அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
அன்பின் அதிரைச் சொந்தங்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது வருங்காலச் சந்ததியினர் அனைவரையும் கல்வி அறிவு நிறையப் பெற்றவர்களாக ஆக்குவதற்கும், கல்விக் குறையினால் நம்மில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் மூன்றாந்தரப் பணியாளர்களாக வேலை செய்து குறைந்த சம்பளம் பெறுகின்ற அவல நிலையை மாற்றியமைப்பதற்காகவும் கல்வியில் கவனம் குவிக்கும் சில சகோதரர்கள் ஒன்றுகூடி, 'அதிரைக் கல்விச் சேவையகம் (Adirai Educational Mission)' என்ற பெயரில் ஓர் அமைப்பைக் கடந்த 16.12.2010 வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் துபையில் தொடங்கினர்.
அந்த அமர்வின் தீர்மானப்படி, அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்துவது என்று முடிவு செய்து, கடந்த 14 & 15 ஜனவரி 2011இல் இருநாட்கள் நமதூரில் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு' நடத்தப்பட்டது. மாநாட்டைப் பற்றிய முழுச் செய்தியும் 'அதிரை நிருபர்' வலைத்தளத்தில் http://adirainirubar.blogspot.com/2011/01/blog-post_16.html பதியப்பட்டது.
மாநாட்டு நிகழ்ச்சிகள் காணொளியாக அதிரை நிருபரில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. அந்நிகழ்வின் சகோ. CNM சலீம் அவர்களின் சிறப்புரை, தமிழன் தொலைக்காட்சியில் கடந்த 21.01,2011 அன்று ஒளிபரப்பப்பட்டது.
அந்த மாநாட்டின் தீர்மானங்கள் அதிரை நிருபர் வலைத்தளத்தில் http://adirainirubar.blogspot.com/2011/01/2011-14-15.html பதிவிடப்பட்டன. அவை தங்கள் பார்வைக்கு:
- பொதுவாகக் கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரிக்காமல், சமூகத்திற்குப் பயன்படும் எந்தக் கல்வியையும் கல்வியாகவே கருதி, அதன் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் தேவையான முயற்சிகளில் 'அதிரை எஜுகேஷனல் மிஷன்' (AEM) பாடுபடும்.
- அதிரையின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் தாம் செய்யும் ஜுமுஆ பிரசங்கங்களில் கல்வியின் இன்றியமையாத் தன்மையையும் தேவையையும் பற்றி விரிவாகப் பேசவேண்டும் என்று மார்க்க அறிஞர்களையும் வெள்ளி மேடையின் பள்ளிப் போதகர்களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
- அதிரை மாணவ மாணவியரிடம் கல்வியின் பரிணாமங்கள் பலவற்றை அறிமுகம் செய்தும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்களின் கவனத்தைத் திருப்பச் செய்தும், கல்வியின் நோக்கமே ஒழுக்கம்தான் எனும் அடிப்படையில், அவர்களிடம் ஒழுக்க மாண்புகளை ஓங்கச் செய்தும் 'அதிரை கல்விச் சேவையகம்' (AEM) பாடுபடும்.
- மாணவர்களின் வீணான வேகத்தைக் குறைத்து, விவேகத்தைக் கூட்டி, மார்க்கம், சமுதாயம், மொழி, நாடு ஆகியவற்றின் மீது அவர்களுக்குள்ள கடமைகளை உணரச் செய்து, அவர்களைத் தூய்மை என்னும் அச்சில் வார்த்தெடுக்கும் வகையில், சமூக நல்லிணக்கமும் புரிந்துணர்வும் கொண்ட விவேகமுள்ளவர்களாக மாணவ மாணவியரை உருவாக்க, அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் எல்லா விதமான வழிகளிலும் AEM துணை செய்யும்.
- சமூகம் மற்றும் நாடு எதிர்கொள்ளும் சவால்களை அறியச் செய்து, மாணவ மாணவியர்களின் உரிமைகளையும் கடமைகளையும் அறியச் செய்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நமது இந்த அமைப்பு பாடுபடும்.
- கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மாணவ மணிகளுக்கு முறையான வழிகாட்டல்களை அவ்வப்போது வழங்கி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வளமுள்ளதாக ஆக்கிக்கொள்ள அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும்.
- ஒவ்வோர் ஆண்டும் இது போன்ற மாநாடுகளையும், கோடைக்காலப் பயிற்சி முகாம்களையும் நடத்தி, மாணவ மாணவியரைப் பக்குவப் படுத்தும்.
- தேர்வுகளில் தோல்வியுற்ற (dropout) மாணவ மாணவியரை அடையாளம் கண்டு, கல்வி விற்பன்னர்களைக்கொண்டு அவர்களுக்கு ஊக்கப் பயிற்சிகளையும் பாடப் பயிற்சிகளையும் அளித்துக் கைதூக்கி விடும். இதற்காகவும், இன்னும் இது போன்ற கல்விச் சேவைகளுக்காகவும், Institute of Adirai Educational Mission எனும் பெயரில் கல்விப் பயிற்சியகம் ஒன்றை நிறுவ, இந்த எழுச்சி மாநாட்டைக் காரணமாக்கிச் சேவை புரியத் தொடங்கும்.
- தொலைதூரக் கல்வி நிலையங்களில், வீட்டில் இருந்துகொண்டே படிக்கும் வசதியை, குறிப்பாகப் பெண்களுக்கு, இவ்வமைப்பு நமதூரில் ஏற்படுத்திக் கொடுக்கும்.
- உடற்குறையுற்ற மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசு மற்றும் தனியார் உதவிகள் தொடர்பான ஏற்பாடுகளில் உதவியாக இருந்து, அவர்களின் எதிர்கால வளவாழ்வுக்குத் துணை நிற்கும்.
- படிப்பு நிறைவுற்ற மாணவர்களுக்கு, அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்குத் தம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ளும் வகையில், நுழைவுத் தேர்வுக்கும் நேர்காணலுக்குமான பயிற்சிகளை அளிக்கும்.
- தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவ மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த படிப்புகளில் தொடர ஆர்வமூட்டி, அதற்கான முன்னேற்பாடுகளில் முனைப்போடு செயல்படும்.
- UPSC, (Union Public Service Commission) TNPSC (Tamil Nadu Public Service Commission) ஆகிய அரசுத் தேர்வுகளை எழுத மாணவர்களை ஊக்கப்படுத்தி, அதற்கான பயிற்சிகளையும் அளிக்கும்.
- அதிரையின் எல்லாக் கல்வி நிலையங்களிலும் தொடக்க வகுப்புகளில் கணினியுடன் தொடர்புடைய பயிற்சியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
- மாணவ மாணவியரின் ஆங்கில அறிவை விரிவாக்கும் விதத்தில் தனிப் பயிற்சிகளுக்கான வாய்ப்பு வசதிகளை நமது பயிற்சியகம் அமைத்துக் கொடுக்கும்.
- ஊரின் ஒதுக்குப் புறத்தில் அமைந்துள்ள அரசு நூலகத்தை ஊரின் மையப் பகுதிக்கு மாற்ற நூலகத் துறையை இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது; அல்லது, புதிதாக ஒரு கிளை நூலகத்தை ஊரின் மையப் பகுதியில் ஏற்படுத்தித் தர அரசின் நூலகத் துறையைக் கேட்டுக்கொள்கின்றது.
- தற்போது மாணவர்களிடமிருந்து பெறும் கருத்துக் கணிப்புப் படிவங்களைக் கோப்புகளில் பாதுகாத்து, அவைகளை ஆராய்ந்து அவர்களின் படிப்பு முடிந்தவுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க அவ்வத்துறைகளை நமது அமைப்பு வலியுறுத்திப் பாடுபடும்.
தொடர்ச்சியாக, மேற்கொண்டு நமது திட்டங்களைக் கலந்தாலோசித்துச் செயல்படுவதற்காக http://groups.google.com/group/adirai-edu-mission?hl=ta எனும் பெயரில் கூகுள் குழுமம் தொடங்கப்பட்டது. சகோதரர்கள் அனைவரின் கருத்துகளும் பரீசீலிக்கப்பட்டு 'அதிரைக் கல்விச் சேவையக'த்துக்கென்று நெறிமுறைகள் (பை-லா) வகுக்கப்பட்டன.
மேற்கொண்ட கலந்தாலோசனைகளில், முக்கியமாக 'உலகம் முழுதும் பரந்து வாழும் அதிரைச் சொந்தங்களை மேற்காணும் குழுமத்தில் இணைத்து, அவர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெறவேண்டும்' என்ற முடிவு ஒருமனதாகப் பெறப்பட்டு இந்த பதிவின் வாயிலாக உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
இத்துடன் அல்லது இதையடுத்து, உங்களை Adirai Educational Missionஇல் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு அனுப்புவோம். தயை கூர்ந்து அழைப்பை ஏற்றுக் கொண்டு, தங்களுடைய உற்சாகமான கலந்தாலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கருத்துகளையும் அள்ளித் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
வாருங்கள், நம் அடுத்த தலைமுறையை அல்லாஹ்வின் உதவியால் முழுக்கப் படித்த தலைமுறையாக மாற்றுவோம்!
நன்றி,
வஸ்ஸலாம்.
அதிரை கல்விச் சேவையகம்
Adirai Educational Mission




10 Responses So Far:
உன்னதமான இந்த எண்ணமும் செயல்களும் வெற்றிபெற என் துஆ.
அடி மேல் அடி மெல்ல வைத்து படி(ப்) படி(யாக)வென்று சொல்லியதோடல்லாமல்... களம் கண்டிருக்கும் AEM ஒவ்வொரு செயலகளும் அதிரைச் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருந்திடும் இன்ஷா அல்லாஹ்...
உன்னதமான இந்த எண்ணமும் செயல்களும் வெற்றிபெற எங்கள் துஆ என்றும் நிலைத்திடும்...
நல்ல இலக்கு வெல்லட்டும்.
எதிர்கால அதிரை ஞானத்தில் தன்னிறைவு பெற AEM வித்தாய் அமையட்டும்.
அதிரை நிருபரும் - கல்வி சேவையும்.......
http://manithaneyaexpress.blogspot.com/2011/09/blog-post_01.html
அதிரை மக்களின் பங்களிப்பில் பெரும் பங்காற்றும் AEM,அதிரை நிருபரை பாராட்டுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
// பொதுவாகக் கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரிக்காமல், சமூகத்திற்குப் பயன்படும் எந்தக் கல்வியையும் கல்வியாகவே கருதி, அதன் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் தேவையான முயற்சிகளில் 'அதிரை எஜுகேஷனல் மிஷன்' (AEM) பாடுபடும். //
இரண்டு கல்வியையும் பிரித்து வைத்து இருப்பதால்.ஒன்றை கற்று மற்றொன்றை விடக்கூடிய சூழ்நிலை.இரண்டையும் சேர்த்து கற்பிக்க பட்டால் சமூகத்தில் நிச்சயமாக ஒரு மிகப் பெரிய எழுச்சி ஏற்ப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முயற்சி செய்யும் இந்த 'அதிரை எஜுகேஷனல் மிஷன்' (AEM) குழுவினருக்கு மனமார வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
//வாருங்கள், நம் அடுத்த தலைமுறையை அல்லாஹ்வின் உதவியால் முழுக்கப் படித்த தலைமுறையாக மாற்றுவோம்!//
இன்ஷா அல்லாஹ் இந்த எண்ணம் நிறைவேற மாணவர்களாகிய எங்கள் து'ஆ என்றும் இருக்கும் ..
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் "ஒவ்வொரு செயலும் அவருடைய எண்ணத்தை பொறுத்தே" என்பதாக.
அல்ஹம்துலில்லாஹ் இந்த நல்ல முயற்சியை அல்லாஹ் த' ஆலா நிறைவேற்றி வைப்பானாக ஆமீன்!
வாருங்கள், நம் அடுத்த தலைமுறையை அல்லாஹ்வின் உதவியால் முழுக்கப் படித்த தலைமுறையாக மாற்றுவோம்!
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் இந்த மகத்தான சேவைக்கு அல்லாஹ்விடம் நல்ல கூலியுண்டு. நல்ல நோக்கம் பயன் படுத்திக்கொள்ளவேண்டியது நம் சமர்த்து.
நம் சமுதாய முன்னேற்றத்துக்கு உறுதுணையான கல்விக்கு யார் முன்வந்தாலும் நான் கைகோர்க்க தயார்,
//வாருங்கள், நம் அடுத்த தலைமுறையை அல்லாஹ்வின் உதவியால் முழுக்கப் படித்த தலைமுறையாக மாற்றுவோம்!//
இன்ஷா அல்லாஹ்
அதிரை மக்களே! இணைந்து விட்டீர்களா? http://adiraipost.blogspot.com/2011/09/blog-post_6153.html
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.