தான் இன்றைய அரசியல்வாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார்கள் சிபிசிஐடி மூலமாகவோ அல்லது எண்கவுண்ட்டர் மூலமாகவோ அல்லது ஏதேனும் ஒரு கேஸில் சிக்க வைத்து போட்டுத்தள்ள......(கார‌ண‌ம் இது மாதிரி புத்த‌க‌ங்க‌ளில் பெண்க‌ளின் படுக்கை அறை அந்த‌ர‌ங்க‌ செய்திக‌ளோ, கிளுகிளுப்பு புகைப்ப‌ட‌ங்க‌ளோ இட‌ம் பெற‌ வாய்ப்பே இல்லை ஆத‌லால்.....)

நம் நாட்டின் தூண்களாய் விளங்கிய நேரு, ராஜாஜி, ச‌ர்தார் வ‌ல்ல‌ப்பாய் ப‌ட்டேல் முத‌ல் ந‌ர‌சிம்ம‌ ராவ் வரை வந்த‌ ந‌ல்லோர்க‌ளெல்லாம் இன்று என்ன க‌தியில் இருக்கிறார்க‌ளோ??? அல்லாஹ் அஹ்ழ‌ம்.....

சகோ.முத்துப் பேட்டை P. பகுருதீன் அவ‌ர்க‌ளிட‌மிருந்து இது போன்ற‌ பொக்கிஷ‌ பெட்ட‌க‌ க‌ட்டுரைக‌ளை இன்னும் அதிக‌ம் எதிர்பார்த்த‌வ‌னாக‌ இருக்கின்றேன்.....

Unknown said...

பதிப்புக்கு நன்றி
கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் தூய்மையான அரசியல் வாழ்க்கை இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டிய ஒரு விஷயம்.எளிமையின் அடையாளமாய் தன்னடக்கத்தையே தன்னுடைய தனி உடைமையாய் கொண்டு அரசியலில் வளம் வந்தவர்.ஷரியத்துக்கு முரணான தீர்ப்புக்கு எதிராய் வீரத்தின் விளைநிலமாய் பாராளுமன்றத்தில் முழங்கிய கண்ணியமிகு காயிதே மில்லத்தின் வாழ்க்கையில் இன்றைய அரசியல்வாதிகளும் இயக்கவாதிகளும் பாடம் கற்றுக்கொள்ளலாமே,,,,!!!
----------------------
இம்ரான்.M.யூஸுப்

M.B.A.அஹமது said...

யாரடா சொன்னது எஙகளை அண்ணியன் என்று யாரடா சொன்னது இந்தியா எங்கள் தாய் நாடு இஸ்லாம் எஙகள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் வழியாகும்

Unknown said...

கப்பலோட்டிய தமிழன் வ . உ . சிதம்பரனார் என்று வாய் கிழிய பேசும் இந்த வரலாற்று ஆசிரியர்கள் என்றைக்காவது , இந்த சிதம்பரனாருக்கு கப்பல் ஓட்ட
நிதி கொடுத்தது ஒரு முஸ்லிம் தான் என்று எழுதி இருக்கின்றார்களா ?

எத்தனை இந்தியருக்கு தெரியும் நிதி கொடுத்தது ஒரு முஸ்லிம் என்று?

இப்படி எத்தனையோ எண்ணிலடங்கா முஸ்லிம் தியாகிகளின் பெயர்கள் வேண்டுமென்றே இந்திய வரலாற்றை காழ்ப்புணர்ச்சியுடன் எழுதிய ஆசிரியர்களால் மறைக்கப்பட்டு இருக்கின்றது என்பதுதான் உண்மை.

உண்மையான இந்திய வரலாற்றை இவர்கள் எழுதி இருந்தால் இந்த பாபரி மஸ்ஜித் கூட இடிக்கப்பட்டு இருக்காது. அத்துணை தியாகங்களின் ஒட்டு மொத்தத்திற்கும் சொந்தக்காரர்கள் நாம். தீவிரவாதிகள் தீவிரவாதிகள் என்று வாய்கிழிய பேசும் இவர்கள் உண்மை வரலாற்றை புரட்டிப் பார்ப்பார்களே யானால் இந்திய இரண்டாகப்பிரிய யார் யார் காரணம், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு உலை வைத்தது யார் , இந்தியாவை ஒன்றாகவே வைத்திருந்து
(பிரிக்கப்படாத இந்தியாவில் ) ஒரு பலம் பொருந்திய நாடாக இவ்வுலகின் முன் வல்லரசாக இருக்க ஆவல் கொண்டது யார் என்று தெரியவரும்.

அப்பொழுதுதான் தெரியும், இன்றைய தலைமுறையினருக்கு முஸ்லிம்கள் இந்திய நன்மைக்காக எவ்வளவு பெரிய தியாகங்களை செய்து இருக்கின்றார்கள் என்று.

இத்தகைய உண்மை வெளிவரும் காலம்
ஒரு கனாக்காலமா ?
நிஜமாகவே வரும் காலமா?

உண்மை வரலாற்றை எழுதும் பேனாவைப்பிடிக்கும் கரங்களை பொறுத்தது.
அந்தக்கரம்,
கறைபடியா கரமாக இருந்தால்
உண்மைக்காக எழுதுகோல் பிடிக்கும் கரமாக இருந்தால்
எந்தவித வர்ப்புருத்தளுக்கும், அதிகார துஷ்பிரயோகத்திர்க்கும் கிஞ்சிற்றும்
பயமற்ற கரமாக இருந்தால்,
மனிதாபிமான ,தனக்கே பாதிப்பு வந்தாலும் ,உண்மையை , அதுவும் காலம் காலமாக மறைக்கப்பட்டு வரும் உண்மையை ஓங்கி உரத்து சொல்லும் கரமாக
இருந்தால்,

இன்ஷா அல்லா நம் காலத்திலேயே அந்த முஸ்லிம்களின் உண்மை தியாக
வரலாற்றை எழுத்து வடிவில் காணும் வாய்ப்பு கிட்டும்,

ஆனால் எழுதுகோல் பிடிக்கும் கை மேற்ச்சொன்ன பண்புகளுக்கு எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில்

அனைத்தும் கனவே.

அபு ஆசிப்

Unknown said...

//நாடு என்று வரும்போது நான் முதலிலும் இந்தியன், கடைசியிலும் இந்தியன். மதம் என்று வரும்போது நான் முதலிலும் முஸ்லிம். கடைசியிலும் முஸ்லிம் என அலி சகோதரர்களில் ஒருவர் கூறியதை, தனது ஒவ்வொரு நகர்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டினார் காயிதே மில்லத்.//எவ்வளவு கண்ணியமும் கடமை தவறாமையின் குணமும் பொருந்திய பேச்சு .

நான் எப்படி ஒரு அரசியல் விஷயத்தில் உண்மை இந்தியனாக இருக்கின்றேனோ, அதேபோல் என் மார்க்கத்திலும் பிடிப்பு உள்ளவனாக இருப்பேன் என்று எவ்வளவு பலம் பொருந்திய ஈமானுள்ள, மற்றும் நெஞ்சுறுதி மிக்க அரசியல் முழக்கம்.

அரசியலையும் சரி, மார்க்கத்தையும் சரி யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத காயிதே மில்லத் எங்கே ?

இன்றைய நயவஞ்சக , சுயநலம் கொண்ட ,
அரசியல்வாதிகள் எங்கே ?

அபு ஆசிப்.



Shameed said...

//இந்தியாவில் ஜின்னாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து விடுங்கள். நாடு உடையாமல் காப்பாற்றுங்கள் என காந்தியார் முன்வைத்த கடைசி நேர சமரசத்தை நிராகரித்தது யார்?//

செய்தி பழச இருந்தாலும் இது எனக்கு புதுசா இருக்கு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காயிதே மில்லத் அவர்களின் உண்மை வரலாற்றை படிப்பிலும் சொல்லித் தரவில்லை, குறைந்த பட்சம் இன்றைய லீக்கர்கள் கூட முழுமையாய் சொல்வதில்லை. உங்கள் மூலமே அறிய முடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

மார்க்கம் என்று வரும்போது முதலிலும் கடைசியிலும் இஸ்லாமியன்,
தேசம் என்று வரும்போது முதலும் கடைசியும் இந்தியன்,
மொழியென்று வரும்போது முதலும் கடைசியும் தமிழன் (ஆங்காங்கே மட்டும் ஆங்கிலம்)
என நாமும் முழங்குவோம்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு