Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 15 16

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2013 | , ,தொடர் : பதினைந்து

இஸ்லாமிய பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள். ( உழைப்பு ).

புகழ்பெற்ற சில நகைச்சுவைத் துணுக்குகள் உள்ளன. 

ஒருவனைப் பார்த்து மற்றவன் : நீ என்ன செய்கிறாய் ?

“ எஸ். ஐ. ஆக இருக்கிறேன்” 

 “அடப்பாவி!  சொல்லவே இல்லையே எந்த  ஊர் ஸ்டேஷன் ?”  

 “சும்மா இருக்கிறேன் என்பதைத்தான் எஸ். ஐ. ஆக இருக்கிறேன் என்று சொன்னேன்”  என்று  பதில் வரும்.

இன்னொரு சம்பவத்தில் நீ என்ன செய்கிறாய் என்று மற்றவனை ஒருவன் கேட்பான். நான் வீட்டில் என் அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன் என்று பதில் சொல்வான். அப்பா என்ன செய்கிறார் என்று கேட்டால்  அவர் வீட்டில் சும்மாதான் இருக்கிறார் அவருக்கு உதவியாக நானும் இருக்கிறேன் என்று பதில் வரும். 

இவைகள் வெறுமனே நாம் சிரிப்பதற்கான காட்சிகள் அல்ல. பல ஊர்களில் பலருடைய மனித உழைப்பு இப்படி வெட்டியாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது. காலைவேளைகளில் தேநீர் விடுதிகளில் கைகளில்   அன்றைய செய்தித்தாள்களை பிடித்துக் கொண்டு ஆரம்பிக்கும் அரசியல் தழுவிய வெட்டிப் பேச்சுக்கள் எவ்வித பயனுமின்றி ஒரு மனிதனின் ஒரு நாளை நகர்த்தி விழுங்கி விடும். தவிரவும் சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக நின்று பயனற்ற பேச்சுப் பேசி நாளைக் கழிக்கும் சோம்பேறிகள் நிறைந்து வழிகிறார்கள். 

“ பயனில் சொல் பாராட்டுவானை மகனெனல்
மக்கட் பதடி எனல் “ என திருவள்ளுவர் சாடுகிறார். 

“ கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே! நாளில் மறப்பாரடி “

என்கிறார் பாரதியார். 

முகத்தைப் பார்க்கும் முன்பு பாக்கெட்டைப் பார்ப்பவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.  பஸ் ஸ்டாண்டுகளில் கழுகுக் கண்களுடன் நின்று கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் முழங்கையையும் பிடரியையும் எப்படித்தான் அறிப்பெடுக்காமல் சொரிய முடிகிறது என்பது  அவர்களுக்கே வெளிச்சம்.     இவர்களில் பலர் குடிகாரர்களாக இருப்பது ஒரு எக்ஸ்ட்ரா குவாளிபிகேஷன். 

உலக மக்களில் உழைக்கும் வர்க்கம் என்று ஒரு வர்க்கம் இருக்கிறது. ஆனால்  உழைக்காத வர்க்கம் என்றும் ஒரு வர்க்கம் இருக்கிறது. இந்த உழைக்காத உழைக்க விரும்பாத வர்க்கத்தில் பல வகைகள்   உள்ளன. இரண்டு கால்களை இழந்தவன் கூட தனது கரங்களை பயன்படுத்தி உழைத்து தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவான். ஆனால் சில தடிமாடுகள் உடம்பை வளர்த்து அப்படி வளத்த உடம்பில் ஒரு கலோரியைக்கூட தனது குடும்பத்துக்காகவோ அல்லது தனக்காகவே கூட செலவு செய்யாத சீரழிவுக்குள்ளாவோர் பலர் இருக்கின்றனர் . எனக்கென்ன குறை என் வாப்பா சவூதியில் இருந்து அனுப்புகிறார்- மச்சான் அமெரிக்காவில் இருந்து கேட்டதெல்லாம் அனுப்புகிறார் என்றெல்லாம் சொல்லி சுற்றித் திரியும் படித்தவர்கள் உட்பட பலர் இருக்கவே செய்கிறார்கள். 

ஒவ்வொரு மனிதனும் உற்பத்தித் திறனை உள்ளடக்கிப்  படைக்கப் பட்டிருக்கிறான்  ஒவ்வொரு தனிநபரின் உற்பத்தித்திறனும் செயல்வடிவம் பெறும்போது சுய பொருளாதாரமும் சமுதாயப் பொருளாதார நிலைமைகளும் நாட்டின் பொருளாதாரமும் உயரும் என்பதை பலர் உணர்வதில்லை.  தன்னில் மறைந்திருக்கும் மனித வளத்தை மனிதர்கள் உணர்வதில்லை. இதை உணர இயலாதபடி கண்ணை மறைக்கும் கள்ளுக்  கடைகள் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்  திசைகளெல்லாம் பரவிக்கிடக்கின்றன.    

உழைத்துப் பொருளீட்ட உடம்பில்  தெம்பிருந்தும் மனதில் சோம்பேறித்தனம் குடிகொண்டதால்  'வெட்கத்தைவிட்டு' பிச்சை எடுத்து வாழுபவர்கள் ஒரு வகை. பள்ளிவாசல்களின்  வாயில்களில் கைகளில் ஒரு நோட்டிசுடன் வந்து நிற்பவர்களில் பலர் உண்மைக்கு மாறான நிலைகளை உருவாக்கிக் கொண்டு பிச்சை எடுப்பவர்களே ஆவர். இஸ்லாம் சொன்ன ஈகையையும் இரக்கத்தையும் கடைப்பிடிக்கும் மற்றவர்களின் காருண்யத்தை தங்களின் சோம்பேறித்தனத்துக்கு முதலாக்கிக் கொள்பவர்கள் இவர்களில் பலபேர். பள்ளிவாசல் கட்டுவதாக பொய்யுரைத்து பணம் திரட்டும் பாவிகளும் குமர்களின் பெயர் சொல்லி வசூல் செய்யும் வக்கற்றவர்களும் நமது வாழ்க்கைப் பாதையில் அன்றாடம் சந்திக்கும் அவலங்கள். வெளிநாடுகளுக்குப் பறந்து சென்று கூட இந்தப் பாவச்செயல்களை அரங்கேற்றுகின்றனர் பலர். 

படித்து பதவியில் இருப்பவர்களில் சிலர், லஞ்சம் என்ற பெயரிலும் அன்பளிப்பு என்ற  பெயரிலும்  கவுரவப் பிச்சை எடுப்பவர்கள்  என்று ஒரு வகை இருக்கிறார்கள். உழைக்காமல் அடுத்தவன் அயர்கின்ற  நேரத்தில் அடித்துக் கொண்டு போகிறவர்கள் என்று ஒரு வகை இருக்கிறார்கள். தான் வாழும் நாட்டின் பொது நன்மைக்கான  சட்டங்களை மதிக்காமல் ஏமாற்றி சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் பொருள்தேடி  வாழ்வது என்றும் ஒரு வகையினர்  இருக்கிறார்கள்.  இப்படியான மக்கள் வாழும் நிலையில் இஸ்லாம்,  உழைப்பிற்கு உன்னதமான இடத்தைத் தந்து, அடுத்தவர் உழைப்பில் வாழாமல், அடுத்தவரை ஏய்க்காமல் உழைத்து வாழ்ந்தால் அதற்கும் நன்மையுண்டு என்று உழைத்து வாழும் பொருளாதாரத்தை  சொல்லிக்காட்டுகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் " ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். " [புஹாரி,1471]

மேலும் அல்லாஹ்வின் அருட்தூதர் ( ஸல்) அவர்கள் கூறினார்கள். 

"(கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான். (புஹாரி,1427) ]

மேற்கண்ட இரு செய்திகளும் அடுத்தவர் உழைப்பில் வாழநினைப்பவர்களுக்கும், சுயமரியாதையை இழந்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்த நினைப்பவர்களுக்கும் சாட்டையடியாக விழுவதைக்  காணலாம். 

அடுத்தவர் உழைப்பில் வாழ நினைக்கும் நெஞ்சம் கொண்டோர் ஒவ்வொரு குடும்பத்திலும் காணப்படுவது சகஜமாகிவிட்டது. மாமனார் கொஞ்சம் வசதி படைத்தவராக இருந்து விட்டால் போதும் , சுயமரியாதையற்ற சோம்பேறிக் குணம் படைத்தவர்கள் இன்டிமெட் செண்டை தெளித்துக் கொண்டும்  இன்னோவா கார்களிள்  ஏறிகொண்டும் ஊர்  சுற்றிக்கொண்டு வி. ஓ என்கிற வெட்டி ஆபீசர் பதவியை சுமந்து கொண்டு திரிவதைப் பார்க்கிறோம். 

அல்லாஹ் தனது அருள் மறையில் கூறுகிறான்:

“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.” (2:188)

கவுரவமான பதவியில் இருந்தபோதும் பேராசையின் காரணமாக லஞ்சம் வாங்குபவர்களிடம், லஞ்சம் கொடுக்கக்கூடாது என்பதை இவ்வசனம் சொல்லிக்காட்டி லஞ்சத்தின் வாசலை அடைக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இவ்வசனத்தை கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம்களில் சிலர் தங்களுடைய அறியாமையின் காரணமாக லஞ்சம் கொடுத்து தங்களுடைய காரியத்தை முடித்துக்கொள்வதையும் பரவலாக பார்க்கிறோம். இந்தச்  செயல் கண்டிப்பாக தடுக்கப்படவேண்டியதாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்  "ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்." [புஹாரி,எண் 2072 ]

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் , “ நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே 'நீங்கள் குளிக்கக் கூடாதா?' என்று அவர்களிடம் கூறப்பட்டது.” [புஹாரி எண் 2071 ]

உழைத்து வாழச்சொல்லும் மார்க்கத்தையுடைய, உழைத்துவாழ்ந்த நபிமார்கள், சத்திய சகாபாக்கள் வழியில் உண்மை முஸ்லிம்களாகிய நாம் உழைத்துவாழ்வோம். ஏனெனில், மிம்பர் மீதேறி உத்தம நபி[ஸல்]  தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, “உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது" என்றும் கூறினார்கள்.[புஹாரி]

முஸ்லிம்களின் கை எப்போதும், எதிலும் உயர்ந்த கையாக இருக்கவேண்டும். அதுதான் உயர்வின் அடையாளமும் கூட!  இஸ்லாம் காட்டும் பொருளாதாரம் ஒவ்வொரு தனி மனிதனும் உழைக்க  வேண்டுமென்றும் தனக்கு வேண்டிய தேவைகளைத் தானே தேடிக்கொள்ள வேண்டுமென்றும் திட்டவட்டமாகக் கூறுகிறது. இதற்காக ஹலால் ஆன உழைப்பை வலியுறுத்துகிறது. இதற்காக உலகைத் திறந்து வைத்திருக்கிறது. 

"தொழுகையை நிறைவேற்றி விட்டு பூமியில் பரவிச்சென்று இறையருளைத் தேடுங்கள்" ( 63:10) என்பது இறைவனின் வாக்கு.  

தனது கரங்களால் உழைத்து சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைத்தூதர்களில் ஒருவராகிய தாவூத் ( அலை) அவர்கள் தமது கரங்களால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என்று அண்ணல் நபி( ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் கூறப்பட்டு இருக்கிறது. அத்துடன் உழைத்து உண்ணும்  உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் அண்ணலார்  ( ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதீயில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

விலங்குகள் கூட தங்களது  உணவைத் தானே தேடிக்கொள்கின்றன. ஆனால் மனிதன்தான் அந்த விலங்குகளையும் தனது சோம்பேறித்தனத்துக்கு  கருவியாக்கி பிச்சை எடுக்கப் பயன்படுத்துகிறான். விலங்குகளிலேயே பேர் பெற்ற பிரம்மாண்டமான  யானைக்கே  பிச்சை எடுக்கப் பழக்கிக் கொடுத்தவனும் பாம்பையும்             கீரியையும் வைத்து வித்தை காட்டி பணம் சம்பாதிப்பவனும் கிளியை கூட்டுக்குள் அடைத்து ஜோசியம் பார்த்து சம்பாதிப்பவனும் மனிதன்தான். குரங்கை வைத்து ஆடுடா ராமா என்று ஆட்டம் காட்டி வித்தை காட்டி பணம் சம்பாதிப்பவனும் மனிதன்தான். 

பரிசுத்தமான தொழில் எது என்று பெருமானார் (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. ஒரு மனிதன் தனது கைகளால் உழைப்பதும் ( மோசடி இல்லாத ) நல்ல ஒரு வணிகமும் என்று பதில் கூறினார்கள். ( அஹ்மத் ) பகலெல்லாம் உழைத்துக் களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப் பட்டவர் ஆவார் என்றும் உழைப்பின் மேன்மையை வலியுறுத்தி பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறினார்கள் ( முஹ்ஜம்)  

நபிகள் ( ஸல்) அவர்களின் அவையில்  அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தனது  தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார்.  அவற்றைக் கொண்டு வருமாறு கோமான் நபி ( ஸல்) அவர்கள் கூற, அவற்றை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரித்  தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு ஒரு  கோடாறிக்காம்பு போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டினார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் இதன்மூலம் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

தேவைக்கு யாசித்து வருபவனுக்கு மீனை யாசகமாகக் கொடுப்பதைவிட அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது என்று எங்கோ யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் உழைத்து வாழவேண்டும் பிறர உழைப்பில் வாழ்ந்திடாதே  என்கிற உயரிய கருத்து அருள் மறையிலும் அருமை நபியின் மொழியிலும்  வலியுறுத்தப்படுகிறது. மேலும் முந்தைய நபிமார்களும் அறிஞர்களும் , உழைத்து வாழ்வதை  தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக  ஆக்கிக் கொண்டனர். அண்மையில், ஒரு அறிஞரின் சொற்பொழிவில் நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும் யாவை என்கிற பட்டியலைக் கேள்வியுற்றேன்.  

நபி ஆதம்(அலை) அவர்கள் – விவசாயம்
நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்
நபி லூத்(அலை) அவர்கள்  – விவசாயம்
நபி யஸஃ (அலை) அவர்கள்  – விவசாயம்
நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்
நபி ஹாரூன்(அலை)அவர்கள் – வியாபாரம்
நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்
நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்
நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் – வேட்டையாடுதல்
நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்
நபி ஷுஐப்(அலை) அவர்கள் – ஆடு மேய்த்தல்
நபி மூசா(அலை) அவர்கள் -  ஆடு மேய்த்தல
நபி லுக்மான்(அலை) அவர்கள் -  ஆடு மேய்த்தல்
நபி (ஸல்) அவர்கள்-  ஆடு மேய்த்தல்

வல்ல நாயனின் வாக்குகளும்  வாழ்ந்து காட்டிய நபிமார்களின் வாழ்வை ஒட்டி வரலாறு காட்டும் சான்றுகளும் உழைத்துப் பிழைப்பதே இஸ்லாம் காட்டும்   பொருளாதார வழி என்று பாரெங்கும் பறை சாற்றுவதை அறியலாம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும். 
இபுராஹீம் அன்சாரி

16 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
 
அன்பிற்குரிய காக்கா,
 
உழைப்பின் மகிமையையும் உழைக்காதோரின் இழிவையும் மிகத் தெளிவாக அலசியிருக்கிறீர்கள்.  ஒவ்வொரு கருத்திற்கும் உதாரணங்கள் மற்றும் உபதேசங்கள் கொண்டு வலு சேர்ப்பது தங்களின் எழுத்தாற்றலை பரைசாற்றுகிறது.
 
என்னைப் பொருத்தவரை பொருளாதாரம் என்பது எனக்குக் கசப்பு மருந்து.   அதில் தேன் கலக்கின்ற  தங்களின் கைங்கர்யத்தால் ஒவ்வொரு வாரமும் முகம் சுளிக்காமல் உள்வாங்கி வருகிறேன். 
 
இத் தொடர் இனிதே பயணித்து, இலக்கை எட்டி, சாதித்து நிறைவுற என் துஆவும் அதற்காக “அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா” என்னும் என் பிரத்யேக பிரார்த்தணையும்.
 
 

sabeer.abushahruk said...

அப்புறம்…
தவறாக நினைக்காதீர்கள்.  லஞ்சம் பற்றிச் சொல்லும்போது லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்பதை நானும் அறிவேன்.  வாங்குவதை நிறுத்துவது வேண்டுமானால் என் கையில் இருக்கிறது. ஆனால், கொடுப்பதை எப்படி நிறுத்துவேன் காக்கா?
 
-கொடுக்கவில்லையென்றால் என் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் கல்வியைத் தர முடியவில்லை
-கொடுக்கவில்லையென்றால் எல்லா சிவின் சப்ளைகளும் என்னை வரிசையின் கடைசியில் நிற்க வைத்தே தரப்படுகின்றன
-கொடுக்கவில்லையென்றால் என் பத்திரங்களில் மட்டும் தீர்க்க முடியாத வில்லங்கங்கள் இருக்கின்றன.
-கொடுக்கவில்லையென்றால் என் வீட்டு மின் கம்பத்தில் மட்டும் அடிக்கடி பொறி பறக்கும் இணைப்புகள் அமைகின்றன
-கொடுக்கவில்லையென்றால் என் வீட்டுக் குழாயில் மட்டும் ‘வெறும் காத்துதாங்க வருது”
 
இப்படி லஞ்சம் செயலளவில் ஒரு கட்டணமாகவே ஆகிப்போய்விட்ட என் நாட்டில், கொடுப்பது தவறு என்பதை ஏற்றாலும், அது “பாவம்” என்பதை எப்படிக் காக்கா ஒத்துக்கொள்வது?  கட்டாயப்படுத்தியள்ளவா வாங்குகிறார்கள்?
 
இவ்வளவு பெரிய பேசுபொருளைப் பற்றித் தாங்கள் எங்களுக்கு சொல்லித்தருவதே பெரிய விஷயம், சுமை.  இது வாதமல்ல, ஆனால், ஞாயமான கேள்வி என்றே நினைக்கிறேன்.
 

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

உழைப்பை பற்றி இஸ்லாம் கூறியிருப்பதை அழகிய குர்ஆன், ஹதீஸ் ஒளயில் தெளிவாக விளக்கியதற்கு, சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

sabeer.abushahruk said...

//கட்டாயப்படுத்தியள்ளவா //

"கட்டாயப்படுத்தியல்லவா" என்றிருக்க வேண்டும். ( என் பாடாவதி ஐ ஃபோனின் ஆட்டோ கரெக்ட் ஸ்மார்ட் மைன்டை யாராவது இரும்புக்கம்பியியால் பிராண்டி விட்டு, நான் தட்டுவதை மட்டும் எழுதச் சொல்லுங்களேன். அல்லது மேற்கொண்டு 200 திர்ஹம் தருகிறேன். யாருக்கு வேணும் இது? இது கையில் இருப்பதால் புதிய மாடல் வாங்கவும் மனசு வர மாட்டேன்கிறது. ரெண்டு தடவை காணாக்கியும் பவுன்ட்லேர்ந்து விடுவிக்கப்பட்ட மாட்டைப்போல எப்படியோ என்னைத் தேடி வந்து விடுகிறது)

Anonymous said...

அன்சாரி காக்கா அவர்கள் இஸ்லாமிய பொருளாதாரத்தை பற்றி மிக அழகாக தந்துள்ளார்கள்.

யாசகம் கேட்பவர்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் யாசக த்தையை ஒரு தொழிலாகவே வைத்து இருக்கிறார்கள். உழைப்பதற்கு அல்லாஹ் இரு கை,கால்களை எல்லாம் நல்ல படியாயாக கொடுத்தும் உழைக்க மாட்டங்கிறார்கள்.

யாசகம் கேட்பதிலேயை ஒரு குறி கோலாக தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உழைப்பதற்கு மனம் வருவதில்லை. நம்மவர்களுக்கு அரசாங்கம் சார்பில் வேலைகள் எதுவும் நடக்க வேண்டும் என்றால் முதலில் லஞ்சத்தை பற்றிதான் பேசுகிறார்கள். அவர்கள் சம்பளத்தை விட கிம்பளம் தான் அதிகமாக பெறுகிறார்கள். லஞ்சம் என்று கேட்க்கமாட்டார்கள் எனக்கு இவ்வளவு கொடு அப்போதான் உனக்கு செய்ய வேண்டியதை செய்து முடித்து தருகிறேன் என்றல்லாம் கூறுவார்கள். லஞ்சம் நாம் கொடுக்கா விட்டாலும் கூட அவர்கள் கேட்டு வாங்கிவிடுகிறார்கள்.

உழைப்புக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முன்னாடி வந்து அட்டெண்டன்ஸ் போட்டுடுவேன், கொஞ்சம் வேலை அதிகம்....

நிதானமாக படித்து விட்டு லேட்டாக வருகிறேன்...

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,

விலங்குகளை வைத்து பணம் சம்பாதிக்க மனிதன் கற்றுக்கொண்டான் என எழுதியிருக்கிறீர்கள். இதில் வரதட்சனையை பற்றி நினைக்கும்போது தன் மனித இனத்தையே பயன்படுத்தியும் மனிதன் சம்பாதிக்க கற்றுக்கொண்டான் என தெரிகிறது.

இரண்டுமே வெட்கம் கெட்ட செயல்.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

இந்தச் சிந்தனைகள் நூலுரு கொள்ளும்போது "இஸ்லாமியப் பொருளாதார வழிகாட்டி" என்றே அழைக்கப்படும் அளவுக்கு ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்கள் உள்ளன.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உழைத்து தான் வாழ வேண்டும் என்பதன் உயரிய கருத்துக்களும், அதற்கு நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன உழைப்பின் அவசியத்தையும் தெளிவாக எடுத்துக்கூறியமை இஸ்லாமியப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவை.

Shameed said...

// பஸ் ஸ்டாண்டுகளில் கழுகுக் கண்களுடன் நின்று கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் முழங்கையையும் பிடரியையும் எப்படித்தான் அறிப்பெடுக்காமல் சொரிய முடிகிறது //

"அது அவர்களுக்கு அனிச்சை செயல் "

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.

கடந்த வெள்ளிக் கிழமை முதல் எனது இன்டர்நெட் சேவை குப்புற விழுந்து படுத்துக் கொண்டது. வாரக்கடைசி என்பதால் சரி செய்ய முடியவில்லை. இன்று காலை பி. எஸ். என் .எல் அலுவலகம் போய் அங்குள்ளவருக்கு இரு நூறு ரூபாய் கொடுத்த " பாவத்தை " செய்ததன் பின்னே இணைப்பு சரி செய்யப் பட்டு எழுதுகிறேன்.

மார்க்கத்தில் குறிப்பிடப்பட்டதையே நான் குறிப்பிட்டேன். பல விஷயங்களை பெரும் நாடுகளால் கூட கடைப்பிடிக்க வில்லை. ஏன் நம் ஊரில் கைக்கூலி ஒழிந்துவிட்டதா? பெண்ணுக்கு மட்டும் வீடு என்று மார்க்கம் சொல்கிறதா? கந்தூரி ஒழிந்துவிட்டதா? அரபு நாடுகளில் கூட வட்டியை ஒழிக்க முடியவில்லையே. இதைப் போல் பல விஷயங்கள் இருக்கின்றன. சாதாரண மனிதர்கள் நாம் என்ன செய்ய முடியும்? மிகவும் கடுமையான இஸ்லாமிய ஆட்சியிலேயே எல்லாம் சாத்தியம். இது போன்ற கலப்பு அதுவும் இஷ்டத்துக்கு தளர்த்திக் கொள்ளும் சமூக அமைப்பில் ??? சொல்ல முடியவில்லை. அல்லாஹ் நம்மை மன்னிக்கப் போதுமானவன்.

அதற்காக இஸ்லாமிய விதிகள் கடைப்பிடிக்க முடியாதவையா என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிடாதீர்கள்.

நாம் குறிப்பிடுவதெல்லாம் இருப்பதைத்தான் நடப்பதை அல்ல. நடந்தால் நல்லது. ஆனால் நடப்பவை பல கோட்பாடுகளுக்கு விரோதமானவையே என்பது நீங்கள் அறிந்ததே.

Yasir said...

தெள்ளத்தெளிவாக நீங்கள் அள்ளித்தரும் இந்த் “பொருளாதாரப்பாடம்” பல வாழ்வியல் கோட்பாடுகளை சொல்லித்தருகின்றது

sabeer.abushahruk said...

காக்கா,
தாமதமாகத் தந்தாலும் தரமான விளக்கம்.  யாரிடம் கேட்கிறோம் என்று தெரிந்துதான் நான் இப்படியெல்லாம் கேட்கிறேன் காக்கா. காரணம் உங்களின் விளக்கமே தனிப் பதிவிடும் அளவுக்குச் சத்தானவையாக இருப்பதை அறிந்தவன் நான்.
 
மிக்க நன்றி. அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
 

Ebrahim Ansari said...

கருத்து உரைத்த அனைத்து சகோதரர்களுக்கும் சிறந்த கேள்வி கேட்ட தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கும் ஜசக்கல்லாஹ் ஹைரன்.

இலஞ்சம் என்பது தேசிய மொழியகிவிட்டது. இந்த மொழி இல்லாமல் எங்கும் பேச முடியாத நிலை குறிப்பாக இந்தியாவில். அரசில் பணியாற்று ஊழியர்கள் தற்போது கொல்லை சம்பளத்தை சுளை சுலையாகப் பெற்றாலும் ஏந்த ஒரு சின்ன வேலையாக இருந்தாலும் அவர்கள் கடமையை செய்வதற்கே காசு வெட்ட வேண்டி இருக்கிறது.

பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கவனி கவனி என்பார் . அதிலும் கணக்கு ஆசிரியர் நிச்சயம் சொல்வார். இப்போது கவனிப்பது என்கிற வார்த்தை பல அர்த்தங்களைத் தருகிறது.

அரசு அலுவலகங்களில், காவல் நிலையங்களில் நாம் அவர்களை கவனிப்பது என்பது இலஞ்சம் தருவது.
காவல்துறை நம்மை கவனிப்பது என்பது நம்மீது பொய் வழக்குப் போட்டு நன்றாக சாத்துவது.
விருந்துகளில் வேண்டியவர்களை கவனிப்பது என்பது ஒரு மல்லா இறைச்சியை கூடுதலாக சஹனில் சாப்பிடும்போது அடுத்த சஹானில் உள்ளோர் அறியாமல் வைப்பது.
" போகும்போது கவனிச்சுட்டுப் போங்க சார்" என்பது மின்சார வாரியத்திலிருந்து மீன் வெட்டித்தருபவர் வரை சொல்லும் வார்த்தைகள்.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற ஒரு காலம் இருந்திருக்கலாம். இன்று அரசாங்கக் கட்டிடங்களின் செங்கற்கள் கூட அங்கு செல்பவர்களிடம் எதையாவது எதிர்பார்க்கிறது.

இந்திய இரயில்வே அமைச்சரின் உறவினர் தொண்ணூறு இலட்சம் இலஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமைச்சரின் பதவி பல பிரச்சனைகளுக்குப் பிறகு பலியாகி இருக்கிறது. எல்லா மட்டத்திலும் இலஞ்சம் அரசாள்கிறது.

இப்போது பள்ளி இறுதித் தேர்வின் முடிவுகள் வந்த நேரம். கல்லூரி சீட்களின் தேடல் நேரம். இதுவே இலஞ்சத்தின் உச்சகட்ட சீசன். அதிலும் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களே மார்க்கெட்டில் மிக்க விலை.

sali said...

உழைப்பின் பெருமை பற்றி அழகாக கூறி இருக்கிறார் சகோ. அன்சாரி.அதற்கு அவர் எடுத்து கொண்ட களம் அப்படிப்பட்டது.பாரட்டுகள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு