Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2013 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், 

அன்புள்ளம் கொண்டோர்க்கு, அதிரைநிருபர் வலைத்தளத்தில் மகுடமாய் மின்னிய தொடர்களில் ஒன்றான "நபிமணியும் நகைச்சுவையும்" புத்தக வடிவம் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறோம், இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் பணிகள் நிறைவடைந்து விடும். நினைவூட்டலுக்காக மின்னிய நட்சத்திர அத்தியாயங்களில் ஒன்றினை இங்கே மீள்பதிவு செய்கிறோம்.

நெறியாளர்
தொடர் - 8
கருமையும் வெண்மையும் :

து ஒரு ரமலான் மாதத்தின் பின்னிரவு நேரம்!

மதீனா நகரமே இரவுத் தொழுகைக்குப் பின்னர் அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது! அந்த ஒரே ஒருவருக்கு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. பரபரப்பாக ஏதோ செய்து கொண்டிருந்த அவரை யார் பார்த்தாலும்,  'இந்த இரவில் இவர் தூங்கப் போவதில்லை' என்று முடிவுக்கு நிச்சயமாக வந்துவிடுவர்.

படுக்கையில் படுப்பதும் சில நிமிடங்களில் எழுந்து தலையணைக்கடியில் கையை விட்டு எதையோ துழாவி எடுப்பதும் அதை மேலும் கீழும் உற்றுப் பார்த்துவிட்டு, தனக்குள் ஏதோ 'இல்லை இல்லை' என்று தலையசைத்து விட்டு மறுபடி படுப்பதுமாக மாறிமாறி செய்து கொண்டிருந்தார். சஹர் உணவின் நேரமும் வேக வேகமாக நழுவிக் கொண்டிருந்தது. ஆனால், அதிலெல்லாம் அவருக்குக் கவனமில்லை!

மறுபடியும் தலையணைக்கடியில் கைவிட்டு எடுத்துப் பார்க்கத் தொடங்கிவிட்டார். இப்படியே தொடர்ந்ததில் பொழுது புலரும் நேரமும் நெருங்கி விட்டது.

இந்தப் பரபரப்புக்குத் தகுந்த காரணமும் இருந்தது! அந்த இரவில்தான் அந்தப் புனித மாதத்திற்கென்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான வஹீ ஒன்றை அல்லாஹ் அருளி இருந்தான்!(*) அந்த வஹீயைப் பற்றித் தெரியுமுன்பு, நமக்கு இந்த சஹாபியின் அறிமுகம் சற்று அவசியமாகிறது!

அவர் ஒன்றும் சாதாரணமான ஆளல்ல! அந்தக் காலத்தில் மிகப் பெரும் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர்தான் அவர்! அரபுலகின் பிரபலமான தாயீ கோத்திரத்தின் தலைவனும்  அம்மக்களின் அரசனும் மிகப்பெரும் புகழ்பெற்ற கொடை வள்ளலுமாகிய ஹாதிம் அத்தாயீ உடைய செல்வப் புதல்வர்தான் நமது இந்த இளவரசர்! பெயர் அதீய் பின் ஹாதிம் அத்தாயீ. தந்தைக்குப் பிறகு, தன் மக்களின் மன்னனாகவும் முடிசூட்டப்பட்டார். 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம், அதை முடிந்தவரை அனுபவி ராஜா' என்று ராஜபோக சொகுசு வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

அதெல்லாம் ஒரு காலம்!

இருளும் இழிவும் நிறைந்த வழியை விட்டும் நீங்கி, அருளும் அறமும் நிறைந்த இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தைத் தழுவியபின், ராஜபோகத்தில் திளைத்த அந்த மன்னரா  இவர்? என்று மூக்கில் மட்டுமல்ல, முகம் முழுக்க விரல் வைத்துப் பார்க்கும் அளவுக்கு ஆச்சர்யமாய் மாறிப்போனார் அதீய்(ரலி)!

ஆம்! அவரை மட்டுமல்ல! அந்த ஆறாம் அறிவைத் தட்டியெழுப்பி, ஆயிரம் பாடங்கள் பயிற்றுவித்த  அண்ணல் நபியவர்கள் கொண்டு வந்த அற்புத வேதம், அனைத்துத் தோழர்களின் வாழ்வையும் அடியோடு புரட்டிப் போட்டது. பழைய அத்தியாயங்களில் எந்த அளவுக்குப் படுமோசமாக இருந்தார்களோ, அதே சத்திய சஹாபாக்கள் சங்கை மிகும் நபியைச் சந்தித்த பிறகு, இந்த மானுட சமூகத்திலேயே தலை சிறந்தவர்களாக, உள்ளத்தால் உயர்ந்தவர்களாக, அறிவால் ஆழமானவர்களாக, சடங்கு சம்பிரதாயங்களைத் தூக்கி எறிந்தவர்களாக, நேர்வழியில் நிலைத்தவர்களாக, சுயநலத்தை எடுத்துச் சுழற்றி வீசிவிட்டவர்களாக, வாழும் சூழலின் வகை தெரிந்தவர்களாக, எளிமையில் இனிமை கண்டவர்களாக, தாங்கள் பெற்ற மார்க்கத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக, மொத்தத்தில் தங்கள் தலைவரின் நிழல்களாகவே மாறிப்போனார்கள். அப்படித்தான் அல்லாஹ் (ஜல்) அருளிய வேதம் அவர்களைப் பக்குவப் படுத்தியிருந்தது. (**)

சற்றே பின்னால் சென்று வருவோம்:

அதீய் பின் ஹாத்திம், கிறிஸ்தவ மக்களின் அரசனாக இருந்தபோது, மக்களின் வருவாயில் 4ல் 1 பங்கு அவருக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று சட்டமிருந்தது. அதை சன்மார்க்கம் இஸ்லாம் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியுமாதலால், இந்த உலகத்தில் வேறு எவரையும்விட அதிகமாகப் பெருமானார் (ஸல்) அவர்களை அவர் வெறுத்தார்! எனினும், அவர் பயந்தது போலவே, அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர் தேசமும் சத்திய இஸ்லாமிய ஆட்சியின் நிழலில் வந்த அன்று, தப்பித்தோம் பிழைத்தோம் என்று கையில் கிடைத்த செல்வங்களை எல்லாம் அள்ளி 100 ஒட்டகைகளில் கட்டிக்கொண்டு சிரியாவுக்கு ஓடினார்!

உயிருக்கு பயந்து ஓடிய வேகத்தில் உடன்பிறந்த தங்கையை அரண்மனையிலேயே தவறவிட்டு ஓடிவிட்டார்!

போர்க்கைதியாக பிடிபட்ட சகோதரி ஸஃப்பானாஹ், கனவிலும் நினையாத அளவுக்கு காருண்ய நபியால் கண்ணியமாகவும் கருணையாகவும் நடத்தப்பட்டதால், அண்ணனைக் கண்டு அழைத்துவர நினைத்து, அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி பெற்றாள்.

முத்திரைத்தூதர் முஹம்மது நபியைப் பற்றித் தங்கையானவள் விவரிப்பாகச் சொல்லச் சொல்ல புருவங்கள் எல்லாம் உயர்ந்து நெற்றிக்கு மேலே போய், அரசர் அதீயின்  முகம் முழுவதையும் ஆச்சர்யக்குறி அடைத்துக் கொண்டது!

ஸஃப்பானாஹ் சொல்வதுபோல், அவர் ஒரு நபியாக இருந்தால் அவருடன் இணைவதை நாம் முந்திக் கொண்டால் நமக்குத்தான் சிறப்பு! ஒருவேளை, அவர் மதீனாவின் மன்னராக மட்டும் இருந்தாலுங்கூட, இன்னோர் அரசனை அப்படிப்பட்ட மேன்மையாளர் அவமானப்படுத்த மாட்டார் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அண்ணலாரைக் காண ஆவலுடன் கிளம்பிவிட்டார்.

மதீனா நகர் சென்று மனிதருள் புனிதர் மாநபி(ஸல்) அவர்களின் கரம் தொட்டு ஸலாம் சொன்னதும் அவர் மனமெங்கும் மகிழ்ச்சியால் பிரளயமானது!

சமத்துவ மார்க்கம் தந்த சத்தியத்தூதர் (ஸல்), அங்கு வயோதிக மாது ஒருவருக்குத் தம் அவையில்  கொடுத்த சங்கைமிகு மரியாதையைக் கண்முன்னே கண்டார். இனிய நபியவர்கள் தம் எளிய வீட்டுக்கு அழைத்துச் சென்று, அண்ணல் நபி தம் விரிப்பில் அதீய்(ரலி)யை அமர வைத்து, அந்த மாந்தரில் மாணிக்கம், மாமனிதர் நாயகம் (ஸல்) வெறுந்தரையில் அமர்ந்ததைக் கண்டார். அவர் நபியேதான் என்று அத்தாட்சிகள் அவர் நெஞ்சில் அடித்துக்கூறின!

'அடச்சே! என்ன மனிதன் நான்! என்ன மன்னன் நான்! என்ன ஒரு பெரும் வள்ளலின் மகன் நான்!' என்றெல்லாம் மனதுக்குள் அவர் மாய்ந்து போனார்!

அத்தோடு கண்கண்ட ஆதாரங்களால், அவர் மனத்தோடு வைத்திருந்த தவறான எண்ணங்கள் எல்லாம் தவிடுபொடியாயின! அடியோடு மாறிப்போனார் அதீய் பின் ஹாத்திம் அத்தாயீ (ரலி)! தமக்கு எதிரே அமர்ந்திருப்பவர் சாதாரண மனிதரல்லர் என்பதை அதீய்(ரலி) அவர்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக  எதிர்கால அத்தாட்சிகள் சிலவற்றை அப்போதே அவரிடம் எத்திவைத்தார்கள் ஏந்தல் நபியவர்கள்!

அதீயே! அறிந்து கொள்:

(1) வறுமையில் வாடும் இம்மக்களைப் பார்! ஒருகாலம் விரைவில் வரும். இவர்கள் மத்தியில் செல்வம் பெருகும். கொடுப்போர் இருப்பர்! ஆனால், பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்ற நிலைக்கு செல்வம் பெருகும்.

(2) இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் குறைவாகவும் இந்த சன்மார்க்கத்தை எதிர்ப்பவர்கள் அதிகமாகவும் இருப்பது உனக்கு ஆச்சர்யம் தருகின்றதா? அல்லாஹ்வின் மார்க்கம் அதிவிரைவில் பரவி, காதிஸ்ஸிய்யாவிலிருந்து ஒரு முஸ்லிம்  பெண் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் தனியாகப் புறப்பட்டு வந்து கஃபாவைத் தவாப் செய்துவிட்டுச் செல்லும் அச்சமற்ற சூழ்நிலை உண்டாகும்.

(3) அதீயே! உன்னைபோன்ற மன்னர்களும் சுல்தான்களும் முஸ்லிம்களுள் இல்லையே! ஆட்சியதிகாரம் இறை மறுப்பாளர்களான மடையர்கள் கையில்தானே இருக்கிறது என ஆதங்கப்படுகிறாயா? மிக விரைவில்  பாபிலோனில் உள்ள ஈராக்கின் அரசமாளிகைகளையும் ரோமாபுரிச் சக்கரவர்த்தியின் கருவூலங்களையும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அருளால் கைப்பற்றுவார்கள்!பாபிலோனின் கோட்டை மீது இஸ்லாமியக் கொடி ஆரோகணித்துப் பறக்கும். இவை அனைத்தையும் காண நீ உயிருடனே இருப்பாய்!!!

என்றறிவித்தார்கள், அல்லாஹ்வை மட்டுமே ஆசிரியனாகப் பெற்ற எழுதப் படிக்கத் தெரியாத ஏந்தல் நபியவர்கள்! (***) ஆற்றல் மிகும் சொல்லழகர் அண்ணல் நபியவர்கள் தீர்க்கமாகச் சொன்ன அனைத்தும் அச்சரம் பிசகாமல் அதீய் பின் ஹாத்திம் (ரலி)  வாழ்நாளிலேயே நிகழ்ந்தன! எஞ்சிய வாழ்நாளில் எல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்று சொன்னது என்னவோ இன்றும் செவிகளில் கேட்பதுபோலவே அவர் தம் 120 வது வயதில் இறக்கும்வரை அவருக்கு ஒலித்துகொண்டே இருந்தது!

அது சரி? இரவெல்லாம் தூங்காமல் எடுப்பதும் வைப்பதுமாக என்னவோ செய்துகொண்டிருந்தாரே? அது என்னவென்றுதான் பார்ப்போமா?

அது வேறொன்றுமில்லை! ஒரு வெள்ளை நூலையும் ஒரு கருப்பு நூலையும் தலையணைக்கடியில் வைத்துக்கொண்டு, அவை இரண்டையும் பொழுது விடியும் நேரம்வரை வெள்ளை நூலும் கருப்பு நூலும் அவர் கண்களுக்கு தனித்தனியாக, தெளிவாகத் தெரிகின்றதா என்பதைத்தான் ஸஹாபி அதீய்(ரலி)  அடிக்கடி உற்றுப் பார்த்துகொடிருந்தார். அப்பொழுதும் அவருக்கு சரியாக விளங்கவில்லை! காரணம்? எந்த நேரம்வரை சஹர் உணவை சாப்பிடலாம், அதை எப்போது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற இறைவசனம் அந்த இரவில் இறங்கியதை, நம் உள்ளத்தை ஆளவந்த உத்தம நபியிடமிருந்து அவசர அவசரமாக அப்படியே அவர் எடுத்துகொண்டதுதான் தவிர வேறில்லை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

 وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ

இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல், கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும்வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; (அல் பகரா 187.).

சுபுஹுடைய நேரம். அதீய்(ரலி) முதல்வேலையாகப் பெருமானார் (ஸல்) அவர்களைக் காணச் சென்றார். அன்றிரவில் அவர் செய்த ஆராய்ச்சியும் சொன்னார். அவருடைய   செய்கையும் அவர் விவரித்த தோரணையும் அடக்கமுடியாத சிரிப்பை அண்ணலாருக்கு அளித்தது. வேந்தர் நபியின் சிரிப்பைக் கண்டு விண்ணகத்து தாரகையும் வெட்கம் கொண்டு மறைந்ததால், நபிகள் நாயகத்தின் நகைமுகத்தைக் காண அதிகாலை சூரியன் அவசரமாய் எழுந்தது!

அதீயே, அல்லாஹ் சொல்லும் வெள்ளையும் கருப்பும் என்பதன் பொருள் நீ நினைத்துக்கொண்டபடி மட்டும் இருந்திருந்தால், உன் தலையணையும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நீளமாகவல்லவா இருக்க வேண்டும்?  ஏனென்றால், கருப்பு நூல் என்பதன் அர்த்தம் இரவும் வெள்ளை நூல் என்பதன் பொருள் பகலும் ஆகும்" என்று இன்னும் சிரித்துக்கொண்டே ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அவருக்கு விளக்கினார்கள். விளக்கம் பெற்றவராக அதீய்(ரலி) அவர்களும் இறைத் தூதரின் சிரிப்போடு இணைந்து சிரித்தார். நேர்வழி காட்டியவர் (ஸல்) அதீய் (ரலி)யின் நெஞ்சிலே நிறைந்து நின்றார்!.

ராவி: அதீய்பின் ஹாத்திம் (ரலி);  நூல்: அபூதாவூது எண் 2002 மற்றும் புகாரி 1916.

(*) புஹாரி 1915
(**) காண்க: இமாம் குர்துபி
(***) புஹாரி 3595
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்
இது ஒரு ரமளான் மீள்பதிவு

8 Responses So Far:

Unknown said...

அருமை நண்பா !
இம்மீள் பதிவைக்கண்டு மீளா மகிழ்ச்சி.

இப்பூவுலகின் முன்மாதிரி மா நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறில் அவர்கள் தம் நகைச்சுவை உணர்வின் வெளிப்பாடு எந்த விதத்தில் கண்ணியமாகவும், அடுத்தவர் மனது புண்படாமலும் இருந்து வந்துள்ளது என்னும் ஒரு உட்பொருளை கருவாகக்கொண்டு நீ படைத்த இந்த தொடர்
மீண்டும் மீள்பதிவாக அதிரை நிருபர் தளத்தில் விரிவதை கண்டு ஆனந்தம்
அடைகின்றேன்.

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

"நபிமணியும் நகைச்சுவையும்" புத்தகமாக வெளிவர இருப்பது மகிழ்வு!
விரைவில் வெளியாகி பலதரப்பட்டவர்களை சென்றடைந்து இன்சா அல்லாஹ் பலனளிக்கட்டும்.
புத்தக பிரதிகளில் சாதனையை எட்ட வாழ்த்தும் துஆவும்!

KALAM SHAICK ABDUL KADER said...

மீண்டும் மீண்டும் மீள்பதிவைப் படித்தாலும் , தெவிட்டாதத் தேன் சுவை; தித்திக்கும் “தீன்” சுவை!

இன்ஷா அல்லாஹ் நூலுருவில் விரைவில் வந்து எம் கரங்களில் தவழும் அப்பொன்னான நாளை எதிர்நோக்குகிறேன்.

adiraimansoor said...

நபிமனியும் நகைச்சுவையும் என்ற புத்தகத்தின் பதிவாளராகிய அல்லது எழுத்தாளாராகிய எனது இனிய நண்பன் இக்பாலுக்கு எனது மனம் நிறைந்த பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சமர்பிக்கின்றேன்.

படைப்பாளன் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை. படைப்பளன் இறைவன் ஒருவனே என்பதால் எழுத்தாளர் என்று குறிப்பிட கூடாது என்றாலும் வேறு வார்த்தைகள் என் புலனுக்கு புலப்படவில்லை காரணம் கடுமையான உழைப்புக்கு இடையில் இப்படி ஒரு ஆக்கத்தை தந்திருப்பது மிகப்பெரியவிஷயம்

எங்கலால் இப்படி ஒரு அருமையான விஷயத்தை தந்துவிட முடியாது அப்படி தர முயற்ச்சி செய்தாலும் பெரிய மேஜைபோட்டு பலபேர் உட்கார்ந்து யோசிப்பதோடல்லாமல் பல கித்தாபுகளை வாசிக்கவும் வேண்டும்

அல்லாஹ் ஜமீல் காக்கா அன் பிரதர்களுக்கு அதிகமான ராமமையும் பல ஆயிரக்கனக்கான டிகா பைட் ஸ்ட்டோரேஜ் செய்யும் வசதியையும்
கொடுத்து அதை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் தண்மையையும் கொடுத்த வல்ல ரஹ்மானுக்கே எல்லாப்புகழும்.

இன்னொரு விஷயம் என்ன வென்றால் எந்த வைரசும் தாக்காத சூப்பர் பவர் ஆன்டிவைரசையும் அவர்களுக்கு இன் பில்டு செய்துவிட்டான்

அல்லாஹ் ஜமீல் & பிரதர்களுக்கு நீண்ட ஆயுளையும் குறைவற்ற செல்வத்தையும் கொடுத்து
இன்னும் அதிக அதிகம் சமுதாயப்பனிகளும் இஸ்லாமியப் பனிகளும் செய்திட உதவி செய்வானாக ஆமீன்

நண்பரின் நபிமணியும் நகைச்சுவையும் என்ற பொக்கிஷம் கூடியசீக்கிரம் வெளிவந்து அதைக்கொண்டு மக்கள் பெரிதும் பயண் அடைய வல்ல இறைவனிடம் துஆச்செய்தவனாக இருக்கின்றேன்.

Ebrahim Ansari said...

தம்பி இக்பால். அஸ்ஸலாமு அலைக்கும்.

காத்திருப்பவர்கள் பட்டியலில் முதலில் என் பெயர் .

Unknown said...

//காத்திருப்பவர்கள் பட்டியலில் முதலில் என் பெயர்// .

இரண்டாவது நான் .

abu asif.

adiraimansoor said...
This comment has been removed by the author.
Iqbal M. Salih said...

மாஷா அல்லாஹ்!

என் நண்பர்களுக்கு எப்போதுமே என் மீது பிரியம் அதிகம். எனவே, அளவுக்கு மீறி நான் பாராட்டப்பட்டிருப்பதை, படிக்கும் சகோதரர்கள் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்! வல்ல ரஹ்மான் ஒருவனுக்கே எல்லாப் புகழும்!

புத்தகம் விரைவில் வெளியாகி பலருக்கும் பயனளிக்க உங்களுடன் சேர்ந்து நானும் துஆச்செய்கிறேன். ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு